Friday, May 14, 2010

தோழி என்றொரு தேவதை - 2

தோழிகள் கூட
அறிந்திராத
உன் படுக்கையறைக்கு
என்னை
நடத்திச் சென்றாய்

அறையெங்கும்
நீக்கமற
நிறைந்திருந்தது
நம்
நட்பின் வாசம்

--------------------

'என்
நட்பு வட்டத்தில்
வீட்டுக்கு வரும்
முதல் ஆண் நீதான்'
என்ற முன்னுரையோடு
அழைத்துப்போனாய்

'வா தம்பி'
என்றழைத்த
உன் தாயின் குரலில்
ஓங்கியொலித்தது
உன் மீதான
நம்பிக்கை

நட்பின் மீதான
நம் நம்பிக்கைக்குச்
சற்றும் குறைந்ததல்ல
அது

--------------------

ஏழாம் வகுப்பு

அறிவியல் தேர்வு

எல்லாம் சரியாய்
எழுதிவிட்டதை
மீண்டுமொருமுறை
சரி பார்த்த பின்
உன் பெயரை நானும்
என் பெயரை நீயும்
எழுதிக் கொடுத்து வந்த
குறும்பை
இன்னும் சொல்லிச் சிரிக்கின்றன
பள்ளி
மைதானத்து மரங்கள்

--------------------

காதலனும் காதலியும்
நடந்தார்கள்
உலகமே அவர்களை
உற்றுப் பார்த்தது

தோழனும் தோழியும்
நடந்தார்கள்
யாருமே அவர்களைப்
பார்க்கவில்லை

--------------------

மௌனமாகப் போனோம்

மௌனமாகக் கடல் குடித்தோம்

மௌனமாகவே திரும்பினோம்

அலைகள் மட்டும்
பேரிரைச்சலாய் இன்னும்
பேசிக்கொள்கின்றன
அமைதியாய்க் கழிந்து விட்ட
நம் வருகையைப் பற்றி


தோழி என்றொரு தேவதை - 1

21 comments:

  1. நட்பு.. நம்பிக்கை..ஆழம்..ஆடம்பரமில்லாது அமைதியாய்..அளவாய்..
    அத்தனையும் சொல்ல்விட்டீர்கள்..!

    ReplyDelete
  2. //காதலனும் காதலியும்
    நடந்தார்கள்
    உலகமே அவர்களை
    உற்றுப் பார்த்தது

    தோழனும் தோழியும்
    நடந்தார்கள்
    யாருமே அவர்களைப்
    பார்க்கவில்லை//

    அடப்பாவி நண்பா !என் புரிதலின் படி
    இந்த வரிகளில் நீ சொல்லும் செய்தி
    உன் அத்தனை வரிகளையும் செற்று நிற்கிறதே!

    அருமை சேரல்

    ReplyDelete
  3. மௌனமாகப் போனோம்

    மௌனமாகக் கடல் குடித்தோம்

    மௌனமாகவே திரும்பினோம்

    ----
    அற்புதம்.. மிகவும் ரசித்தேன்..
    இதைவிட எளிமையாக இந்த கணத்தை கடத்தமுடியுமா எனத் தெரியவில்லை..

    ReplyDelete
  4. நட்பின் ஆழம் நம்பிக்கை என்பதை தெளிவாக சொல்லி இருக்கீங்க தல,
    தோழனும் தோழியும்
    நடந்தார்கள்
    யாருமே அவர்களைப்
    பார்க்கவில்லை - அழகிய யதார்த்தம்

    ReplyDelete
  5. நன்றி வில்வா...

    நன்றி உலவு.காம்

    நன்றி மதுரைக்காரன்

    அன்பின் நேசமித்ரன்,
    உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! இவ்வரிகளின் புரிதல் பல பரிமாணங்களில் புலனாகிறதெனக்கு. அவை அனைத்தையுமே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. உங்களின் பின்னூட்டங்கள் எப்போதுமே எனக்கு சிறப்பானவை. அதிலும் இதை மிகச்சிறந்ததாக உணர்கிறேன். உணர்ச்சி மேலிடும் ஒரு வார்த்தை போதும், சொல்பவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள. நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. வாசிக்க வாசிக்க மணக்கிறது நட்பு வாசம்

    ReplyDelete
  7. அருமையாயிருக்குங்க சேரல்

    ReplyDelete
  8. //காதலனும் காதலியும்
    நடந்தார்கள்
    உலகமே அவர்களை
    உற்றுப் பார்த்தது

    தோழனும் தோழியும்
    நடந்தார்கள்
    யாருமே அவர்களைப்
    பார்க்கவில்லை//

    அப்பா...

    கொழுத்தி இருக்கீங்க சேரல். எனக்கு முன்னாடி வந்து பின்னூட்டத்திலும் கொழுத்தி இருக்கிறான் நேசன் ராஸ்கல். :-)

    // உணர்ச்சி மேலிடும் ஒரு வார்த்தை போதும், சொல்பவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள.//

    கவிதை வாசித்ததும் தெறிக்கிற வார்த்தை ஒரு கவிதை சேரல். அதை உணர்வது அதைவிட கவிதை.

    it's happend here. enjoyed.

    ReplyDelete
  9. மௌனமாகப் போனோம்

    மௌனமாகக் கடல் குடித்தோம்

    மௌனமாகவே திரும்பினோம்

    அலைகள் மட்டும்
    பேரிரைச்சலாய் இன்னும்
    பேசிக்கொள்கின்றன
    அமைதியாய்க் கழிந்து விட்ட
    நம் வருகையைப் பற்றி //

    நம்பிக்கையின் ஊற்று :)

    பள்ளி மைதானத்து மரங்களை தேடிப்போய் பார்த்துவிடத் துடிக்கிறது உங்கள் "தோழி என்றொரு தேவதை" கவிதை..

    ReplyDelete
  10. மிக அருமையாக இருக்கிறது சேரல்.

    அதிலும் அலைகள் இரையும் இரைச்சல் மிகவும் நன்று. மாற்று பாலின நட்பு மிகவும் கடினமான தோல் போன்றது. அதில் எப்படி நுழைந்து பார்க்கலாம் என்று உங்கள் கவிதைகள் சொல்லுகின்றன.

    ReplyDelete
  11. 'காதலனோடு பேசிக்கொண்டிருக்கையில்
    தாவணியைச் சரி செய்தேன்
    நண்பனோடு பேசிக் கொண்டிருக்கையில்
    தாவணியைச் சரி செய்தான்'

    இப்படியொரு கவிதைஎழுதி பிரபல பத்திரிக்கையொன்றில் கவிஞர் அறிவுமதி அல்லாத ஒருவர் பணப்பரிசு வாங்கும் இக்காலத்தில், திருவள்ளுவரே நேரில் வந்து அழுக்காறாமை என்று இரண்டு அடி தந்தாலும், தோழிபற்றிய உங்கள் எழுத்தில் பொறாமைப்படுவேன் தம்பி.

    - ஞானசேகர்

    ReplyDelete
  12. எல்லாக் கவிதையும் நல்லா இருக்கு :)

    //ஏழாம் வகுப்பு
    அறிவியல் தேர்வு
    // இந்தப் பாடத்துல நீங்க fail ஆகினத்துக்கு யார் காரணம்.. :))

    ReplyDelete
  13. //யாருமே அவர்களைப்
    பார்க்கவில்லை//

    ரொம்ப ரசித்த வரிகள் :)

    ReplyDelete
  14. ரொம்ப அழகான கவிதைகள்.

    அப்புறம், கேட்கவே இல்லை... நீங்கள் நலம்தானே?

    ReplyDelete
  15. அருமை..

    - பிரவின்ஸ்கா

    ReplyDelete
  16. @ பீ'மோர்கன், ஈரோடு கதிர், VELU.G, ஆறுமுகம் முருகேசன், ஆதவா, பிரவின்ஸ்கா, பா.ரா., விதூஷ், J.S.ஞானசேகர்,

    கருத்துக்கு மிக்க நன்றி!

    மிக நலமாக இருக்கிறேன்...மன்னிக்கவும்...இருக்கிறோம் விதூஷ் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  17. எல்லாக்கவிதைகளும் நல்லாருக்குங்க சேரல்.... நட்பின் வாசமே வாசம்.....

    ReplyDelete
  18. //காதலனும் காதலியும்
    நடந்தார்கள்
    உலகமே அவர்களை
    உற்றுப் பார்த்தது

    தோழனும் தோழியும்
    நடந்தார்கள்
    யாருமே அவர்களைப்
    பார்க்கவில்லை//

    மேம்போக்காகப் போயிருப்பேன்..
    பின்னூட்டங்கள் பிடித்துக் கொடுத்து விட்டன..

    பிறந்தநாள் வாழ்த்துக்களும் :)

    ReplyDelete