Sunday, December 25, 2011

ஒரு சலூன் கடையும், சில உதிரி முடிகளும்

சவரக்கத்தி
கழுத்தில் அழுந்தும்போது
புலனாகின்றன
வாழ்வின் மீதான பிடிப்பும்
சக மனிதனின் மீதான நம்பிக்கையும்
-----------------------------
அழகான பெண்களும்
அவ்வப்போது வருகிறார்கள்
ஆடைகளை அவிழ்த்துவிட்டு
சுவரோடு ஒட்டிக்கொள்கிறார்கள்
----------------------------
அந்த மூன்றெழுத்து நாயகியின்
அந்தரங்கக் காதலன் பற்றிய
இரண்டாவது குறிப்பில்
இருக்கும்போதுதான்
காலியாக வேண்டுமா
சவர நாற்காலி?
----------------------------
வேறுமாதிரி இருந்தார்கள்
முடிதிருத்தியபின்
நேருக்குநேர் பதித்திருந்த
கண்ணாடிகளின்
உள்ளே உள்ளே
அமர்ந்திருந்த
'நான்'கள்
---------------------------
எப்போதுமே சாதாரணமாக
வந்து விழுகிறது கேள்வியொன்று
மீடியமா? ஷார்ட்டா?
முடிந்த பின் எதுவாகவுமில்லாமல்
என் விருப்பம் போலுமில்லாமல்
அமைகிறது ஏதோ ஒன்றாக
----------------------------
அந்தப் பாடலின் காட்சி
எனக்கு மிகப்பிடிக்கும்
இன்று தான் கவனித்தேன்
அதன் பாடல் வரிகளை
----------------------------
கண்கள் மூடி
ராட்டினமாடிப்
பின் மெல்லக் கலைகிறது
குட்டித் தியானம்

7 comments:

  1. அருமை நண்பா!, அருமை! நண்பா.

    ReplyDelete
  2. >>அந்தப் பாடலின் காட்சி
    >>எனக்கு மிகப்பிடிக்கும்
    >>இன்று தான் கவனித்தேன்
    >>அதன் பாடல் வரிகளை

    காட்சி நன்றாக இருந்தால் சேரலுக்கும் 'அடி' சறுக்கும் போல...

    முன் தேதியிட்ட பத்திரிகை ஆனாலும் கிசு கிசு படிப்பது "too much" நண்பா :)

    ReplyDelete
  3. இரண்டாவது குறிப்பை முழுதும் படித்தீர்களா இல்லையா?

    விட்ட குறை, தொட்ட குறை!

    ReplyDelete
  4. சலூன் கவிதைகள் மிகவும் அருமை. கண்ணாடிக்குள் உள்ளே உள்ளே இருக்கும் நான்'கள் என்ற வரி அருமை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete