Wednesday, February 04, 2009
கடல் மாதிரி - கடலின் மாதிரி
'டேய் இங்கேயிருந்து ட்ரெயின்ல போயிடலாம். கொரட்டூர் ஸ்டேஷன்ல இறங்கி நடக்கணும். அப்புறம் அங்கிருந்து புழல் பக்கம்தான். நான் மேப்ல பாத்துட்டேன்' என்று நண்பன் சொன்ன உடனே, ஏரிகள் பற்றிய நினைவுகள் துவங்கின.
ஏரிகள் எப்போதும் 'கடலின் மாதிரி வடிவம்' போன்று, சின்ன பிரம்மாண்டத்துடன், ஆர்ப்பரிக்கும் அலைகள் இன்றி அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன. நதியினைப் போன்றதொரு தொடர்ச்சியான ஓட்டமும் அவற்றுக்கிருப்பதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் அதனோடு தொற்றிக்கொண்டிருக்கிறது.
நான் பார்த்த முதல் ஏரி எது என்ற கேள்வி எழுந்தது. சிறுவயதில், குடும்பத்தோடு கொடைக்கானலில் நீச்சல் தெரியாததும், தொட்டால் விறைத்துப்போவேன் என்ற குளிரின் மீதானதுமான பயங்களுடன் பார்த்த ஏரிதான் முதலாவதாக இருக்க வேண்டும். அன்று செய்த படகு சவாரி சந்தோஷமானதாக இல்லாமல் பீதி நிறைந்ததாகவே இருந்தது.
சென்னையின் சுற்று வட்டாரத்தில் எத்தனை ஏரிகள்? செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, ரெட்டேரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி, சோழாவரம் ஏரி.....இன்று அவற்றுள் இரண்டையேனும் பார்த்து வரலாம் என்று விருப்பம்.
கொரட்டூரை ரயிலில் அடைந்து அங்கிருந்து ஏரியை நோக்கிய நடை பயணத்தைத் தொடங்கினோம். ஊர்ப்புறங்களை ஞாபகப்படுத்துவதாய் இருந்தன நடந்து சென்ற பாதையும், கிராமப்புறச் சூழ்நிலையும். வரைபடத்தில் பார்த்த திசையமைப்பை மட்டும் துணையாகக்கொண்டு சில இடதுகளும், சில வலதுகளுமாகத் திருப்பங்களைக் கடந்தபின் ஏரியை அடைந்தோம்.
நகரத்தின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கி, பறவைகளின் சஞ்சாரத்தோடு மௌனத்தில் உறைந்திருக்கிறது ஏரி. ஆகாயத்தாமரைகளுக்கு நடுவே நின்று மீன் பிடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். காரை பெயர்ந்திருந்த படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். கரை நெடுக நின்றிருந்தன பனை மரங்கள். இறங்கு வெயில் தலையில் உக்கிரமாக இறங்கிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ பைக்கில் வந்த இளைஞர் கூட்டம் தூண்டில் செய்வதற்கான குச்சிகளைத் தேடியலைந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் அங்கே நின்று ஏரியைப் பருகிவிட்டு நகர்ந்தோம். சாணம் குழைத்து வரட்டி தட்டிக்கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி.
'இந்தப்பக்கம் போலாமா?' நான்.
'எங்க போவணும்?'
'மெயின் ரோட்டுக்கு'
'போ போ'
ஏரிக்கரையோரமாக அமைந்த பனைமரங்களடர்ந்த ஒற்றையடிப் பாதையது. நீர்நிலையருகிருக்கும் இடங்கள் பெரும்பாலும் கழிவறைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இடமும் அப்படித்தான்.
ஏரிக்கரையில் நடந்து, பின் சில கிராமங்களைக் கடந்து, சில கி.மீ பயணித்த பிறகு அம்பத்தூர் - செங்குன்றம் பிரதான சாலை வந்தடைந்தோம்.
பானி பூரி விற்றுக்கொண்டிருந்த ஒருவனிடம் புழல் ஏரிக்கு வழி கேட்க, தெரியாதென்பதைப்போல் ஏதோ சொன்னான். இளநீர் விற்ற பெண் வழி காட்டினாள்.
பிரதான சாலையிலிருந்து விலகி ஓடியிருக்கிற ஒரு சிறு தெரு அது. அதன் வழியே சென்றால் வருகிறது ஏரியின் கரைப்பகுதி. வரைபடத்தில் பார்த்த போதே தெரிந்திருந்தது ஏரியின் பிரம்மாண்டம். கொரட்டூர் ஏரியைப்போல் ஐந்தாறு மடங்கு பெரியதாக இருந்தது.
நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்த நண்பன், சலனப்படமும் எடுக்கத் தொடங்கினான். ஏன் என்ற போது, ' இந்த பிரம்மாண்டத்தை வேறு எப்படி விளங்கச் செய்ய முடியும்?' என்றான். உண்மைதான். புகைப்படத்திற்குள் அடக்கி விட முடியாத பரந்துபட்ட தன்மை கொண்டிருக்கிறது அது.
சூரியன் விழத்தொடங்கியிருந்தது. தண்ணீரும் செந்நிறம் கொண்டது. இங்கேயும் சில பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். நகரின் ஏதோ ஒரு பரபரப்பான இடத்திலிருந்து காரில் வந்திருந்த ஒரு தம்பதியர் ஆச்சரியம் குறையாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அருகாமையில் வசிக்கும் மக்கள் ஏரியின் மீது பார்வையைக் கூடச் செலுத்தாமல் ஏதோ யோசனையோடு நடை போட்ட வண்ணமிருந்தனர்.
சூரியன் முழுவதுமாய் விழும் வரை காத்திருந்து திரும்பினோம். வீடு நோக்கிய பயணத்தில் கொஞ்சம் தூக்கத்தோடு ஏரியின் நினைவுகளும் என்னைச் சூழ்ந்திருந்தன.
பொதுவாக ஏரிகள், நதிகள் இல்லாத பகுதிகளில் மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்டன. நான் பார்த்து வந்த இந்த ஏரிகளை, எப்போது, யார், என்ன காரணத்துக்காக வெட்டினார்கள் என்ற குறிப்பு எங்கும் இல்லை. இணையத்திலும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த ஏரிகளை முடிந்த அளவுக்கு சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள். சென்னையின் குடி நீர்த் தேவையை இவையே பூர்த்தி செய்கின்றன.
'இந்த ஏரிங்கள்ல போட் சர்வீஸ்லாம் வச்சு, இன்னும் கொஞ்சம் சுத்தமா வச்சுகிட்டா நல்ல டூரிஸ்ட் அட்ராக்ஷனா இருக்கும்ல?' என்றான் பயண அனுபவம் கேட்ட ஒரு நண்பன்.
வேண்டாம். மனிதர்கள் சேராத வரை எந்த இடமும் அழகாகவே இருக்கிறது. அப்படியே இருக்கட்டும்.
பின்குறிப்பு: ஓர் ஆற்றின் தோற்றுவாய் தேடிச்சென்ற பயண அனுபவத்தைப் பற்றிய பதிவோடு மீண்டும் வருகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நன்று சேரா..
படித்து முடிக்கையில் வேறெதுவும் சொல்லாமல் புன்னகைக்கத் தோன்றுகிறது..
எஸ்ரா வை நினைவூட்டுகின்றன எழுத்து நடையும், அதன் நோக்கமும்.
கடலின் மாதிரி - பொருத்தமான தலைப்பு. எனக்கு இந்த துணுக்குதான் நினைவுக்கு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் புன்னைநல்லூர் அருகே ஒரு ஏரி இருக்கிறது. கண்டிருக்கிறீர்களா?
அதன் பெயர் தெரியுமா?
'ராணி சமுத்திரம்'
அப்பகுதியில் வாய்வழியாக சொல்லப்படும் காரணம்,
நெடுநாட்களுக்கு முன் சோழமன்னன் ஒருவன தான் படையெடுத்துச்சென்ற அனுபவங்களை தன் பட்டத்து ராணிக்கு சொல்லிக்கொண்டிருந்தானாம். கடலை இதற்கு முன் கண்டிராத ராணிக்கு, என்ன விவரித்தும் கடலின் பிரம்மாண்டத்தை கற்பனை செய்யமுடியவில்லை. கடைசியில் அம்மன்னன், இந்த இந்த ஏரியை வெட்டி, 'கடல் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று சொன்னானாம்.
ராணிக்கு சமுத்திரத்தைக் காட்டியதால், அது 'ராணி சமுத்திரம்' ஆயிற்று என்று சொல்கின்றனர்.
ஆற்றின் தோற்றுவாய்.. :)
சீக்கிரம் வாருங்கள்..
வணக்கம் தோழரே!
எதைச் செய்தாலும் சிறப்பாகவே செய்கின்ற தன்மை உங்களுக்கு இயல்பிலேயே இருக்கிறது. ஏரிகள் பற்றிய தேடலும் வித்தியாசமாகவே இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையே அர்த்தப்படுவதே தேடலின் தொடக்கத்தில்தானே. அது ஆழமாகவே இருக்கிறது.
கடலைப்போல வியாபித்தும், குளங்களைப்போல நிசப்தமாகவும் காட்சி அளிக்கின்ற ஏரிகள் நிச்சயமாக கவனிப்புக்கு உரியவை. சென்னையில் மட்டும் நூறுக்கும் அதிகமான ஏரிகள் இருந்ததாக வரலாறு. அவற்றைஎல்லாம் ஆக்கிரமிப்பு செய்து அரசியல்வாதிகள் கல்விச்சேவை செய்கின்றனர்.
நான் பார்த்த முதல் ஏரி, தஞ்சை- வடுவூர் சாலையில் உள்ள வடுவூர் ஏரி. நீர் காகமோ/கோழியோ அதிகமாக காணப்படும்.
வாத்து போலவே இருக்கும். சப்தம் கேட்டால் நீருக்குள் மூழ்கிவிடும். தமிழ் பதிந்த சிறு வயதில் அவற்றை அன்றில் பறவையென கருதியது இப்பவும் என்னை நகைக்கச் செய்யும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏரியைப் போலவே குட்டைகளை சொல்வதுண்டு. அவற்றின் நிசப்தமளவுக்கு பிரம்மாண்டம் இருந்தது இல்லை.
நீங்கள் சொல்வதுபோல, கொடைக்கானல், ஊட்டி ஏரிகள் சந்தோசத்தைவிட அதிகமாக அச்சத்தையே தோற்றுவிக்கின்றன.
காரணம் காதலர்களும், புதிதாய் கல்யாணமானவர்களும் இன்னும் சிலரும்.
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பயணத்தில் ஒரு ஏரியை பார்த்து இருக்கிறேன். அமைதியாகவும், அழகாகவும் இருக்கும். இரண்டு பக்கமும் மலைகள் இருக்கும். பக்கத்திலே படகு சவாரி இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.வாழ்க்கையை அர்த்தப் படுத்திக்கொள்ளும் ஒரு தேடல் அல்லது காதல் ரொம்ப முக்கியம் தோழரே..
எழுத்துக்களின் இடையே செருகப்பட்டுள்ள புகைப்படங்கள் மட்டும்கூட, தங்களுடைய நீண்ட பயணத்தின் மொத்த பதிவாக இருக்கிறது.
வாழ்த்துக்களுடன்
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
நன்றி பாலா!
துணுக்கு புது விஷயமாக இரசிக்கும்படியாக இருக்கிறது.
ஆற்றின் தோற்றுவாயோடு விரைவில் வருகிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி கோகுல்!
உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் ரசிக்க வைக்கிறது. ஒருவிதமான எள்ளல் கலந்த நடை. நீங்கள் கண்டிப்பாக எழுத வேண்டும். நேரம் கிடைக்கவில்லை என்று சப்பைக்கட்டு கட்டக் கூடாது :)
//நீர் காகமோ/கோழியோ அதிகமாக காணப்படும்.
வாத்து போலவே இருக்கும். சப்தம் கேட்டால் நீருக்குள் மூழ்கிவிடும். தமிழ் பதிந்த சிறு வயதில் அவற்றை அன்றில் பறவையென கருதியது இப்பவும் என்னை நகைக்கச் செய்யும்.//
அது நீர்க்கோழி என்பதாய் ஞாபகம். நானும் அந்த ஏரியை ரசித்திருக்கிறேன்.
//சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பயணத்தில் ஒரு ஏரியை பார்த்து இருக்கிறேன். அமைதியாகவும், அழகாகவும் இருக்கும். //
நானும் இதைப் பார்த்திருக்கிறேன். அதன் பெயர் 'கொலவை ஏரி' என்று கூகிள் மேப் சொல்கிறது.
-ப்ரியமுடன்
சேரல்
SERA ..DID SEE ABOUT VEERANAM(NEAR TO MY NATIVE PLACE) .. MADE IN CHOOLA EMPIRE ..RAJATHRAR CHOOLAN DONE THAT PROJECT.. IF U SEE ALREADY INGORE THIS,,OTHERS....?... DESANTHSRI ...."(I KNOW U HAVE RED THE PONNIYIN SELVAN .. ???????)
சேரா...
ஏரி அமைதியானதுதான்...
ஆனால் இந்த ஏரிக்கு கடலைப்போன்று ஓட்டம் உள்ளது.
அந்த ஓட்டத்தைத் தந்தது உன் வார்த்தைகள்.
கடலினில் போலும் இப்படியொரு சீரான அலைகளை நான் கண்டதில்லை.
நீர்நிலைகள் மூன்றெனில், இனி அது நாலாகுக...
ஆறு, ஏரி, கடல், கடலின் மாதிரி...
உன் கடலின் மாதிரி, இயற்கைக்கு ஒரு மகுடம்.
உனக்கு மகுடம்...
"மனிதர்கள் சேராத வரை எந்த இடமும் அழகாகவே இருக்கிறது."
வளர்க உன் புகழ்...
ஆனந்த்...
@ Rajkumar
கருத்துக்கு நன்றி!
@Anand R
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment