புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, May 06, 2020

மந்திரச்சொல்

அதைக்
கவிதையாக்கிவிடும்
மந்திரச்சொல்லுக்கான
தேடலின்  நொடிகளில்
மரிக்கத் தொடங்குகிறது
இன்னும்
கவிதையாகிவிடாததொரு
சொற்குவியல் 

வண்ணம்

மறைந்து  போயிருந்தது
ஒட்டுமொத்த வெள்ளை
ஒற்றைக் கரும்புள்ளியில் 

Thursday, April 09, 2020

நாமும் நாமும்

ஓர் அசுவாரசியமான
நீண்ட பேருந்து பயணத்தினிடையே
ஒரு நொடிதான்
பார்த்திருப்போம்

முன் திடலில்
பூக்கள் கொட்டிக்கிடந்த
திண்ணை வைத்த அவ்வீட்டில்
நாம் வாழ்ந்தால்
நன்றாகவே இருந்திருக்கும்

என்றேனும் ஒரு நாள்
சந்திக்கக்கூடும்
கடந்து போன
நொடியிலிருந்து
அங்கேயே வாழ்ந்திருக்கும்
நம்மை நாம்....

Saturday, March 07, 2020

கண்ணுக்கெட்டியவை

ஒரு பெரும்பயணத்தின்
எச்சமாக நீண்டு கிடக்கின்றன
அந்தர வெளியெங்கும்
மேகங்களின் கால்தடங்கள் 

முடிவுறா உரையாடல்

கோடைக்காலத்தின்
பிற்பகல் தனிமையில்
முன்னறிவிப்பின்றி பிரவேசிக்கும்
தூரத்துச் சொந்தக்காரனை
வரவேற்கும் மூதாட்டியென
என்னை அணைத்துக் கொள்கிறது
கடல்

இருவருக்கும்
பொதுவான சிலரும்
பொதுவான சிலதுகளும்
நிறைத்திருக்கின்றன
எங்கள் உரையாடல்களை

எதேச்சையாக
நிகழ்ந்துவிடக்கூடும்
பிறிதொரு சந்திப்பிற்காகக்
காத்திருக்கத் தொடங்குகிறோம்
பிசுபிசுப்பான
பிரிவுகளின் நிமிடங்களில்.

-கடலோடு உரையாடுபவன்

Saturday, February 15, 2020

சவப்பெட்டியின் வாசகன்

ஒரு
சவப்பெட்டியாகத்தான்
இருந்திருக்கிறது
அந்த கவிதைப் புத்தகம்

கிழித்த பக்கத்தில்
என்ன கவிதை
இருந்திருக்கக்கூடும்

கவிதை வாசிக்க வந்தா
நசுங்கிச் செத்துப் போனாய்
நீ?

உன் மரணத்தின்
கடைசி நொடியில்
நான் எந்தக் கவிதையின்
சிலாகிப்பில் இருந்திருப்பேனோ

உன் பிணத்தை
மென்மையாக அப்புறப்படுத்திய நாளில்
நான் கவிதையெதுவும் வாசிக்கவில்லை.

Sunday, January 26, 2020

மனிதாசனம்

இரண்டு கால்களில்
நின்ற வண்ணம்
யோகா செய்யத்
தொடங்கியிருந்தது
ஒரு நாய்

முதலில்
முன்னிரு கால்கள்
பிறகு
பின்னிரு கால்கள்

தீவிர பயிற்சியினிடையே
மனிதாசனம் என்றதற்குப்
பெயர் சூட்டியது

ஆண்டின் இறுதிக்குள்
ஐந்து கிலோ
எடை குறைப்பதெனச்
சபதமேற்றிருந்தது அது

உழைப்பற்ற தன் 
உடலின் எடை குறைக்க 
மாரத்தானும் 
மலையேற்றமும் 
ஜும்பா நடனமும் 
இத்யாதி இத்யாதிகளும் 
முன்பே முயன்று பார்த்திருந்ததாம் 

குளிரூட்டப்பட்ட 
அறையைத் தவிர்த்து 
எடையை வியர்வையாகக் கரைக்கும் 
முனைப்பும் இருந்ததாகப் பேச்சு 

இரவு நேரப் 
பெடிக்ரீயில் ஒரு பகுதி 
மீதம் வைப்பதாகக் 
கூடுதல் தகவல் 

பின்னர்
ஒரு நாளின்
இருள் பிரியாத அதிகாலையில்
கடற்கரையில் கைவீசி
நடக்க ஆரம்பித்திருந்தது ,
உறக்கம் கலையாத
ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு 

Wednesday, January 01, 2020

விளக்கு

பின்னிரவில் அப்பிக்கிடக்கும்
மாயிருளுக்குள் புதைந்திருக்கிறது
புது வருடத்தின்
ஒவ்வொரு கணமும்

நமக்கென நாமே
செய்துகொண்ட விளக்கு
இருளைத் தின்றழித்துக்
கட்புலனாக்கிவிடும்
நகரும் நாட்களில்

நானும் நீயும்,
காண்பதும் மறைவதும்,
ஒன்றாகவும் வெவ்வேறாகவும்,
தொடர்கிறது விளையாட்டு

ஒளிவதும் தெரிவதும்
ஒவ்வொரு விளக்கின்
ஒளிநீளம் பொறுத்தது
என்பதுதானே சூட்சுமம்

சுமக்கும் கைகளே
செய்வதும் ஆகையால்
இன்றேனும் வாய்க்கக்கூடும்
எல்லாம் காட்டும்
நந்தா விளக்கு