புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, January 08, 2009

அலைவு

(உயிர்மை.காமின் 'உயிரோசை' இதழில் இக்கவிதை வெளியானது. )


ஏதோ ஊர்களின்
பெயரறியா தெருக்களில்
யாரோ பலருக்கு
யாரோ ஒருவனாக
சுற்றித் திரிகிற கணங்கள்
சொல்லித் தருகின்றன
நானாக இருப்பதின் சுகத்தை

யாருமற்ற பாதைகளில்
ஒற்றையில் நடைபோட,
துணைவரும் காற்று
கூறிப்போகிறது,
மனிதரில்
முதலோ,
கடைசியோ
நான்தானென்று

பின்னிரவில்
பயணம் செய்யும்
பேருந்தின் ஓசை
தருகிறது
அமைதியற்றதொரு
அமைதியை

கடந்துபோகின்ற
முகம் ஒவ்வொன்றிலும்
சூல் கொண்டிருக்கின்றன
சில கதைகளும்
சில கவலைகளும்

என்றோ ஓரிரவில்
மலைகள் சூழ்ந்த கிராமத்தின்
கிழக்கு திசைக்கு
வழிகாட்டிய பெரியவர்,
என் வீட்டுக்கும்
வழிகாட்டுகிறார்
பயணத்தினூடே நிகழும்
சில நொடிக் கனவுகளில்

வெவ்வேறு நிலங்களில்
வெவ்வேறு வண்ணம்
கொள்கின்றன,
நாளின்
விடிவும்
முடிவும்;
வெவ்வேறு சுவை
கொள்கின்றன
நீரும் காற்றும்

சூழ்நிலையின் கோப்பைக்குள்
அடைக்கப்பட்ட 'நான்'
பிரவாகமெடுத்து
ஓடுகிறது
சுதந்திரமாக

இலக்கற்ற பயணம்
உணர்த்துகிறது
ஏதேதோ விஷயங்களை

என்றாலும்
தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிர்ணயிக்கப்பட்ட
புள்ளியை நோக்கியே
மறுபடியும் குவிகிறது
மனது.

11 comments:

bhupesh said...

அருமை."வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு வண்ணம்...." வரிகள் 'அட!!'

SuKee said...

உணர்வின் வெளிபாடு அருமை.

Anonymous said...

நினைவுகளால் அலைபாய்ந்தது மனது!
மிக நன்று :)

rajkumar said...

வெகு நாளைக்கு பிறகு உங்கள் எழுத்துகளின் இதமான அதிர்வை உணர பெற்றன் .....

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

Whts going on!!!!...Something interesting happening in life!!??? i would say this is the best u have ever written.Gr8 and the last lines gives an amazing touch.
"என்றாலும்
தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிர்ணயிக்கப்பட்ட
புள்ளியை நோக்கியே
மறுபடியும் குவிகிறது
மனது."

Office'la Vaela illaya enna!!! :-)

- Prem

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தம்பி!

கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

கடந்த 8 மாதங்களாக அண்ணன் தினமும் 12 லிருந்து 15 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறேன் என்பதே கசப்பான உண்மை. இருந்தாலும் அதையும் இனிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மேஸ்திரி வேலை என்றால் சும்மாவா? மற்றபடி வலைப்பூவில் எழுதுவது அனைத்தும் வீட்டில் இருந்து எழுதியதே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

எதுவுமே சொல்லத்தோணல சேரா.. படித்து முடிக்கும் போது பெயரறியா தெருக்களினுடே பயணித்துணர்ந்த நிறைவு.
அந்த வழிகாட்டிப் பெரியவர், படிக்கும் போதே ஒரு புன்னகையை பறித்துச்செல்கிறார்.. :)

J S Gnanasekar said...

//Whts going on!!!!...Something interesting happening in life!!???//

கேள்விக்குறி, நிறுத்தக்குறி மற்றும் ஆச்சரியக்குறிகளை மிக சரியாகவும், சிக்கனமாகவும் உபயோகித்து இருப்பதால் இந்த பிரேம் கட்டாயமாக கல்வெட்டுதான்.

- ஞானசேகர்

Unknown said...

கவிதயப் படிச்சதும், ஏதோ ஒரு ரோட்டோரக் கடைப் பக்கம் நின்ன பஸ்; கூம்பு ஸ்பீக்கர்-ல அலர்ற சீர்காழியோ எல்.ஆர்.ஈஸ்வரியோ; பாட்டு சத்தத்துல மனச விட்டு சட்டுன்னு மறஞ்ச அவ; பட்டுன்னு வந்த முழிப்பு; சீனியும் புளிக்கொட்டைப் பொடியுமா ஒரு டீ, இருந்தாலும் ஒரு சுகம்.. ஞாபகப் படுத்திட்டீங்களே சேரல்! நீங்க எங்கயோ (கால் நடையா) போய்ட்டீங்க!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Subi,
ஹ்ம். நீயும் என்னை என்னென்னவோ யோசிக்கச் செய்து விட்டாய்.

-ப்ரியமுடன்
சேரல்