புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 15, 2005

பாரதி என் காதலன்

என்னை மிகவும் கவர்ந்த பாரதி
கவிதையொன்று..........
நான்கு தினங்களுக்கு முன்
பாரதியின் பிறந்த நாள் வந்து போன
இந்தச் சூழ்நிலையில்,
இந்தப் பதிப்பு பொருத்தமானதாக இருக்கும்
என நம்புகிறேன்
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

Wednesday, December 14, 2005

பரிணாமம்

அதிகாலை மூன்று மணி,
அவசரமாய்க் கூவுகிறது
கலப்பினக் கோழி

Tuesday, November 15, 2005

விளையாட்டு..விளையாட்டாய்..

வீட்டையும் வீட்டுப் பாடத்தையும்
சேர்த்தே மறக்கிறார்கள்,
பூங்காக்களில் விளையாடும் குழந்தைகள்

பெண்ணுரிமை

இரவில் தாமதமாகத் தூங்கும்
பெண்கள் மட்டுமே அதிகாலையில்
கோலம் போடுகிறார்கள்

அடப்போங்கப்பா..!!!

நல்ல மழை...!
தேனீர் வாசம் இதயம் இறங்குகிறது
மூளையினுள்ளே புது
புதுக்கவிதையின் ஓட்டம்...
மெல்ல சன்னல் பார்க்கிறேன்
தூரமாய்..........
நனைந்து கொண்டிருக்கிறது
அடையாளம் தெரிந்ததோர்
அஃறிணை..!!


நல்ல மழை...!
சொட்டச் சொட்ட நனைகிறேன்
மழைத்துளி
உயிர்த்தளம் தொட,
ஆஹா...! சுகானுபவம்...!!
தூரமாய்............
மரங்களடியே ஒதுங்கி நிற்கிறது
அடையாளம் தெரிந்ததோர்
அஃறிணை..!!

ரசிகன்

நிலா பெய்துகொண்டிருக்கிறது
விறகாக்குங்கள் உங்கள்
புல்லாங்குழல்களை...

Monday, November 14, 2005

அறிவியல் ஒழிக

சார்பியல் தத்துவம் தெரியாதவரை
ரசித்தேன்...ரயில் பயணங்களில்
பின்னோடும் மரங்களை....

தன்னுள் உலகம்

தேவையே என்றாலும்
சபிக்கப்படுகிறது - குடை மறந்த
நாளில் மழை

மழைக்காலத்து இரவுகளும், அவளும்

சீரான
மழையினூடே
அவளின்
அபிநயங்களை
ரசிக்கிறேன்...!

அடிக்கடி
அனிச்சையாய்
என்னை
அர்ச்சிக்கின்றன
அவள் உதடுகள்...!

வெள்ளைக்கொடியோடு
களம்
காண்கிறேன் நான்....!

சமாதானத்தின்
பல பரிமாணங்களை
அரங்கேற்றுகிறேன்....

கூடலில் உதடுகளும்,
ஊடலில் கண்களும்தான்
போர் வீரர்கள்...!
சில நேரங்களில்
கைகளும்தான்....!

எதற்கோ
எழுந்த கை,
அவளை
எங்கோ தீண்ட....

கோபமாய் எழுகிறாள்...
நடக்கிறாள்....

'மன்னிக்க மாட்டேன்' என்கிறாள்

'மறந்து விடு' என்கிறாள்

'இந்த மழை நாளே கடைசி'
என்றபடி விலகிப் போகிறாள்....

மழைக்கால நாட்கள்
வந்து வந்து போகின்றன....!!

பச்சை

மழைச்சாரல் புகுந்து
மட்கிப்போன
பழைய புகைப்படத்தில்
பாட்டனைத் தேடும்
பேரனாய்த்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன்னை என்னில்...!

வெளிப்படையான
நம் பிரிவின்
நோக்கம்
ஊருக்கெல்லாம்
நியாயப்படுத்தப்பட்டே
நிற்கிறது.....!

'அம்மா மூச்சா வருது'
சொல்வதற்குள்
வாய் மூடப்பட்டபோது
நிகழ்ந்தது
நம் பிரிவிற்கான
முதல் வெள்ளோட்டம்....!

உறுப்புகளை
மறைக்கச் சொன்ன
நாகரிகத்தின் கூறு,
உணர்வுகளையும்
மறைக்கச் சொன்ன போது,
நீண்டது
நமக்கிடையேயான
இடைவெளி....!

நிசப்தமான
நிலவுப்பொழுதுகளில்
ரகசியமாக மட்டுமே
நடந்தேறியது
நம் சந்திப்பு.....!

சமுதாயப்பட்டறையில்
கூர் தீட்டப்பட்ட
நாகரிக வாள்,
நம்மைப் பிணைத்த
கடைசி நூலிழையையும்
துண்டாடி ரசிக்கிறது...!

இதோ...
மனிதத்திரளில்
தன் முதல் காதலியைத் தேடும்
காதலனாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னை என்னில்.....!!

சங்கமம்

இப்போதெல்லாம்
எங்கள் ஊர்ப்புற நதிகள்
பாதியிலேயே வற்றி விடுகின்றன,
அதனால்தானோ என்னவோ
கடல் உள்ளே வந்து
கூடிவிட்டுப் போகிறது.....

சாதாரணம்

வெடிச் சிரிப்பால்
எழுந்துபறக்கின்றன, மின்கம்பியில்
இளைப்பாறிய காகங்கள்

யதார்த்தம்

இன்னும் ஐந்தாம்
வகுப்பிலேயே இருக்கிறார்,
என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்

Friday, November 11, 2005

நகரம்

முன்னால் விழும் நிழலைப்பிடிக்கத்
தலை தெறிக்க ஓடுகிறது
மின்சார ரயில்