புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, July 12, 2006

வாழ்க்கைச் சுழற்சி

விடுதலையாகிறது காற்று
வெடித்துச் சிதறுகிறேன் நான்
அமைதியாக உருவாக்கப்படுகிறது
அடுத்தொரு நீர்க்குமிழி.

Wednesday, July 05, 2006

இது என்ன காதல்....?

இன்றோடு
என்னைப்பிரிகிறாய் நீ!

உன்
தனிமையில்
துணையாய் வந்தவன்
தானே நான்!

நம் மூச்சுக்காற்றைப்
பரிமாறிக் கொண்ட கணங்களில்
என் உயிரின் நீளம்
அதிகரிப்பதை
உணர்ந்திருக்கிறேனே
நான்!

நீ முத்தமிட்டனுப்பிய
காற்றை
நுரையீரலில்
நிரைத்துக் கொண்டு
திரிந்தேனே!

உன் செல்லத் தூறலில்
நனைவதற்காக
மழை விட்டபொழுதுகள் வேண்டி
அலைந்தவன் தானே நான்!

எல்லோருக்கும் தெரிந்து தானே
வளர்ந்தது நம் உறவு?

இன்றோடு என்னிலிருந்து
பிரிக்கப்படுகிறாய் நீ!

அது சரி,

கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை
ஒரு முன்னாள் காதலனின் சோகம்!

Tuesday, July 04, 2006

குழூஉக்குறி

அப்போதெல்லாம்
யாரையும் பெயர் வைத்து
அழைத்ததாய் ஞாபகம் இல்லை

ராமாயணக்கதை கேட்டதிலிருந்து
சூர்ப்பனையாகிப் போயிருந்தான்
வெங்கடேசன்

கோடை காலம் வந்தாலே
பாட்டி வீட்டில் அடைக்கலம் சேரும்
வேணுவுக்குக்
குள்ளப்பாண்டி என்று பெயர்
வைத்ததாய் ஞாபகம்

இப்படித்தான்....
நடுவிரல் சித்தப்பா
சுடுதண்ணி சுப்பு
தவக்களை

இன்னும் கூட
இப்படியேதான்
இருந்திருப்பேன்,

கல்லூரி காலத்தில்
"கரி"
என்பது
எனக்கான
குழூ உக்குறியாய்
இல்லாதிருந்தால்...

Monday, February 27, 2006

ஒரு சின்னஞ்சிறு கதை

மேலிருந்து தவறி விழுந்தபோது, அவனோடு பலமாக மோதிக்கொண்டேன். என்னை நானே திட்டிக் கொண்டு எழுந்து போனேன். போன முறை சண்டை போட்ட யாரோ போலல்லாமல் அமைதியாக எழுந்து போய்விட்டான் அவனும், என்னுடனேயே!

Thursday, February 23, 2006

நடப்பது

நெரிசலுக்கிடையே
நான்நீண்ட நேரமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் பெண்
எதேச்சையாய்
என் முகம் பார்த்துவிடுவாளோ?

காலியாய் இருக்கும்
பக்கத்து சீட்டில்
குடிகாரன் எவனும்
உட்கார்ந்து விடுவானோ?

கூட்டமாய் மாதர்கள்
நிற்கும் நிறுத்தத்தில்
என்னை அறியாமல்
இறங்கிவிடுவேனோ?

அடிக்கடி வந்து போகும்,
சில நொடி தூக்கத்தில்
சில்லறை பாக்கி
மறந்து போவேனோ?

பயத்தினூடே
ரசிக்கப்படாமலேயே கழிகிறது
ஒவ்வொரு பேருந்துப் பயணமும்...
-----------------------------------
சுகுணா திவாகரின் "தீட்டுப்பட்ட நிலா" படித்தபின்,
அவரைப் போலவே முயற்சி செய்து.... சூடுபட்டுக் கொண்டேன்.

************************************
இதன் "மூலம்" அறிந்த நண்பர்களுக்கு.....
நான் எழுதியதை அப்படியே வெளியிடும் தைரியம் இன்னும் வரவில்லை.

Monday, February 06, 2006

அசைவம்

அசைவமாகிறது மர(ன)ம்,
இறைச்சி விற்கும் தெருவில்
இரவலனாய் நான்.

படித்ததில் பிடித்தது...

அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்.
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.