புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, April 30, 2010

புன்னகை கவிதை இதழ்

'புன்னகை' கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டுக்காக அறுபது கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட இருப்பதாக நண்பர் 'நிலாரசிகன்' வலைப்பூ மூலமாகத் தெரிந்து கொண்டேன். கவிஞர் அம்சப்ரியா ஆசிரியராகச் செயல்படும் இவ்விதழுக்கு என் கவிதையை அனுப்பி இருந்தேன். அக்கவிதை தேர்வு செய்யப்பட்டு ஏப்ரல் 2010 இதழில் வெளிவந்திருக்கிறது. அறுபது கவிஞர்களில் ஒருவனாகத் தேர்வானது குறித்து மகிழ்ச்சி. தகவல் அளித்த நண்பர் நிலாரசிகனுக்கும், தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கும் நன்றிகள்.

பிரசுரிக்கப்பட்ட கவிதை : அப்படியே

-ப்ரியமுடன்
சேரல்

Wednesday, April 28, 2010

நிர்வாணம்




நிர்வாணியாய்த் திரிந்தவனுக்குக்
கவலைகள்
என்றெதுவுமில்லை

பின்
நிர்வாணம் குறித்துக்
கவலை வந்தது

நிர்வாணத்தை இழந்தவனுக்கு
ஆயிரம் கவலைகளோடு
சேர்ந்துகொண்டன,
இழந்ததை
அறிவதன் மீதானதும்,
அடைவதன் மீதானதும்

தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்

Monday, April 19, 2010

அலைநீளம்

கடலற்ற
கடலினடியே
கடலின் கரையாகிறது

உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்

அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை

ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்

Thursday, April 08, 2010

மீதமிருக்கும் இரவு

உடலைச் சதுரமாக்கி
உள்நுழையும் காற்றுக்கெனத்
திறந்திருந்த
சாளரத்தின் வழி புகுந்து
படர்கிறது சிகரெட் புகை

அது,
பின்னிரவின் அமைதியின்
பிடியில் சிக்குண்டு
தூக்கமற்று அழும்
எவனோ ஒருவனின்
மன இடுக்குகளில் நுழைந்து
சாந்தப்படுத்துகிறது

மூச்சுத்திணறத்திணற
விழித்தெழுந்து
வியர்க்கிறேன்

தூக்கமற்ற வெளியில்
மிதந்து போய்
இன்னொரு சிகரெட்
பற்றவைக்கிறான் அவன்

தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில்
எப்படிக் கழிப்பதென்ற
திட்டமிடலிலேயே
கழிக்கிறேன்
என் மீதியிரவை