புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, January 03, 2012

எழு(த்)து

எழுதாமல் இருப்பதைப் பற்றிய குற்ற உணர்வு சமீப காலமாகவே என்னை அதிகமாக ஆட்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதனால் என்ன ஆகிவிடப் போகிறது? எழுதாமல் இருப்பதனால்தான் என்ன ஆகி விடப் போகிறது? ஒன்றும் புரியவில்லை. எழுத வேண்டுமென்கிற ஆசை மட்டும் விட மாட்டேனென்கிறது.

எழுதுவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். ஒரு வருடத்துக்குப் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு படிக்கவும் எழுதவும் செய்கிறவர் அவர். அலுவலக வேலை போல இப்படிச் செய்ய என்னால் இயலவில்லை. தினமும் நேரம் ஒதுக்கிக்கொண்டு எதையாவது எழுது என்கிறார். அன்றாட செலவுக்கணக்குகளைத் தாண்டி என்னால் எதையும் தினமும் எழுத முடிவதில்லை; அதிலும் ஒன்றிரண்டு விட்டுப் போகிறது.

எழுதும் பழக்கத்தை ஊக்கப் படுத்துவதற்காக ஒரு வலைத்தளம் உண்டென்றும், நண்பர்களுடன் இணைந்து கொண்டு போட்டி போட்டு எழுத வேண்டும் என்றும் சொன்னான் நண்பனொருவன். ஒரு நாளுக்குள் 750 வார்த்தைகள் (www.750words.com) எழுத வேண்டுமாம். தெரிந்த வார்த்தைகளை எல்லாம் ஒரு முறை எழுதி வைத்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தலையைச் சொறிய வேண்டியது தான் போலிருக்கிறது. 

பேச்சைக் குறைத்தால் ஒருவேளை நிறைய எழுதலாமோ என்கிற அசட்டுத் தனமான முயற்சியும் மனைவியின் சந்தேகப் பார்வையால் தோல்வியுற்றது. குடும்பஸ்தனாக, அதிலும் தகப்பனாக எழுத நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டதாகக் காரணம் சொல்லிக் கொள்ள முடிந்தாலும், எழுதும் நேரத்தில் தூளியில் அழும் மகளைத் தூங்கச்செய்ய இடைவேளை தேடிக் கொண்டாலும் எழுத மீதமிருக்கிறது இன்னும் நிறைய.

இப்படி எதையாவது எழுதுவதற்கு உருப்படியாக எதையாவது எழுதிவிடலாம் தானே!

Monday, January 02, 2012

உலகம்

சாளரத்தின் வெளியில்
நிறையும்  என்னுலகில்
பச்சை போர்த்திய வேம்பு மட்டும்

செவ்வகச் சட்டங்களுக்குள் புதையும்
ஓவிய மரத்தின் கால்கள்
எங்கு பாவியிருக்குமோ!

வானத்தை விடவும் பெரிதாகச்
சிறகு விரித்தாடுகிறது வேம்பு
கூடவே எங்கேனும் ஆடக்கூடும்
அதனோடு அதன் நிழலும்

காற்றுக்கு அசைந்தும்
பறவைக்கு வளைந்தும்
வெயிலுக்குத் தளர்ந்தும்
மழைக்கு நெகிழ்ந்தும் கொடுக்கும்
வேம்பின் உலகில் இருக்கலாம்
இன்னும் எதேதேனும்

என்னுலகில் வேம்பு மட்டுமென்பதில்
ஒன்றும் வெட்கமில்லை

அவரவர் உலகம்
அவரவர்க்கு.