புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, March 19, 2010

இடைவேளை

எப்போதும் அதிகாலையில் அரைத்தூக்கத்தில் எழுகையில் திறந்திருக்கும் குளியலறைக் கதவு, திடீரென்று ஒரு நாள் உட்புறமாக தாளிட்டிருக்கையில் தான் அழுத்தமாக நினைவுக்கு வந்தது தனக்குத் திருமணமானது என்பதாக நண்பனொருவன் சொன்னான். கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. அதே போல வேறு சில சந்தர்ப்பங்களை இந்த ஒரு மாதமாக உணர நேர்ந்தது.

திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நாளில் இருந்தே இந்த இடைவேளையை நானே உருவாக்கிக் கொண்டேன். வாசிப்பிலிருந்தும், பதிவிடுவதிலிருந்தும், பொதுவாகச் சொல்வதென்றால் எதையும் எழுதுவதிலிருந்தும் நானாக எடுத்துக்கொண்ட இந்த இடைவேளை வாழ்க்கையின் சில மாறுதல்களை பூரணமாக நுகர ஏதுவாயிருந்தது. அலுவலகத்திலிருந்து பதினைந்து நாட்கள் விலகி இருந்ததும் கூட நன்றாகவே இருந்தது. நன்றாகத்தானே இருக்கும் :)

இடைவேளைகள் தேவையாய் இருக்கின்றன; புத்துணர்வளிக்கின்றன; ஓய்வோடு, சாவகாசமாய்த் தன்னாய்வு செய்து கொள்ளச் சமயமளிக்கின்றன. இதோ இப்படி சில வார்த்தைகள் எழுதவும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன.

இடைவேளை எனும்போதே அடுத்த பகுதி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்த பகுதிக்காகத் தயாராகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Monday, March 08, 2010

இன்னொரு மழை

நனைவேனென்று
அடம்பிடிக்கும்
குழந்தையின்
முகம் நனைக்கவே
அவ்வப்போது பெய்துவிடுகிறது
செல்லமழை
மேகத்திடமிருந்தோ
தாயிடமிருந்தோ

Thursday, March 04, 2010

அந்நியனின் குறிப்புகள்

பூக்களை எரித்த
சாம்பலை
உண்டு கொழுக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

பிள்ளைக்கறி விற்கும்
உணவகத்தில்
தலைக்கறி வேண்டுமென்கிறாள்
நிறைமாத சூலியொருத்தி

குருதியொழுகும்
சதைத்துண்டினை
ருசி பார்க்கும் வேகத்தில்
கவ்விப் பறக்கின்றன
வெள்ளைப்புறாக்கள்

விளையாடிக் கொண்டிருக்கும்
ரோஜாச் செடிகளைக்
கற்பழிக்கும் முடிவோடு
வேர் பிடுங்கி வெளிவந்து
காத்திருக்கின்றன
சில பட்ட மரங்கள்

இன்னும் உயிர் பிரிந்துவிடாத
சாது ஒருவனின்
சிதைந்த உடலை
மழைக்காலத்துக்கென
இழுத்துச் செல்கின்றன
சிற்றெறும்புகள்

மேலும்
இந்த நகரத்தில்,

பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,
அப்படியே போதிக்கப்பட்ட
குழந்தைகள்