புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, August 27, 2009

ஆனந்த விகடன் - 2

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

இவ்வாரம்(02/09/2009) ஆனந்த விகடனில் என் குறுங்கவிதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது.

வெட்கம்

-ப்ரியமுடன்
சேரல்

Monday, August 24, 2009

மணல் வீடு - சிற்றிதழ்

மணல்வீடு சிற்றிதழின் ஆகஸ்ட் பதிப்பில் பிரசுரமாகி இருக்கும் என் கவிதைகள்

* கவிதை
* புலம் பெயர்தல்

Friday, August 21, 2009

எல்லாக் கரைகளிலும் ஒரே கடல்

சுத்தமான காற்று, யாருமற்ற வெளி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் கடல், சலனப்படங்களிலும் நிழற்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கும் மணற்பரப்பு, இப்படியான ஒரு காட்சியைச் சென்னையில் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. ஆனாலும் இது சாத்தியம். திருவான்மியூரிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பதினைந்து கிலோமீட்டர் பயணித்தபிறகு, வழி தெரியும் எந்த இடத்திலும் கடலை நோக்கிச் சென்றால் இந்த காட்சி கிடைக்கும். நண்பர்களுடன் மாமல்லபுரம் போகும் வழியில் யதேச்சையாக இந்த இடம் அறிமுகமானது. மனிதர்கள் இல்லாத கடலாடுதல் என்பதே நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருக்கிறது.சென்னையில் இருக்கும் மற்ற கடற்கரைகளுக்கும் போய் வந்திருக்கிறேன். எல்லாமே ஒரே கடல்தானே என்று சிந்திக்கும் போது, உலகம் முழுவதும் கூட ஒரே கடல்தானே என்று எண்ணத்தோன்றும். என் கால் விரல் நனைத்த சமுத்திரத்தின் துளி, என்றேனும் ஒரு நாள் ஓர் ஆஸ்திரேலிய அழகியின் விரல் தொட்டுத் திரும்பலாம்; நீருக்கலையும் ஓர் அரேபியப் பயணியின் எரிச்சலுற்ற முகத்தைத் தரிசிக்கலாம்; தூந்திரம் சேர்ந்து உறைந்துபோய் பனிப்பெருவெளியின் பரப்பில் ஒரு துகளாகலாம்; உலகம் சுற்றி மீண்டும் இக்கரை சேர்ந்து என்னைத் தேடலாம்; அல்லது, வழியிலேயே சூரியனின் தாகம் தணித்துத் தொலைந்து போகலாம்.

சென்னைக்கு சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்பு தான் முதன் முறையாக வந்திருந்தேன். அதற்கு முன் மெரீனாவைப் பற்றி எனக்குக் கிடைத்திருந்த அறிமுகம் என்னைத் திகிலடையச் செய்வதாகவே இருந்தது. கல்லூரி காலத்தில், நண்பனொருவன் சென்னைக்கு வந்துவிட்டு, கடற்கரையில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும், தான் பார்த்த காட்சிகளையும் சொல்ல, சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு மேலிட்டது. மெரீனாவை முதல் முறை அதே நண்பனோடு நேரில் பார்க்க நேர்ந்த போது, அவன் சொன்ன செய்திகளையும் அதன் மீதான என் கற்பனைகளையும் முழுவதுமாகத் தவிர்த்துவிடமுடியவில்லை. கேள்வி ஞானத்தில் அறிமுகமாகிற பல விஷயங்களை நேரில் பார்க்கையில், இப்படியான அனுபவம் ஏற்படுவது இயல்பு.

மக்கள் கூட்டம் நிறைந்து கிடக்கும் மெரீனாவின் அந்தரங்கத்தை ரசிக்க பல நாள் ஆசைப்பட்டிருக்கிறேன். சென்ற மாதம் மழை பெய்த ஒரு விடுமுறை நாளின் இரவில் அந்த வாய்ப்பு கிடைத்தது. மழை தொடங்கிய சில நிமிடங்களில், நானும் நண்பர் ஒருவரும் எங்கள் பயணத்தினூடே மெரீனாவை ஒட்டி இருக்கும் கடற்கரைச் சாலையில் இருந்தோம். கடலுக்குப் போகலாம் என்றார் நண்பர். சென்றோம். இரவு எட்டரை மணிக்கு, மனிதர்களும், கடைகளும் இயங்காது இருந்த கடற்கரை ரம்மியமாக இருந்தது. அடித்துக்கொண்டிருந்த சாரல் சிறிது நேரத்தில் நின்று போனது. சில நிமிடங்கள் கடலாடிப் பின் திரும்பினோம்.

அதிகாலையில் சுமார் ஐந்து மணிக்கு வந்தால், யாருக்கும் மெரீனாவையும் பிடித்துப்போகும். உடற்பயிற்சி, கராத்தே, யோகா, நடை, ஓட்டம் இதற்காக வரும் சொற்பமான மனிதர்களை ஐந்தரை மணியிலிருந்து பார்க்கலாம். அந்த நேரத்தில் கடலைப்பார்ப்பதற்கென்று வந்தவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன் என்பதில் கொஞ்சம் கர்வமும் உண்டு.

மேல்தட்டு மக்கள் அதிகம் உலவுகிற பகுதியாக எனக்கு அடையாளப்படுகிறது பெசன்ட்நகர் கடற்கரை என்னும் எல்லியட்ஸ் கடற்கரை. இங்கே காலை வேளைகளில் நான் போனதில்லை. இரண்டு ரூபாயைத் தானமாகக் கொடுத்த பெண்ணிடம் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்ட பிச்சைக்காரரை இக்கடற்கரையைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் நண்பனொருவன் நினைவு கூர்வான். விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மெரீனா அளவுக்கு இங்கு கூட்டம் சேர்வதில்லை. ஆனால், இங்கும் நான் விரும்பும் தனிமை கிடைப்பதில்லை.

எங்கேயும், உடன் சுற்றும் மனிதர்கள் என் இருப்பை இல்லாததாக்குகிறார்கள். கடற்கரை கூட்டங்களில் ஒரே ஆறுதல், அங்கே விளையாடும் குழந்தைகள். அவர்களுக்கான ஒரு நூதன வித்தைக்காரன் என்பது போலும் வந்து வந்து மீண்டு, வித்தை காட்டுகிறது கடல். கடலின் ஆரவாரத்தைப் பெற்றுக் கொண்டு, தங்கள் புன்னகையைக் கடலுக்குக் கொடுத்துப்போகிறார்கள் குழந்தைகள்.

மெரீனாவை ஆக்கிரமித்திருந்த கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, எலியட்ஸ் கடற்கரையையும் தொட்டிருக்கிறது. அதை அடுத்திருக்கும் திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரைகளிலும் இப்போது ஐஸ்கிரீம் விற்பவர்களையும், ராட்டினக்காரர்களையும் பார்க்க முடிகிறது.

இதற்கு மாறாக, வட சென்னையின் கடற்கரைகளில் மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் இருப்பதில்லை. காசிமேடு, ராயபுரம் பகுதிகள் மீன் பிடித்துறைமுகங்களாக இருக்கின்றன. இங்கே காதலர்களோ, குழந்தைகளோ கொண்டாட என்று எதுவுமில்லை. அதைத்தாண்டி வடக்கே செல்லச்செல்ல மண்ணரிப்பைத் தடுக்க வேண்டி குவிக்கப்பட்டிருக்கும் பாறைகளைத்தான் கடற்கரை என்பதாகக் காண நேரிடுகிறது. இந்தக் கடற்கரையை ஒட்டிய சாலை, துறைமுகத்தைச் சேர்ந்த வாகனங்களின் போக்குவரத்துக்காகவே அமைந்திருக்கிறது. இங்கும் ரசிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அது கண்களைப் பொருத்தது. மற்ற கடற்கரைகளில் இருப்பவற்றை எதிர்பார்ப்பவர்கள் இங்கு வருவதைத் தவிர்க்கலாம். ஆனால், இது ஒரு வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.

சென்னையில் கடல் பார்த்த இடங்களில் சேர்ந்து கொள்பவை சாந்தோமும், திருவெற்றியூரும். இன்னும் பார்க்காமல் மீதமிருப்பது பட்டினப்பாக்கம் கடற்கரை. இந்த இடங்கள் அனைத்துமே மீனவர்களுக்கானவையே.

பல கரைகளையும் கண்ட பிறகு ஏற்பட்ட தெளிவு, எந்தக் கரையானாலும், கடல் ஒன்றே! கூட்டத்தில் தனியனாயும், தனிமையில் கூட்டமாயும் உணரச்செய்வது காதல் மட்டுமில்லை, கடலும்....

Thursday, August 20, 2009

ஆனந்த விகடன்

நான் எழுதிய 'யாரோ ஒருத்தி' கவிதை, இந்த வாரம் ஆனந்த விகடன்(26/08/2009) இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

பின் குறிப்பு : அட்டைப்படத்தில் நம்ம 'தல' இருக்காரு :)

-ப்ரியமுடன்
சேரல்

Saturday, August 15, 2009

சுதந்திரநாள் கவிதை

கவிஞர் யுவன் (சந்திரசேகர்) எழுதிய கவிதை இது. 'முதல் 74 கவிதைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பேட்டி

ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால் கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாய்ச் சுருண்டிருக்கக்
கண்டேன்
பொழுது போகாமல்
கேட்டேன்
'இந்திய சுதந்திரத்தின்
பொன்விழா பற்றி....'
'என்ன பெரிய சுதந்திரம்
பையன்கள் இன்னும்
குத்துகிறார்கள் குச்சியால்'
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த்துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து.
பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து,
'என்றாலும்
வாழ்க்கைத் தரம்.....?'
என்றேன்.
'நோ கமெண்ட்ஸ்' என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள்
இழுத்து வைத்து.

Thursday, August 13, 2009

சுயம்

யாரும் பார்க்காத பொழுதொன்றில்
எல்லோரும் பார்க்க
பருத்த உடல் தூக்கி
ஓட்டமும் நடையுமாய்க்
கீழே குனிந்தபடி
மூச்சிறைக்க ஓடி வந்தும்
பேருந்தைத் தவற விட்டிருந்தாள்
ஒரு பெண்

எந்தச் சலனமும் அற்று
தத்தம் வழிதொடர்ந்தனர்
சுற்றி இருப்போர்

தன் சுயத்துக்குப்
பேரழிவு நிகழ்ந்ததெனச்
சூன்யத்தைச் சுமந்தபடி
இடம் விட்டகல எத்தனிக்கிறாள் அவள்

இன்றிரவு அவள்
தாமதமாகத் தூங்கக்கூடும்

Wednesday, August 12, 2009

படிந்த வரிகள் - 9

விரையும் பேருந்தில்
விடாது குழந்தையழ
முந்தியோடு
கூச்சத்தையும்
விலக்கும் தாயன்பு

- கவிஞர் யுகபாரதி

Tuesday, August 11, 2009

இல்லாத முகவரிகள் - 6

திருநெல்வேலி என்றதும் தமிழ்த் திரைப்படங்கள் ஏற்படுத்தி இருக்கிற பிம்பம் கண்முன் விரிந்துவிடுகிறது. அந்த பிம்பத்தின் நீள அகலங்களோடு கொஞ்சமும் தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அம்மாநகரம். மழை பெய்து முடித்திருந்த மாலைப் பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி திருநெல்வேலியில் இறங்கி நடந்தோம். தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நல்ல மழை என்றது செய்தித்தாள் விற்கும் கடையின் முன்னே தொங்க விடப்பட்டிருந்த விளம்பரத் தாள். காய்ந்து கிடந்த திருச்சியிலிருந்து பயணத்தைத் துவங்கிய நாமே இதற்கு நல்ல சாட்சி என்றான் நண்பன். உண்மைதான் என்றேன் நான்.

திருநெல்வேலியில் என்ன செய்வது என்ற அறிவில்லை. எங்கள் திட்டப்படி பயணத்தின் இந்த இரண்டாவது இரவை எங்காவது பயணித்துக் கடத்த வேண்டும். அவ்வளவே! மாநகரப் பேருந்து பிடித்து நெல்லையப்பர் கோயில் போய் (கோயிலுக்கெல்லாம் போகவில்லை.. :) )எதிர்ப்புறமிருந்த இருட்டுக் கடையில் அல்வா தின்றுவிட்டு, மீண்டும் பேருந்து பிடித்து திருநெல்வேலி பேருந்து நிலையம் வந்தடைந்தோம். தமிழ்நாட்டிலிருக்கும் இரட்டை நகரங்கள் இந்தத் திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும். இரண்டுக்கும் இடையே தாமிரபரணி, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டு ஓடுகிறது. இரண்டு நகரங்களையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்துக்கும் ஒரு தனி வரலாறு உண்டு. 'தமிழகத் தடங்கள்' புத்தகத்தில் மணா எழுதியிருப்பார்.

இரவு பேருந்து நிலையத்தில் எதைஎதையோ வேடிக்கை பார்த்துக் கழித்துக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்த விஷயம், இப்பொழுது வரை சொல்லிச் சொல்லிச் சிரிக்க வைக்கும். ஒரு கடையின் பெயர்ப் பலகையில் படித்தேன். 'சாந்தி ஸ்வீட்ஸ் - எங்களுக்கு திருநெல்வேலியிலோ வேறு எங்கோ கிளைகள் கிடையாது'. படித்து முடித்து விட்டு கண்களைச் சுழற்ற பார்க்கும் கடைகளில் எல்லாம் இதே பெயர், இதே வாசகம் கொண்ட பெயர்ப் பலகைகள். எது முதல் சாந்தி ஸ்வீட்ஸ்? யார் இந்த வாசகத்தை முதலில் எழுதியது என்று நெல்லை நண்பர்களைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை.

திருநெல்வேலியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கன்னியாகுமரி சென்றடைந்து விடலாம் என்றான் நண்பன். நடு ராத்திரியில் அங்கே போய் என்ன செய்வது? பேருந்தில் கடத்த இன்னொரு இரவும் காத்திருக்கிறது என்ற முடிவோடு திருச்செந்தூர் சென்று பின் அங்கிருந்து குமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். திருசெந்தூருக்குப் பேருந்துகள் எதுவும் அப்போது இல்லை. சரி...முதலில் தூத்துக்குடி போய் பிறகு அங்கிருந்து திருச்செந்தூர் பேருந்து பிடிக்கலாம் என்று தூத்துக்குடி செல்லும் பேருந்தில் ஏறினோம். ஏறியது தான் நினைவில் இருந்தது. மழை பெய்வதைக் கூட ரசிக்கவோ, பொருட்படுத்தவோ செய்யாமல் அப்படி ஒரு தூக்கம். தூத்துக்குடியில் இறங்கிய பொழுது மழை விட்டிருந்தது.

பிறகுதான் செய்தி சொன்னார்கள். தூத்துக்குடியில் இருந்து இரவு வேளைகளில் திருச்செந்தூருக்குப் பேருந்துகள் புறப்படாது. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் தான், இந்த வழியாகப் போகும் என்றதும் ஐயோ என்றானது. தேநீர் ஒன்றைக் குடித்தபடி காத்திருந்தோம். மழை பெய்த இரவில் ஊரைப் பற்றிய கணிப்புகள் எதுவும் செய்ய முடியவில்லை. மழை பெய்கிற இரவுகள் எப்போதும் தவளைகளுக்கு மட்டுமே கொண்டாட்டமாக இருக்கின்றன. மனிதர்கள் தத்தமக்கு ஏற்ற வெப்பம் தருவதான உபாயங்களைத் தேடத் தொடங்கி விடுகிறோம்.

அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தோம். திருச்செந்தூர் வந்த போது நள்ளிரவு ஆகியிருந்தது. கோயிலுக்கு எப்படிப் போவது என்று வழி கேட்டு நடந்தோம். எதற்காகக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமலே ஏதேதோ பேசியபடி நடந்தோம். கோயிலுக்குப் போவதை விட, கடலைக் காண வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்கியிருந்தது. நான் கடலைப் பார்த்து வெகு நாட்களாகி இருந்தது நினைவுக்கு வந்தது. நள்ளிரவு இருட்டில் கடலின் பேரோசை எழுந்த திசையை மட்டும் இனம் காண முடிந்தது. அந்த ஊரில் கடலுக்கு இருளில் செல்வது நல்லதல்ல, கரை முழுதும் பாறைகள் இருக்குமென்று அறிவுறுத்தினார்கள் சிலர். ஏமாற்றத்துடன் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே திரும்பி குமரியை நோக்கிப் பயணப்படலாம் என்று புறப்பட்ட பொழுதுதான் அவனை(ரை)ச் சந்திக்க நேர்ந்தது. இன்று வரைக்கும் அந்த மனிதனை நினைத்து, சிரித்துக் கொள்கிறோம் நானும் நண்பனும். இந்தப் பயணத்தைப் பற்றி எழுதும் போது, அந்த மனிதனைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டான் நண்பன்.

Friday, August 07, 2009

முதல் மழை

குழந்தை அழும்போது, அது பாலுக்கானதா, அணைப்புக்கானதா, ஈரத்திலிருந்து விடுபடும் நோக்கத்துக்கானதா, புறப் பொருட்களின் இம்சையினின்றும் மீள்வதற்கானதா என்பதைப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்யும் தாயின் செயல்களில் துவங்குகிறது அங்கீகாரம் என்கிற விஷயம். ஒவ்வொரு வயதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதோவொரு சொல்லுக்கான, செயலுக்கான அங்கீகாரத்தை மனித மனம் யாசித்துக் கொண்டே இருக்கிறது. சரியான அங்கீகாரம் கிடைத்து விடுகிற பொழுதில் கிடைக்கும் இன்பம் சிந்தனைக்கப்பாற்பட்டது. எனக்கு சமீபத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற தெர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளுள் என்னுடையதும் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. சிறுகதை என்ற தளத்தில் நான் ஒரு நல்ல வாசகன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எந்த அளவுக்கு நான் ஒரு நல்ல படைப்பாளி என்பதைப் படிப்பவர்களே சொல்ல வேண்டும். முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டதைப் போல, நான் தீராத காதல் கொள்கிற ஓர் இலக்கிய வடிவம் சிறுகதை. கவிதைகளை விடவும் நான் சிறுகதைகளை அதீதமாக நேசிக்கிறேன். என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை, நான் பார்த்த மனிதர்களை, நான் விரும்புகிற வாழ்வைப் பதிவு செய்ய ஒரு நல்ல ஊடகமாக சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் நான் சிறுகதைகளை அதிகமாக எழுதியதில்லை. சமீபத்தில் அதிர்ஷ்ட வசமாகவோ, துரதிர்ஷ்ட வசமாகவோ எனக்குப் பணியில் இருந்த கிடைத்த மூன்று மாத இடைவெளியில் சில சிறுகதைகளை எழுதி, பதிவிடாமலே வைத்திருக்கிறேன். கொஞ்சம் திருத்தங்கள் செய்து அவற்றை வெளியிடும் எண்ணம் உண்டு.

இந்த முதல் அங்கீகாரம் எனக்குத் தெம்பளிக்கிறது. நானும் சிறுகதைகள் எழுதலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

இந்தப் பதிவை ஒரு நன்றி சொல்லும் பதிவாகக் கொள்ளலாம். வலைப்பதிவர்களுக்கென்று ஒரு போட்டியை, வெகு சிரத்தை எடுத்து நடத்தி முடித்திருக்கும், இன்னும் பல நிகழ்வுகளை நடத்தவிருக்கும் திரு 'சிவராம்'(பைத்தியக்காரன்) மற்றும் திரு 'ஜ்யோவ்ராம் சுந்தர்' இவர்களுக்கும், இவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட அனைவருக்கும், 20 சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட இசைந்திருக்கும் 'கிழக்கு' பதிப்பகத்தாருக்கும், திரு பத்ரி அவர்களுக்கும், பரிசு பெற்ற மற்ற பதிவர்களுக்கும், போட்டியில் உற்சாகத்தோடு கலந்து கொண்ட பதிவர்களுக்கும், என் எழுத்தை தொடர்ந்து வாசித்து ஊக்குவித்தும், குறைகள் சொல்லியும் பின்னூட்டமிடும் நண்பர்கள் அனைவருக்கும், இந்தப் போட்டிக்கென நான் எழுதி இருந்த மூன்று சிறுகதைகளில் இதைத் தான் அனுப்ப வேண்டும் என்று ஒரு மனதாகத் தெரிவித்த நண்பர்கள் சுரேஷ்பிரபு, சுரேன் கீர்த்தி, ஞானசேகர் இவர்களுக்கும், என் படைப்புகளுக்கு முதல் வாசகியாகவும் இக்கதைக்காக நான் வைத்திருந்த இரு தலைப்புகளுள் இதைத் தேர்வு செய்து அளித்தும் இருக்கும் என் தோழி சுசித்ராவுக்கும், என்றும் என்னை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும் என் பிரியத்துக்குரிய, என் மீது பிரியமான அனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும்.....

-ப்ரியமுடன்
சேரல்

சிறுகதைக்கான தொடுப்பு : http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html

போட்டி முடிவுகள் : http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

Wednesday, August 05, 2009

எவளுக்கும் எவனுக்கும் ஒரே இரவு

இதுவரை
எது எதற்கோ
தன்னுடலில்
இருப்பதாக நினைத்த
எது எதுவோ
எல்லாம்,
வேறு
எது எதற்கோ
என்று புரியவைக்க
எவனோ வந்த பிறகு
எது எதுவும்
எது எதுவுமாகிப் போகட்டும்
என்று
எது எதுவோ
ஆகிவிடுகிறாள்
எவளும்

Monday, August 03, 2009

Spring, Summer, Fall, Winter and Springஇந்த ஆக்கம் 'யுகமாயினி' இலக்கிய இதழின் ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது


மார்புக் கச்சையை இறுக்கிக்கொண்டு தயாராகிறாள் நர்த்தகி. மடம் இதுவரை காணாத வித்தியாசமான நிறத்தைப் பூசிக்கொள்கிறது. சுற்றிச் சுழன்று, காற்றின் திசை மாற்றுகிறாள். வேர்களைப் பற்றிய நினைவுகளின்றி இலைகளும் பூக்களும் நர்த்தகியின் அழகில் மயங்கிக்கிடக்கின்றன. வியர்த்துப்பெருகுகிறார்கள் ஞானம் தேடிவந்த சீடர்கள். மானுடப்புழக்கமேதும் இல்லாது தனிமையில் உறைந்திருக்கும் பின்னிரவுக் குளமென சலனமேதுமற்று அமைதியில் நிறைந்திருக்கிறார் குரு. காமத்தின் பிரவாகத்தில் எல்லோரையும் மூழ்கடித்துவிடுவதென்று ஆடத்தொடங்கியவள் களைத்துச் சரிகிறாள். விம்மிச் சரியும் மார்புகளில் கண்களைத் தொலைத்திருக்கிறார்கள் சீடர்கள். எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதான ஒரு நிலையைத் தனதாக்கிக்கொண்ட குரு அவளை வழியனுப்புகிறார். தோல்வியின் சுவடுகளின் வழி அவள் பல்லக்கு ஊர்ந்து போகிறது. தீராத தாகத்தின் பிடியில் சிக்குண்டு, தாகமேற்படுத்திய தடாகம் தொலைவில் சிறுபுள்ளியாய் மறைவதைப் பார்ததவண்ணமிருக்கின்றனர் சீடர்கள். குரு பேசுகிறார். 'எல்லாவற்றையும் கடந்த நிலை என்பதை விளங்கிக்கொள்வதற்கோர் வாய்ப்பான நிகழ்வு இது. அவள் நடனத்தில் நீங்கள் வியர்த்தீர்கள்; உணர்வுகளின் வசம் உங்களை இழந்தீர்கள்; அவள் போன வழியில் நீங்கள் தொலைந்து போயிருக்கிறீர்கள். மெல்ல மெல்ல அவிழும் பூக்களுக்கும், அவள் மேனிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று உணர்கிறீர்கள் நீங்கள். அப்படியே உணர்கிறேன் நானும். பூக்களின் மென்மையின்பாலான மோகம் உங்களை அப்படி எண்ண வைத்திருக்கிறது. பூக்களின் பலவீனமான இயல்பைக் குறித்த பரிதாபம் என்னை இப்படி எண்ணவைத்திருக்கிறது. கடந்து போகும் நிலையைக் கைக்கொள்ளும் வேளையில் உங்களுக்கும் இது விளங்கக்கூடும்; நீங்களும் இவ்விதமே எண்ணக்கூடும்'. புரியாதமொழியில் இலக்கியச் சொற்பொழிவு கேட்டவர்களெனச் சமைந்திருக்கிறார்கள் சீடர்கள். இருளும் ஒளியும் புணர்ந்த நிலையில் வாசல் வழியோடும் ஆற்றில் மங்கலான தன் பிம்பம் பார்த்திருக்கிறது மடம்.

வழிகள் எதுவும் இன்றி மரங்களுக்கிடைப்பட்ட நிலப்பரப்பில் நடக்கிறார்கள் இருவர். சூரியன் உச்சியில் நிற்கிறது. ஞானத்தின் கூறுகளை விளக்கிக்கொண்டே நடக்கிறார் குரு. கேட்டபடியே சூழ்நிலையை அவதானித்துக்கொண்டு நடக்கிறான் சீடன். இலக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கலாம். அந்தப் பருத்த மரத்தின் பின்னே மறைந்துமிருக்கலாம். இலக்குகள் எப்போதும் தன்னிருப்பிடத்தை அறிவித்துக்கொள்வதில்லை. அலைந்து திரிபவர்கள் எப்படியேனும் அடைந்து விடுகிறார்கள். இவர்களும் அடையவிருக்கிறார்கள். வழியில் காலாறப் படுத்துக்கிடக்கிறது ஒரு காட்டாறு. மறுகரையில் விரிந்துகிடக்கும் பள்ளத்தாக்கை நோக்கியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இவர்கள் பயணம். இக்கரையை அடைந்ததும் கண்ணுக்குத் தெரிகிறாள் காட்டாறு கடக்கக் காத்திருக்கும் ஓர் இளம்பெண். கரை புரண்டோடும் வெள்ளம் அவளை அக்கரை பற்றிய கனவுகளில் மட்டும் ஆழ்த்தி வைத்திருக்கிறது. ஆழம் எவ்வளவு இருக்குமென்ற அனுமானம் எவருக்கும் இல்லை. கண்களில் கேள்வியோடும், தயக்கத்தோடும் நின்றவளை தூக்கிச் சுமந்து மறுகரையேற்றுகிறார் குரு. சீடன் காட்சிகளை உள்வாங்கிக்கொள்கிறான். மூவரும் கரையேறி இருவேறு வழிகளில் பயணிக்கிறார்கள். மனதை அரிக்கும் கேள்வியொன்றைச் சுமந்தவண்ணம் அமைதியிழந்தவனாகிறான் சீடன். போதனையில் மனம் லயிக்காதவனின் போக்கறிந்து கேட்கிறார் குரு. சீடன் தயக்கத்துடன் 'இளைஞன் நான் அப்பெண்ணைத் தூக்கிச்சுமந்திருந்தால் அதுவே ஞானமார்க்கத்தினின்றும் வேறு பாதையில் இட்டுச்செல்லும் விசையாய் இருந்திருக்கும். இப்படி இருக்கையில் முற்றும் துறந்த குரு தாங்கள் ஒரு இளம்பெண்ணைச் சுமப்பது எப்படி தகும்?' என்கிறான். குரு ஒரே பதிலைக் கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்கிறார். 'நான் அப்பெண்ணை அந்த ஆற்றங்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?'. பதில் கிடைக்கப்பெறுகிற சீடன் ஒளி தெரியும் புது வழியில் நடக்கத் தொடங்குகிறான்.

ஞானத்தின் வழிநடத்தும் குருவைத் தேடி வருகிறான் ஒரு சம்சாரி. 'ஞானம் என்பது என்ன? அதை எப்படி அடைவது?' என்று காற்றெல்லாம் கிழிய கேட்டு வந்தவனைத் துரத்தி அனுப்புகிறார் குரு. ஆண்டுகள் கழித்துத் திரும்பி வா என்ற பதிலோடு அவன் திரும்பிப்போகிறான். மீண்டும் ஆண்டுகள் கழித்து மீண்டு வருபவன், ஞானத்தின் மர்மம் நோக்கிச் செல்லும் வழி எங்கே தொடங்குகிறது என்கிறான். மீண்டும் பழைய பதிலோடு திரும்பிப் போகிறான். ஆண்டுகள் கழித்து மீள்கிறான். ஞானம் நமக்குத் தருவதுதான் என்ன? என்கிறான். மீண்டும் அதே பதில். அதன் பின் அவன் திரும்பி வரவேயில்லை. கேள்விகளின் பரப்பில் அலையத்தொடங்கும் சீடர்கள் கேட்கிறார்கள். 'ஏன் அந்த சம்சாரி திரும்பவில்லை?'. குரு சொல்கிறார், 'இல்லற தர்மத்தில் இருக்கும் ஞானத்தையும் அதை அடையும் மார்க்கத்தையும், அதன் மர்மம் அறியும் வழிமுறையையும், அது அவனுக்குத் தரும் யோகத்தையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான். இனி அவன் திரும்ப மாட்டான்'. துறவறத்தின் ஞானமார்க்கத்தில் இன்னுமோர் அடி எடுத்து வைக்கிறார்கள் சீடர்கள்.

விதைகள் விழுந்து, வேரூன்றி, தளிர்கள் துளிர்த்து, கிளைகள் தோன்றி, வேர்கள் பரப்பி, இலைகள் உதிர்த்து, மீண்டும் துளிர்த்து, பூக்கள், காய்கள், கனிகள் தோன்றி மீண்டும் விதைகள் விழுந்து காலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. சீடர்கள் குருக்களாகிறார்கள். வாழ்க்கை தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது. ஞானம் தனக்கென்று விதிக்கப்பட்ட வழியில் மீண்டும் பரப்பப்படுகிறது. இந்தச் சுழற்சிக்கு ஓரணு உயிர்களிலிருந்து, அணுக்களைப் பகுத்துணர்ந்திருக்கும் மனிதர்வரை எல்லோரும் பொதுவானவர்களே!

இந்திய ஆன்மீகம் சொல்லும் இந்தக்கதைகளும், அவை உணர்த்திச்செல்லும் உண்மைகளும் நமக்குள் புதிய கண்களைத் திறந்து வைக்கும் திறவுகோல்களாகின்றன. இதே போன்றதொரு உணர்வை என்னுள் எழுப்பிய ஒரு திரைப்படம் எனக்குச் சற்றும் புரியாத கொரிய மொழியில் அமைந்திருந்தது. மனித வாழ்வின் படிநிலைகளை, ஒவ்வொரு நிலையிலும் மனிதனின் உணர்வுகளை, அவன் கடந்துபோகும் நிகழ்வுகளை, அவன் பெறும் ஞானத்தை, பருவ கால நிலைகளைப் படிமமாக்கிப் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திரைப்படத்தின் பெயரே மேற்சொன்ன சுழற்சியை அழகுறக் கொண்டிருக்கிறது.குரு-சீடன் என்கிற அமைப்பும் கூட இந்தக் கதைகளை எனக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும். திரைப்படத்தைக் கதை சொல்லும் ஓர் ஊடகமாக மட்டும் பார்க்காமல், அதையும் மீறிய வாழ்வின் அற்புதங்களையும், ஆகச் சிறந்த கணங்களையும் பதிவு செய்யும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருக்கும் விதத்தை நாம் வியந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழ்கிற வாழ்க்கைச்சுழற்சி, அனுபவ மாற்றம், அறிவு முதிர்ச்சி இவைகளை மிக நுண்ணிய கண்கள் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.Spring பருவத்தில் துவங்குகிறது திரைப்படம். மரங்கள் நிறைந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கில் ஓர் ஏரி. ஏரியின் நடுவே ஒரு கோயில். அது ஒரு சிறு குடிலைப் போல அமைக்கப்பட்டிருக்கிறது. மிதந்து போகும் தன்மை கொண்டிருக்கிறது. அதில் ஒரு குரு தன் சீடனுடன் வாழ்கிறார். சீடன் ஒரு சிறுவன். அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக, படகில் ஏறி மறுகரைக்குச் சென்று காட்டுக்குள் மூலிகைகள் பறிக்கும் நிகழ்வு அமைகிறது. சிறுவனுக்கு எல்லாம் விளையாட்டு நிறைந்ததாகவே தெரிகிறது. ஏரியில் ஓடும் மீனுக்கும், தவளைக்கும், பாம்புக்கும், உடலில் கல்லைக் கட்டி ரசிக்கிறான். அவை இயங்க இயலாமல் இருக்கும் நிலை இவனைக் குதூகலிக்கச்செய்கிறது. குரு இவற்றைப் பார்க்கிறார்.இரவில் அவன் உறங்குகையில் அவன் முதுகில் அளவில் பெரிய கல்லைக் கட்டி விடுகிறார். காலையில் எழுந்து, நடமாட வெகு சிரமப்படும் சிறுவன் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறான். 'நீ துயரத்துக்குள்ளாக்கிய உயிர்களை விடுவித்து விட்டு வா; நான் உன்னை விடுவிக்கிறேன். ஆனால், அந்த உயிர்களில் ஏதேனும் ஒன்று இந்நேரம் இறந்திருந்தாலும், அந்தப் பாரத்தை உன் வாழ்வு முடியும் வரையிலும் உன் மனதில் சுமப்பாய்' என்கிறார் குரு. சீடன் மீனையும், தவளையையும், பாம்பையும் தேடிக் கண்டடைகிறான். மீனும், பாம்பும் இறந்திருக்கின்றன. தவளை ஊனத்துடன் நீந்திச் செல்கிறது. மீளாத் துயரில் ஆழும் சிறுவன், பீறிட்டு அழும் ஓசையோடு Spring நம்மைக் கடந்து செல்கிறது.

ஏரியில் சற்றே குறைந்த நீருடன் துவங்குகிறது Summer. வாலிபப் பருவத்தை எட்டியிருக்கும் சீடன், காட்டில் புணர்ந்து கிடக்கும் பாம்புகளைப் பார்க்கிறான். சொற்களில் சிக்காத ஏதோ உணர்வு அவனுள் ஊற்றெடுக்கிறது. நகரத்தில் இருந்து அறியப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருத்தி, தன் தாயுடன் சிகிச்சைக்காக குருவின் குடிலுக்கு வருகிறாள். குருவின் வசம் மகளை ஒப்படைத்து வெளியேறுகிறாள் தாய். முதல் முதல் பெண் வாசம் அறிபவனுக்குள் காமம் பீறிட்டெழுகிறது. தனிமையின் பொழுதொன்றில் அவளது அந்தரங்கத்தின் எல்லை மீறுபவனை அறைகிறாள் இளம்பெண். காமத்தின் தீ அவனை எரியும் மெழுகென உருக்குகிறது. இயற்கை சோபிதமாக இருக்கும் ஒரு வேளையில் அவளைப் படகில் இழுத்துச் சென்று காட்டில் வைத்துப் புணர்கிறான் சீடன். அதன் பின் அப்பெண்ணும் அவனோடு இணக்கமாகிறாள். அவனுக்கு வாழ்க்கை அர்த்தப்படுவதாய் உணர்கிறான். அவள் நோய் குறைவதாய் உணர்கிறாள். குருவுக்குத் தெரியாமல் இவர்களின் உறவு வளர்கிறது.குருவுக்கு இவர்களின் உறவும், உடலுறவும் தெரியும் நாளில், 'உன் நோய் குறைந்ததா?' என்று கேட்கிறார் பெண்ணிடம். அவள் 'ஆம்' என்கிறாள். 'என்றால் உன் நோய்க்கு அதுவே மருந்து. நீ குணமடைந்து விட்டாய். இனி நீ இங்கிருந்து செல்லலாம்' என்கிறார். சீடன் அது கூடாது என்று தடுக்கிறான். அவனைக் கண்டுகொள்ளாதவராக, அவளை அனுப்பி வைக்கிறார் குரு. அடங்காத காமத்துடனும், கோபத்துடனும், வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையைத் தூக்கிக்கொண்டு வெளியேறுகிறான் சீடன். தூரத்தில் குடில் அமைதியில் உறைந்திருக்கிறது. உள்ளே குரு உறங்கிக் கொண்டிருக்கிறார். Summer தன் உக்கிரத்தைக் காட்டிவிட்டு ஓய்கிறது.

சிவந்திருக்கும் இலைகளுடன் தொடங்குகிறது Fall. முப்பதுகளின் நாட்களில் மீண்டும் குடிலுக்குத் திரும்புகிறான் சீடன். அவன் தன் மனைவியைக் கொன்றிருப்பதை முன்பே அறிந்து வைத்திருக்கிறார் குரு. அதைப் பற்றிய பேச்சுகள் இருவரிடமும் இல்லை. ஆத்திரத்தின் பிடியில் சிக்குண்டவனுக்கு எல்லாமே வெறுப்பேற்படுத்துகின்றன. ஆத்திரத்தின் உச்சியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறான். அவனை அடித்து உயிர் காக்கிறார் குரு. சீடனின் ஆத்திரத்தை அடக்க வழி காண்கிறார்.அவர் இடும் பணியை அவன் செய்துகொண்டிருக்கும் நேரம், அவனைக் கைது செய்ய நகரத்திலிருந்து காவலர்கள் வந்து சேர்கிறார்கள். மறுநாள் வரைக் காத்திருந்து, அவன் பணி முடித்த பிறகு அழைத்துச் செல்கிறார்கள். குரு அவனுக்கு விடை கொடுத்தனுப்புகிறார். தன் பணிகள் முடிந்து தன் அந்திமக்காலம் முடிவதை உணர்ந்த குரு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அவரது உடமைகள் சீடனுக்காகக் காத்திருக்கின்றன. கூடவே குருவின் ஆன்மாவும். Fall ஒரு உன்னதமான உயிரின் வீழ்ச்சியைக் காற்றெங்கும் கூவியபடி அடங்குகிறது.Winter இல் குடிலைச் சுற்றிலும் பனி ஆக்கிரமித்திருக்கிறது. குரு அமர்ந்து மரித்துப் போன படகு பனியில் சிக்கியிருக்கிறது. நடுத்தர வயதுக்காரனாக திரும்புகிறான் சீடன். குருவின் ஆடைகளை அணிந்துகொள்கிறான். குருவின் குறிப்பேட்டில் இருக்கும் martial arts இன் படிநிலைகளைக் கற்றுக்கொள்கிறான். சிறுகுழந்தையோடு குடிலுக்கு வந்து சேரும் ஒரு பெண் தன் முகத்தை மூடியே வைத்திருக்கிறாள். குழந்தையை விட்டுவிட்டு இரவில் வெளியேறும்போது பனியில் புதையுண்டு இறக்கிறாள். குழந்தை பகல்பொழுதில் பனியில் தவழ்கிறது. வட்டமாகச் செதுக்கப்பட்ட கலலொன்றைத் தன் உடலோடு சேர்த்துக்கட்டிக்கொண்டு, புத்தர் சிலை ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு மலையின் உச்சியை நோக்கி நடக்கிறான் சீடன். உச்சியை அடைந்து தியானிக்கிறான். தூரத்தில் பனியின் மத்தியில் குழந்தையைத் தாங்கி நிற்கிறது குடில்.

மீண்டும் வந்து சேர்கிற Spring இல், குடிலைச் சுற்றிலும் நீர் நிறைந்திருக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனாகி, சீடனாகி விட்டிருக்கிறான். சீடன் குருவாகி இருக்கிறான். சிறுவனின் கையில் சிக்கும் இன்னொரு மீனும், இன்னொரு தவளையும், இன்னொரு பாம்பும் வதைபடுகின்றன. மலையின் உச்சியில் இருக்கும் புத்தரின் பார்வையில் அடிவாரத்தில் இருக்கும் குடில் புலனாகிறது. மென்மையான இசையுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

பெயர்கள் ஓடத்தொடங்க அசாத்தியமான அமைதி ஒன்று மனதுக்குள் வந்து சேர்கிறது. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச் சாதாரணமாக நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம். ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் வசனங்களை ஒரு முழு நீள வெள்ளைத்தாளின் ஒரு பக்கத்தில் எழுதிவிடமுடியும். செயல்களின், முக பாவனைகளின், அங்க அசைவுகளின் வழி கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இயற்கையும் கூட ஒரு பாத்திரமாகப் பங்கேற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நான்கு பருவ நிலைகள் மனித வாழ்வின் நால்வேறு படிநிலைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன.

படிமமாக, பூடகமாக, பல செய்திகள் படம் முழுவதும் உணர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு கால நிலையிலும் ஒரு மிருகம் குருவின் குடிலில் இருப்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பருவத்தில் இருக்கும் நாய்க்குட்டி, அறியாமையையும், செலுத்தும் வழி செல்லும் தன்மையையும் விளக்குவதாயிருக்கிறது. வாலிபப் பருவத்தில் உடன் இருக்கும் சேவல், ஆண்மையையும், காமத்தையும் குறிக்கும் விதமாக இருக்கிறது. முப்பதுகளில் உடனிருக்கும் பூனை, உக்கிரத்தையும், நிலை கொள்ளாத அமைதியற்ற மனநிலையையும் பிரதிபலிப்பதாயிருக்கிறது. இறுதியில் வந்து சேர்கிற பாம்பு, ஆன்ம பலத்தைக் காட்டுவதாகவும், ஞானத்தின் உச்ச நிலையை உணர்த்துவதாகவும் அமைகிறது.

திறந்த வெளியில் இருக்கும் வெறும் கதவுகள், மனிதன் தனக்கென வரித்துக்கொண்ட நெறிகளுக்குப் படிமமாக இருக்கின்றன. கதவுகள் தாண்டிய வழிகளும் நிறைய உண்டு. நெறிகளை மீறிய நடைமுறைகளும் உண்டு. சிறுவயதில் கதவுகளின் வழி மட்டுமே செல்லும் சீடன், வாலிபப் பருவத்தில் காமத்தின் உச்சத்தில் நெறிகளை மீறிய வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அது இருளில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இங்கே மகுடேஸ்வரனின் கவிதை ஒன்று நினைவில் தட்டுப்பட்டது.

'சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்'


காலமாற்றத்தில் மனித மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்களையும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் இயக்குனர். சிறுவயதில் காட்டில் இருக்கும் புத்தர் சிலை மீதேறி நின்று பார்க்கும் சிறுவனின் பார்வை, தொலைவில் தெரியும் குடிலின் மீதே குவிகிறது. அது உள்நோக்கியதாக அமைகிறது. வாலிபப்பருவத்தில் அதே சிலை மீதேறி நிற்பவனின் பார்வை நகரத்துக்குச் செல்லும் வழியின் மீது படிகிறது. இது வெளிநோக்கியதாக அமைகிறது.

சிறுவயதில் ஒரு பீடத்தின் மீது கால் வைத்துப் படுத்துத் தூங்குகிறான் சீடன்; வாலிப வயதில், அதே பீடத்தில் குடிலுக்கு வரும் யுவதி அமர, குருவுக்குப் பிடிக்காது என்று அவளை எழச் சொல்கிறான். பின், அவளோடு புணர்ந்தான பிறகு அவளுக்கு அதே பீடத்தை, அமரத் தருகிறான். இப்படி மன நிலையில் விளைகிற சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

காமம் மேலிட, தன் வசம் இழந்த சீடன் படகை ஏரியின் நடுவே சுற்றச் செய்யும் காட்சி இயக்குனரின் திறமைக்கு இன்னுமொரு உதாரணம். சீடனுக்கும் யுவதிக்குமான காட்சிகள் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கோபத்தின் உச்சத்தில் சீடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள மூச்சை அடக்கிச் சாக முனைகிறான். அப்போது அவனைக் காப்பாற்றும் குரு, பின் அதே உத்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.

கடைசி காட்சிகளில் கல்லைக் கட்டிக்கொண்டு சீடன் மலையுச்சிக்கு ஏறும் காட்சியில், இடைக்காட்சிகளாக கல் கட்டப்பட்டு துயருறும் மீனும், தவளையும், பாம்பும் காட்டப்படுவது காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தும் விதத்திற்கு நல்ல சான்று. இக்காட்சிகளில் பின்னணியில் வரும் இசை நம்மை எங்கோ இட்டுச்செல்கிறது. திரைப்படம் முழுவதுமே இசையும் ஒலிப்பதிவும், மிகப் பொருத்தமாக, மிகத்துல்லியமாக அமைந்திருக்கின்றன. ஒளிப்பதிவும் மிகத் தெளிவாக, காட்சிகளைத் தொட்டு ரசிக்கும் உணர்வை நமக்குத் தருகிறது. நடிப்பு நன்றாக இருந்தது என்று சம்பிரதாயமாக எதுவும் சொல்லத்தேவையில்லை எனுமளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எந்தவொரு காட்சியும் தேவையற்றது என்ற விவாதத்துக்கு வழிவகுக்கவேயில்லை.

நல்ல இலக்கியம், நல்ல திரைப்படம் இவற்றிற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு சமீபத்தில் எனக்கொரு நல்ல பதில் கிடைத்தது. ரசனை என்பது நம் அறிவு வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்று கணினிகளில் உருவம் பெறுகின்றன. வெறும் ஒலிக்குறிப்புகளாக இருந்த இசை, இன்று சுதியும் லயமும் சேர இன்பத்தில் ஆழ்த்துகிறது. பேச மட்டுமே என்றிருந்த மொழி இன்று இலக்கியங்கள் படைத்தளிக்கிறது. எல்லாக் கலைகளின் வளர்ச்சியுமே அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக அமைகின்றன என்பது உண்மை. ரசனையின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதென்பது, அறிவின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதே யாகும். அந்த இன்னொரு படியாக இத்திரைப்படம் நிச்சயம் இருக்கிறது.

பின்குறிப்புகள் :

1. 2003ல் வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் 'கி டுக் கிம்'. அடிப்படையில் இவர் ஓர் ஓவியர். கொலாஜ் ஓவியங்களின் மீது இவருக்கு அபரிமிதமான ஈடுபாடு உண்டு. அந்த முறையை திரைப்படத்திலும் செய்துபார்க்கலாம் என்ற எண்ணத்தில் இவர் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சி வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

2. கி டுக் கிம், திரைப்படத்தில் Winter பருவத்தில் வரும் சீடனின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

- சேரல்

Saturday, August 01, 2009

ஏலியன்கள் வாசம் செய்யும் வீதி

இரண்டு வருடங்கள் கழிந்தோடிவிட்டிருக்கின்றன. கிராமத்தில் தொடங்கிய பயணம், திருச்சி என்கிற சிறு மாநகரில் நான்காண்டுகள் வளர்ந்து, பெங்களூர், ஐதராபாத் என்ற மாநகரங்களில் இரண்டாண்டுகள் நீண்டு, பின் சென்னை மாநகரைச் சேர்ந்திருக்கிறது. சென்னையில் தினம் தினம் 5000 புதுமனிதர்கள் பிரவேசிப்பதாகச் சொல்கிறார்கள். அதில் தற்காலிகமாக வருபவர்கள் பலர், நிரந்தரமாகத் தங்கிவிடுகிறவர்களும் பலர். இதில் எந்த வகையில் சேர்வது என்ற தெளிவில்லாமல் இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்திறங்கினேன். இன்னும் கூட அத்தெளிவு பிறக்கவில்லை. தற்காலிகமாக, நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த இரண்டாண்டுகள், எத்தனையோ வித்தியாசமான மனிதர்களையும், அனுபவங்களையும், சந்தோஷங்களையும், துக்கங்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் என்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தனிப்பட்ட ஒருவனுடைய இத்தகையதான எந்த உணர்வு பற்றிய பிரக்ஞையும் இன்றி தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது மாநகரம். என் குறிப்பேடுகளில் சென்னையை ஏலியன்கள் வாழும் வீதி என்று தான் வரித்து வைத்திருக்கிறேன். தொடர்பற்ற இந்த மனிதர்கள் விளையாடும் வினோத விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு வாழிடம் என்பதைத் தாண்டியும் சென்னை என்னுள் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாங்குழியின் காய்கள் போல ஒவ்வொரு குழியிலும் என்னை மாற்றி மாற்றி நிரப்பி வந்த காலம், இப்போது சென்னையில் இட்டு நிரப்பி வைத்திருக்கிறது. இதமான இம்சை தரும் இம்மாநகரம் குறித்தான் பிம்பம் இங்கு வந்துசேரும் வரை என் மனதில் வேறு மாதிரியானதாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் உடைத்தெறிந்து நிற்கும் நிதர்சனம் சில சமயங்களில் என்னைத் திகைக்கவும் வைக்கிறது.

பிழைப்புக்காக என்று வந்திருக்கிற ஊர், ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும்? இந்த ஊரை எனக்குப் பிடிக்கவில்லைதான். பிழைப்புக்காக வந்திருக்கும் ஊரை எப்படிப் பிடிக்காமல் போகமுடியும்? இந்த ஊர் எனக்குப் பிடிக்காமலும் போகவில்லைதான். ஒரு மாதிரியான கூட்டாஞ்சோற்று மனநிலைதான் எழும்பி நிற்கிறது.

ஒரு விஷயத்தைப் பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை (ஏதோ திரைப்படத்தில் கேட்ட வசனம் :)). அதிருப்தியான, பிடிக்காத விஷயங்களைச் சொல்வதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகிழ்ச்சியான விஷயங்களைச் சொல்வதில் திருப்தியுடன், அது நமக்குப் பிடித்தும் இருக்கும் தானே!

பட்டியல் என்றில்லாமல், சென்னையின் சுவாரஸ்யங்கள், மனதோடு அணுக்கமாகிவிட்ட விஷயங்கள், இன்னும் சென்னையிலிருந்து என்னைத் துரத்திவிடாமல் பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை எழுதிப்பார்க்கலாம். ஏலியன்கள் வாசம் வீசும் இந்த வீதியில் கொஞ்சம் காலாற நடந்து பார்க்கலாம்....