புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 29, 2009

நீர் வழிப்படூஉம் புணை

னகல் பார்க்கிலிருந்து பாண்டி பஜார் வழியாக நடந்து வந்தால் இருக்கும் முதல் இடது சந்தில் திரும்பி உடனே வலப்புறம் திரும்பினால் இருக்கிறது ராஜாபாதர் தெரு. அந்தத் தெருவில் இருக்கும் எந்த நிறம் என்று தெரியாத நிறத்தில் பெயிண்ட் அடித்த, இடது புறம் சற்றே சாய்ந்த மாதிரி தெரிகிற, ஒரு பழைய கட்டிடத்தின் முதல், இரண்டாவது மாடிகளில்தான் ஷோபனா லாட்ஜ் இருக்கிறது. கீழே ஒரு பழைய பேப்பர் கடை, பக்கத்திலிருக்கும் டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்குப் படியளக்கும் ஒரு சிக்கன் ஸ்டால், ஒரு ஹார்டு வேர் கடை இவைதான் ஷோபனா லாட்ஜுக்கான அடையாளங்கள். டாஸ்மாக் அருகில் இருக்கும் உடைந்த சுவர் முழுதாக நிமிர்ந்து நின்று, அதில் சில்க் ஸ்மிதா படம் ஒட்டியிருந்த ஒரு நன்னாளில் மாணிக்கம் அங்கு வந்து சேர்ந்திருந்தார். இப்போது நயன்தாரா படம் ஒட்டுகிறார்கள்.

எப்படி இங்கே வந்து சேர்ந்தார் என்ற கதை எல்லாம் அவருக்கே கூட மறந்து போயிருக்கும். இதுவும் இன்னொரு இடம். இங்கே நான்கு மாதமோ ஐந்து மாதமோ என்ற எண்ணத்தில் தான் வந்தார். இங்கேயும் வாழ்க்கை அருவருப்பாகத்தான் இருந்தது. ஆனால் மற்றவர்கள் போல் இல்லாமல் இவர்கள் துரத்திவிடுவதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததே இவருக்கு நிம்மதியாய் இருந்தது. இதில் எங்கே போய் அசிங்கமான வாழ்க்கை என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பது?

காலை எழுந்தவுடன் லாட்ஜ் முழுக்கக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். சில பேர் அறையை மூடிக் கொண்டு திறக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். மேனேஜர் பார்த்து விட்டால் திட்டுவார். அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். மேனேஜர் வந்து சேர்ந்த பிறகுதான் காலைக் கடன்கள், குளியல் எல்லாவற்றிற்கும் வழி பிறக்கும். அவர் அறையின் உட்புறம் தான் மாணிக்கம் பயன்படுத்துவதற்கான கழிவறையும், குளியலறையும் இருக்கிறது. போகும்போது பூட்டிக்கொண்டு போய்விடுவார். திறந்து வைக்கச் சொல்லி இவரும் கேட்டதில்லை; அவரும் அதைப்பற்றி யோசித்ததில்லை.

ராத்திரி வேளைகளில் அவசரம் என்று வந்தால், அதோகதிதான். சிறுநீர் என்றால் வெளியே போய் டாஸ்மாக் பக்கத்தில் இருக்கும் நயன்தாரா நோட்டீஸ் சுவரோரமாய் அடித்து விட்டு வரலாம். வேறு உபாதைகள் என்றால்? ஒரு முறை இப்படித்தான் பதினெட்டாம் நம்பர் ரூமில் இருந்தவர் மீந்து போனதென்று கொடுத்த புரோட்டாவை ஆசை ஆசையாகத் தின்று விட்டு ராத்திரி முழுக்க ஒரே அவஸ்தையாகிவிட்டது. பனகல் பார்க் பக்கமாக இருந்த பொதுக்கழிவறை வரை போய் வர வேண்டியதாகி விட்டது. அப்போதுதான் இந்த 'மூலம்' கொஞ்சமாக ஆரம்பித்திருந்தது. இங்கேயே இரண்டாம் நம்பர் அறையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வைத்தியர் வந்து போய்க்கொண்டிருந்தார். மூலம், பௌத்திரம், விரை வீக்கம் எல்லாவற்றிற்கும் வைத்தியம் என்று காய்ந்த மஞ்சள் நிறத்தில் போஸ்டர் எல்லாம் கூட அடித்து ஒட்டி இருந்தார். பெருங்கூட்டம் அலை மோதும். மாணிக்கத்துக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தரச் சொல்லி மேனேஜர் கூடச் சிபாரிசு செய்தார். மாதக் கணக்கில் மருந்து சாப்பிட்டும் குணமாகிற வழியாய்த் தெரியவில்லை. இப்போது அந்த வைத்தியர் இங்கே வருவதே இல்லை. பழைய நோயாளிகள் மட்டும் எப்போதாவது வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ஏழு மணி வாக்கில் பத்திரிகைகள் வந்து சேர்ந்து விடும். எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைப்பது மட்டும் இவர் வேலை. லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் யாராவது பேப்பர் வேண்டுமென்று கேட்டால் கொண்டு போய்க் கொடுப்பார். திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் மேனேஜர் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார். அவருக்கு நாள் முழுவதும் இருக்கும் ஒரே பொழுது போக்கு இந்தப் பத்திரிகைகள் தான். தங்கி இருப்பவர்கள் காலையிலிருந்தே ஏதாவது எடுபிடி வேலை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். டீ வாங்குவது, சிகரெட், பீடி வாங்குவது, சட்டை இஸ்திரி போடக் கொடுப்பது, சாப்பாடு வாங்குவது என்று ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும். முகம் சுழிக்காமல் எல்லா வேலைகளையும் செய்வார் மாணிக்கம். எல்லாருக்கும் அவரைக் கொஞ்சம் பிடித்தும் இருந்தது.

வாடிக்கையாக வந்து தங்குகிறவர்களுக்கு மாணிக்கம் மீது அதிகப் பிரியம் உண்டு. அறையைக் காலி செய்து போகும் போது ஏதாவது காசு கொடுத்துப் போவார்கள். மீண்டும் இப்போதைக்கு சென்னைக்கு வரப்போவதில்லை என்று சொல்லித் தங்கள் நினைவாகத் தாங்கள் பயன்படுத்திய பொருட்களைக் கொடுத்துப் போனவர்களும் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல், தான் வைத்திருக்கும் பழைய அழுக்கடைந்த பையில் போட்டு மூட்டை கட்டி வைத்திருக்கிறார். மேனேஜர் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு லாட்ஜ் வேலைகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதில் மட்டும் தான் கண் இருக்கும்.

இங்கே தங்குபவர்கள் பெரும்பாலும் வியாபார நிமித்தமாகத் தற்காலிகமாக சென்னைக்கு வருபவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் ஏதேதோ ஊர்களிலிருந்து வருகிறார்கள். ஐதராபாத், பெங்களூர், மும்பை இங்கிருந்தெல்லாம் கூட சில பேர் வருகிறார்கள். எல்லாருமே தமிழ் பேசுவார்கள். அதிகப்படியாக பத்து நாட்களுக்கு மேல் யாரும் தங்கியதாக மாணிக்கத்துக்கு நினைவில்லை.

யாருடைய புண்ணியத்திலாவது மாணிக்கத்துக்கு அன்றைய காலை உணவு கிடைத்துவிடும். பத்து மணிக்கு சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தால், எல்லா அறைக்கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும். மேனேஜர் தினமலர், தினமணியோடு தன் அறையில் ஐக்கியமாகி விடுவார். அவர் வீடு இங்கே தான் சைதாப்பேட்டையில் இருக்கிறது. இவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முதலாளியும் அந்தக் கட்டுப்பாட்டை விதிக்கவில்லை. ஆனாலும் இவர் இங்ககேயேதான் இருப்பார்.

பத்து மணிக்குமேல் மயான அமைதியாகிவிடும் லாட்ஜைத் தான் மாணிக்கத்துக்குச் சற்றும் பிடிக்காது. பின்புறம் இருக்கும் பாண்டி பஜார் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில் ராஜா பாதர் தெரு சோகை படிந்து கிடக்கும். வாகனங்கள் வருவது மிகவும் அபூர்வம். அந்த வழியாகப் போவதற்கு யாருக்கும் தேவை இருப்பதில்லை. இருப்பதெல்லாம் இந்த மாதிரி லாட்ஜ்கள், ஆம்பிளைகள் மட்டும் வந்து போகும் சில கடைகள், அதுவும் சாயங்காலமும் ராத்திரியும் மட்டுமே ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். ஏவல் சொல்வதற்கும் ஆள் இல்லாமல் மாணிக்கத்தின் பகல் பொழுது தனிமையில் நிரம்பி இருக்கும். இந்த வருத்தத்திலேயே மதியப் பொழுதுகளை உணவற்றதாகவே பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார். மேனேஜரின் மதிய சாப்பாட்டை இவர் தான் அவர் வீட்டுக்குப்போய் வாங்கி வருவார். அவரின் வீட்டம்மா நல்லவளாகத்தான் தெரிகிறாள். பின் எதற்காக இவர் வீட்டை விட்டு விலகி இருக்க நினைக்கிறார் என்ற கேள்வி மாணிக்கத்தை வெகு நாட்களாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. மேனேஜர் நல்ல மூடில் இருக்கும்போது ஒரு நாள் கேட்டுவிட வேண்டுமென்றிருக்கிறார்.

மதியம் உடலைச் சுருக்கி மேனேஜரின் அறைக்கு வெளியே இரவில் தான் உறங்கும் பென்ச்சில் படுத்துக்கொள்வார். வெயில் சுள்ளென்று முகத்தில் தாண்டவமாடும். தூங்கும் எண்ணம் கிடையாது. வெயில் அடிப்பதற்கான உணர்வு ஏதுமில்லாமல் ஏதேதோ கனவுகளில் பறக்கத் தொடங்கிவிடுவார் மாணிக்கம். பழைய நாட்களின் வசந்தம், கோடை, மழை, பனி எல்லாம் மாறி மாறி கொலாஜ் ஓவியம் மாதிரி மனதுக்குள் வண்ணம் தீட்டிச் செல்லும்.

மாணிக்கம் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். திண்டுக்கலுக்குத் தெற்கே கொஞ்ச தொலைவில் இருந்தது அவரின் கிராமம். வாலிபத்தில் வேற்று சாதி பெண்ணொருத்தியைக் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். அவள் பட்டிணம் வந்து ஒரு மாதம் முழுதாக ஆவதற்குள் இன்னொருவனை இழுத்துக்கொண்டு போய் விட்டாள். அது முதலே பெண்கள் என்றாலே ஒரு பயம் இவருக்குள் தொற்றிக்கொண்டது. பின் பெண்மையின் வாசம் இல்லாமலே வாழத்தொடங்கினார். யாராவது கேட்டால் கல்யாணம் செய்து கொள்ளவேயில்லை; அதில் இஷ்டம் இல்லை என்பதாகச் சொல்லி வந்தார். திரும்பி ஊருக்குப் போகவும் தைரியம் வரவில்லை. ஊரிலிருந்து யாரும் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. அப்படியே கால் போன போக்கில் போய், சோறு கண்ட இடத்தில் தின்று, கிடைத்த இடத்தில் தூங்கி என்று அவர் வாழ்க்கை திசை மாறிப்போனது.

கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிற வெயில் இவரை நனவுலகுக்கு மீட்டுத்தரும். பழைய கதைகளை அசைபோட்டபடியே வந்து சேர்கிற சாயங்காலத்தில் மாணிக்கம் புது மனிதராகி விடுவார். சாயங்காலங்களில் ராஜாபாதர் தெரு களை கட்டத்தொடங்கிவிடும். டாஸ்மாக் கடையிலும், சிக்கன் ஸ்டாலிலும், பக்கத்தில் தற்காலிகமாக முளைத்துவிடும் பஜ்ஜி கடைகளிலும் ஈக்களும் அதைவிட அதிகமாக மனிதர்களும் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். மாணிக்கத்துக்கு சந்தோஷமான நேரம் என்றால் அது இதுதான். அவரைப் பொறுத்த வரையில் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதில் அவருக்கு உளவியல் ரீதியான ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. தன்னை இந்த ஜன சந்தடியில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு ஒரு பக்கம், தான் தனிமையில் இல்லை என்பதால் நினைவுகளில் மூழ்கி அழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்ற உணர்வு ஒரு பக்கம், இரண்டும் சேர்ந்துகொண்டு அவருக்குள் உற்சாகத்தைக் கூட்டும். சாயங்காலமானதும் லாட்ஜில் அடையத்தொடங்கும் மக்களின் ஏவல்களுக்கு ஒரு சிறுவனின் சிரிப்போடு பணிவார் மாணிக்கம். புட்டிகளுக்கு மீந்துபோகிற கொறிக்கும் வகையறாக்கள் இவரின் இரவு பசியாற்றிவிடும்.

கிட்டத்தட்ட இப்படியே கழிந்துவிட்ட இன்னொரு நாளின் இரவில் மாணிக்கம் நடந்து பாண்டி பஜாரை அடைந்திருந்த போது மணி பதினொன்றரையைத் தாண்டி இருந்தது. தூக்கம் உச்சத்தைத் தொட்ட நேரத்தில் எழுந்திருந்ததால் நடையில் ஒரு தளர்ச்சி இருந்தது. வயதானதால் கூட இருக்கலாம். வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

இது மாதிரி வேலைக்கு யாராவது அனுப்பினால், எப்படி மறுப்பதென்று நிறைய யோசித்தும் அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. லாட்ஜுக்கு வரும் எல்லோரும் இப்படி இருப்பதில்லை. லாட்ஜும் அப்படிப்பட்டது இல்லை. இதெல்லாம் மேனேஜருக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயமும் ஒரு புறம். இவர்களை எதிர்த்துப் பேசும் துணிவும் கிடையாது.

இன்றைக்கு எந்தப் பகுதிக்குப் போகலாம் என்ற சிந்தனையோடு மாம்பலத்தை நோக்கி நடந்தார். துரைசாமி சப்வே தாண்டி போகும் வரை எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. பத்து மணி வரை கூட்டம் களை கட்டியிருக்கும் இடத்தில் இப்போது ஒரு ஈ காக்கா கூட இல்லை. பாண்டி பஜாரில் இந்தப் பக்கமாகப் போயிருந்தால் ஏதாவது கடைகள் திறந்திருக்கும். ஆனால் ஒரு முறை போன கடைக்கு மறுமுறை போவதில் அவருக்கு விருப்பமில்லை. அந்த முகங்கள், பின்புறம் கேட்கும் சிரிப்பொலிகள் அவரை வெகுநாட்கள் துரத்தும். மின்சார ரயில் கடந்து போன பிறகான பத்து நிமிடத்து நடைக்குப் பிறகு ஒரு கடை திறந்திருந்தது. இப்போதெல்லாம் மருந்து கடைகள் கூட சீக்கிரமே பூட்டி விடுகிறார்கள். இந்தக் கடைக்கு இதற்கு முன் வந்ததில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு நெருங்கினார். கடைக்காரர் மட்டும் கணக்கு வழக்குகள் பார்த்துக்கொண்டிருந்தார்.

வழக்கம் போலக் கூச்சத்துடன் நெளிந்து கொண்டு நின்றவரைக் கடைக்காரரே விசாரித்தார். இவர் சொன்னவுடன் இளக்காரமாக ஒரு புன்னகையைச் சிதற விட்டு ஏதோ கேட்டார். 'எளவு இவிங்க சொல்றதெல்லாம் நமக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது. ஏதாவது போட்டுப் பாத்திருந்தா தெரியும். எந்த வயசுல என்னா வேல குடுக்குறாய்ங்க?' என்று நொந்து கொண்டு 'ஏதாவது ஒண்ணு குடுங்க' என்றார். கடைக்காரர் கொடுத்தபின் காசைக் கொடுத்து, திரும்பிப் பார்க்காமல் நடந்தார். அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு கடைக்காரர் என்னவெல்லாம் யோசித்திருப்பார் என்று இவராக யோசித்துக் கொண்டார். 'எம்பேரன் வயசுல இருக்கான். அவங்கிட்ட போய்......... எல்லாம் விதி' என்ற படி லாட்ஜை நோக்கி நடையைப் போட்டார்.

ஏழாம் எண்ணிட்ட அறையில் அவன் இருந்தான். கதவைத் தட்டிக் காத்திருந்தார். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் திறந்தான். தாடி வைத்திருந்தான். லுங்கியை ஏற்றிக் கட்டியிருந்தான். இதற்கு முன்னும் இவன் இங்கே வந்திருக்கிறான்.

'யோவ்..... ஒரு காண்டம் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? சாவணும்யா உங்கூட....' என்றபடி அவர் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு பத்து ரூபாயைத் திணித்து, அறைக்கதவை அடைத்துக் கொண்டான்.

மாணிக்கம் அசைவற்று அங்கேயே நின்றிருந்தார். இவனுக்கும் கூட அவர் பேரன் வயது தான் இருக்கும். மெல்ல நகர்ந்து போய் பென்ச்சில் படுத்துக் கொண்டார். ஏதேதோ யோசனைகள் ஓடின. தூக்கம் வராமல் புரண்டார். மருந்து கடைக்காரர்கள் 'இந்த வயசுல என்னா கேக்குது பாரு பெருசு?' என்றார்கள். 'சீக்கிரம் வாங்கிட்டு வா...' என்று அவசரப்படுத்தினார்கள் தாடி வைத்தவர்கள். 'எல்லாம் உன் வேலைதானா?' என்று மிரட்டினார் மேனேஜர். 'அட போய்யா.... நீயும் ஒரு ஆம்பிள...' என்று திட்டினாள், விட்டு ஓடிப்போனவள். புழங்காமலே போய்விட்ட இளமைக்காலத்தின் தனிமை இரவொன்றில் மீண்டும் வாழத்தொடங்கினார் மாணிக்கம்.

---------------------------------------
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

19 comments:

Bee'morgan said...

வாழ்த்துகள் சேரா.. :)

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லா இருக்கு.
கலக்கிட்டீங்க.
வாழ்த்துகள் சேரல்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ச.பிரேம்குமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சேரல்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது தோழரே...

வாழ்த்துகள்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பாலா!

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி பிரேம்!

நன்றி கோகுல்!

-ப்ரியமுடன்
சேரல்

Ramprabu said...

It is good one indeed

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் சேரல்..

Bee'morgan said...

திரும்பவும் வாழ்த்துகள் சேரா :) :) :)

ரெஜோ said...

வாழ்த்துகள் அண்ணா :-)

☼ வெயிலான் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சேரல்!!!!!!!

Pachai said...

congrats da... keep it up

RV said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

நிலாரசிகன் said...

இதுபோன்ற மாணிக்கங்கள் சென்னை எங்கும் நிறைந்திருக்கிறார்கள் ஏதோவொரு
வலியை தங்களுக்குள் சுமந்தபடி.
மிகச்சிறப்பான நடை.அற்புதமான விவரணைகள்.மாணிக்கத்தின் தனிமைக்குள்
தொலைந்தவர்களின் நானுமொருவன்.
வென்றதற்கு வாழ்த்துகள் பல சேரல்! :)

இரவுப்பறவை said...

கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

PPattian said...

நல்லதொரு படைப்புக்கும், வெற்றிக்கும் வாழ்த்துகள் சேரல்

சில இடங்களை ரசித்துப் படித்தேன்..

//எப்படி இங்கே வந்து சேர்ந்தார் என்ற கதை எல்லாம் அவருக்கே கூட மறந்து போயிருக்கும். //

//பழைய நாட்களின் வசந்தம், கோடை, மழை, பனி எல்லாம் மாறி மாறி கொலாஜ் ஓவியம் மாதிரி மனதுக்குள் வண்ணம் தீட்டிச் செல்லும்.//

கதைக்கேற்ற கனகச்சிதமான முடிவு.. அருமை.

சில இடங்களில் மட்டும் "அவர்" / "இவர்" என்பது மாணிக்கத்தை குறிக்கிறதா அல்லது மானேஜரை குறிக்கிறதா என்று சிறிது தடங்க வைக்கிறது.. ஆனாலும் சுவையான கதையோட்டத்தில் இது குறையாகத் தெரியவில்லை.

பா.ராஜாராம் said...

நதியோட்டம் சேரல்.நடுவர்களின் நியாம் தேர்கிறது.வாழ்த்தும் அன்பும்.

Banupriya said...

துளி கூட எதார்த்தத்தை மீறாத உங்களுடைய கதை நன்றாக இருந்தது.

மாணிக்கத்தின் தனிமையை அழகாக சொல்லியுள்ளீர். பரிசு பெற்றதுக்கு எனது வாழ்த்துக்கள்

பாலகுமார் said...

கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கை .... எதார்த்தமான நடை....

வெற்றி பெற்றதற்கு வாழ்துக்கள் சேரல் !