யுகமாயினி இதழ் நடத்தும் இலக்கியக்கூடலின் இரண்டாவது அத்தியாயம் நேற்று சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை திரு.சித்தன் அவர்கள் எனக்கு அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கைப் பிடித்து, தமிழ் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்வின் முதல் நிகழ்வாக, 'இலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர்.க.பஞ்சாங்கம் அவர்களின் உரை நிகழ்வதாய் இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வர இயலாமல் போக, கவிஞர் அன்பாதவன், பேராசிரியர் எழுதிக்கொடுத்திருந்த கட்டுரையை வாசித்தளித்தார். அயல் நாட்டுக் கோட்பாடுகளையும், அழகியலையும் கொண்டாடும் விதமாக நாம் மாறி விட்டோம். நம் மொழியில் இருப்பவற்றை மறந்து விட்டோம் என்ற குறிப்பிட்டார் பேராசிரியர். கட்டுரையில் சொல்லப்பட்ட பல கருத்துகள் மீது பெரும் விவாதம் முன் வைக்கப்பட்டது.
'க.நா.சு. சொல்லி இருக்கும் தமிழ் அழகியல் குறித்த கோட்பாடுகளைக் குறை சொல்லிவிட்டு, தமிழவனின் கோட்பாடுகளை மட்டும் பாராட்டிச் சொல்லி இருப்பது குழு சார்ந்த தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பேராசிரியர் இல்லாததால் அவர் எந்தப் பார்வையில் இதை எழுதினார் என்று விளக்கம் பெற முடியாமல் போனது. அவர் இருந்திருந்தால் நல்ல தெளிவு கிடைத்திருக்கக் கூடும்.
அடுத்து, 'திருத்தப்படாத அச்சுப்பிழைகளும், திருந்த வேண்டிய சமூகமும்' என்ற தலைப்பில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் அயலகத்துறை விரிவுரையாளர் முனைவர்.திரு.தெ.வெற்றிச்செல்வன் உரையாற்றினார். பால் திரிந்தோர் மீதான சமுதாயப் பார்வை, சமுதாயத்தின் மீதான அவர்களின் கோபம், இலக்கியம், மற்றும் பிற கலைகளில் அவர்கள் கையாளப்பட்ட விதம், அவர்களுக்கான அமைப்புகள் என்று பல செய்திகளை முன் வைத்துப் பேசினார். அவரின் பேச்சு பல புதிய செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாக இருந்தது. உரை முடிந்ததும், மற்றவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
அமர்வின் இறுதி நிகழ்வாக அமைந்தது, திரு.சந்திரசேகரன் கிருஷ்ணா ஆற்றிய 'அக்பர்' என்ற மொழியாக்க நூல் மீதான ஆய்வுரை. இவர் வலைத்தளங்களில் தன் படைப்புகள், நூல் விமர்சனங்கள், அறிவியல் கொள்கைகள் பற்றிய தன் விளக்கங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்து வருகிறார். பாபருக்குப் பின் ஹுமாயூன், அவருக்குப்பின் அக்பர், பின் ஜஹாங்கீர், பின் ஷாஜஹான், பின் ஔரங்கசீப் என்று காலக்கோட்டில் ஒரு புள்ளியாக நம் பாடப்புத்தகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அக்பரைப் பற்றிய பல அரிய செய்திகளை இந்நூல் தொகுத்து வழங்கி இருக்கிறது. லாரன்ஸ் பின்யான் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, ச.சரவணன் என்பவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. மூல நூலைத் தான் படித்ததில்லை என்று சந்திரசேகரன் சொன்னது சிறு விவாதத்தை ஏற்படுத்தியது. மூல நூலைப் படித்திருந்தால் தான் இந்த நூலின் குறைகளை சுட்டிக்காட்டும் திறன் நமக்கு முழுதாகக் கிடைக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
நல்ல உரைகளுடன், நல்ல விவாதங்களுடன் அமைந்து நிறைவுற்றது இலக்கியக்கூடல்.
பின்குறிப்பு:
எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் பழமலய், கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி இவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் பழமலய்யுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.
4 comments:
//இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை திரு.சித்தன் அவர்கள் எனக்கு அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கைப் பிடித்து, தமிழ் பேசும் வாய்ப்பு கிடைத்தது//
அடடே, வாழ்த்துகள் சேரல்
வாழ்த்துகள் சேரல்.இம்முறை கலந்துகொள்ள முடியாமல் போனதற்கான வருத்தம் மேலும் கூடிவிட்டது. பார்க்கலாம்.
வாழ்த்துகள் சேரல், பகிர்வுக்கு நன்றி, என்னால் தான் வர முடியாமல் போயிற்று.
நன்றி பிரேம்!
நன்றி முத்துவேல், யாத்ரா! அடுத்த கூடலில் நாம் சந்திப்போம்.
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment