நல்லதங்காளை நோக்கி எங்களை வழிநடத்தும் ஒரு விசையை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். சிலரிடம் விசாரித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு பேருந்தின் நடத்துனர் ஆபத்பாந்தவனாக வந்தார். ஒன்பது மணி வாக்கில் இப்போது நினைவில் இல்லாத ஓர் ஊருக்குச்(வற்றிராயிருப்பு என்பதாக நினைவு. சரியாகத் தெரியவில்லை) செல்லும் பேருந்து எங்களை அங்கே இட்டுச் செல்லும் என்றார். அவருக்கு ஒரு பெரிய நன்றியை உரித்தாக்கிக் காத்திருந்தோம். ஒன்பது மணி சுமாருக்கு வந்த பேருந்தில் விசாரித்துக் கொண்டே ஏறினோம். மனித மனம்தான் எத்தனை எச்சரிக்கையானது!
மலைகள் சூழ்ந்த சாலையில் பயணம் குதூகலத்தைக் கொடுத்தது. மிகக்கூட்டமாக இருந்த பேருந்தில் இருந்து ஒரே நேரத்தில் ஒரு பெருங்கூட்டம் இறங்கியது. அது இஞ்சினியரிங் காலேஜ் என்கிற நிறுத்தம். இன்னும் சில வருடங்களில் சென்னையிலோ,பெங்களூரிலோ, அமெரிக்காவிலோ பணியாற்றப்போகும் கனவுகளோடு ஒரு கூட்டம் இறங்கிப்போனது. பேருந்தே காலியானது போன்றிருந்தது. இன்றைய நிலையில் இவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள் போலும்.
W.புதுப்பட்டி என்ற ஊரில் பேருந்துக்கு விடை கொடுத்தனுப்பினோம். இங்கிருந்து நடந்து போகலாம், அல்லது சற்று நேரத்தில் வரும் சிற்றுந்தில் செல்லலாம் என்ற தூரத்தில் அர்ச்சுனாபுரம் இருந்தது. சிற்றுந்துக்காகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் சிற்றுந்தில் அர்ச்சுனாபுரத்துக்காக் காத்திருந்தோம். சிற்றுந்து செல்லும் வழியெங்கும் மரங்களால், செடிகளால் பச்சைப்பசேல் என்றாகி இருந்தது. பச்சை தான் உயிரின் வண்ணம் என்ற எண்ணம் உண்டு எனக்கு. அங்கு உயிர் நிறையவே இருப்பதாகப் பட்டது.
சில குடிசை வீடுகளும், ஒரு சில காரை வீடுகளும் இருந்த பகுதியில் இறக்கிவிட்டார்கள். சமீபத்தில் படித்த கழனியூரனின் 'குறுஞ்சாமிகளின் கதை'யில் ஒரு செய்தி இருந்தது. நல்லதங்காளைத் தெய்வமாக வழிபடும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் மட்டுமே இந்த ஊரில் வாழ்கிறார்கள். வேறு யாரேனும் குடியேற முயன்றால், தெய்வ சக்தி அவர்களை விரட்டி அடித்துவிடும் என்ற நம்பிக்கையும் உலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்திகள் நாங்கள் பயணப்பட்டபோது தெரியாது.
மீண்டும் சிலரின் உதவியோடு நல்லதங்காள் கோயிலுக்குக் கிளம்பினோம். வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். வெறுங்காலுடன் நடையைப்போட்டோம். பின்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்து அழகான பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். நல்லதங்காளின் கதை தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம். அர்ச்சுனாபுரத்தில் ஒரு காலத்தில் நல்லதம்பி, நல்லதங்காள் என்ற அண்ணன் தங்கை வாழ்ந்து வந்தார்கள். பெற்றோர் இல்லாத இருவரும் ஒருவருக்கொருவர் மிக அன்பாக இருந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்ததும் மானாமதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பவனுக்கு மணமுடித்து வைக்கிறார் நல்ல தம்பி. அவர்களும் நன்முறையில் இல்லறத்தை நடத்தினார்கள். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். இதற்கிடையில் நல்லதம்பிக்கும் மூளி அலங்காரி என்பவளுக்கும் திருமணமானது. நல்ல விதமாகப் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பெருங்கஷ்டம் வந்து சேர்ந்தது. நல்ல தங்காள் வாழ்க்கைப்பட்ட ஊர் பெரும் பஞ்சத்துக்குள்ளானது.
அண்ணனிடம் உதவி பெற்று வருமாறு பெண்டாட்டியையும், பிள்ளைகளையும் அனுப்பினான் காசி ராஜன். இவள் வந்த நேரம் அண்ணன் ஊரில் இல்லை. மூளி அலங்காரி தன் வசமும் பஞ்சம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி அவளையும், பிள்ளைகளையும் அனுப்பி விட்டாள். அவள் பசியாறிக்கொள்ள பச்சை வாழை மட்டையையும், ஈரமான கேழ்வரகையும் கொடுத்தனுப்பினாள். தன் தெய்வ சக்தியால் ஈரக்கேழ்வரகை அரைத்து, தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உணவுதயாரித்தாள் நல்லதங்காள் என்று கதைகளில் வருகிறது. பின் தன் அவலத்தைத் தானே நொந்துகொண்டு, இனியும் தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று தன் பிள்ளைகளைக் கிணற்றிலே தள்ளிவிட்டு, தானும் விழுந்து மாண்டு போனாள்.
செய்தியறிந்த அண்ணன் தன மனைவியையும் கொன்று தானும் விழுந்து மடிந்தான் என்பதாக முடிகிறது நல்லதங்காள் கதை. இந்தக் கதை இன்னும் தோல்பாவைக்கூத்து, தெருக்கூத்து, நாடகம் என்னும் பல வடிவங்களில் கிராமங்களில் நடத்தப்படுகிறது. எஸ்.ரா சொல்வது போல இக்கூத்துகளைப் பார்க்கும் பெண்கள் தத்தம் வாழ்க்கைத்துயரைப் பார்ப்பதான ஒரு பிம்பத்துக்கு ஆட்படுகிறார்கள். நல்லதங்காள் மக்களில் ஒருத்தியாக வாழ்ந்து தெய்வ நிலை அடைந்தவள் என்பதால் இந்தக் கோயில் மேலும் பெருமை கொள்கிறது.
கோயிலை நாங்கள் அடைந்தபோது முறைப்படி பூசை வைப்பவர் வரவில்லை என்று வேறோர் இளைஞர் தான் அன்று பூசை வைக்க வந்திருந்தார். அவரை நல்லதங்காள் கதை சொல்லச் சொல்லிக் கேட்டோம். நூற்றாண்டுகள் முந்தைய மனிதர்களின் நினைவும் குரலும் அவரின் குரலில் ஒலித்தன. நாம் கதை கேட்பது எந்த யுகம் என்பதான பிரக்ஞையை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நல்லதங்காளின் கதையை ஒரு பக்தனின் பார்வையில் சொன்னார். நல்லதங்காளோடு, ஏழு பிள்ளைகளுக்கும் சிலைகள் இருப்பதைச் சொன்னார்; காசிராஜனும், நல்லதம்பியும் கூட குறுஞ்சாமிகளாக வணங்கப்படுவதைச் சொன்னார்; மூளி அலங்காரியின் பரம்பரையில் வந்தோர் இன்னும் இக்கோயிலுக்குத் தண்டம் செலுத்திக் கொண்டிருப்பதைச் சொன்னார். கோயிலுக்கு உள்ளே புகைப்படம் எடுக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் பல இடங்கள் சுற்றிய பிறகும் இன்னும் புதிராக இருப்பது இந்தச் செயல்பாடுதான். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று சொன்னாலும், கிளைக்கேள்விகள் கேட்கத்தான் முனைகிறது பகுத்தறிவு.
பின் மீண்டும் வயல் வெளிகளின் வழி நடந்து, நல்லதங்காள் தன் பிள்ளைகளோடு விழுந்து மாண்டு போன கிணறு என்று நம்பப்படுகிற கிணற்றை அடைந்தோம். நீர் நிரம்பி, வேறெதுவும் பார்க்கும் வசதியற்று இருந்தது அக்கிணறு. சுற்றுச்சுவரை பிற்காலங்களில் சுட்ட செங்கற்களில் அமைத்திருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் அங்கே வாழ்ந்துவிட்டு நகர்ந்தோம். திரும்பி வரும் வழி மிகவும் பழக்கப்பட்டது போலாகி இருந்தது. W.புதுப்பட்டியில் கம்மங்கூழ் குடித்தோம். அதுதான் அன்றைக்கான முதல் உணவு. உச்சி வெய்யில் ஆளை அடித்துப்போடுவது என்று அடித்துக்கொண்டிருந்தது. பேருந்து பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பினோம். முதலில் குளித்தாக வேண்டும்.
5 comments:
படிக்க படிக்க சுவாரசியமாயிருக்கிறது
உண்மையிலேயே Adventure என்றால் இது தான் போல. தேடல் நிறைந்த வாழ்க்கை அர்த்தப்படும் என்பார்கள். உன் வாழ்க்கை மிகுந்து அர்த்தம் மிகுந்ததாய் இருக்கிறது என்று நம்புகிறேன் சேரல்
பயணக்கட்டுரை..சிறுகதை..எந்த வகையிலும் ஈர்ப்போடு நகர்கிறது..! தொடரட்டும் உம் தமிழ்ப்பணி..! வாழிய..!
பயணச்சீட்டு இல்லாமல் என்னை அழைத்துச் சென்றதுக்கு நன்றி.!!!
@ப்ரியமுடன் வசந்த்,
நன்றி நண்பரே!
நன்றி பிரேம்!
இன்னும் நிறைய அர்த்தம் தேடி அலைவேன் :)
@Vilva,
நன்றி நண்பா!
@Selva,
நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment