புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 29, 2009

நீர் வழிப்படூஉம் புணை

னகல் பார்க்கிலிருந்து பாண்டி பஜார் வழியாக நடந்து வந்தால் இருக்கும் முதல் இடது சந்தில் திரும்பி உடனே வலப்புறம் திரும்பினால் இருக்கிறது ராஜாபாதர் தெரு. அந்தத் தெருவில் இருக்கும் எந்த நிறம் என்று தெரியாத நிறத்தில் பெயிண்ட் அடித்த, இடது புறம் சற்றே சாய்ந்த மாதிரி தெரிகிற, ஒரு பழைய கட்டிடத்தின் முதல், இரண்டாவது மாடிகளில்தான் ஷோபனா லாட்ஜ் இருக்கிறது. கீழே ஒரு பழைய பேப்பர் கடை, பக்கத்திலிருக்கும் டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்குப் படியளக்கும் ஒரு சிக்கன் ஸ்டால், ஒரு ஹார்டு வேர் கடை இவைதான் ஷோபனா லாட்ஜுக்கான அடையாளங்கள். டாஸ்மாக் அருகில் இருக்கும் உடைந்த சுவர் முழுதாக நிமிர்ந்து நின்று, அதில் சில்க் ஸ்மிதா படம் ஒட்டியிருந்த ஒரு நன்னாளில் மாணிக்கம் அங்கு வந்து சேர்ந்திருந்தார். இப்போது நயன்தாரா படம் ஒட்டுகிறார்கள்.

எப்படி இங்கே வந்து சேர்ந்தார் என்ற கதை எல்லாம் அவருக்கே கூட மறந்து போயிருக்கும். இதுவும் இன்னொரு இடம். இங்கே நான்கு மாதமோ ஐந்து மாதமோ என்ற எண்ணத்தில் தான் வந்தார். இங்கேயும் வாழ்க்கை அருவருப்பாகத்தான் இருந்தது. ஆனால் மற்றவர்கள் போல் இல்லாமல் இவர்கள் துரத்திவிடுவதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததே இவருக்கு நிம்மதியாய் இருந்தது. இதில் எங்கே போய் அசிங்கமான வாழ்க்கை என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பது?

காலை எழுந்தவுடன் லாட்ஜ் முழுக்கக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். சில பேர் அறையை மூடிக் கொண்டு திறக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். மேனேஜர் பார்த்து விட்டால் திட்டுவார். அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். மேனேஜர் வந்து சேர்ந்த பிறகுதான் காலைக் கடன்கள், குளியல் எல்லாவற்றிற்கும் வழி பிறக்கும். அவர் அறையின் உட்புறம் தான் மாணிக்கம் பயன்படுத்துவதற்கான கழிவறையும், குளியலறையும் இருக்கிறது. போகும்போது பூட்டிக்கொண்டு போய்விடுவார். திறந்து வைக்கச் சொல்லி இவரும் கேட்டதில்லை; அவரும் அதைப்பற்றி யோசித்ததில்லை.

ராத்திரி வேளைகளில் அவசரம் என்று வந்தால், அதோகதிதான். சிறுநீர் என்றால் வெளியே போய் டாஸ்மாக் பக்கத்தில் இருக்கும் நயன்தாரா நோட்டீஸ் சுவரோரமாய் அடித்து விட்டு வரலாம். வேறு உபாதைகள் என்றால்? ஒரு முறை இப்படித்தான் பதினெட்டாம் நம்பர் ரூமில் இருந்தவர் மீந்து போனதென்று கொடுத்த புரோட்டாவை ஆசை ஆசையாகத் தின்று விட்டு ராத்திரி முழுக்க ஒரே அவஸ்தையாகிவிட்டது. பனகல் பார்க் பக்கமாக இருந்த பொதுக்கழிவறை வரை போய் வர வேண்டியதாகி விட்டது. அப்போதுதான் இந்த 'மூலம்' கொஞ்சமாக ஆரம்பித்திருந்தது. இங்கேயே இரண்டாம் நம்பர் அறையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வைத்தியர் வந்து போய்க்கொண்டிருந்தார். மூலம், பௌத்திரம், விரை வீக்கம் எல்லாவற்றிற்கும் வைத்தியம் என்று காய்ந்த மஞ்சள் நிறத்தில் போஸ்டர் எல்லாம் கூட அடித்து ஒட்டி இருந்தார். பெருங்கூட்டம் அலை மோதும். மாணிக்கத்துக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தரச் சொல்லி மேனேஜர் கூடச் சிபாரிசு செய்தார். மாதக் கணக்கில் மருந்து சாப்பிட்டும் குணமாகிற வழியாய்த் தெரியவில்லை. இப்போது அந்த வைத்தியர் இங்கே வருவதே இல்லை. பழைய நோயாளிகள் மட்டும் எப்போதாவது வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ஏழு மணி வாக்கில் பத்திரிகைகள் வந்து சேர்ந்து விடும். எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைப்பது மட்டும் இவர் வேலை. லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் யாராவது பேப்பர் வேண்டுமென்று கேட்டால் கொண்டு போய்க் கொடுப்பார். திரும்பி வந்துவிட வேண்டும். இல்லையென்றால் மேனேஜர் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார். அவருக்கு நாள் முழுவதும் இருக்கும் ஒரே பொழுது போக்கு இந்தப் பத்திரிகைகள் தான். தங்கி இருப்பவர்கள் காலையிலிருந்தே ஏதாவது எடுபிடி வேலை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். டீ வாங்குவது, சிகரெட், பீடி வாங்குவது, சட்டை இஸ்திரி போடக் கொடுப்பது, சாப்பாடு வாங்குவது என்று ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கும். முகம் சுழிக்காமல் எல்லா வேலைகளையும் செய்வார் மாணிக்கம். எல்லாருக்கும் அவரைக் கொஞ்சம் பிடித்தும் இருந்தது.

வாடிக்கையாக வந்து தங்குகிறவர்களுக்கு மாணிக்கம் மீது அதிகப் பிரியம் உண்டு. அறையைக் காலி செய்து போகும் போது ஏதாவது காசு கொடுத்துப் போவார்கள். மீண்டும் இப்போதைக்கு சென்னைக்கு வரப்போவதில்லை என்று சொல்லித் தங்கள் நினைவாகத் தாங்கள் பயன்படுத்திய பொருட்களைக் கொடுத்துப் போனவர்களும் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல், தான் வைத்திருக்கும் பழைய அழுக்கடைந்த பையில் போட்டு மூட்டை கட்டி வைத்திருக்கிறார். மேனேஜர் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு லாட்ஜ் வேலைகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதில் மட்டும் தான் கண் இருக்கும்.

இங்கே தங்குபவர்கள் பெரும்பாலும் வியாபார நிமித்தமாகத் தற்காலிகமாக சென்னைக்கு வருபவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் ஏதேதோ ஊர்களிலிருந்து வருகிறார்கள். ஐதராபாத், பெங்களூர், மும்பை இங்கிருந்தெல்லாம் கூட சில பேர் வருகிறார்கள். எல்லாருமே தமிழ் பேசுவார்கள். அதிகப்படியாக பத்து நாட்களுக்கு மேல் யாரும் தங்கியதாக மாணிக்கத்துக்கு நினைவில்லை.

யாருடைய புண்ணியத்திலாவது மாணிக்கத்துக்கு அன்றைய காலை உணவு கிடைத்துவிடும். பத்து மணிக்கு சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தால், எல்லா அறைக்கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும். மேனேஜர் தினமலர், தினமணியோடு தன் அறையில் ஐக்கியமாகி விடுவார். அவர் வீடு இங்கே தான் சைதாப்பேட்டையில் இருக்கிறது. இவர் இங்கேயே இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முதலாளியும் அந்தக் கட்டுப்பாட்டை விதிக்கவில்லை. ஆனாலும் இவர் இங்ககேயேதான் இருப்பார்.

பத்து மணிக்குமேல் மயான அமைதியாகிவிடும் லாட்ஜைத் தான் மாணிக்கத்துக்குச் சற்றும் பிடிக்காது. பின்புறம் இருக்கும் பாண்டி பஜார் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில் ராஜா பாதர் தெரு சோகை படிந்து கிடக்கும். வாகனங்கள் வருவது மிகவும் அபூர்வம். அந்த வழியாகப் போவதற்கு யாருக்கும் தேவை இருப்பதில்லை. இருப்பதெல்லாம் இந்த மாதிரி லாட்ஜ்கள், ஆம்பிளைகள் மட்டும் வந்து போகும் சில கடைகள், அதுவும் சாயங்காலமும் ராத்திரியும் மட்டுமே ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். ஏவல் சொல்வதற்கும் ஆள் இல்லாமல் மாணிக்கத்தின் பகல் பொழுது தனிமையில் நிரம்பி இருக்கும். இந்த வருத்தத்திலேயே மதியப் பொழுதுகளை உணவற்றதாகவே பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார். மேனேஜரின் மதிய சாப்பாட்டை இவர் தான் அவர் வீட்டுக்குப்போய் வாங்கி வருவார். அவரின் வீட்டம்மா நல்லவளாகத்தான் தெரிகிறாள். பின் எதற்காக இவர் வீட்டை விட்டு விலகி இருக்க நினைக்கிறார் என்ற கேள்வி மாணிக்கத்தை வெகு நாட்களாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. மேனேஜர் நல்ல மூடில் இருக்கும்போது ஒரு நாள் கேட்டுவிட வேண்டுமென்றிருக்கிறார்.

மதியம் உடலைச் சுருக்கி மேனேஜரின் அறைக்கு வெளியே இரவில் தான் உறங்கும் பென்ச்சில் படுத்துக்கொள்வார். வெயில் சுள்ளென்று முகத்தில் தாண்டவமாடும். தூங்கும் எண்ணம் கிடையாது. வெயில் அடிப்பதற்கான உணர்வு ஏதுமில்லாமல் ஏதேதோ கனவுகளில் பறக்கத் தொடங்கிவிடுவார் மாணிக்கம். பழைய நாட்களின் வசந்தம், கோடை, மழை, பனி எல்லாம் மாறி மாறி கொலாஜ் ஓவியம் மாதிரி மனதுக்குள் வண்ணம் தீட்டிச் செல்லும்.

மாணிக்கம் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். திண்டுக்கலுக்குத் தெற்கே கொஞ்ச தொலைவில் இருந்தது அவரின் கிராமம். வாலிபத்தில் வேற்று சாதி பெண்ணொருத்தியைக் கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். அவள் பட்டிணம் வந்து ஒரு மாதம் முழுதாக ஆவதற்குள் இன்னொருவனை இழுத்துக்கொண்டு போய் விட்டாள். அது முதலே பெண்கள் என்றாலே ஒரு பயம் இவருக்குள் தொற்றிக்கொண்டது. பின் பெண்மையின் வாசம் இல்லாமலே வாழத்தொடங்கினார். யாராவது கேட்டால் கல்யாணம் செய்து கொள்ளவேயில்லை; அதில் இஷ்டம் இல்லை என்பதாகச் சொல்லி வந்தார். திரும்பி ஊருக்குப் போகவும் தைரியம் வரவில்லை. ஊரிலிருந்து யாரும் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. அப்படியே கால் போன போக்கில் போய், சோறு கண்ட இடத்தில் தின்று, கிடைத்த இடத்தில் தூங்கி என்று அவர் வாழ்க்கை திசை மாறிப்போனது.

கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிற வெயில் இவரை நனவுலகுக்கு மீட்டுத்தரும். பழைய கதைகளை அசைபோட்டபடியே வந்து சேர்கிற சாயங்காலத்தில் மாணிக்கம் புது மனிதராகி விடுவார். சாயங்காலங்களில் ராஜாபாதர் தெரு களை கட்டத்தொடங்கிவிடும். டாஸ்மாக் கடையிலும், சிக்கன் ஸ்டாலிலும், பக்கத்தில் தற்காலிகமாக முளைத்துவிடும் பஜ்ஜி கடைகளிலும் ஈக்களும் அதைவிட அதிகமாக மனிதர்களும் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். மாணிக்கத்துக்கு சந்தோஷமான நேரம் என்றால் அது இதுதான். அவரைப் பொறுத்த வரையில் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதில் அவருக்கு உளவியல் ரீதியான ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. தன்னை இந்த ஜன சந்தடியில் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு ஒரு பக்கம், தான் தனிமையில் இல்லை என்பதால் நினைவுகளில் மூழ்கி அழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்ற உணர்வு ஒரு பக்கம், இரண்டும் சேர்ந்துகொண்டு அவருக்குள் உற்சாகத்தைக் கூட்டும். சாயங்காலமானதும் லாட்ஜில் அடையத்தொடங்கும் மக்களின் ஏவல்களுக்கு ஒரு சிறுவனின் சிரிப்போடு பணிவார் மாணிக்கம். புட்டிகளுக்கு மீந்துபோகிற கொறிக்கும் வகையறாக்கள் இவரின் இரவு பசியாற்றிவிடும்.

கிட்டத்தட்ட இப்படியே கழிந்துவிட்ட இன்னொரு நாளின் இரவில் மாணிக்கம் நடந்து பாண்டி பஜாரை அடைந்திருந்த போது மணி பதினொன்றரையைத் தாண்டி இருந்தது. தூக்கம் உச்சத்தைத் தொட்ட நேரத்தில் எழுந்திருந்ததால் நடையில் ஒரு தளர்ச்சி இருந்தது. வயதானதால் கூட இருக்கலாம். வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

இது மாதிரி வேலைக்கு யாராவது அனுப்பினால், எப்படி மறுப்பதென்று நிறைய யோசித்தும் அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. லாட்ஜுக்கு வரும் எல்லோரும் இப்படி இருப்பதில்லை. லாட்ஜும் அப்படிப்பட்டது இல்லை. இதெல்லாம் மேனேஜருக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயமும் ஒரு புறம். இவர்களை எதிர்த்துப் பேசும் துணிவும் கிடையாது.

இன்றைக்கு எந்தப் பகுதிக்குப் போகலாம் என்ற சிந்தனையோடு மாம்பலத்தை நோக்கி நடந்தார். துரைசாமி சப்வே தாண்டி போகும் வரை எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. பத்து மணி வரை கூட்டம் களை கட்டியிருக்கும் இடத்தில் இப்போது ஒரு ஈ காக்கா கூட இல்லை. பாண்டி பஜாரில் இந்தப் பக்கமாகப் போயிருந்தால் ஏதாவது கடைகள் திறந்திருக்கும். ஆனால் ஒரு முறை போன கடைக்கு மறுமுறை போவதில் அவருக்கு விருப்பமில்லை. அந்த முகங்கள், பின்புறம் கேட்கும் சிரிப்பொலிகள் அவரை வெகுநாட்கள் துரத்தும். மின்சார ரயில் கடந்து போன பிறகான பத்து நிமிடத்து நடைக்குப் பிறகு ஒரு கடை திறந்திருந்தது. இப்போதெல்லாம் மருந்து கடைகள் கூட சீக்கிரமே பூட்டி விடுகிறார்கள். இந்தக் கடைக்கு இதற்கு முன் வந்ததில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு நெருங்கினார். கடைக்காரர் மட்டும் கணக்கு வழக்குகள் பார்த்துக்கொண்டிருந்தார்.

வழக்கம் போலக் கூச்சத்துடன் நெளிந்து கொண்டு நின்றவரைக் கடைக்காரரே விசாரித்தார். இவர் சொன்னவுடன் இளக்காரமாக ஒரு புன்னகையைச் சிதற விட்டு ஏதோ கேட்டார். 'எளவு இவிங்க சொல்றதெல்லாம் நமக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது. ஏதாவது போட்டுப் பாத்திருந்தா தெரியும். எந்த வயசுல என்னா வேல குடுக்குறாய்ங்க?' என்று நொந்து கொண்டு 'ஏதாவது ஒண்ணு குடுங்க' என்றார். கடைக்காரர் கொடுத்தபின் காசைக் கொடுத்து, திரும்பிப் பார்க்காமல் நடந்தார். அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு கடைக்காரர் என்னவெல்லாம் யோசித்திருப்பார் என்று இவராக யோசித்துக் கொண்டார். 'எம்பேரன் வயசுல இருக்கான். அவங்கிட்ட போய்......... எல்லாம் விதி' என்ற படி லாட்ஜை நோக்கி நடையைப் போட்டார்.

ஏழாம் எண்ணிட்ட அறையில் அவன் இருந்தான். கதவைத் தட்டிக் காத்திருந்தார். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் திறந்தான். தாடி வைத்திருந்தான். லுங்கியை ஏற்றிக் கட்டியிருந்தான். இதற்கு முன்னும் இவன் இங்கே வந்திருக்கிறான்.

'யோவ்..... ஒரு காண்டம் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? சாவணும்யா உங்கூட....' என்றபடி அவர் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு பத்து ரூபாயைத் திணித்து, அறைக்கதவை அடைத்துக் கொண்டான்.

மாணிக்கம் அசைவற்று அங்கேயே நின்றிருந்தார். இவனுக்கும் கூட அவர் பேரன் வயது தான் இருக்கும். மெல்ல நகர்ந்து போய் பென்ச்சில் படுத்துக் கொண்டார். ஏதேதோ யோசனைகள் ஓடின. தூக்கம் வராமல் புரண்டார். மருந்து கடைக்காரர்கள் 'இந்த வயசுல என்னா கேக்குது பாரு பெருசு?' என்றார்கள். 'சீக்கிரம் வாங்கிட்டு வா...' என்று அவசரப்படுத்தினார்கள் தாடி வைத்தவர்கள். 'எல்லாம் உன் வேலைதானா?' என்று மிரட்டினார் மேனேஜர். 'அட போய்யா.... நீயும் ஒரு ஆம்பிள...' என்று திட்டினாள், விட்டு ஓடிப்போனவள். புழங்காமலே போய்விட்ட இளமைக்காலத்தின் தனிமை இரவொன்றில் மீண்டும் வாழத்தொடங்கினார் மாணிக்கம்.

---------------------------------------
(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

Thursday, June 25, 2009

தவம்

முன்னொருநாள்
பௌத்த பிட்சுகள்
தவமிருந்த நதிக்கரையில்
தவமிருந்தேன்

தூரத்தில்
ஒற்றைக்காலில்
நிலை கொண்டிருந்தது
நெடுங்காலமாய்
இந்த நதியையே
நனைத்துக் கொண்டிருக்கும்
கொக்குகளின் வழி வந்த
ஒரு கொக்கு

பிட்சுகள் பார்த்த கொக்குகளை
நான் பார்க்கவில்லை

எத்தனையோ கொக்குகள்
பார்த்த தவத்தை
இந்தக் கொக்கு
பார்க்கவில்லை

இல்லாத முகவரிகள் - 4

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, ஆண்டாள் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தோம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோயில் கோபுரம், இந்தக் கோயில் கோபுரம்தான். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரம் என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்கு உள்ளே செல்லும் திட்டம் எல்லாம் இல்லை. கோபுரத்தைப் பார்க்கவேண்டும், மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். அவ்வளவுதான். காவலரிடம் கோபுரத்தைப் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டோம். திருச்சியில் இருந்து வந்திருப்பதாகச் சொன்ன பிறகு, பரிதாபப்பட்டு 'இங்கு எடுக்கக் கூடாது. கொஞ்ச தூரம் தள்ளிப்போய் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். எங்கேயும் சரியான கோணம் அமையாமல், பக்கத்துத் தெருவில் போய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் பார்க்காமலேயே பயணத்தைத் தொடர்ந்தோம்.

பயணத்தின் அடுத்த கட்டம் தான் மொத்தப் பயணத்தின் சிறப்பம்சமே! ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு பேருந்து பிடித்து போய் இறங்கியபோது பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டி இருந்தது. மதிய உணவை முடித்து, அங்கிருந்து நாங்கள் பயணம் செய்யத் தொடங்கிய இலக்கு, 'எட்டையபுரம்'. பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றி ஏற்கனவே என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். ஒரு மாதிரியான பரவச நிலையில் எழுதப்பட்ட பதிவு அது. மீண்டும் அதுபோல் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அப்பதிவின் தொடுப்பை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்...

Tuesday, June 23, 2009

தொற்றிக்கொண்டவை

எப்படியோ தொற்றிக்கொள்கின்றன

ஒவ்வொரு முறை
ஊருக்குச் செல்லும்போதும்
யாரோ இனங்கண்டு
சொல்கிறார்கள்

பிறகுதான் உணர்கிறேன்
நானும்

மூலம் தேடி அலைக்கழிகிறது
இருப்பு கொள்ளாத மனது

விலாசம் விசாரித்தவரோ,
விலாசம் சொன்னவரோ,
தள்ளுவண்டிக்காரரோ,
பக்கத்து வீட்டுக் குழந்தையோ,
கோயில் வாசல் பிச்சைக்காரரோ
பேருந்துப் பயணத்தில்
அருகமர்ந்து தூக்கம் கெடுத்தவரோ,
அடிக்கடி போகும் தெருவில்
சண்டையிடும்
கருத்த பருமனான பெண்ணோ

யாரோ
ஓட்ட வைத்துப் போய்விடுகிறார்கள்
சில
பரிச்சயமற்ற வார்த்தைகளையும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளையும்

Friday, June 19, 2009

பிரவாகம்

சுனையென ஊற்றெடுத்து
பாறைகள் ஊடு புகுந்து
செங்குத்தாய்க் கீழே விழுந்து
அகல விரிந்துகொண்டு
வழிப்படூஉம் புணைகள் கரையொதுக்கி
பூக்கள், வேர்கள், உடல்கள், காற்று நனைத்து,
தேங்கித் தனிமை கொண்டு,
மீண்டும் புரண்டோடி
என்றோ ஒருநாள் சமுத்திரத்தில் சேர்ந்து
தொலைந்து போகிறது

வெளிகள் கடந்து,
உருவங்கள் மாறி
ஒரு நதியென நடந்து போகும்
ஒரு கவிதை

Thursday, June 18, 2009

சில தருணங்கள்

உங்களுக்கும் நேரலாம்
இப்படி ஒரு தருணம்

முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக

குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட

யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க

பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப

முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க

Tuesday, June 16, 2009

இல்லாத முகவரிகள் - 3

நல்லதங்காளை நோக்கி எங்களை வழிநடத்தும் ஒரு விசையை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். சிலரிடம் விசாரித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு பேருந்தின் நடத்துனர் ஆபத்பாந்தவனாக வந்தார். ஒன்பது மணி வாக்கில் இப்போது நினைவில் இல்லாத ஓர் ஊருக்குச்(வற்றிராயிருப்பு என்பதாக நினைவு. சரியாகத் தெரியவில்லை) செல்லும் பேருந்து எங்களை அங்கே இட்டுச் செல்லும் என்றார். அவருக்கு ஒரு பெரிய நன்றியை உரித்தாக்கிக் காத்திருந்தோம். ஒன்பது மணி சுமாருக்கு வந்த பேருந்தில் விசாரித்துக் கொண்டே ஏறினோம். மனித மனம்தான் எத்தனை எச்சரிக்கையானது!

மலைகள் சூழ்ந்த சாலையில் பயணம் குதூகலத்தைக் கொடுத்தது. மிகக்கூட்டமாக இருந்த பேருந்தில் இருந்து ஒரே நேரத்தில் ஒரு பெருங்கூட்டம் இறங்கியது. அது இஞ்சினியரிங் காலேஜ் என்கிற நிறுத்தம். இன்னும் சில வருடங்களில் சென்னையிலோ,பெங்களூரிலோ, அமெரிக்காவிலோ பணியாற்றப்போகும் கனவுகளோடு ஒரு கூட்டம் இறங்கிப்போனது. பேருந்தே காலியானது போன்றிருந்தது. இன்றைய நிலையில் இவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள் போலும்.

W.புதுப்பட்டி என்ற ஊரில் பேருந்துக்கு விடை கொடுத்தனுப்பினோம். இங்கிருந்து நடந்து போகலாம், அல்லது சற்று நேரத்தில் வரும் சிற்றுந்தில் செல்லலாம் என்ற தூரத்தில் அர்ச்சுனாபுரம் இருந்தது. சிற்றுந்துக்காகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் சிற்றுந்தில் அர்ச்சுனாபுரத்துக்காக் காத்திருந்தோம். சிற்றுந்து செல்லும் வழியெங்கும் மரங்களால், செடிகளால் பச்சைப்பசேல் என்றாகி இருந்தது. பச்சை தான் உயிரின் வண்ணம் என்ற எண்ணம் உண்டு எனக்கு. அங்கு உயிர் நிறையவே இருப்பதாகப் பட்டது.

சில குடிசை வீடுகளும், ஒரு சில காரை வீடுகளும் இருந்த பகுதியில் இறக்கிவிட்டார்கள். சமீபத்தில் படித்த கழனியூரனின் 'குறுஞ்சாமிகளின் கதை'யில் ஒரு செய்தி இருந்தது. நல்லதங்காளைத் தெய்வமாக வழிபடும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் மட்டுமே இந்த ஊரில் வாழ்கிறார்கள். வேறு யாரேனும் குடியேற முயன்றால், தெய்வ சக்தி அவர்களை விரட்டி அடித்துவிடும் என்ற நம்பிக்கையும் உலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தச் செய்திகள் நாங்கள் பயணப்பட்டபோது தெரியாது.மீண்டும் சிலரின் உதவியோடு நல்லதங்காள் கோயிலுக்குக் கிளம்பினோம். வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். வெறுங்காலுடன் நடையைப்போட்டோம். பின்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்து அழகான பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். நல்லதங்காளின் கதை தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம். அர்ச்சுனாபுரத்தில் ஒரு காலத்தில் நல்லதம்பி, நல்லதங்காள் என்ற அண்ணன் தங்கை வாழ்ந்து வந்தார்கள். பெற்றோர் இல்லாத இருவரும் ஒருவருக்கொருவர் மிக அன்பாக இருந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்ததும் மானாமதுரையைச் சேர்ந்த காசிராஜன் என்பவனுக்கு மணமுடித்து வைக்கிறார் நல்ல தம்பி. அவர்களும் நன்முறையில் இல்லறத்தை நடத்தினார்கள். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். இதற்கிடையில் நல்லதம்பிக்கும் மூளி அலங்காரி என்பவளுக்கும் திருமணமானது. நல்ல விதமாகப் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பெருங்கஷ்டம் வந்து சேர்ந்தது. நல்ல தங்காள் வாழ்க்கைப்பட்ட ஊர் பெரும் பஞ்சத்துக்குள்ளானது.

அண்ணனிடம் உதவி பெற்று வருமாறு பெண்டாட்டியையும், பிள்ளைகளையும் அனுப்பினான் காசி ராஜன். இவள் வந்த நேரம் அண்ணன் ஊரில் இல்லை. மூளி அலங்காரி தன் வசமும் பஞ்சம் மட்டுமே இருக்கிறது என்று சொல்லி அவளையும், பிள்ளைகளையும் அனுப்பி விட்டாள். அவள் பசியாறிக்கொள்ள பச்சை வாழை மட்டையையும், ஈரமான கேழ்வரகையும் கொடுத்தனுப்பினாள். தன் தெய்வ சக்தியால் ஈரக்கேழ்வரகை அரைத்து, தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உணவுதயாரித்தாள் நல்லதங்காள் என்று கதைகளில் வருகிறது. பின் தன் அவலத்தைத் தானே நொந்துகொண்டு, இனியும் தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று தன் பிள்ளைகளைக் கிணற்றிலே தள்ளிவிட்டு, தானும் விழுந்து மாண்டு போனாள்.செய்தியறிந்த அண்ணன் தன மனைவியையும் கொன்று தானும் விழுந்து மடிந்தான் என்பதாக முடிகிறது நல்லதங்காள் கதை. இந்தக் கதை இன்னும் தோல்பாவைக்கூத்து, தெருக்கூத்து, நாடகம் என்னும் பல வடிவங்களில் கிராமங்களில் நடத்தப்படுகிறது. எஸ்.ரா சொல்வது போல இக்கூத்துகளைப் பார்க்கும் பெண்கள் தத்தம் வாழ்க்கைத்துயரைப் பார்ப்பதான ஒரு பிம்பத்துக்கு ஆட்படுகிறார்கள். நல்லதங்காள் மக்களில் ஒருத்தியாக வாழ்ந்து தெய்வ நிலை அடைந்தவள் என்பதால் இந்தக் கோயில் மேலும் பெருமை கொள்கிறது.

கோயிலை நாங்கள் அடைந்தபோது முறைப்படி பூசை வைப்பவர் வரவில்லை என்று வேறோர் இளைஞர் தான் அன்று பூசை வைக்க வந்திருந்தார். அவரை நல்லதங்காள் கதை சொல்லச் சொல்லிக் கேட்டோம். நூற்றாண்டுகள் முந்தைய மனிதர்களின் நினைவும் குரலும் அவரின் குரலில் ஒலித்தன. நாம் கதை கேட்பது எந்த யுகம் என்பதான பிரக்ஞையை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நல்லதங்காளின் கதையை ஒரு பக்தனின் பார்வையில் சொன்னார். நல்லதங்காளோடு, ஏழு பிள்ளைகளுக்கும் சிலைகள் இருப்பதைச் சொன்னார்; காசிராஜனும், நல்லதம்பியும் கூட குறுஞ்சாமிகளாக வணங்கப்படுவதைச் சொன்னார்; மூளி அலங்காரியின் பரம்பரையில் வந்தோர் இன்னும் இக்கோயிலுக்குத் தண்டம் செலுத்திக் கொண்டிருப்பதைச் சொன்னார். கோயிலுக்கு உள்ளே புகைப்படம் எடுக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ் நாட்டில் பல இடங்கள் சுற்றிய பிறகும் இன்னும் புதிராக இருப்பது இந்தச் செயல்பாடுதான். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று சொன்னாலும், கிளைக்கேள்விகள் கேட்கத்தான் முனைகிறது பகுத்தறிவு.பின் மீண்டும் வயல் வெளிகளின் வழி நடந்து, நல்லதங்காள் தன் பிள்ளைகளோடு விழுந்து மாண்டு போன கிணறு என்று நம்பப்படுகிற கிணற்றை அடைந்தோம். நீர் நிரம்பி, வேறெதுவும் பார்க்கும் வசதியற்று இருந்தது அக்கிணறு. சுற்றுச்சுவரை பிற்காலங்களில் சுட்ட செங்கற்களில் அமைத்திருப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் அங்கே வாழ்ந்துவிட்டு நகர்ந்தோம். திரும்பி வரும் வழி மிகவும் பழக்கப்பட்டது போலாகி இருந்தது. W.புதுப்பட்டியில் கம்மங்கூழ் குடித்தோம். அதுதான் அன்றைக்கான முதல் உணவு. உச்சி வெய்யில் ஆளை அடித்துப்போடுவது என்று அடித்துக்கொண்டிருந்தது. பேருந்து பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பினோம். முதலில் குளித்தாக வேண்டும்.

Monday, June 15, 2009

தோழி என்றொரு தேவதைஇந்த நூறாவது பதிவு, என் தோழிக்காக..
.


முன்னறிவுப்புகள்
எதுவுமின்றி
ஒரு மழைநாளில்
வாழ்வில் வந்து சேர்ந்தாள்
தோழி என்றொரு
தேவதை!

காத்திருந்தது போல,
சிறகுகளைச்
சிருஷ்டித்துக்கொண்டு
உடன் பயணமாகத்
தயாராகியிருந்தது,
எனக்கு முன்
என் மனது

-----------------------

பேருந்து நெரிசலில்
பயணச்சீட்டு
வாங்கித் தந்ததும்
நன்றி சொல்லிப்
புன்னகைத்தாள்
அந்தப் பெண்

யாருக்குத் தெரியும்?

நாளை அவள்,
'என்னைப் பற்றியும்
எழுதுவாயாடா?'
என்று கேட்கும்
தோழியும் ஆகலாம்

------------------------

நானாக
இருந்த என்னை
யாரோவாகச் சமைத்தது
காதல்

யாரோவாகிக்
கிடந்த என்னை
மீண்டும்
நானாக்கிக் கொடுத்தது
நட்பு

------------------------

எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்

யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி

நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது

அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை

----------------------------------

விட்டுக் கொடுக்கிறேன்
அல்லது
விட்டுக் கொடுக்கிறாள்
வளர்கிறது காதல்

சண்டையிடுகிறேன்
அல்லது
சண்டையிடுகிறாய்
வளர்கிறது நட்பு

இலக்கியக்கூடல் - இரண்டு

யுகமாயினி இதழ் நடத்தும் இலக்கியக்கூடலின் இரண்டாவது அத்தியாயம் நேற்று சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை திரு.சித்தன் அவர்கள் எனக்கு அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கைப் பிடித்து, தமிழ் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்வின் முதல் நிகழ்வாக, 'இலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் பேராசிரியர்.க.பஞ்சாங்கம் அவர்களின் உரை நிகழ்வதாய் இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வர இயலாமல் போக, கவிஞர் அன்பாதவன், பேராசிரியர் எழுதிக்கொடுத்திருந்த கட்டுரையை வாசித்தளித்தார். அயல் நாட்டுக் கோட்பாடுகளையும், அழகியலையும் கொண்டாடும் விதமாக நாம் மாறி விட்டோம். நம் மொழியில் இருப்பவற்றை மறந்து விட்டோம் என்ற குறிப்பிட்டார் பேராசிரியர். கட்டுரையில் சொல்லப்பட்ட பல கருத்துகள் மீது பெரும் விவாதம் முன் வைக்கப்பட்டது.

'க.நா.சு. சொல்லி இருக்கும் தமிழ் அழகியல் குறித்த கோட்பாடுகளைக் குறை சொல்லிவிட்டு, தமிழவனின் கோட்பாடுகளை மட்டும் பாராட்டிச் சொல்லி இருப்பது குழு சார்ந்த தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பேராசிரியர் இல்லாததால் அவர் எந்தப் பார்வையில் இதை எழுதினார் என்று விளக்கம் பெற முடியாமல் போனது. அவர் இருந்திருந்தால் நல்ல தெளிவு கிடைத்திருக்கக் கூடும்.

அடுத்து, 'திருத்தப்படாத அச்சுப்பிழைகளும், திருந்த வேண்டிய சமூகமும்' என்ற தலைப்பில் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் அயலகத்துறை விரிவுரையாளர் முனைவர்.திரு.தெ.வெற்றிச்செல்வன் உரையாற்றினார். பால் திரிந்தோர் மீதான சமுதாயப் பார்வை, சமுதாயத்தின் மீதான அவர்களின் கோபம், இலக்கியம், மற்றும் பிற கலைகளில் அவர்கள் கையாளப்பட்ட விதம், அவர்களுக்கான அமைப்புகள் என்று பல செய்திகளை முன் வைத்துப் பேசினார். அவரின் பேச்சு பல புதிய செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாக இருந்தது. உரை முடிந்ததும், மற்றவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அமர்வின் இறுதி நிகழ்வாக அமைந்தது, திரு.சந்திரசேகரன் கிருஷ்ணா ஆற்றிய 'அக்பர்' என்ற மொழியாக்க நூல் மீதான ஆய்வுரை. இவர் வலைத்தளங்களில் தன் படைப்புகள், நூல் விமர்சனங்கள், அறிவியல் கொள்கைகள் பற்றிய தன் விளக்கங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்து வருகிறார். பாபருக்குப் பின் ஹுமாயூன், அவருக்குப்பின் அக்பர், பின் ஜஹாங்கீர், பின் ஷாஜஹான், பின் ஔரங்கசீப் என்று காலக்கோட்டில் ஒரு புள்ளியாக நம் பாடப்புத்தகங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அக்பரைப் பற்றிய பல அரிய செய்திகளை இந்நூல் தொகுத்து வழங்கி இருக்கிறது. லாரன்ஸ் பின்யான் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, ச.சரவணன் என்பவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. மூல நூலைத் தான் படித்ததில்லை என்று சந்திரசேகரன் சொன்னது சிறு விவாதத்தை ஏற்படுத்தியது. மூல நூலைப் படித்திருந்தால் தான் இந்த நூலின் குறைகளை சுட்டிக்காட்டும் திறன் நமக்கு முழுதாகக் கிடைக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

நல்ல உரைகளுடன், நல்ல விவாதங்களுடன் அமைந்து நிறைவுற்றது இலக்கியக்கூடல்.

பின்குறிப்பு:
எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் பழமலய், கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி இவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் பழமலய்யுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

இல்லாத முகவரிகள் - 2

திண்டுக்கல் சேர்ந்திருந்த போது மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது. நள்ளிரவில் பேருந்து நிலையங்களில் இருத்தல் என்பது ஒரு சுகானுபவம். பல முறை இந்தச் சுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. பாதி கலைந்த தூக்கத்துடன், ஒரு தேநீர் பருகி, அறிமுகமில்லாத ஒரு நகரத்தின் அமைப்பை அதன் பேருந்து நிலையத்தை வைத்து எடை போடுவது ஒரு நல்ல அனுபவம். இரவுகளில் எல்லா ஊர்களுமே அழகாக இருக்கின்ற்ன. இரவுகளில் அறிமுகமாகிற ஊர்கள் வெகு எளிதாக நம்மோடு இணக்கம் கொண்டு விடுகின்றன. எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் இந்த நேரத்தில் நிலவும் சிறு இரைச்சல் சேர்ந்த நிசப்தம் பயணத்துக்கு அழகு சேர்க்கிறது. இரவு முழுவதும் விழித்திருக்கும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். செய்தித்தாள்கள் விற்கும் கடைகள், தேநீர்க்கடைகள், பூக்கடைகள், சிறு ஓட்டல்கள், இந்த நள்ளிரவிலும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தூரத்தில் தெரிந்த கவிஞர் வைரமுத்துவின் புகைப்படம் போட்ட விளம்பரப்பலகையைப் படித்து விட நகர்ந்தேன். கவிஞரின் பாற்கடல் என்ற புத்தகம் அப்போதுதான் வெளியாகி இருந்தது. அதற்கான விளம்பரப்பலகை அது. வைரமுத்து அதற்கு முந்திய தினங்களில்தான் அங்கு வந்து போயிருந்தார் என்று அறிவித்தது அது.

இங்கிருந்து மதுரை செல்ல வேண்டும். பகல் பொழுதென்றால் சாரி சாரியாகப் பேருந்துகள் போய்க்கொண்டிருக்கும். இந்த இரவில் மதுரைக்குப் பேருந்துகள் குறைவுதான் என்றார் தேநீர்க்கடைக்காரர். அரை மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து மதுரை வழியாக எங்கோ செல்லும் பேருந்து ஒன்று வந்து சேர்ந்தது. அதில் தொற்றிக் கொண்டோம். முதல் முறையாக ஓட்டுநருக்குப் பின் இருக்கும் இருக்கையில் எங்கள் இருவருக்கும் இடம் கிடைத்தது. சாலையை, அதில் படர்ந்திருக்கும் இருளை நக்கிக்கொண்டே செல்லும் ஒளியின் ஆயிரமாயிரம் நாக்குகளை ரசித்த படியே பயணித்தோம். தூக்கம் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலேயே இறங்கிப் போய் விட்டிருந்தது. எதுவும் பேசாமல் பயணப்பட்டோம்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எங்களை உதிர்த்துவிட்டு நகர்ந்தது பேருந்து. இரவு மூன்று மணியைத் தொட இன்னும் சில நிமிடங்களிருந்தது. எங்களின் அன்றைய பொழுது அப்போதே துவங்கிவிட்டது. காலைக்கடன்கள் முடித்து அடுத்த இலக்கான விருதுநகரை நோக்கிக் கிளம்பினோம். நான் பயணித்திராத இன்னொரு வழியில் என் முதல் பயணம். இன்னும் விடியாமல் இருக்கும் சுற்றுப்புறத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டுமென்று கண்களைக் குறுக்கி, இடுக்கிப் பார்த்தேன். எதுவும் புலனாகவில்லை. விருதுநகர் அடைந்த போது இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடுவேன் என்றது கீழ்வானம். மக்கள் கூட்டம் நிறைந்திருந்த பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பேருந்து, புதிய பேருந்து நிலையத்தில் தான் கிடைக்கும் என்று சொன்னார் ஒருவர். நம்பி புறப்பட்டோம். ஒரு நகரப்பேருந்தில் புதிய பேருந்து நிலையம் என்று சொல்லப்பட்ட பகுதியை அடைந்தோம். அது ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு பகுதி, பேருந்துகள் மட்டும் வரும், போகும், உள்ளே ஒருகடைகூட இல்லை என்றெல்லாம் நாங்கள் உணர்ந்து கொள்வதற்குள் எங்களை இறக்கிவிட்ட பேருந்து ஒரு சுற்று சுற்றி விட்டு பறந்து போயிருந்தது.

எங்களைத் தவிர ஆட்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதேதோ கதைத்தபடி பேருந்துக்காகக் காத்திருந்தோம். எதுவும் வரவில்லை. வெளியே ஒரு சிறு நடை போட்டோம். நம்மோடு விதி விளையாடி இருக்கிறது என்று புரிந்து கொண்டு, அடுத்து வந்த ஒரு நகரப் பேருந்தைப் பிடித்து மீண்டும் பழைய பேருந்து நிலையம் சேர்ந்தோம். அங்கே இருப்பவர்கள் யாருக்கும் எங்களைத் தெரியாது, நாங்கள் பட்ட அவமானமும் தெரியாது என்ற எண்ணம் ஆறுதல் அளித்தது. ஆறரை மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்தோம்.

'வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு வண்ணம் கொள்கிறது நாளின் விடிவும், முடிவும்' நான் எழுதிய வரிகளில் மிக மிக அனுபவித்து எழுதிய வரி இது. அது போன்ற ஒரு மாறுபட்ட வண்ணம் கொண்ட காலைப் பொழுதில் இந்தப் பயணம் அமைந்தது. விருதுநகரின் காய்ந்த நிலங்களை விட்டு பசுமையான சில இடங்கள் வரத்தொடங்கிய போதே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிட்டோம் என்றான் நண்பன். ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த பிறகுதான் முதல் சோதனை. இந்த வட்டாரத்தில் அர்ச்சுனாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு நல்லதங்காள் தன் ஏழு பிள்ளைகளோடு விழுந்து இறந்து போன கிணறும், மக்கள் அவளைத் தெய்வமாகத் தொழும் கோவில் ஒன்றும் இருக்கின்றன. அங்கு எப்படிப் போக வேண்டும் என்ற கேள்வியை யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.

தொடர்வதற்கு முன், ஒரு சிறு முன்னோட்டம். எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி' படித்தபிறகு, அதில் எங்களை மிகவும் கவர்ந்திருந்த நல்லதங்காள் விழுந்த கிணறைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. நல்ல தங்காளின் கதையைச் சொல்லிவிட்டு, அந்தக் கிணறை அவர் பார்க்கும்போது, அவரிடம் பேச்சு கொடுத்த ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியின் வாக்காக 'நல்லதங்காள் என்பது ஒரு பெண்ணல்ல. எல்லோருமே நல்லதங்காள்தான். துன்பப்பட்டே இவர்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். வாழ்க்கையும் இவர்களைத் துரத்திக்கொண்டே வந்து கிணற்றில் தள்ளிவிடுகிறது' என்பது போலச் சொல்வார். நல்லதங்காளே தன் முன் வந்து பேசுகிறாளோ என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிடுவார். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு வந்த ஈர்ப்புதான் எங்களை இங்கே கொண்டுவந்து நிறுத்தி இருந்தது.

இப்போது வழி கேட்க வேண்டும். யாரிடம் கேட்கலாம்?

Saturday, June 13, 2009

இல்லாத முகவரிகள் - 1


ழைய நாட்குறிப்புகளைப் புரட்டிப் படிப்பது போல மனது நேற்றிரவு அலை பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த கால நாளேட்டின் தாள்கள் படபடக்கும் ஓசை தெளிவாகக் கேட்ட படி இருந்தது. கூடவே ஏதேதோ ஓசைகள், இரவு நேரப் பேருந்துகளின் சத்தம், கடல் எழுந்து விழும் சத்தம், மழையின் துளிகள், தேங்கிய தண்ணீரில் விழும் சத்தம், எல்லாம் சேர்ந்து என்னை இராண்டாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று நிறுத்தின.

2007 ஏப்ரல் மாதம். வெயில் பூரணமாகத் தன் ஆதிக்கத்தை செலுத்தத்தொடங்கிய காலம். வெகு நாட்களாக நண்பனும் நானும் திட்டமிட்டிருந்த கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் ஏற்பட்ட காலம். கொஞ்சம் இங்கே சுய புராணம் அவசியமாகிறது. அப்போது நான் ஐதராபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். நண்பன் இருந்தது பூனேயில். இந்தப் பயணத்தின் முன்பு வரை, நான் தமிழக வரைபடத்தில் மதுரைக்குக் கீழே பயணித்ததே இல்லை. ஆனால் நண்பன் ஏற்கனவே கன்னியாகுமரியில் கடலாடி இருந்தான். அவன் மீண்டும் என்னுடன் வரச் சம்மதித்தது ஒரு மாதிரியான பெருந்தன்மை என்றே நான் கொண்டேன்.

கன்னியாகுமரி என்ற அளவோடு இல்லாமல் முடிந்தவரை சுற்றி இருக்கும் பகுதிகளையும் இப்பயணத்தில் வளைத்துக் கட்டிவிட வேண்டும் என்று பட்டியலிட்டுப் புறப்பட்டன கடல் குடிக்கத் தயாரான இரு சிறு எறும்புகள். புறப்படும் முன் சில சட்ட திட்டங்களுக்கு எங்களை நாங்களே ஆட்படுத்திக் கொண்டோம். முதல் கட்டுப்பாடு அலைபேசி எடுத்துப்போவதில்லை என்பது. இருவருக்கும் அதில் மிகச் சந்தோஷம். குடும்பத்துக்கு மட்டும் தினமொரு முறை ஏதாவது பொது தொலைபேசி மூலம், உயிரோடிருப்பதை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு.

செருப்பு அணிந்து போகக்கூடாது என்று முடிவு செய்து பின், 'ரொம்ப ஓவரா இருக்குடா' என்று நான் சொன்ன பிறகு அதைக் கைவிட்டோம். இருவரும் அவரவர் சொந்த ஊர்களை அடைந்து இரு தினங்களுக்குப் பிறகு, இருவரும் கல்லூரிப்படிப்பை முடித்த திருச்சியில் சந்தித்துப் பயணத்தைத் தொடங்குவதாக முடிவானது. நானும் வீடு சேர்ந்தேன். குடும்பத்தைப் பொறுத்த வரையில் நண்பர்கள் ஊர் சுற்றப் போகிறோம் என்பது மட்டும் தெரியும். எத்தனை பேர், எங்கே போகிறோம், எங்கே தங்குவோம், என்ன திட்டம் எதுவும் தெரியாது. கேட்கவும் இல்லை. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

புறப்படும் முன் நண்பனுடன் பேசி, எங்கே சந்திப்பதென்று முடிவானது. திருச்சி மாரீஸ் திரையரங்கில் 'பருத்திவீரன்' திரைப்படம் பார்த்து விட்டு நள்ளிரவுக்கு மேல் பயணத்தைத் தொடங்கினால் முதல் புள்ளியான 'அர்ச்சுனாபுரத்தை' அடைய பொழுது விடிந்துவிடும் என்று தீர்மானித்தோம். நான் முன்பே அத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். சரி, மீண்டும் ஒருமுறை நண்பனுடன் பார்க்கலாம் என்று ஒரு திங்கட்கிழமை மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டேன். ஐந்து மணி நேரப்பயணத்துக்குப் பிறகு மாரீஸ் திரையரங்கின் வாசலை அடைந்தேன். திரைப்படம் தொடங்கி அரை மணி ஆகியிருக்கும். தனியாக மீண்டும் போய்ப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. காட்சி முடியும் வரை வெளியில் காத்திருக்கலாம் என்று காத்திருந்தேன். கோட்டைவாசல், தெப்பக்குளம் வரை ஒரு நடை போய் வந்தேன். சினிமா போஸ்டர்கள் வாசித்தேன். சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்தேன். காட்சி முடியும் நேரத்துக்கு மீண்டும் மாரீஸ் வாசலுக்கு வந்தேன். காட்சி முடிந்து வெளியில் வருவோரை ஒவ்வொருவர் முகங்களாக ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிச்சம் வேறு குறைவாகத்தான் இருந்தது.

ஒவ்வொருவராக ஒவ்வொருவராக கடைசி ஆள் வரை வெளியேறிவிட்டார்கள். எனக்குக் குழப்பமாக் இருந்தது. ஒரு வேளை வழியில் ஏதாவது பிரச்சினையா என்று யோசித்தபடி படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். திரையரங்கின் வெளியிலிருந்து வேகமாக நடந்து வந்தான் நண்பன். 'வீட்டில் ஒரு சிறு வேலை. நீ படம் பார்த்தியா?' என்றான். நான் அவனுக்குக் கதை சொன்னேன். 'வீட்டுக்கு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல?' என்றான். அவன் வீட்டு எண்ணைக் குறித்துக் கொள்ளாமல் வந்திருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவன் அலைபேசி எண்ணும் என் நினைவில் இல்லை. சிரித்துக் கொண்டே இரவு உணவை முடித்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அடைந்தோம்.

அவன்தான் அப்போது எனக்கு வழிகாட்டி. மதுரை போய், அங்கிருந்து விருதுநகர் அடைந்து, பின் ஸ்ரீவில்லிபுத்தூர் போய், அர்ச்சுனாபுரத்துக்கு வழி கேட்டுக்கொள்ளலாம் என்றான். அவன் கோயமுத்தூர் போய், தூத்துக்குடி வந்து, தென்காசி, தேனி வழியாக ராமநாதபுரம் போய் விடலாம் என்று சொல்லி இருந்தாலும் நான் சரி என்றிருப்பேன். அப்போது எனக்குப் பல இடங்கள் பழக்கமில்லாதவை. பயணத்தின் சுவை அறிந்தவன் என்றாலும், தென் தமிழகத்தில் சுற்றியதில்லை. வரைபட அளவில் ஓரளவுக்குப் பழக்கமாகி இருந்தன.

ஆளுக்குக் கையில் ஒரு பை வைத்திருந்தோம். உள்ளே இரண்டு நாட்களுக்கான் உள்ளாடைகள், ஒரு நாளுக்கான மேலாடை, புதிதாக வாங்கி மிகுந்த காதலுடன் பத்திரப்படுத்தி இருக்கும் டிஜிட்டல் கேமரா, அப்புறம் எடை குறைவான அன்றாட உபயோகப் பொருட்கள் சில மட்டும் இருந்தன. திருச்சி தமிழ்நாட்டின் இதயம் என்பதால் வட மாவட்டங்களிலிருந்து, தென் மாவட்டங்களுக்குப் போகும் பெரும்பாலான பேருந்துகள் இதன் வழியாகத்தான் போகின்றன. அதனால் மதுரைக்குச் சராசரியாக மூன்று நான்கு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருந்து கொண்டே இருக்கும். இரவு பத்து மணி சுமாருக்கு, எந்தப் பேருந்தில் ஏறுவதென்று யோசித்தபடி சுக்கு காபி குடித்துக் கொண்டிருந்தோம். நேரடியாக மதுரைக்குப் போகும் பேருந்தில் ஏறினால்.... ஒரு மணிக்கு மதுரை, பின் அங்கிருந்து விருது நகருக்கு அந்த நேரத்தில் பேருந்து இருக்குமா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் பொழுது விடிவதற்குள் அர்ச்சுனாபுரத்தை அடைவது போலாகிவிடும். அது வேண்டாம் என்று இருவரும் சிந்தித்து ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

மதுரை பேருந்துகளுக்கு அருகிலேயே திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் நின்றிருந்தன. வீடியோ இல்லாத பேருந்து ஒன்றில் ஏறிக்கொண்டோம். தென் தமிழகம் பார்க்கும் என் நீண்ட நாள் கனவை நினைவாக்கும் பயணம் தொடங்கியது. இருவரும் கொஞ்சம் கண்ணயர்ந்தோம்.

படிந்த வரிகள் - 5

நாய்க் குட்டிகள்
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..

கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.

- கவிஞர் கார்த்தி (http://karthin.blogspot.com/)

Friday, June 12, 2009

மாய உலகம்

சேர்த்துக் கொள்ளப்படாத
சிறுவர்களுக்கென்று
உருவாகிறது
ஒரு மாய உலகம்

அங்கே
அவர்களே
சகலமும் ஆகிறார்கள்

பந்து வீசுகிறார்கள்
அவர்களே அதையடிக்கிறார்கள்
ஓடி வந்து பிடிக்கிறார்கள்
அவர்களே ஆட்டமுமிழக்கிறார்கள்

வெற்றியும் தோல்வியும்
ஒருங்கே சூழ
நிம்மதியாய்ப் போய்ச்
சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது

Wednesday, June 10, 2009

முதல் பயணம்

கைகளை இருபுறம் விரித்துப்
பறவையென்றாகிறாள்

இரு புறமும் பின்னோடி மறையும்
காட்சிகள்
அவள் விளையாட்டுலகின்
பிம்பங்களாகின்றன

கலைந்து பறக்கும்
கேசத்தின் இழைகளை
ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
ஒதுக்கி விடுகிறாள்

இரவை ஆக்கிரமித்திருக்கும்
ஒளி விளக்குகள்
அவள் பிடிக்கத்துடிக்கும்
நட்சத்திரங்களாகின்றன

கூடும் வேகம்
அவள் கீச்சுக்குரலுக்கு
ஒத்த சுதியில் இசைக்கிறது

பயணம் முடிந்தும்
பயணித்துக் கொண்டே இருக்கிறாள்
பார்த்து வந்த பாதைகளில்

இனி அவள் வாழ்க்கையில்
வரப்போகும் ஒவ்வொருவரிடமும்
சொல்ல ஒரு கதை இருக்கும்
அவளிடம்

முதல்முதலா
எங்கப்பா கூட பைக்ல
போகும்போது......

Sunday, June 07, 2009

வண்ணத்துப்பூச்சி

அசையாதே பெண்ணே!

உன் சேலையின்
எம்பிராய்டரி பூக்களில்
மதுவருந்திக் கொண்டிருக்கிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி

*********

சிறகுகளைப் பிய்த்துப்போட்ட
சிறுவனின் விரல்களில்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
செத்துப்போன வண்ணத்துப்பூச்சியின்
வண்ணம் உயிரோடு

*********

வண்ணங்கள் தொலைந்த
உலகிலும் இதே
பெயர் கொள்ளுமா
வண்ணத்துப்பூச்சி?

*********

இருட்டறையினுள் படபடக்கும்
வண்ணத்துப்பூச்சியின்
சிறகு சொல்லும்
பாதையில் போனால்
தெரிந்துவிடும்
ஒளி வரும் திசை

*********

இறங்கும்போதுதான் கவனித்தேன்
வழிமாறிப் பேருந்துக்குள்
வந்துவிட்ட வண்ணத்துப்பூச்சியை

யாராவது இறக்கிவிடுங்களேன்

*********

எல்லாப் பூக்களையும்
காகிதத்தில் செய்துவிட்டோம்
அதில் அமர்வதற்கான
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
சிதைக்கப்பட்ட தோட்டங்களில்

*********

பூங்காவின் இருக்கையில்
இடம்பிடித்திருந்த
வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திவிட்டு
அமர்ந்துகொள்ளும் அவர்,
கண்களை மூடிக்கொண்டு
வேர்க்கடலை சாப்பிடுகிறார்

*********

கவனமில்லாமல் சாத்தப்படுகிற
கதவுகளில் அறுந்து விழும்
சிறகுகளைச் சேர்த்து வைக்கிறேன்,
என்றேனும்
சிறகில்லாமல் வாசல்வரக்கூடும்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கென

Saturday, June 06, 2009

பழைய திறவுகோல்

எங்கேயோ படித்துவிட்ட, யார் சொல்லியோ கேட்டு விட்ட சில வரிகள், வருடங்கள் கழித்தும் மூன்றாம் ஜாமத்தூக்கத்தில் எழுப்பி நம்மைக் குலைத்துப் போடுவதுண்டு. கவிதைகள் என்றில்லாமல் எதுவொன்றாக இருப்பினும் இந்த அனுபவம் நேர்ந்துவிடுகிறது. இந்த வரிகள் ஏற்படுத்துகிற பாதிப்பு, நம் அனுபவம் சார்ந்த, விருப்பங்கள் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் அமைகின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். ரயில் பயணத்தில், காய்கறிக்கடையில், மழைக்கொதுங்கிய மரத்தினடியில், பெண்கள் படம் போட்ட விளம்பரப்பலகையில், தேர்தல் பிரச்சாரச் சொற்பொழிவில், குதிரைகள் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கடற்கரையில், எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் கையிலிருக்கும் செய்தித்தாளில், புதிதாக வெட்டப்பட்டிருக்கும் குளத்தின் அருகாமையில் நிலவொளியில், ஓசி வாங்கிப்படித்த வாரமலரில், எங்கேயிருந்தும் நம்மிடம் வந்து சேர்ந்து விடலாம் இந்த வரிகள்.

'இன்னைக்கு வீட்டுக்கு வராம போன, அப்புறம் என்னப் பாக்க நீ உசுரோட இருக்க மாட்ட' என்று திருவெறும்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் போதையில் இருந்த ஓர் ஆணிடம் உரக்கக் கத்திப்போன பெண்ணின் குரல் இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகளில் நினைவில் வைத்திருக்கும் படி அழகு எதுவும் இல்லை. கவித்துவம் இல்லை. ஒரு மிகச்சிறந்த வசனத்துக்கான பூச்சு வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால், கோபம் இருக்கிறது; பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. அவன் பெரும்பாலும் அவளின் கணவனாக இருக்க வேண்டும். கணவனின் குடியை நிறுத்த தான் இறந்து போவேன் என்று சொல்கிற பெண்களைப் பார்த்திருக்கிறேன். இரண்டு பேர் சாகவும் செய்திருக்கிறார்கள் எனக்குத் தெரிந்து. நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று சொன்ன பெண்ணை அன்றுதான் பார்த்தேன். அவள் முகம் கூட எனக்கு மறந்து விட்டது. இந்த வார்த்தைகள் இன்னும் உள்ளேயே இருக்கின்றன.

'உரிமையைக் கேட்க
உயர்த்தும் கைகளைக்
கடமையைச் செய்யத்
தாழ்த்துங்கள்
தப்பில்லை'

எனக்குப் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடம் நடத்திய ஆசிரியர் ஒரு சுதந்திர தின விழாவில் வாசித்தளித்த கவிதையின் ஒரு வரி இது. இன்னும் சட்டை மேல் கொட்டி விட்ட இளநீர் மாதிரி மனத்தின் ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டே இருக்கிறது, ஒரு விதமான உறுத்தலுடன். வாழ்க்கையில் பல விஷயங்கள் குறித்தான பார்வைகளை மாற்றிப்போட்ட வரிகள் இவை. கம்யூனிசம், சோஷலிசம் என்று புது வார்த்தைகளைப் பழக ஆரம்பித்திருந்த பதின்பருவத்தின் இறுதி காலத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்திய வரிகள் இவை. கம்யூனிசத்தின் உண்மையான ஆதாரம் எது என்ற சிந்தனைத் தெளிவு ஏற்பட்டது. ஒரு வரி ஒரு மனிதனின் வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போட்டுவிடுமா? விடும். இது நினைவுக்கு வரும்போதெல்லாம் வந்து போகும் இன்னொரு வரி,

'நாப்பது வயசு வரைக்கும் கம்யூனிஸ்டா இல்லாதவனும் மனுஷன் இல்ல. நாப்பது வயசுக்கு மேல கம்யூனிஸ்டா இருக்கவனும் மனுஷன் இல்ல'

கவிஞர் வைரமுத்துவின் 'வானம் தொட்டு விடும் தூரம்தான்' என்ற முதல் புதினத்தில் கதாநாயகியின் அப்பாவாக வரும் வில்லன் பேசும் வசனம் இது. வாழ்க்கையின் ஓட்டத்தில் பார்த்துவிட்ட எத்தனையோ பேர்களின் கதைகள், இது உண்மைதானோ என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஒரு வேளை நாற்பதைத் தாண்டியபின் உண்மை தெளியலாம்.

பாரதி மீது அபிரிமிதமான காதல் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், நிதர்சனத்தை ஒதுக்கிவிட்டு கற்பனையின் போதையில் வாழ்ந்தவன் பாரதி என்றொரு தீயை என்னுள் கொளுத்திப் போட்ட வரிகள்,

'பாரதி,
கண்ணம்மாவை உயிர்ப்பித்துச்
செல்லம்மாவைப் பட்டினி போட்டவன்'

மேலே குறிப்பட்ட அதே ஆசிரியர் தான் இதற்கும் சொந்தக்காரர்.

பாரதி ஒரு கவிஞனாக வென்றான். ஒரு கணவனாகத் தோற்றுவிட்டான். அவன் கணவனாக வென்றிருந்தால், கவிஞனாகத் தோற்றிருக்கலாம் என்பதும் உண்மையே. ஆனால், இந்த வரிகள் என்னுள் வெட்டி வைத்திருக்கும் குழியில் அடிக்கடி விழுந்துவிடுகிறேன். மீண்டும் பாரதி கொண்டே கரையேறுகிறேன்.

சிறந்த உலகக்கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பெயர் நினைவில்லாத ஒரு பத்திரிகையில் ஆறேழு வருடங்களுக்கு முன் வெளிவந்த வரி,

'எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் சும்மா இருங்கள்'

இது கவிதையா என்று தெரியாது. இதில் கவிதை இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எதில்தான் கவிதை இல்லை?

நான் நல்லவனாக இருக்கிறேன் என்பதை விட நல்லவனாக இருப்பதாக நிரூபித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிரூபித்தலின் மீதான வேட்கை குறையும்போது நான் நல்லவனாக உணரப்படுவேனா என்பது கேள்விக்குறி. அந்தத் தருணம் தோன்றிவிடுவதற்கான கால அவகாசத்தைக் கொடுக்காமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒரு புத்திசாலி என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள். பூக்கள் கொடுக்கும் ஒரு காதலன் தன் காதலியை நேசிப்பதாக நிரூபித்துக் கொண்டிருக்கிறான். நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு வினாடியும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறோம். தாங்கள் அறிவு ஜீவிகள் என்று நிரூபிப்பதற்காக சுஜாதாவையும், கமல்ஹாசனையும் ரசிப்பதாக நிரூபிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். மொத்தத்தில் எந்தச் செயலையும் நான் செய்வதில்லை. செய்வதாக நிரூபிக்கிறேன். எதுவாகவும் நான் இல்லை. அதுவாக இருப்பதாக நிரூபிக்கிறேன். இந்த நிரூபித்தலின் உலகிலிருந்து வெளிவந்து சுவாசிக்கிற கணம் நான் நானாக இருப்பேன்.

இந்தத் தெளிவைக்கொடுத்துப்போனது அந்த வரி.

வரிகள் இன்னும் தொடர்கின்றன. அவை ஏற்படுத்தும் வலிகளும், காட்டிச்செல்லும் வழிகளும் இன்னும் ஏராளம் இருக்கின்றன. எப்போதோ கேட்ட வார்த்தைகள் இப்போது அர்த்தப்படுகின்றன. புதிய கதவொன்றைத் திறந்துவிட்டுச் செல்கிறது பழைய திறவுகோல். திறந்த கதவின் வழி தெரிகிறது இன்னொரு புது உலகம். புது உலகில் பிரவேசிக்கிறேன் இன்னொரு புது நான்.

பழையன

பளபளக்கும் புதுச்சாலையினின்றும்
பிரிந்தோடிச் சென்று
மீண்டும் இணைந்து கொள்கிறது
யாரும் புழங்காமல்
தனிமையில் புழுங்கும்
பழைய மண்சாலை

Friday, June 05, 2009

ஒத்ததிர்வு

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

நேரெதிர் திசைகளில்
அதிவேகமாகக் கடந்து போய்விட்ட
ரயில்களென இருந்தோம்
நாம்

கடந்துபோன
கணத்தின் அதிர்வு
செல்களில் ஊடுருவி
ஒத்திசைத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் இருவரிலும்

படிந்த வரிகள் - 4

அதை
அவ்வளவுதான்
புரிந்துகொள்ளமுடிந்தது
நண்பர்களுக்கு

எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களைவிடவும் நீ அதைப்
புரிந்துகொண்டதற்கு

-கவிஞர் மனுஷ்ய புத்திரன்

படிந்த வரிகள் - 3

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலும் துளி
என்கிறது
நட்பு

- கவிஞர் அறிவுமதி

படிந்த வரிகள் - 2

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

- கவிஞர் நகுலன்

படிந்த வரிகள் - 1

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்

- கவிஞர் அறிவுமதி

Thursday, June 04, 2009

யாசகன்

நான் உதிர்த்துவிட்ட
ஒற்றை வார்த்தையில்
பற்றி எரிகிறது நெருப்பு

பாம்புகள் பின்னிப்பிணைந்து
கிடக்கும் உலகமொன்றின்
விஷக்காற்றை சுவாசித்துவிட்டு
வருகிறேன் ஒரு வினாடி

உன்னைக் கலங்கடித்துவிட்ட
ஒற்றை வார்த்தையின்
கருதேடி அழித்துவிட
ஓடுகிறேன்

எங்கெங்கோ சுற்றிவந்து
முடிந்துவிடுகிறது
தேடல் என்னிலேயே

சில நிமிடங்கள்
முன்னிருந்த நம்மை
மீண்டும் உயிர்ப்பிக்க
உன் மன்னிப்பு என்னும்
மந்திரத்தை உச்சரிக்கிறாய்

கூனிக்குறுகி
அதை ஏற்றுக்கொள்ளும்
தகுதியற்ற யாசகனாகிறேன்

வார்த்தை உதிர்ந்துவிட்ட
கணத்தின் முன்பிருந்து
வாழ்க்கையைத் தொடர்கிறாய் நீ

வார்த்தை விழுந்துவிட்ட
கணத்திலேயே நின்றுகொண்டு
எதையென்று தெரியாமலேயே
எதையோ யாசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

ஒரு பிரபஞ்ச அழிவிற்கான
விளைவுகளைக் கொடுத்துவிட்டு
அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை

Tuesday, June 02, 2009

தன்னிரக்கம்

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்

Monday, June 01, 2009

தற்குறிப்பு

சீரான இடைவெளியில் சீப்புப்பற்கள்
தலை வாரிக்கொள்கிறது வானம்
ஆற்றங்கரையில் மொட்டைப் பனைமரங்கள்

காட்சிப்பிழை

மேகக்கூட்டங்களைப்
புகைப்படம் எடுத்தவனின்
ஆல்பத்தில் இருந்தன
எனக்கொரு மயில்,
அவனுக்கொரு தடாகம்,
உங்களுக்கொரு ஏதோ.

ஐஸ்கிரீம்

கோன் ஐஸ்கிரீம் சாப்பிடும்
மூதாட்டி
தங்கள் ஐஸ்கிரீம்களை
உருகவிடுகிறார்கள்
உடன் சாப்பிடும்
வேறு சிலர்