புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, November 26, 2010

சிறிது

சுமந்து நடந்து வந்த
குவளையிலிருந்து
விழுந்து தெறித்தது பால்
துடைத்துப் போனாள்
கீழே சிறகு விரித்துக் கிடந்த
ராட்சசப் பறவையை

-----------------------

ஆடைகளற்ற கொடியில்
தொங்கும் கிளிப்புகளில்
துளித்துளியாய்
ஒழுகியூற்றும்
நனை மழையும்
காய் வெயிலும்

-----------------------

ஆயிரத்துக்கும் அதிகமான
பக்கங்கள் கொண்ட
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து
வரிசை மாற்றியடுக்கி
வாசித்துப் பார்த்தேன்

பக்கங்கள் தோறும்
முளை விடத் தொடங்கின
ஆயிரமாயிரம் நூதனக் கதைகள்

-----------------------

மழையோ வெயிலோ
அறியாமல்
புறவுலகின்
இயல்பனைத்தும் துறந்து
ஒரு துறவியெனச் சிரிக்கிறாள்
பொன் நகைகள்
சுமந்து நிற்கும்
விளம்பர யுவதி

-----------------------

அசையும் பொருளுடன்
அசையும் நிழலை
ஒற்றைப்புள்ளியில்
ஒருமிக்கச் செய்யும்
முயற்சியிலென்
நெற்றிப்புள்ளியில்
பற்றியெரிகிறது ஞானத்தீ

-----------------------

இருள்
மெல்ல பரவ
மங்கி மறையும் சூரியனை
விடைகொடுத்தனுப்புகிறேன்


இனியதை,
மேற்கத்திய
தேசத்தவனொருவன்
தன் வானத்தில்
பொருத்தி வைத்திருப்பான்
நாளையென்
அதிகாலை வரை

-----------------------

பால் தீர்ந்த
பிளாஸ்டிக் பைகளை
நக்கி யோய்கின்றன
பசித்த கன்றுகள்

-----------------------

பாலைவனங்களில்
அதிகாலைப் பனித்துளிகளைச் சேகரித்து
தாகம் தீர்த்துக்கொள்ளும்
பூர்வகுடி பற்றிய குறிப்புகளுள்
அனுமதி ஏதுமின்றி
வந்தமர்ந்து கொள்கிறது
நடந்து கால் வலி கண்ட
ஒட்டகமொன்று

-----------------------

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின்
ஒரு நாள் சரித்திரத்தைத்
தாங்கியபடி
குப்பையில் சேர்கிறது
நாட்காட்டியின்
ஒற்றை இதழ்

-----------------------

நாய்களை விட்டுவிடுங்கள்
அவை மனிதரின் கலவியில்
கல்லெறிவதில்லை

Tuesday, November 16, 2010

இழை

கூரிய வாட்களைக்
கிழித்துவிடும் இழையாய் இருக்கிறது.

அறுந்துவிடும் எனப்
பயங்கொள்கிறாய்

கிழிந்துவிட்ட வாட்களுக்காய்ப் பரிதவிக்கிறேன்
அவை வாட்களே என்றாலும்

உன் இழையை
எதிர்கொள்ளும் புள்ளிகளைத்
தவிர்க்கச் சொல்லித் தருகிறேனென் வாட்களுக்கு

இனி வாட்கள் வாட்களாகவே இருக்கும்,
வாட்களாக இருப்பதன்றி
வேறெதுவும் செய்யாது.