புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, April 30, 2009

இன்னும் ஓர் இரவு

ஜீன்ஸ் அணிந்தபடி
மறுநாள் விடியலுக்குக்
கோலமிடுகிறாள்
ஒரு
பதின் வயதுப் பெண்

தெருமுனைக் கடைகளில்
தேநீர் பருகுகிறார்கள்
சிகரெட் இழுக்கும்
இளைஞர்கள்

வீட்டின்
முன் விளக்குகள்
அணைவதை
அசுவாரஸ்யமாய்த்
தலை தூக்கிப் பார்த்து
மீண்டும் தூங்கிவிடுகின்றன
தெருநாய்கள்

குப்பை வண்டியின்
நிழலுக்கருகிருக்கும்
நடைமேடையில்
பார்சல் பிரியாணி
சாப்பிடுகிறார்கள்
துப்புரவு தொழிலாளர்கள்

அதீதமான
அலங்காரங்களுடன்
பெண்பாலரும்
பால் திரிந்தோரும்
நடக்கும் சுரங்கப்பாதையில்
சீறிப்பாய்ந்து நிற்கிறதொரு
நான்கு சக்கர வாகனம்

தூங்கிக் கொண்டிருந்தவளை
உதைத்துத் தள்ளிவிட்டு
துண்டு விரித்துப்
படுக்கிறான்
பிளாட்பார வாசியொருவன்

மீறியெழும்
தூக்கத்தைப்
புறந்தள்ளி
ஒப்பனைகளுடன்
இரவு பணிக்குத்
தயாராகிறார்கள்
சில
ஆண்களும்
பெண்களும்

இன்னுமோர்
இரவுக்குத்
தயாராகிவிட்டிருக்கிறது
மாநகரம்

Wednesday, April 29, 2009

எழு(த்)து

பாடுபொருள்கள்
ஏதுமற்று,
சூன்யமாகிப்போன
ஓரிரவின்
வெப்பம் தாங்காமல்
ஆழ்மனத்தைக்
கிளறிக் கிளறி
நினைவுகளைத்துழாவி
எதுவும் சிக்காமல்,
வார்த்தைகளைக்
கெஞ்சியழைத்து வந்து
தப்பிப் பிழைத்தோடிய
தாள்களையும்
எழுதுகோலையும்
துன்புறுத்தி
எழுதிக்கொண்டிருந்தேன்
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்
'இதை'

நினைவோடு அலை

அலையாடிய குழந்தைகளை
கரையில்
மணல்வீடு கட்ட அனுப்பிவிட்டு
கை கோர்த்துக்
கடலாடுகின்றனர் இரு தாய்மார்

அவர்கள்
முகத்தலடித்துத் தெறித்து
வழிந்தோடுகிறது,
அவர்களின்
பிள்ளைப்பிராயத்து
அலையொன்று

Tuesday, April 28, 2009

வெகு ஜனம்

பேருந்து, ரயில் நிலையங்களில்
தூக்கில் தொங்கி,
சில்லறைத் தேவைக்காகவோ,
புழுக்கம் போக காற்று விசிறவோ,
கூட்டமான பேருந்தில் இடம் பிடிக்கவோ,
வாங்கப்பட்டு,
எடைக்குப் போடப்பட்டு,
வெல்லம், பருப்பு மடிக்க
என்று
பல வழிகளில்
வெகு ஜனங்களால்
பயன்படுத்தப்படுவனவற்றிற்கு
வெகு ஜனப் பத்திரிக்கை
என்று பெயர்.

Sunday, April 26, 2009

தலைமுறை

ஊருக்கெல்லாம்
குளம் வெட்டி
நீர்க்கொடை
செய்து வைத்த
பெரியசாமி அண்ணாச்சியின்
பேரன்
சொல்கிறான்

'ஸ்...... அப்பா!
இந்த
பெப்ஸி
குடிச்சாத்தான்
தாகமே அடங்குது!'

Thursday, April 23, 2009

நன்றி!

உயிரின் மூலம் வரைச்
சுட்டெரித்து தகிக்கிறது
வெயில்

சலனமற்றிருக்கும்
மரத்தில்
ஒளிந்து மறுபடியும்
நடக்கிறேன்

இன்னும் வெயிலிலேயே
தனிமையில்
உழன்றுகொண்டிருக்கிறது
நான் இளைப்பாறி,
அழுந்த மிதித்தும்
சன்னமாய்க் கிடந்த
நீண்ட மரநிழல்.

Saturday, April 18, 2009

தொடரும் வார்த்தைகள்

சாமி கும்பிடேன்டா

சாப்பிடும்போது
புத்தகம் படிக்காதே

வீட்டுக்கு யாராவது வந்தா
வாங்கனு சொல்லுடா

நாலு விசேஷத்துக்குப்
போய் வந்தாதான்
வெளி மனுஷங்க
பழக்கம் வரும்

இந்த கிரிக்கெட் போட்டில
அப்படி என்னதான் இருக்கோ?
சோறு தண்ணி கூட எறங்காம

கால் ஆட்டினா
குடும்பத்துக்கு ஆகாதுடா

திட்டியபடியே இருந்தாலும்
மிகவும் பிடித்திருக்கிறது
அம்மாவையும்,
அவளின் வார்த்தைகளையும்

அதனால்தான்
அதன் படி நடப்பதேயில்லை

'போம்மா'
என்று அலட்சியம்
கொள்ளச் செய்கிறது
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும் ஆசை!

Wednesday, April 15, 2009

தண்ணீர் தேசம்

வாழ்க்கையின் வீச்சு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது அலைவுறும் நீளமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றாற்போல் நம் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் கூட மாற்றம் பெறுகின்றன. ஏதாவதொரு சூழ்நிலையில், எங்காவது ஓடி ஒளிந்து கொண்டால் நன்றாய் இருக்கும் என்று கூடத் தோன்றும்.

அப்படியொரு மனநிலையில்தான் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டேன். கூட நண்பன் ஒருவன். கூகிள் மேப்பில் தொடக்கத்தையும், முடிவையும் கொடுத்தால் தொலைவு, செல்லும் வழி என்று சகல விஷயங்களையும் விலா வாரியாக விளக்கி விடுகிறது.

'புலிகாட் ஏரி' எனும் பழவேற்காடு ஏரி, வரைபடத்தில் பார்க்கும்போது தனியொரு கவனத்தைப் பெற்றுவிடுகிறது. சென்னைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் இருந்து கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. தென் முனையில் மட்டும் கொஞ்சமாக உறவு கொண்டாடுகிறது.

அளவில் பல 'புழல்' ஏரிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும் பழவேற்காடு ஏரி(புலிகாட் ஏரி, பழவேற்காடு ஏரி தான் என்ற செய்தி அங்கே போன பின்புதான் எனக்குத் தெரியும் :)) என் வீட்டிலிருந்து சரியாக 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பயணம் செய்யும் வழியும் நான் இதுவரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திராத வழி.

சூளைமேட்டில் தொடங்கி, அமைந்த கரை, திருமங்கலம், அண்ணா நகர், பாடி, புழல், செங்குன்றம், காரனோடை, சோழாவரம், பஞ்செட்டி, பொன்னேரி என்று நீண்டு பழவேற்காட்டைச் சென்றடைந்தது பயணம். இதில் செங்குன்றம் வரையிலான பகுதிகள், பேருந்துப் பயணத்தில் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவை.

தேசிய நெடுஞ்சாலையில் முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லாத பயணத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? எனக்குக் கிடைத்தது இந்த அனுபவம், சில இடங்களில். நெல்லூர், கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அது. NH 5!

தச்சூர் கூட்டு சாலை என்ற சந்திப்பில் பிரிந்து செல்லும் பொன்னேரி சாலையில் திரும்பிப் பயணத்தைத் தொடர்ந்தோம். பொன்னேரியைக் கடந்த பின் அமைந்த பயணம், என் ஊர்ப்புற கிராமங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது.

ஏகாந்தமான சாலையில் நெடுந்தூரம் பிரயாணித்து பழவேற்காடு வந்து சேர்ந்தோம். கடல் பொருட்களும், மீன்களும், வேறு சில அத்தியாவசியப் பொருட்களும் விற்கும் சிறு சந்தையைக் கடந்து ஏரிக்கரையை அடைந்தோம்.

ஏரியின் மறு முனையில் இருக்கும் கிராமங்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எந்திரப் படகுகளில் வீடு சேர்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது அந்தக் காட்சி. படகில் ஏறாமல் இவர்களுக்கு அன்றாட வாழ்க்கை இல்லை.

மக்கள் கூட்டம் நெரிசலாக இருந்த இடத்தை விட்டு அகன்றோம். ஏரியின் பிரம்மாண்டத்தைக் கரையிலிருந்தே பருகிக்கொண்டிருக்க,

'நண்பா! போட்டிங் போலாமா?'

என்ற வரிகள் கவனத்தைக் கலைத்தன.

சில நாள் தாடியுடன், லுங்கி அணிந்திருந்த ஒரு நபர், அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

'நண்பா! போட்டிங் போலாம் நண்பா! நல்லா இருக்கும்' என்றார் அவர் மீண்டும்.

நண்பன் சந்தேகமாக என்னை பார்த்தான்.

'என்னவெல்லாம் இருக்குங்க இங்க?' இது நான்.

'நண்பா! ஏரில போகும்போது பறவைகள் பாக்கலாம் நண்பா! கடல் சேர்ற இடத்துக்கு போலாம். 'சிட்டிசன்' படம் எடுத்த தீவு இங்க தான் இருக்கு நண்பா. படம் எடுக்கும்போது நாம தான் உதவியா இருந்தது.'

நண்பனும், நானும் புன்னகைத்துக் கொண்டோம். பயண நேரம், கட்டணம் இவற்றை விசாரித்துக் கொண்டு படகில் ஏறினோம்.

மெதுவாகத்தான் சென்றது படகு. சுற்றிலும் நீர் மட்டுமே என்ற பிரக்ஞை பயம் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு மாட்டு வண்டி பாதி மூழ்கிய நிலையில் எங்களைக் கடந்து சென்றது. தீவுக் கிராமங்களுக்கு இப்படித்தான் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்றார் படகோட்டி.















அவர் பெயர் பட்டறையான். தீவுப்பகுதிகளில் 12 கிராமங்கள் இருப்பதாகவும், இவருடையது 'அரவாங்குப்பம்' என்னும் கிராமம் என்றும் சொன்னார்.

தீவுப்பகுதிகள் என்று அவர் காட்டிய இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று தெரிந்தது.

ஆங்காங்கே சில பறவைகளையும், சில போட்டோ கிளிக்குகளையும் கொண்டு சிலிர்ப்புடன் நகர்ந்தது எங்கள் பயணம். அன்று பறவைகளின் இருப்பு குறைவு என்றார். பொதுவாக பிற்பகல் வேளை பறவைகள் இரை தேடிச் செல்லும் நேரம் என்பதால் எண்ணிக்கை வெகு குறைவாக இருப்பதாகச் சொன்னார். நாங்கள் பயணித்த படகின் வலப்புறத்தில் சில மீட்டர் தொலைவில் இளைப்பாறிக் கொண்டிருந்தது ஒரு சைபீரியன் நாரை.

தூரத்தில் தெரிந்த மணல் திட்டைக் காட்டி அது தான் 'சிட்டிசன்' திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் என்றும் நாம் அங்கேதான் போகிறோம் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தது அந்த மணல் வெளி. விசித்திரமான நிலப்பரப்பு அது. ஒரு முனையில் ஏரியையும், மறு முனையில் கடலையும் கொண்டிருக்கிறது. பத்திலிருந்து பதினைந்து மீட்டர் அகலம் மட்டுமே இருக்கும் ஏரிக்கும், கடலுக்குமான இடைவெளி.















தீவில், ஓரமாய் அமர்ந்திருந்தனர் ஓர் ஆணும் பெண்ணும்; காதலர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். வட இந்தியக் குடும்பமொன்று உணவு தயார் செய்யும் வேலையில் முனைந்திருந்தது. யாரோ ஒரு மனிதர் படகில் தன் இரு சக்கர வாகனத்தையும் கூட ஏற்றி வந்திருந்தார்.

மனிதர்களின் போக்கு எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. போகின்ற இடங்களையும் தனதாகக் கொள்ளும் மனப்பாங்கு. எங்கே போனாலும் நத்தைகள் போல் தன்னுடன் தன் வீட்டையும், கவலைகளையும், கடன்களையும் சுமந்து கொண்டே திரிகிறார்கள். பழைய கண்களால் பார்க்கும் போது புதிய இடம் கூட நம்மை உற்சாகப்படுத்தாது. பழைய கண்களைக் கொண்டவர்கள் அங்கே நிறைய இருந்ததாகப்பட்டது.

படகோட்டியுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டே கடலின் இது வரை பார்த்தறியாத இன்னொரு முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மீனவர் வாழ்க்கை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

மீன் பிடிப்பதே பிரதான தொழில். தீவுகளில் பெரிதாக வசதிகள் எதுவும் கிடையாது. எந்தத் தேவைக்கும் மறுகரையில் இருக்கும் பழவேற்காட்டுக்குத்தான் வர வேண்டும். சுமார் 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வார விடுமுறை நாட்களில் மட்டும் இது போல் பயணிகள் வந்து போகிறார்கள். மீன் பிடி நாட்களில் மாலை ஆறு மணிக்கு மேல் ஏரியில் வலைகள் போடப்படுகின்றன. இருட்டிய பின் பயணம் செய்தால் வலைக்குள் சிக்கி மோட்டார் பழுது படும் வாய்ப்பு உண்டு. சுனாமியின் பாதிப்பு பெரிதாக இல்லை; மொத்தம் 12 பேர் மட்டும் இறந்து போனார்கள். ஓடித் தப்பிக்க இயலாத வயோதிகர்கள். இவை எல்லாம் அவரின் பேச்சிலிருந்து நான் சேகரித்த விஷயங்கள்.

கரையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம். சென்ற வழியிலேயே இல்லாமல் வேறு வழியில் அழைத்து வந்தார். கரையை நெருங்க நெருங்க, மீனவர் குப்பங்களின் காட்சிகள் கண்ணுக்குக் கிடைத்தன. கரையோரமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். நிறைய படகுகள் ஏரிக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. துடுப்பும், படகுகள் கட்டி வைக்க உதவும் சார்பும் செய்யும் பட்டறை ஒன்று முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மீன் பிடி வலை பின்னிக் கொண்டிருந்தனர் சிலர். பெண்கள் கருவாடு உலர்த்திக் கொண்டிருந்தனர். நாங்கள் கரையை அடைந்தோம்.


















அவருக்கு நன்றி சொல்லி, பயணக் கட்டணம் கொடுத்து விடை பெற்றோம். திரும்பிய பயணம் வேகமாகவும், பேச்சுகள் அற்றதாகவும் அமைந்தது.

மனதுக்குள் பெரிய அலைகள் ஓய்ந்ததாக ஓர் உணர்வு தோன்றியதென்னவோ உண்மை!

Tuesday, April 14, 2009

வெட்கம்

இக்கவிதை 02/09/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் பிரசுரமானது


பெண்கள் விடுதிகள்
நிறைந்த தெருவைக்
கடந்து செல்லும்
ஆணின் இதழ்களில்
தானாக வந்தமரும்
குறுநகையை
மொழி பெயர்த்தால்
'வெட்கம்' என்றும் வரலாம்

அழகெனப்படுவது

வேண்டாம்,
அசிங்கமென
எறியப்பட்ட
பஞ்சடைந்த
ரோஸ் நிற தேவதை பொம்மை
புழுதியில் அழுந்தி,
அழுக்காகி,
பின்
இரயில் நிலையத்தில்
இராப்பொழுதில்
தூங்கும் சிறுவனின்
மார்போடுறங்கி
அழகாகியிருந்தது

Sunday, April 12, 2009

'இரண்டு' கவிதைகள்



அய்யா தருமம் பண்ணுங்க

சில்லறை இல்லம்மா

சட்டைப்பைக்குள்
கனம் கூ(ட்)டுகிறது
இல்லாததாய்ச் சொன்ன
இரண்டு ரூபாய்


----------------------------------


மீண்டும் ஒருமுறை
கவுன்ட்டரில் உட்கார்ந்திருக்கும்
அந்தப் பருத்த மனிதரைப்
பார்த்தேன்

அவரும் என்னைப்
பார்த்தாற்போன்றிருந்தது

எப்படிக் கூட்டியும்
இரண்டு ரூபாய்
அதிகமாகத் தோன்றியது
எனக்கு

நான்
கொடுத்தத் தொகையில்
இரண்டு ரூபாய்
குறைந்திருக்கலாம் அவருக்கு

நாள் முழுவதும்
நினைவை அரித்துத்
தவிக்கச் செய்துவிட்டது
இரண்டு ரூபாய்

எண்களில்
இரண்டின் பயன்பாடு
அதிகமானதாகத்
தோன்றிய பிம்பத்தில்,
பள்ளிக் குழந்தையின்
இரட்டைச் சடை கூட
குழம்பச் செய்தது

அவரும் கூட
அமைதியிழந்து
ஸ்தம்பித்திருக்கலாம்
என்னைப் போலவே

யாதுமற்ற வெளியில்
மிதந்து கொண்டிருக்கிறது
இரண்டு ரூபாய்,
யாரிடமும் சேராமல்...

Friday, April 10, 2009

யாதுமாகி


மேலே பார்
என்கிறாய்

கீழே பார்
என்கிறாய்

இமைகளைப்
பட படவென
அடிக்கச் சொல்கிறாய்

தலையைச்
சொறிந்து கொள்ளச்
செய்கிறாய்

'ஐயோ!
குரங்கு தான் இப்படி
நாம சொல்றதை எல்லாம்
செய்யும்'
என்று சொல்லிக்
கைதட்டிச் சிரிக்கிறாய்

என்னைக்
குரங்காக்கி ரசிக்கிறாய்
நீ!

உன்னைக்
குழந்தையாக்கி
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

Wednesday, April 08, 2009

இரு பட்டாம்பூச்சிகள்

புன்னகை கீழே விழுந்துவிடாமல்
துரத்திக்கொண்டிருந்தாள்
மேலாடை இல்லாத சிறுமி

வரையறுக்கப்பட்ட
வழிகளின்றி
ஒழுங்கற்று
அங்குமிங்குமாய்த் தாவி
அலைக்கழித்தது
சிறிய இறக்கைகளைக்கொண்ட
பட்டாம்பூச்சியொன்று

கொஞ்சமாயும்,
அதிகமாயும்
மாறி மாறித் தோன்றிய
இடைவெளியில்
ஒளிந்திருந்தன,
குழந்தைமையின் சூட்சுமமும்,
சந்தோஷப்படுத்தலின் ரகசியமும்.

Saturday, April 04, 2009

மிதந்து போகும் புன்னகை

அந்தக்
குறுகிய சாலையின்
மறுமுனையினின்றும்
புன்னகைக்கும்
அவள்,
பரிச்சயமற்றவர்களைப் பார்த்தும்
புன்னகைக்கும்
உன்னை நினைவு படுத்தினாள்.
நினைத்துக்கொண்டேன்.
உன்
புன்னகையில்
குழம்பியவர்களுக்கு
யார் யாரை
நினைவுபடுத்தினாயோ
நீ!

பின்னோட்டம்

அப்பாவிடம்
அடி வாங்காதிருந்திருந்தால்

பத்தாம் வகுப்பில்
மட்டும் நன்றாய்ப்
படித்திருந்தால்

அவளை மட்டும்
சந்திக்காதிருந்திருந்தால்

அந்த விபத்தை மட்டும்
தவிர்த்திருந்தால்

இப்படியாக
எண்ணியபடி
தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்
பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் அடி தவிர்த்து,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை வெறுத்து,
விபத்தன்று வீட்டில் முடங்கி,
பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமென்று.

Wednesday, April 01, 2009

போதிமரம்

இரவுப் பயணத்தின்
பாதியில்,
மெல்லிய விளக்கொளியில்,
ஆழ்தூக்கம் கலைந்து,
உடை தளர்த்தி,
வீறிட்டழுத குழந்தையைப் பசியாற்றி,
புரண்டு படுத்த கணவனின்
முணுமுணுப்பு ரசித்து,
ஒருக்களித்துப்
படுத்துக்கொண்ட
பெண்ணைப் பார்த்ததும்
நிம்மதியாகத் தூங்கிப்போனேன்.
சீராக ஓடத்தொடங்கியது
இரயில்.