புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, February 26, 2009

ஓவிய(ன்)ம்ஒரு மலை
ஒரு பனைமரம்
ஒரு வீடு
ஒரு நதி
ஒரு பூ கொண்ட ஒரு செடி

அழகுகளால் நிரப்பப்படுகிறது
அந்த உலகம்
எப்போதும்

நிறங்கள் எப்போதோ
நிர்ணயிக்கப்பட்டுவிட்டன

மலையா? - பழுப்பு
செடியா? - பச்சை
முகமா? - மஞ்சள்
கடலா? - நீலம்
மலரா? - மஞ்சள்
இல்லை சிவப்பு
இல்லை ஆரஞ்ச்
இல்லை
தீர்ந்து போகாத
ஏதோ ஒரு நிறம்

உலகைப் படைத்தவனின்
சிரத்தையை,
அவதானிப்பை
இங்கே பார்த்தேன்

ஆச்சரியங்கள்
வியாபித்திருக்கின்றன
எங்கும்

நீல நிறச் சூரியன்,
நான்கு கைகளோடு
என் போலொருவன்,
நட்சத்திரங்களோடு
கை கோர்த்துத் திரியும்
பறவை,.....

கோட்டோவியத்தில்
வீட்டின் ஜன்னல் வழி
எட்டிப்பார்க்கின்றன
என் பால்யப் பிராயத்து
நிலாக்கள்

இலைகளின்
விளிம்பு தாண்டி
வழிகிறது
பசுமை,
கொஞ்சம் விரல்களிலும்

உருவமற்றதொரு உருவம்
சொல்கிறது
எத்தனையோ அர்த்தங்கள்.

அழகுகளால் நிரப்பப்படுகிறது
அந்த உலகம்
எப்போதும்

வரையப்படுகிற ஓவியங்களே
மிக அழகாக இருந்தன
வரைகின்ற ஓவியங்களைப்
பார்க்குமுன்வரை

- என்றோ ஒரு நாள் ஓவியமாய் இருந்தவன்

Friday, February 13, 2009

நதி மூலம்

நன்றி : புதிதாகக் கைக்கு வந்திருக்கும் Second hand Bike, அதை வாங்கிக் கொடுத்த அப்பா

நண்பனின் முதல் ஆவணப்படத்துக்காகத் தோன்றிய எண்ணம் இது. கூடப் போய் வரலாம் என்று தொடங்கியது இப்பயணம். இரண்டு பைக்குகளில் நான்கு பேர் கிளம்பினோம். விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கியது பயணம். சூரியன் உதிப்பதற்குள் நதிமூலத்தைச் சென்றடைய வேண்டுமென்பது குறிக்கோள். சூரிய உதயத்தை அவன் அங்குதான் படமாக்குவதாகத் திட்டம்.

அதிகாலைப் பயணத்தில் பனியின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் ரசித்தபடியும், கொஞ்சம் சிரமப்பட்டபடியும் பயணப்பட்டோம். நகர எல்லை கடந்த பிறகு பனியின் அடர்த்தி இன்னும் அதிகரித்தது. அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், பூவிருந்தவல்லி, திருமழிசை, வெள்ளவேடு, நேமம் என்று பல இடங்களைக் கடந்து சேரிடமான புதுச்சத்திரம் வந்தடைந்தோம்.
இப்புதுச்சத்திரம், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் - பூவிருந்தவல்லி பிரதான சாலையில், திருவள்ளூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஒரு மணி நேரப் பயணத்துக்குப்பின் நாங்கள் வந்து சேர்ந்திருந்த இடம், கூவம் நதியின் தோற்றுவாய். அதை, ஒரு அகன்ற நதிப்பரப்பு என்றோ, சிறு ஏரி என்றோ சொல்லலாம். இந்த இடத்துக்கே கூவம் என்றும் பெயர் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார்.
அதிகம் அசுத்தப்படுத்தப்படாமல் அழகாக இருக்கிறது தோற்றுவாய். நீர் நிறைந்த நிலப்பகுதி என் கிராமத்துக் குளங்களையும், ஆறுகளையும் நினைவூட்டியது. என் கிராமத்தின் வழியோடிவரும், காவிரியின் எத்தனையோ சிறு கிளைகளில் ஒன்றான அரிச்சந்திரா நதி என் கண்களுக்குள் தளும்பியது. அவ்வாற்றின் எல்லா பரிமாணங்களையும் பார்த்து வளர்ந்தவன் நான். இரவெல்லாம் விழித்திருந்து உடைப்படைக்கக் காத்திருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு சவால் விட்டுச் செல்லும் வெள்ளக்காடாகவும், ஊர் ஊராய்ச் சுற்றித்திரியும் வாத்துக் கூட்டங்களின் கோடை வாச ஸ்தலமான மணல் வெளியாகவும் அதைப் பார்த்திருக்கிறேன்.

அதைப் போன்றதொரு மாயத்தோற்றத்தினை ஒரே நேரத்தில் கொண்டு விளங்குவதாக இருக்கிறது கூவம் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது. முடிந்த வரையில் கூவம் ஆற்றின் கரையிலேயே பயணம் செய்வதெனத் தீர்மானித்துப் புறப்பட்டோம். வெள்ளவேடு வரையில் பிரதான சாலையில் அமைந்த பயணம், பின் கிராமச் சாலைகளை நோக்கித் திரும்பியது. இந்தச்சாலையில் 20 நிமிடங்கள் பயணித்தபின் கூவம் மீண்டும் நம்மோடு சேர்ந்துகொள்கிறது.

சென்னையிலிருந்து 40 கி.மீ சுற்றுவட்டாரத்தில் இத்தனை அழகான கிராமங்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமூட்டும் உண்மையாக இருந்தது. நண்பனிடம் கேட்டேன்.

'இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் சென்னையைப் பார்த்திருப்பார்கள்?'

'இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் தாங்கள் சென்னையில் வசிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்? என்றான் நண்பன்.

ஒரு கணம் என்னைத் திகைக்க வைத்தது இக்கேள்வி. இருப்பிடம் குறித்தான பெருமிதம் எப்போதும் மனிதர்களுக்கு உண்டு. கும்மிடிப்பூண்டியில் வசித்துக்கொண்டு சென்னையில் இருப்பதாய்ச் சொன்னவர்களை நான் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைவுக்குள் வந்து போனார்கள்.

தன் அகன்ற வாயைத் திறந்து கொண்டே செல்லும் நகரம் இந்தக் கிராமங்களையும் இன்னும் சில ஆண்டுகளில் விழுங்கிச் செரித்துவிடும். அப்போதும் இவர்கள் சென்னையிலேயே வசிப்பார்கள். ஆனால் இவர்கள் வீடுகளின் கொல்லைப்புறங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நதி நகரத்துச் சாயம் பூசிக்கொண்டு விடலாம்.

கூவத்தோடு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்காங்கே நிறுத்திப் படப்பதிவைத் தொடர்ந்தான் நண்பன். கிராமச் சாலைகளிலிருந்து, ஆவடி - பூவிருந்தவல்லி பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தோம். இதுவரை கூவம் 'ஆறாகவே' இருப்பது சந்தோஷமளித்தது. மீண்டும் கிளைச்சாலையில் பிரிந்து செல்கையில் சில நிமிடங்களில் நாங்கள் பார்த்த ஓரிடம், கூவத்தில் குப்பை கொட்டப்படுகிற முதல் இடம்.

நண்பன் அதைப் படமெடுக்க, வேகமாக பைக்கில் வந்த ஒருவர் நின்று,

'இன்னாத்துக்கு குப்பையெல்லாம் படம் எட்த்துகினு கீறீங்க?' என்றார்.

'குப்பையை இல்லங்க. கூவத்த எடுக்கறோம்' என்றான் இன்னொரு நண்பன்.

'அத்த எட்த்து இன்னா பண்ணுவீங்க? ஐயோ ஐயோ' என்று பரிதாபப்பட்டு நகர்ந்தார்.

இது வரையிலும் கூவம் ஆறாகப் பயன்படுத்துப்படுகிறது. இந்தப்புள்ளியிலிருந்து அது சாக்கடையாக மாற்றப்படுகிறது. அங்கிருந்து திருவேற்காடு வரைக் கூவத்துடன் பயணித்தோம். பூவிருந்தவல்லி பிரதான சாலையை மீண்டும் தொட்ட பிறகு நதியுடன் பயணிக்கும் வாய்ப்பு இல்லாது போனது.

கடைசிக்கட்டப்பயணத்தில் பல இடங்களில், கூவம் 'ஆறு இல்லை' என்று சாட்சி கூறி நிற்கிறது வெற்று நிலப்பரப்பு. தோற்றுவாயிலிருந்து நடக்கிற ஆற்றின் பயணம் பாதியிலேயே நின்று போய் விட்டது. சென்னை மாநகருக்குள் ஓடும் சாக்கடை நதிக்கும், அந்தக்கூவத்துக்கும் இடையேயான சங்கிலித்தொடர்பு அறுபட்டிருக்கிறது. அங்கே ஊற்றெடுக்கிற, பெய்து சேகரமாகிற நீர்த்துளிகள் நகரத்து வாசனையை நுகர்வதேயில்லை. நகருக்குள் ஓடுவது, அல்லது நிற்பது, வெளியேற முடியாமல் இருக்கிற வெறும் சாக்கடை மட்டுமே!

ஆறு மணி நேரப்பயணம் முடிவுக்கு வந்திருந்தது. கூவத்தின் 65 கி.மீ நீளத்தையும் பயணத்தில் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கிறது. குறைந்தது, விட்ட இடத்திலிருந்து நதி கடலில் கலக்கும் புள்ளி வரையிலாவது பயணத்தைத் தொடர வேண்டும்.

இக்கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சுமார் 450 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு, அது வேறு ஏதோ 'நல'த்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, கொடுத்ததை மத்திய அரசும், வாங்கியதை மாநில அரசும் மறந்துபோய்விட்டன. இப்போது மீண்டும் சில நூறு கோடிகளை வழங்கியிருக்கிறது மத்திய அரசு, இதே திட்டத்திற்காக.

இன்னும் பல திட்டங்கள் தீட்டப்படலாம். நிதியும் ஒதுக்கப்படலாம். ஆச்சரியமூட்டும் விதமாக நதி சுத்தம் கூடச் செய்யப்படலாம். அனால் மீண்டும் இதே நிலை வருவதும், வராதிருப்பதும் நகரவாசிகளின் கையில்தான் இருக்கிறது.

Wednesday, February 04, 2009

கடல் மாதிரி - கடலின் மாதிரி

'டேய் இங்கேயிருந்து ட்ரெயின்ல போயிடலாம். கொரட்டூர் ஸ்டேஷன்ல இறங்கி நடக்கணும். அப்புறம் அங்கிருந்து புழல் பக்கம்தான். நான் மேப்ல பாத்துட்டேன்' என்று நண்பன் சொன்ன உடனே, ஏரிகள் பற்றிய நினைவுகள் துவங்கின.

ஏரிகள் எப்போதும் 'கடலின் மாதிரி வடிவம்' போன்று, சின்ன பிரம்மாண்டத்துடன், ஆர்ப்பரிக்கும் அலைகள் இன்றி அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றன. நதியினைப் போன்றதொரு தொடர்ச்சியான ஓட்டமும் அவற்றுக்கிருப்பதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் அதனோடு தொற்றிக்கொண்டிருக்கிறது.

நான் பார்த்த முதல் ஏரி எது என்ற கேள்வி எழுந்தது. சிறுவயதில், குடும்பத்தோடு கொடைக்கானலில் நீச்சல் தெரியாததும், தொட்டால் விறைத்துப்போவேன் என்ற குளிரின் மீதானதுமான பயங்களுடன் பார்த்த ஏரிதான் முதலாவதாக இருக்க வேண்டும். அன்று செய்த படகு சவாரி சந்தோஷமானதாக இல்லாமல் பீதி நிறைந்ததாகவே இருந்தது.

சென்னையின் சுற்று வட்டாரத்தில் எத்தனை ஏரிகள்? செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, ரெட்டேரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி, சோழாவரம் ஏரி.....இன்று அவற்றுள் இரண்டையேனும் பார்த்து வரலாம் என்று விருப்பம்.

கொரட்டூரை ரயிலில் அடைந்து அங்கிருந்து ஏரியை நோக்கிய நடை பயணத்தைத் தொடங்கினோம். ஊர்ப்புறங்களை ஞாபகப்படுத்துவதாய் இருந்தன நடந்து சென்ற பாதையும், கிராமப்புறச் சூழ்நிலையும். வரைபடத்தில் பார்த்த திசையமைப்பை மட்டும் துணையாகக்கொண்டு சில இடதுகளும், சில வலதுகளுமாகத் திருப்பங்களைக் கடந்தபின் ஏரியை அடைந்தோம்.நகரத்தின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கி, பறவைகளின் சஞ்சாரத்தோடு மௌனத்தில் உறைந்திருக்கிறது ஏரி. ஆகாயத்தாமரைகளுக்கு நடுவே நின்று மீன் பிடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். காரை பெயர்ந்திருந்த படிக்கட்டுகளில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். கரை நெடுக நின்றிருந்தன பனை மரங்கள். இறங்கு வெயில் தலையில் உக்கிரமாக இறங்கிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ பைக்கில் வந்த இளைஞர் கூட்டம் தூண்டில் செய்வதற்கான குச்சிகளைத் தேடியலைந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் அங்கே நின்று ஏரியைப் பருகிவிட்டு நகர்ந்தோம். சாணம் குழைத்து வரட்டி தட்டிக்கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி.

'இந்தப்பக்கம் போலாமா?' நான்.

'எங்க போவணும்?'

'மெயின் ரோட்டுக்கு'

'போ போ'

ஏரிக்கரையோரமாக அமைந்த பனைமரங்களடர்ந்த ஒற்றையடிப் பாதையது. நீர்நிலையருகிருக்கும் இடங்கள் பெரும்பாலும் கழிவறைகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இடமும் அப்படித்தான்.

ஏரிக்கரையில் நடந்து, பின் சில கிராமங்களைக் கடந்து, சில கி.மீ பயணித்த பிறகு அம்பத்தூர் - செங்குன்றம் பிரதான சாலை வந்தடைந்தோம்.

பானி பூரி விற்றுக்கொண்டிருந்த ஒருவனிடம் புழல் ஏரிக்கு வழி கேட்க, தெரியாதென்பதைப்போல் ஏதோ சொன்னான். இளநீர் விற்ற பெண் வழி காட்டினாள்.

பிரதான சாலையிலிருந்து விலகி ஓடியிருக்கிற ஒரு சிறு தெரு அது. அதன் வழியே சென்றால் வருகிறது ஏரியின் கரைப்பகுதி. வரைபடத்தில் பார்த்த போதே தெரிந்திருந்தது ஏரியின் பிரம்மாண்டம். கொரட்டூர் ஏரியைப்போல் ஐந்தாறு மடங்கு பெரியதாக இருந்தது.
நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்த நண்பன், சலனப்படமும் எடுக்கத் தொடங்கினான். ஏன் என்ற போது, ' இந்த பிரம்மாண்டத்தை வேறு எப்படி விளங்கச் செய்ய முடியும்?' என்றான். உண்மைதான். புகைப்படத்திற்குள் அடக்கி விட முடியாத பரந்துபட்ட தன்மை கொண்டிருக்கிறது அது.

சூரியன் விழத்தொடங்கியிருந்தது. தண்ணீரும் செந்நிறம் கொண்டது. இங்கேயும் சில பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருந்தனர். நகரின் ஏதோ ஒரு பரபரப்பான இடத்திலிருந்து காரில் வந்திருந்த ஒரு தம்பதியர் ஆச்சரியம் குறையாத கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அருகாமையில் வசிக்கும் மக்கள் ஏரியின் மீது பார்வையைக் கூடச் செலுத்தாமல் ஏதோ யோசனையோடு நடை போட்ட வண்ணமிருந்தனர்.


சூரியன் முழுவதுமாய் விழும் வரை காத்திருந்து திரும்பினோம். வீடு நோக்கிய பயணத்தில் கொஞ்சம் தூக்கத்தோடு ஏரியின் நினைவுகளும் என்னைச் சூழ்ந்திருந்தன.

பொதுவாக ஏரிகள், நதிகள் இல்லாத பகுதிகளில் மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்டன. நான் பார்த்து வந்த இந்த ஏரிகளை, எப்போது, யார், என்ன காரணத்துக்காக வெட்டினார்கள் என்ற குறிப்பு எங்கும் இல்லை. இணையத்திலும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த ஏரிகளை முடிந்த அளவுக்கு சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள். சென்னையின் குடி நீர்த் தேவையை இவையே பூர்த்தி செய்கின்றன.

'இந்த ஏரிங்கள்ல போட் சர்வீஸ்லாம் வச்சு, இன்னும் கொஞ்சம் சுத்தமா வச்சுகிட்டா நல்ல டூரிஸ்ட் அட்ராக்ஷனா இருக்கும்ல?' என்றான் பயண அனுபவம் கேட்ட ஒரு நண்பன்.

வேண்டாம். மனிதர்கள் சேராத வரை எந்த இடமும் அழகாகவே இருக்கிறது. அப்படியே இருக்கட்டும்.

பின்குறிப்பு: ஓர் ஆற்றின் தோற்றுவாய் தேடிச்சென்ற பயண அனுபவத்தைப் பற்றிய பதிவோடு மீண்டும் வருகிறேன்.