புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, December 31, 2008

ஓடலும் ஓடல் நிமித்தமும்உயிர்மை.காம் நடத்தும் 'உயிரோசை' இணைய வார இதழில் இக்கவிதை வெளியானது.


வெளியூர்ப் பேருந்து நிலையத்தில்
தனியாய் வேடிக்கை
பார்த்துத் திரிந்ததற்காய்
அப்பா பலர்முன்
அறைந்தபோது
முடிவு செய்து கொண்டாள்
இப்போது
ஒன்பதாவது படிக்கும்
பக்கத்து வீட்டு ஊர்மிளா,
பெரியவள் ஆனதும்
எவனையாவது
இழுத்துக்கொண்டு
வீட்டை விட்டு ஓடி விடுவதென்று.

Tuesday, December 23, 2008

விழித்திருப்பவனின் இரவுஉயிர்மை.காம் நடத்தும் 'உயிரோசை' எனும் இணைய வார இதழில் இக்கவிதை வெளியானது.

இக்கவிதை உயிர்மை இலக்கிய இதழின் செப்டம்பர் 2009 இதழில் பிரசுரமானது


விழித்திருப்பவனின் இரவு
நீண்டு கொண்டே போகிறது
சூரியனின் முதல் கீற்றில்
விரியும் சமுத்திரம் போல.

தூக்கத்தில்
தொலைந்து போன
இரவுகள் போல
இருப்பதில்லை அது.

பிறந்த குழந்தையின்
பச்சை வாசத்தோடு,
குழந்தைக் கிறுக்கலின்
வர்ணங்கள் போல் அழகாக,
அபஸ்வரங்கள் களவாடப்பட்ட
இசையாக
இரம்மியமாக இருக்கிறது.

இரவினை
ஒரு குடிகாரனின் வேகத்தில்
ஒரே மடக்கில்
வாரிக் குடித்து விடுகிறது
தூக்கம்!

மழைத்துளி பருகும்
சாதகப் பறவையாய்த்
துளித் துளியாகப்
பருகச் செய்கிறது
விழிப்பு!

ஓசைகளற்ற மௌனம்
மனிதர்களற்ற நடைபாதைகள்
தூரத்து வானொலி சப்தம்
கிறீச்சிட்டபடி ஓடும் நெடுஞ்சாலை வாகனங்கள்
காதுக்குள் சப்தமிடும் பின்னிரவு குளிர்
எப்போதும் பூட்டப்படும்
ஏதோ ஒரு கடை
எப்போதும் திறக்கப்படும்
ஏதோ ஒரு கடை
மறுநாள் பிழைப்புக்கு
ஆயத்தமாகும் ஜனத்திரள்,
இரவு விழித்திருப்புக்கான
சாட்சிகள்.

விடிந்த பின்புதான்
புலனாகிறது
கண்களினின்றும் அவை
தொலைந்து போயிருக்கின்றன.

தெருக்களில்
தேடியலைந்த போது கண்டேன்
சுவரொட்டி ஒட்டும்
ஒருவனின் கண்களில்
ஒளிந்து கொண்டிருந்தன
இரண்டும்

பரிச்சயப்பட்டவர்கள் போல்
புன்னகைத்து நகர்ந்தோம்
இருவரும்

தொலைந்தே போயிருந்தன
இரவும்
இரவு குடிக்கும் தூக்கமும்.

Thursday, December 18, 2008

'பூ'க்கள் இன்னும் நிறைய பூக்கட்டும்!நீங்கள் எவரையேனும் காரணம் இல்லாமல் வெறித்தனமாக நேசித்திருக்கிறீர்களா? அல்லது எவராலேயேனும் நேசிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்றால் உங்கள் உணர்வுகளோடு எளிதாகக் கலந்து விடக் கூடியவள் இந்த மாரி.

'தங்கராசுக்குப் பொண்டாட்டியாகப் போறேன் ஸார்' என்று பள்ளிப்பருவத்தில் தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணும் மாரி, மாமன் மகனுக்காகவே வாழ்கிற மாரி, அவனுக்காகவே தன் காதலையும் தொலைக்கிற மாரி, அவனின் சந்தோஷத்துக்காகத் தன் கனவுகளை அழித்துக் கொள்கிற மாரி, அவன் சந்தோஷமாக இல்லை என்கிற நிலையை எதிர்கொள்கிற பொது என்ன ஆகிறாள்? என்பதை மிக யதார்த்தமாகப் (இந்த வார்த்தை எல்லாம் மிகச் சாதாரணம். எத்தனை வலிமையான வார்த்தைகள் இங்கே போடமுடியுமோ போட்டுக்கொள்ளலாம்) படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சசி.

இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் பாத்திரப்படைப்பும், அதில் நடித்திருக்கும் நடிகர்களும். குறிப்பாக மாரியாக பார்வதி, அவள் அண்ணன் - வீர சமர் (இவரே இப்படத்தின் கலை இயக்குனரும் கூட. நன்றி - THE HINDU), மாரியின் தாய், பேனாக்காரர், மாரியின் தோழி, மாரியின் கணவன், இப்படிப்பலர்.

தம் முகங்களில் அந்தக் கந்தகப் பூமியின் வெப்பத்தைச் சுமந்தபடி வலம் வருகிறார்கள் இவர்கள். இச்சூழ்நிலைக்கு சற்றும் ஒட்டாத நகரத்துக் கல்லூரி மாணவனாக வருகிறார் ஸ்ரீகாந்த். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

காதல், நேசம், நட்பு, தன்மானம், அவமானம், விரக்தி, தியாகம் என்று மனித உணர்வுகளை மையமாகக் கொண்டே சுழ்ல்கிறது கதை. அது எங்கும் திகட்டி விடாமல் பார்த்துக் கொண்டது இயக்குனரின் திறமை. ஒவ்வொரு பாத்திரத்தின் நிலைப்பாட்டுக்குமான நியாயங்களைக் காட்சிகளை நகர்த்தியபடியே பதியவைத்திருகிறார்.

'வெயிலோடு போய்' என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன். ஒரு சிறுகதையை முழு நீளத் திரைப்படமாக மாற்றுவதில் இருக்கும் சவால்களை மிகவும் இலாவகமாகச் சமாளித்திருக்கிறார் சசி. குறிப்பாகத் திரைக்கதை தொய்வில்லாமல் செல்வதைச் சொல்லலாம்.
வசனங்கள் சில இடங்களில் 'அட' போட வைக்கின்றன. தங்கராசுக்குத் திருமணமாகிற போது மாரி தன் தோழியுடன் பேசும் காட்சியும், பேனாக்காரர் மாரியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியும் நல்ல உதாரணங்கள். 'நான் சின்னப் பனைமரம்; நீ பெரிய பனைமரம்', தங்கராசுவின் பெயரை அழைத்தால் மாரி திரும்பிப்பார்ப்பது போன்ற Cliche காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

கதைக்கு ஒட்டாமல் நகைச்சுவை காட்சிகளை வைத்தாலும், அந்த நகைச்சுவை நடிகருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம். யார் அந்த நடிகர்? மிகச் சாதாரணமாக எங்கும் பார்க்கும் ஒரு இயல்பான முகம், குரல் அவருக்கு.

ஒளிப்பதிவு அருமை! துல்லியமான, கண்களை உறுத்தாத காட்சிகளுக்கே ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம். சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்கள். படமாக்கப்பட்ட இடங்கள் மனத்திலே விரிந்த வண்ணம் இருக்கின்றன. கனவுக்காட்சிகளுடன் இயல்பாக நடக்கும் காட்சிகளின் Overlapping நன்றாக அமைந்திருக்கிறது.

S.S.குமரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்திருக்கிறார். Trailerல் (Trailerகு தமிழில் என்ன? முன்னோட்டமா?) இவரின் பாடல்களும், பார்வதியின் முக பாவனைகளுமே என்னை இப்படத்தைப் பார்க்கத்தூண்டின. பின்னணி இசையும் நன்று; கதையோட்டத்தை எந்த இடத்திலும் காயப்படுத்தவில்லை. நா.முத்துக்குமார், ஞானகரவேல் இவர்களின் வரிகளில் மனித உணர்வுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

என்னை மிகவும் கவர்ந்துவிட்ட பாடல் 'ஆவாரம்பூ' என்ற பல்லவியோடு அமைந்தது. சின்மயி பாடிய பாடல். இதுவரை A.R.ரஹ்மானுக்கு மட்டுமே பாடி வந்த சின்மயி முதன்முதலாக வேறு இசை அமைப்பாளருக்குப் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்(இப்பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தால் முதலில் மகிழ்பவன் நானாகத் தான் இருப்பேன்).

பார்த்து முடித்த பிறகு ஒரு புதினம் படித்து முடித்த உணர்வைத்தந்தது என்னவோ உண்மை! இரண்டாவது நாளே பார்த்துவிட்ட திரைப்படம் இன்னும் மனத்தில் நிழாலாடிக் கொண்டிருப்பதே இப்படத்தின் வெற்றி! பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தில் பணியாற்றிய எல்லோரும்.

பின்குறிப்பு : சென்னையில் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

Thursday, December 11, 2008

மரம் போல்வர்?கிராமத்தில் வாழ்ந்த நாட்களில் மரங்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. மனித உணர்வுகளுக்கு ஏற்றவாறு மரங்கள் நிலை மாறுவதாக அறிவியல் சொல்கிறது. என் கண்ணீர்ப் பொழுதுகளில் வாடிப்போன, பட்டுப்போன மரங்களைப் பார்த்தபொழுது இதை உண்மை என்றே நான் ஏற்றுக்கொண்டேன். சந்தோஷமான் நேரங்களில் மரங்கள் மனதிற்குள் வருவதில்லை; எங்கோ ஒரு மூலையில் நின்று கொண்டு இதமாக சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றன.

நினைவுப் பாதைகளில் திரும்பி நடக்கின்றபோது அங்கங்கே இளைப்பாற பல மரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன, உயரமாக, குட்டையாக, தரையை மூடிய படி, நிழலினூடே சிறு கற்றையாக ஒளியை அனுப்பியபடி, கரையான்களால் அரிக்கப்பட்டு, கிளைகள் வெட்டுப்பட்டு, அங்கங்கே காதலிகள் பெயர்கள் செதுக்கப்பட்டு, இன்னும் நிறைய.

இரா வேளைகளில் தனிமையில் நடைபோடும்போது, அந்திமக்காலங்களில் ஏதேதோ கதைகள் சொல்லும் வயோதிகர் போல் என்னவோ பேசிக்கொண்டு உடன் வருகின்றன மரங்கள்; பகல் பொழுதுகளில் தன் நிழல் விழுந்த தடங்களை இரவுகளில் தன் அகன்ற கைகள் கொண்டு துழாவித் தேடுகின்றன.

நகரங்களில் வாழ்க்கையைத் தேடத் தொடங்கிய பிறகு மரங்களோடான இணக்கம் கொஞ்சம் குறைந்து தான் போனது. நல்ல வெயில் நேரங்களில் எப்போதாவது வீசும் தென்றல், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைக்கும் நிழல் இவை மட்டுமே மரங்களின் இருப்பை நினைவுபடுத்துகின்றன.

அன்று வீட்டை விட்டு அலுவலகத்துக்குப் புறப்பட்ட போது தான் தோன்றியது, எத்தனை மரங்கள் நிறைந்த ஒரு தெருவில் நான் வசித்துக் கொண்டிருக்கிறேன் என்று. இதர சென்னை வாசிகளுக்குக் கிடைக்காத நன்மை எனக்குக் கிடைத்திருப்பதாகத் தோன்றியது. சரி! ஒரு சின்ன கணக்கெடுப்பு செய்து விடலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன். சூளைமேடு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், மாம்பலம், தியாகராயநகர், பாண்டிபஜார் என்று 7 கிமீ நடந்து அலுவலகத்தை அடைந்த போது என் எண்ணம் முற்றிலுமாக மாறிப்போனது. சென்னையில் மரங்கள் இல்லை என்று யார் சொன்னது?

எத்தனை மரங்கள்! எத்தனை வகைகள்! உயரே பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தேன். தென்னை, பப்பாளி, வாழை, புளியமரம், இன்னும் எத்தனையோ! பெயர் தெரியாத பல மரங்களும் இருக்கின்றன.

பெரும்பாலான மரங்கள் மதில் சுவர்களுக்குள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. வேர்கள் சுவர்களைப் பொருட்படுத்துவதில்லை என்று அவர்கள் உணரவில்லை. பொது இடங்களில் இருந்த மரங்களும் பெரும்பாலும் நடை மேடைகளால் சூழப்பட்டிருக்கின்றன.

நான் பார்த்த மரங்கள் எதுவும் கடந்த 15 - 20 வருடங்களில் நடப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. நம் மனிதர்களின் மன நிலை எந்த அளவுக்கு மாறிப்போய் விட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்பட்டது. நம் மூதாதையர் நிழலில்தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய சோகம்! குறைந்தது அவர்களுக்கு நன்றியையாவது சொல்லி வைப்போம். இனி வரும் தலைமுறை இந்த நன்றியை நமக்குச் சொல்லாது என்பது மட்டும் நிதர்சனம்.

பின்குறிப்பு : நான் பார்த்த மரங்களின் எண்ணிக்கை சில நூறுகள் இருக்கலாம். நேற்று என் பாதையில் வெட்டப்பட்ட ஒரு முருங்கை மரத்தை மட்டும் கணக்கில் இருந்து எடுத்துவிடுங்கள்.

Saturday, November 08, 2008

எழுதிக் கொண்டவை

பாசி படர்ந்த பாதைகள்

சுத்தமாகவே இருக்கின்றன

யாரும் நடக்காமல்

-----------------------------------------

கலவியில் சிறு இடைவெளி

அமைதியைக் கிழித்தபடி

அலறுகிறது ஆந்தை