புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, December 23, 2008

விழித்திருப்பவனின் இரவுஉயிர்மை.காம் நடத்தும் 'உயிரோசை' எனும் இணைய வார இதழில் இக்கவிதை வெளியானது.

இக்கவிதை உயிர்மை இலக்கிய இதழின் செப்டம்பர் 2009 இதழில் பிரசுரமானது


விழித்திருப்பவனின் இரவு
நீண்டு கொண்டே போகிறது
சூரியனின் முதல் கீற்றில்
விரியும் சமுத்திரம் போல.

தூக்கத்தில்
தொலைந்து போன
இரவுகள் போல
இருப்பதில்லை அது.

பிறந்த குழந்தையின்
பச்சை வாசத்தோடு,
குழந்தைக் கிறுக்கலின்
வர்ணங்கள் போல் அழகாக,
அபஸ்வரங்கள் களவாடப்பட்ட
இசையாக
இரம்மியமாக இருக்கிறது.

இரவினை
ஒரு குடிகாரனின் வேகத்தில்
ஒரே மடக்கில்
வாரிக் குடித்து விடுகிறது
தூக்கம்!

மழைத்துளி பருகும்
சாதகப் பறவையாய்த்
துளித் துளியாகப்
பருகச் செய்கிறது
விழிப்பு!

ஓசைகளற்ற மௌனம்
மனிதர்களற்ற நடைபாதைகள்
தூரத்து வானொலி சப்தம்
கிறீச்சிட்டபடி ஓடும் நெடுஞ்சாலை வாகனங்கள்
காதுக்குள் சப்தமிடும் பின்னிரவு குளிர்
எப்போதும் பூட்டப்படும்
ஏதோ ஒரு கடை
எப்போதும் திறக்கப்படும்
ஏதோ ஒரு கடை
மறுநாள் பிழைப்புக்கு
ஆயத்தமாகும் ஜனத்திரள்,
இரவு விழித்திருப்புக்கான
சாட்சிகள்.

விடிந்த பின்புதான்
புலனாகிறது
கண்களினின்றும் அவை
தொலைந்து போயிருக்கின்றன.

தெருக்களில்
தேடியலைந்த போது கண்டேன்
சுவரொட்டி ஒட்டும்
ஒருவனின் கண்களில்
ஒளிந்து கொண்டிருந்தன
இரண்டும்

பரிச்சயப்பட்டவர்கள் போல்
புன்னகைத்து நகர்ந்தோம்
இருவரும்

தொலைந்தே போயிருந்தன
இரவும்
இரவு குடிக்கும் தூக்கமும்.

7 comments:

Shakthiprabha said...

எழுத்து வன்மை வியக்கவைக்கிறது.

பல முறை இரவின் ருசியை துளித்துளியாய் பருகி மகிந்த,

ஷக்திப்ரபா

சேரல் said...

நன்றி ஷக்திப்ரபா.


-ப்ரியமுடன்
சேரல்

Balambal said...

உங்கள் வர்ணிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை. பனியை பற்றியும் வர்நிதிருக்கலாம்!!!

சேரல் said...

நன்றி பாலா!

- ப்ரியமுடன்
சேரல்

Subi said...

கல்லூரிக்குப் பிறகு சமீப காலமா உங்களுக்கு இரவின் பரிட்சயம் கிடைச்சிருக்கு.. இதற்காக உங்கள் கும்பனிக்கு நன்றி சொல்லுங்க சேரல்! :D

ராஜா சந்திரசேகர் said...

கொஞ்சம் உரைநடை நெடி அடிக்கிறது

பா.ராஜாராம் said...

விழித்திருக்கும் இரவின் மென் விசும்பலை,சிலாகிப்பை
அவ்வளவு அழகாய் பிதுக்கி இருக்கிறீர்கள் சேரல்.