புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 18, 2008

'பூ'க்கள் இன்னும் நிறைய பூக்கட்டும்!நீங்கள் எவரையேனும் காரணம் இல்லாமல் வெறித்தனமாக நேசித்திருக்கிறீர்களா? அல்லது எவராலேயேனும் நேசிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்றால் உங்கள் உணர்வுகளோடு எளிதாகக் கலந்து விடக் கூடியவள் இந்த மாரி.

'தங்கராசுக்குப் பொண்டாட்டியாகப் போறேன் ஸார்' என்று பள்ளிப்பருவத்தில் தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிக் கனவு காணும் மாரி, மாமன் மகனுக்காகவே வாழ்கிற மாரி, அவனுக்காகவே தன் காதலையும் தொலைக்கிற மாரி, அவனின் சந்தோஷத்துக்காகத் தன் கனவுகளை அழித்துக் கொள்கிற மாரி, அவன் சந்தோஷமாக இல்லை என்கிற நிலையை எதிர்கொள்கிற பொது என்ன ஆகிறாள்? என்பதை மிக யதார்த்தமாகப் (இந்த வார்த்தை எல்லாம் மிகச் சாதாரணம். எத்தனை வலிமையான வார்த்தைகள் இங்கே போடமுடியுமோ போட்டுக்கொள்ளலாம்) படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சசி.

இப்படத்தின் மிக முக்கியமான அம்சம் பாத்திரப்படைப்பும், அதில் நடித்திருக்கும் நடிகர்களும். குறிப்பாக மாரியாக பார்வதி, அவள் அண்ணன் - வீர சமர் (இவரே இப்படத்தின் கலை இயக்குனரும் கூட. நன்றி - THE HINDU), மாரியின் தாய், பேனாக்காரர், மாரியின் தோழி, மாரியின் கணவன், இப்படிப்பலர்.

தம் முகங்களில் அந்தக் கந்தகப் பூமியின் வெப்பத்தைச் சுமந்தபடி வலம் வருகிறார்கள் இவர்கள். இச்சூழ்நிலைக்கு சற்றும் ஒட்டாத நகரத்துக் கல்லூரி மாணவனாக வருகிறார் ஸ்ரீகாந்த். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

காதல், நேசம், நட்பு, தன்மானம், அவமானம், விரக்தி, தியாகம் என்று மனித உணர்வுகளை மையமாகக் கொண்டே சுழ்ல்கிறது கதை. அது எங்கும் திகட்டி விடாமல் பார்த்துக் கொண்டது இயக்குனரின் திறமை. ஒவ்வொரு பாத்திரத்தின் நிலைப்பாட்டுக்குமான நியாயங்களைக் காட்சிகளை நகர்த்தியபடியே பதியவைத்திருகிறார்.

'வெயிலோடு போய்' என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன். ஒரு சிறுகதையை முழு நீளத் திரைப்படமாக மாற்றுவதில் இருக்கும் சவால்களை மிகவும் இலாவகமாகச் சமாளித்திருக்கிறார் சசி. குறிப்பாகத் திரைக்கதை தொய்வில்லாமல் செல்வதைச் சொல்லலாம்.
வசனங்கள் சில இடங்களில் 'அட' போட வைக்கின்றன. தங்கராசுக்குத் திருமணமாகிற போது மாரி தன் தோழியுடன் பேசும் காட்சியும், பேனாக்காரர் மாரியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியும் நல்ல உதாரணங்கள். 'நான் சின்னப் பனைமரம்; நீ பெரிய பனைமரம்', தங்கராசுவின் பெயரை அழைத்தால் மாரி திரும்பிப்பார்ப்பது போன்ற Cliche காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

கதைக்கு ஒட்டாமல் நகைச்சுவை காட்சிகளை வைத்தாலும், அந்த நகைச்சுவை நடிகருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம். யார் அந்த நடிகர்? மிகச் சாதாரணமாக எங்கும் பார்க்கும் ஒரு இயல்பான முகம், குரல் அவருக்கு.

ஒளிப்பதிவு அருமை! துல்லியமான, கண்களை உறுத்தாத காட்சிகளுக்கே ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம். சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்கள். படமாக்கப்பட்ட இடங்கள் மனத்திலே விரிந்த வண்ணம் இருக்கின்றன. கனவுக்காட்சிகளுடன் இயல்பாக நடக்கும் காட்சிகளின் Overlapping நன்றாக அமைந்திருக்கிறது.

S.S.குமரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்திருக்கிறார். Trailerல் (Trailerகு தமிழில் என்ன? முன்னோட்டமா?) இவரின் பாடல்களும், பார்வதியின் முக பாவனைகளுமே என்னை இப்படத்தைப் பார்க்கத்தூண்டின. பின்னணி இசையும் நன்று; கதையோட்டத்தை எந்த இடத்திலும் காயப்படுத்தவில்லை. நா.முத்துக்குமார், ஞானகரவேல் இவர்களின் வரிகளில் மனித உணர்வுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

என்னை மிகவும் கவர்ந்துவிட்ட பாடல் 'ஆவாரம்பூ' என்ற பல்லவியோடு அமைந்தது. சின்மயி பாடிய பாடல். இதுவரை A.R.ரஹ்மானுக்கு மட்டுமே பாடி வந்த சின்மயி முதன்முதலாக வேறு இசை அமைப்பாளருக்குப் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்(இப்பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தால் முதலில் மகிழ்பவன் நானாகத் தான் இருப்பேன்).

பார்த்து முடித்த பிறகு ஒரு புதினம் படித்து முடித்த உணர்வைத்தந்தது என்னவோ உண்மை! இரண்டாவது நாளே பார்த்துவிட்ட திரைப்படம் இன்னும் மனத்தில் நிழாலாடிக் கொண்டிருப்பதே இப்படத்தின் வெற்றி! பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தில் பணியாற்றிய எல்லோரும்.

பின்குறிப்பு : சென்னையில் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிற சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

4 comments:

Bee'morgan said...

மிகவும் இயல்பான விமர்சனம்.. நானும் பாக்கணும்னு காத்துகிட்டிருக்கேன்.. தமிழ்நாட்டுக்கு வரும் போதுதான் பாக்கமுடியும்..
ஒரு தகவல்,
" சூ சூ மாரி " பாடல் குமரன் எழுதியது என்று கேள்விப்பட்டேன்.. சரியா எனத் தெரியவில்லை.. இணையத்தில் தேடியபோது முத்துக்குமார் என்றே வருகிறது.

சேரல் said...

தம்பி பாலா,
நானும் இன்னும் ஒருமுறையாவது இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன். முடிந்தால் சேர்ந்தே பார்த்துவிடுவோம்.

-ப்ரியமுடன்
சேரல்

Subi said...

எனது இடப்பக்கம் அமர்ந்திருந்த மாக்களின் சேஷ்டைகள் தவிர, இந்தப் படம் எல்லா விதங்களிலும் எனக்குப் பிடித்திருந்தது... இப்படத்தைக் காண விரும்புபவர்களுக்குக் கண்டிப்பாய் நாவல்களின் பரிட்சயம் இருக்க வேண்டும்.. இப்பரிட்சயம் சில காட்சிகள் இயல்பு மீறினாலும் ஒரு நாவலின் நடையில் அழகாய் அமைக்கப் பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள உதவும்..

பி. கு: என் வலப்பக்கம் அமர்ந்திருந்தவர் சேரல் :)

ANAND said...

நானும் கண்டிப்பா பாக்கணும்... அப்புறம், எனது அறிவில் trailer is பின்னோட்டம், preview is முன்னோட்டம்.