புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, September 18, 2009

குந்துதல்

உடல் சதையை
வியர்வையில் கரைப்பவனுக்கு
ஓடுகளம்

வாகன இரைச்சலுக்கிடையிலும்
நெற்றிப்பொட்டில்
தீபமேற்றும் வித்தைக்காரனுக்கு
தியானபீடம்

முதல் போனியின்
சாத்தியம் தேடித் திரியும்
தேநீர்க்காரனுக்குப்
பிழைக்குமிடம்

வெளிச்சத்தின்
இருப்பையும்,
இருட்டையும்
ரசிக்கும் யாத்ரீகனுக்குச்
சொர்க்க பூமி

அமாவாசை
அதிகாலை
பித்ருக்களுக்குப்
பிண்டம் வைப்பவனுக்குப்
புனிதத்தலம்

என்றெலாமானது,
அவசரமாகவெழும்
சூரியனைச் சபித்தபடி
உள்ளாடை நீக்கி
உட்காருபவனுக்குக்
கழிப்பிடமுமாகிறது

சரிதான்

குந்தக்கூட இடமில்லாதவனுக்குக்
கடற்கரையாவது?
கருவறையாவது?

Wednesday, September 16, 2009

ஆனந்த விகடன் - 3

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

16/09/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் என் கவிதையொன்று பிரசுரமாகி இருக்கிறது.

பின்னோட்டம்

-ப்ரியமுடன்
சேரல்

Thursday, September 10, 2009

மஞ்சள் நிறத்தொரு கண்

காத்திருக்கவோ,
ஊடே புகுந்து செல்லவோ,
விதிகள் மீறவோ
யாருமின்றி
மஞ்சள் கண் பொருத்தி
இரவெல்லாம் விழித்துக்
கிடக்கிறது
ட்ராபிக் சிக்னல்
ஒரு
கைக்கிளைக்காரியென

Monday, September 07, 2009

ஒற்றைப்புள்ளியில் நான்

சக நிகழ்வுகளின் பின்னலாகவே அமைந்திருக்கிறது வாழ்க்கை. எதையெல்லாம் சக நிகழ்வுகள் என்று கொள்ளமுடியும்? இருவேறு திசைகளில் செல்கிற பயணங்கள் ஒரு புள்ளியில் இளைப்பாறுமானால், தொடர்பற்ற இரு போக்குகளில் திடீரென மாற்றமேற்பட்டு அவை ஒருமிக்குமானால், எதைப் பற்றிய சிந்தனையிலோ செயலிலோ ஆழ்ந்திருக்கையில் தொடர்பற்ற ஆனால் ஏதோ ஒரு வகையில் தொடர்புறும் சாத்தியமுள்ள மற்றொன்றின் குறுக்கீடு ஏற்படுமானால், அவற்றைச் சக நிகழ்வுகள் என்று சொல்லலாமா? ஆம் எனில், சக நிகழ்வுகளின் விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறது.

1. புத்தகம் வலைப்பூவில் தமிழகத்தடங்கள் என்ற நூலினைப் பற்றிய பதிவை எழுதியிருந்தோம். கீழ்வெண்மணி எனும் ஊரில் நடந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான கொடுமையைப் பற்றி அப்புத்தக ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு அருகிலேயே இக்கிராமம் இருப்பதால், அது தொடர்பான என் அனுபவங்களையும் இணைத்துப் பதிவில் எழுதி இருந்தேன். பதிவிட்ட மறுநாள் அதிகாலையில், நண்பனொருவனைப் பார்க்கப் போக, யதேச்சையாக இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல் கிடைத்தது. இந்த நாவல் கீழவெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. பாலியல் சார்ந்து இப்பிரச்சினையை அணுகி இருப்பார் இ.பா. என்று அறிந்திருக்கிறேன்.

2. நேற்று உரையாடல் அமைப்பின் சார்பில், கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் நடந்த உலகத் திரைப்படக் காட்சிக்கு சென்றிருந்தேன். திரைப்படத் திரையிடலுக்கு முன்பாக, எழுத்தாளர் மௌனி பற்றிய ஆவணப்படம் திரையிட ஏற்பாடாகி இருப்பதாக திரு.சிவராமன் அறிவித்திருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் ரவி சுப்ரமணியன், சாகித்திய அகாடமி தயாரிப்பில் இதை இயக்கி இருக்கிறார். மௌனியிலிருந்து திடீரென்று இ.பா.வுக்குத் தாவிய நிகழ்வு என்னுள் இன்னொரு தாக்கத்தைக் கொடுத்தது. இந்நிகழ்வுக்குப் புறப்படும் வரை நான் குருதிப்புனல் படித்துக்கொண்டிருந்தேன் என்பது இங்கு குறிக்கத்தகுந்தது.

3. நண்பன் சேகர் 'பெயரற்ற யாத்ரீகன்' ஜென் கவிதைத் தொகுப்பு குறித்த தன் பார்வையைப் புத்தகம் வலைப்பூவுக்காக எழுதி அனுப்பி இருந்தான். அவன் அனுப்பிய வேளையில் நான் சிலாகித்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அதே 'பெயரற்ற யாத்ரீகன்'. யுவன் சந்திரசேகர் மொழி பெயர்த்த ஜென் கவிதைகளின் தொகுப்பு இது.

இம்மூன்று நிகழ்வுகளுமே கடந்த நான்கு நாட்களுக்குள் நடந்தேறியவை. இதைத்தான் ஆத்திகர்கள் கடவுள் என்கிறார்கள். நாத்திகர்கள் தற்செயல் என்கிறார்கள். நான் தொடர்புள்ள, அல்லது தொடர்பற்ற சக நிகழ்வுகள் என்கிறேன். இந்நிகழ்வுகளுக்கான காரணம் எதுவென்ற தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சில ஆச்சரியங்கள் வந்து என்னை மூழ்கடித்துவிடுகின்றன. எது எப்படியோ? இந்த நிகழ்வுகளுக்குள் ஓர் அழகு இருக்கிறது. இந்த வலைப்பின்னலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் வரையிலும் வாழ்க்கையும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

Friday, September 04, 2009

பார்த்தன்களுக்குப் புதிய கீதை

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது

ஆம்
பார்த்தோம்

எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது

ஆம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்

எது நடக்கவிருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்

ஆம்
அதையும் பார்த்துத் தொலைப்போம்,
பிழைத்திருப்பின்

நடப்பதெதையும்
பார்த்துக்கிடப்பதன்றி
வேறென்ன கிழித்துவிட
முடிகிறது நம்மால்?

படிந்த வரிகள் - 10

கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்.
பச்சையைக் குறிக்கலாம்.
மூக்கைக் குறிக்கலாம்.
பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்
சிறையைக் குறிக்கலாம்.
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்.

-கவிஞர் யுவன் (சந்திரசேகர்)

'முதல் 74 கவிதைகள்' தொகுப்பிலிருந்து

Tuesday, September 01, 2009

'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இதழ்களில் என் கவிதைகள்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

என் படைப்புகள் 'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இலக்கிய இதழ்களின் செப்டம்பர் 2009 மாதப் பதிப்பில் பிரசுரமாகி இருக்கின்றன.

உயிர்மையில் நான் எழுதிய 'விழித்திருப்பவனின் இரவு' கவிதை வெளியாகி இருக்கிறது. நீளம் கருதியோ, அல்லது வேறென்ன காரணத்தாலோ கவிதையின் பாதியை மட்டுமே பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

வார்த்தை இதழில் கீழுள்ள கவிதை வெளியாகியிருக்கிறது.


காற்றைச் சுமந்து அலைபவர்கள்

காற்றின் அடர்த்தி குறைந்த
வீதிகளில்
இறுக்கமான முகத்துடனே
அலைகிறார்கள்
பலூன் காரர்கள்

குழந்தைகள் சத்தம்
கேட்காத வீடுகளை
அறவே வெறுக்கிறார்கள்

குரங்காட்டிகள் வழிகாட்ட
திருவிழாக்கள்
தேடி நடந்தே அலைகிறார்கள்

அடிவயிற்றில் இருந்து
இழுத்துச் செலுத்திய
காற்றடைக்கப்பட்ட பலூன்கள்
எப்போதும் அவர்கள்
கைகளைவிட்டுப் பறந்தோடத்
தயாராய் இருக்கின்றன

பெண்ணின் மதர்த்த தனங்களையும்,
வீட்டுக் கூரைகளில் நெளியும் சுரையையும்
சீட்டுக்கட்டு காதல் சின்னங்களையும்
நினைவுறுத்துவதாய்
இருக்கின்றன அவை

பலூன் காரர்களின்
ஞாபகத்தில் இருப்பதே இல்லை
சிறுவயதில் தாங்கள்
பலூன்கள் வைத்து விளையாடியதான
நினைவுகள்

பலூன் பரப்பும்
ரப்பர் வாசத்தை
தாயின் வாசம் ருசிக்கும்
குழந்தையெனப்
பருகிறார்கள்

எடையற்ற காற்றைச்
சுமந்தபடி
போய்க்கொண்டே இருக்கிறார்கள்
பலூன்கள் குறித்த
கனவுகள் கண்டிருக்கும்
குழந்தைகளைத் தேடி...


-ப்ரியமுடன்
சேரல்