புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, September 07, 2009

ஒற்றைப்புள்ளியில் நான்

சக நிகழ்வுகளின் பின்னலாகவே அமைந்திருக்கிறது வாழ்க்கை. எதையெல்லாம் சக நிகழ்வுகள் என்று கொள்ளமுடியும்? இருவேறு திசைகளில் செல்கிற பயணங்கள் ஒரு புள்ளியில் இளைப்பாறுமானால், தொடர்பற்ற இரு போக்குகளில் திடீரென மாற்றமேற்பட்டு அவை ஒருமிக்குமானால், எதைப் பற்றிய சிந்தனையிலோ செயலிலோ ஆழ்ந்திருக்கையில் தொடர்பற்ற ஆனால் ஏதோ ஒரு வகையில் தொடர்புறும் சாத்தியமுள்ள மற்றொன்றின் குறுக்கீடு ஏற்படுமானால், அவற்றைச் சக நிகழ்வுகள் என்று சொல்லலாமா? ஆம் எனில், சக நிகழ்வுகளின் விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறது.

1. புத்தகம் வலைப்பூவில் தமிழகத்தடங்கள் என்ற நூலினைப் பற்றிய பதிவை எழுதியிருந்தோம். கீழ்வெண்மணி எனும் ஊரில் நடந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான கொடுமையைப் பற்றி அப்புத்தக ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு அருகிலேயே இக்கிராமம் இருப்பதால், அது தொடர்பான என் அனுபவங்களையும் இணைத்துப் பதிவில் எழுதி இருந்தேன். பதிவிட்ட மறுநாள் அதிகாலையில், நண்பனொருவனைப் பார்க்கப் போக, யதேச்சையாக இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல் கிடைத்தது. இந்த நாவல் கீழவெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. பாலியல் சார்ந்து இப்பிரச்சினையை அணுகி இருப்பார் இ.பா. என்று அறிந்திருக்கிறேன்.

2. நேற்று உரையாடல் அமைப்பின் சார்பில், கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் நடந்த உலகத் திரைப்படக் காட்சிக்கு சென்றிருந்தேன். திரைப்படத் திரையிடலுக்கு முன்பாக, எழுத்தாளர் மௌனி பற்றிய ஆவணப்படம் திரையிட ஏற்பாடாகி இருப்பதாக திரு.சிவராமன் அறிவித்திருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் ரவி சுப்ரமணியன், சாகித்திய அகாடமி தயாரிப்பில் இதை இயக்கி இருக்கிறார். மௌனியிலிருந்து திடீரென்று இ.பா.வுக்குத் தாவிய நிகழ்வு என்னுள் இன்னொரு தாக்கத்தைக் கொடுத்தது. இந்நிகழ்வுக்குப் புறப்படும் வரை நான் குருதிப்புனல் படித்துக்கொண்டிருந்தேன் என்பது இங்கு குறிக்கத்தகுந்தது.

3. நண்பன் சேகர் 'பெயரற்ற யாத்ரீகன்' ஜென் கவிதைத் தொகுப்பு குறித்த தன் பார்வையைப் புத்தகம் வலைப்பூவுக்காக எழுதி அனுப்பி இருந்தான். அவன் அனுப்பிய வேளையில் நான் சிலாகித்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அதே 'பெயரற்ற யாத்ரீகன்'. யுவன் சந்திரசேகர் மொழி பெயர்த்த ஜென் கவிதைகளின் தொகுப்பு இது.

இம்மூன்று நிகழ்வுகளுமே கடந்த நான்கு நாட்களுக்குள் நடந்தேறியவை. இதைத்தான் ஆத்திகர்கள் கடவுள் என்கிறார்கள். நாத்திகர்கள் தற்செயல் என்கிறார்கள். நான் தொடர்புள்ள, அல்லது தொடர்பற்ற சக நிகழ்வுகள் என்கிறேன். இந்நிகழ்வுகளுக்கான காரணம் எதுவென்ற தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சில ஆச்சரியங்கள் வந்து என்னை மூழ்கடித்துவிடுகின்றன. எது எப்படியோ? இந்த நிகழ்வுகளுக்குள் ஓர் அழகு இருக்கிறது. இந்த வலைப்பின்னலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் வரையிலும் வாழ்க்கையும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

10 comments:

மண்குதிரை said...

aam nanba

Karthik said...

!!!!!. என்ன சொல்ல?. 3 நாட்களாக இதே பிணைப்புகளைப் பற்றிதான் எழுத முயன்று கொண்டிருந்தேன். இதுவும் கூட ஒரு தற்செயலாக இருக்கலாம்.!!! வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன்
கார்த்திக்

நேசமித்ரன் said...

:)

மாதவராஜ் said...

கல்லூரியின் இறுதியாண்டில் ஒரு நாள் லைப்ரரியில் நான் குருதிப்புனல் படிக்க நேர்ந்தது. படித்து விட்டு சில நாட்கள் தவிப்பும், ஒருவித அலைக்கழிப்பும் எனக்குள் ஒடின. அப்போது எனக்கு வெண்மணி பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை. நாவலின் இறுதிவரிகளில் இப்போதெல்லாம் இராவணர்களே விசுவரூபம் எடுக்கிறார்கள் என்றும் அவர்களின் சிரிப்பு திசைகளெல்லாம் ஒலிப்பது போலவும் முடியும். பெரும் கோபத்தை எனக்குள் மூட்டியது. சாத்தூர் வந்து, இடதுசாரி நண்பர்கள் அறிமுகமானபோதுதான் வெண்மணி குறித்தும், குருதிப்புனல் குறித்தும் முழுமையாக தெரிந்து கொண்டேன். அந்த நாவல் தமிழ்நாட்டு இடதுசாரிகளால், நீங்கள் உங்கள் பதிவில் சொன்ன விமர்சனத்தோடு பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் அந்த நாவல் கொண்டாடப்பட்டது. துலாபாரம் படம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. கேரளாவில் விமர்சனம் செய்யப்பட்டது. இதெல்லாம் குருதிப்புனல் நாவலோடு பின்னிப்பிணைந்து இருக்கும் எனது நினைவுகள். மீட்டுத்தந்த உங்கள் பதிவுக்கு நன்றி. இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் நாவல் முடிந்தால் படியுங்கள். வேறொரு தளம். அவரை ஒருமுரை நேரில் பார்த்தபோது என்னுடைய கதை ஒன்றை சிலாகித்துப் பேசியதும் உற்சாகமான நினைவுகள். நன்றி சேரல்.

J.S.ஞானசேகர் said...

கவிக்கோ அப்துல் ரகுமான் "தோல்வியே! நீ எனது பத்தினி" என்றார்.

நமது Bee'morgan "அடுத்த நொடியின் சுவாரஸ்யத்தை காப்பாற்றும் இந்த நொடியின் கற்பு" பார்த்து ஆச்சரியப் படுகிறார்.

இந்த நொடியும், தோல்வியும் எந்த ஒருவருக்கும் கற்புள்ள பத்தினிகள் தான். இந்த நொடி, நேர்த்தியான வலைப்பின்னலுடன் ஒரு தோல்வியைத் தரும்போது, பத்தினியைப் பழிக்காத பக்குவம் பலபேருக்குக் கைகூடவில்லை. அங்கதான் நிற்கிறது இந்த design செய்யப்பட்ட கண்ணுக்குத் தெரியாத கற்பு!

தமிழ்ப்பறவை said...

வித்தியாசமான சமநிகழ்வுகள்தான்...
இதற்கு எனது பார்வை என்னவெனில், நாம் எதில் ஆழ்ந்து சிந்திக்கிறோமோ,அதைப்பற்றிய எண்ண அலைகள் தூண்டப் பெறும். சிந்தனையின் ஆழம் பொறுத்து அது வலுவடையும்...தேடலைப் பொறுத்து அது அது சார்ந்த அலைகளை ஈர்க்கும். அந்த அலைகள் அது தொடர்புடைய நிகழ்வுகளைத் தூண்டும்.இது ஆத்திகமோ,நாத்திகமோ இரண்டுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்...
சுருக்கமாகச் சொன்னால் ஆழ்மனதின் வேலை எனலாம்.

Vidhoosh/விதூஷ் said...

thoughtful post.

-vidhya

Krishna Prabhu said...

நீ இதுபோன்ற எண்ண அலைகளில் வாழ்வெல்லாம் திளைக்க வாழ்த்துக்கள் சேரல்.

Nundhaa said...

interesting

" உழவன் " " Uzhavan " said...

சக நிகழ்வுகளை இடுகையாகவே போட்டாச்சா :-)) அருமை சேரல்