புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, September 30, 2010

நாட்குறிப்பு

அதிகாலையிலேயே விழித்துவிட்டேன்

சாளரத்தில் படர்ந்து கிடந்த வானத்தில்
பறவைகளெதுவும் இல்லாதிருப்பதைச்
சும்மா வெறித்திருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக்கொண்டிருந்த
வானத்தோடு நிறம் மாறிக்கொண்டிருந்தோம்
என் வீடும், நானும்

அலுவலக நேரத்தைப் பொறுத்தமைந்த குளியல்
உடலை நனைப்பதைத் தவிர வேறெதையும்
செய்ததில்லை

இட்டிலிக்குத் தேங்காய்ச் சட்டினி
சுவையாகவே இருந்திருக்கும்

அலுவலகம் செல்லும் பயணம்
அனிச்சையாகவே நிகழ்ந்தது
என்றும் போல

வேலையும் வேலை நிமித்தமும்
பாலைத்திணை

சாயங்காலம் என்றொரு பொழுதிருப்பதை
மறந்தான பிறகு வீடு திரும்பும் உற்சவம்

களைத்து, வீடடைந்து, உண்டுறங்க,
நிறைந்த ஒரு நாளின் குறிப்பாக எழுதுகிறேன்

கவிதைக்கான எந்த முகாந்திரமும்
வாய்க்காத வாழ்வின் இந்நாள்
நாசமாய்ப் போகட்டும்

Thursday, September 23, 2010

ஐக்கியமானவன்

சுதந்திர தேவி சிலையின்
உயரம் மீண்டுமொருமுறை அளந்தான்

நயாகராவின் துளிகளில் ஒன்றை
கையில் வைத்தலைந்த கதை சொன்னான்

இரவு நடன விடுதியில்
உடன் மதுவருந்தி
முயங்கிக் கிடந்து சென்ற
வெள்ளைக்காரப் பெண்ணின்
உடல் வாசம் சொன்னான்

டிஸ்னி உலகின்
பொம்மை மனிதர்களுடன்
பிடித்துக்கொண்ட
புகைப்படம் கொடுத்தான்

உயிர்த்தளம் குளிரும்
மைனஸ் டிகிரியின்
நீளம் தெரிவித்தான்

சொர்க்கவாசல் எப்போதும்
திறந்தேயிருக்கிறது உனக்கும்
என்றான் நண்பன்
மீண்டும் நுழையுமுன்

எனக்கென்னவோ
அவன் பத்தாம் வகுப்பில்
என்னைவிடக் குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்துபோனது

Tuesday, September 21, 2010

வெறும் காற்று

எங்கிருந்து கொண்டுவந்து தள்ளுகிறது
இவ்வளவு காற்றை
இந்த மின்விசிறி?

காற்று வெறும் காற்றாக மட்டுமே
இல்லாதிருப்பதுதான் ஆச்சரியம்

மௌனம் முற்றிலும்
சபிக்கப்பட்ட நாட்களில்
பேசிக்கொண்டேயிருக்கிறது மின்விசிறி
ஓயாமல்

நெருப்பிலான பெரும்போர்வையொன்றை
விரித்துப்போர்த்தியது போலும்
வெய்யில் நிறைந்த இந்நகரின்
புழுக்கமடர்ந்த மதியப்பொழுதுகளில்
சுற்றிச் சுற்றிச் சலித்துப்
பெருமூச்சில் அயர்கிறது

மின்சாரமறுந்த வேறொரு நாளில்
சவமெனச் சமைகிறது
பேச்சும் மூச்சுமற்று