புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 28, 2010

பேர் சொல்லும் பலகை

சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே இவை கண்ணில் பட்டவண்ணமிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆச்சரியப்படுவதற்கில்லை; சில அழகானவையாக, சில அபத்தமாக, சில வெறும் பேருக்காக, என்று பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி இருக்கிறார்கள். மாநகராட்சியின் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் இந்த மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழை வளர்த்து விட முடியுமா? இத்தனை நாள் எங்கே போயிருந்தது இந்த அக்கறை? இவர்கள் இடும் பல பெயர்களைப் பல பேர்களால் புரிந்து கொள்ள முடியாதே? இந்தப் பெயர்களை விட ஆங்கிலப்பெயர்கள் புரிகிற மாதிரி இருக்கின்றனவே? என்ற விவாதங்களை எல்லாம் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு ஆங்கிலப் பெயர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆக்கிரமித்திருந்தன.

குழந்தைகளுக்குக் கூட தாய்மொழியல்லாத மொழியில் பெயரிடுவதைப் பெருமையாகக் கருதும் இனங்களில் நாம் முதன்மையானவர்களாக இருப்போம். அப்படியானவர்கள் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயரிடுவதொன்றும் வியப்பான செய்தியில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் பெருமைக்குரிய செயலாகத் தொடங்கிய வழக்கம், பின் பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.

சீமலத்திப்பழம், குளம்பி என்று பார்க்கும் பொருட்களையெல்லாம் தமிழ்ப்படுத்திக் கொண்டிராமல், தேவையான அளவுக்கு, தேவையானவற்றை மட்டும் தமிழ்ப்படுத்தும் செயல் மிகவும் ஆரோக்கியமானதே! அந்தவகையில் பெயர்ப்பலகைகளைத் தமிழ்ப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே படுகிறது.

நான் பார்த்த சில பெயர்ப்பலகைகள் ரசிக்கவைத்தன.

Bakery - அடுமனை
Bakers - அடுமனைஞர்
Fancy store - வளையலகம்
Hardwares - வன்பொருளகம்
Plaza - அங்காடி
Super market - பேரங்காடி

சில அபத்தமாகப்பட்டன.

Plastics - நெஹிலியகம்
Coffee shop - குளம்பியகம்

நெகிழி என்பது பிளாஸ்டிக்குக்கான தமிழ்ப்பதம் என்று நினைக்கிறேன். இதைத் தமிழ்ப்படுத்தப்போய்த்தான் நெஹிலியகம் ஆகியிருக்கிறது போலும்.

உணவு வழங்கும் இடங்கள் உணவகங்களாகியிருக்கின்றன. தங்கும் வசதி உள்ள ஓட்டல்கள் எதுவும் பெயரை மாற்றியதாக என் கண்ணில் படவில்லை. தமிழில் பெயர்ப்பலகை வைக்காதவர்களை மாநகராட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்ப்படுத்தப்பட்ட பலவகை விற்பனை நிலையங்களில் பொதுவான அம்சமாகப்படுவது 'அகம்' விகுதி. இதன் பொருள் அறிந்தோ அறியாமலோ எல்லோரும் சரியாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதுவரை மகிழ்ச்சியே! இனிப்பு விற்பனை நிலையம், அல்லது இனிப்புக் கடை, என்பதைவிட இனிப்பகம் என்பது அழகாகத் தோன்றுகிறது.

அங்காடி என்ற சொல்லே விற்பனை நிலையத்துக்கான மிகச் சரியான, மிகப் பொருத்தமான தமிழ்ச் சொல் என்றாலும் அதை மிகச் சில இடங்களிலேயே காண முடிகிறது.

பெயர்ப்பலகைகளைத் தமிழிலாக்கும் இந்நற்செயலை, சென்னை என்ற எல்லையோடு நில்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் கூட பின்பற்றலாமே! அரசாணை வரட்டுமென்று ஏன் காத்திருக்க வேண்டும்?

Friday, June 11, 2010

என்றாலும்

அதை அறிந்து கொண்டதில்
உனக்குண்டான மகிழ்ச்சி
அலாதியானது

அதைப் பற்றி என்னிடம்
சொல்லத் தொடங்குகிறாய்
ஒரு சிட்டுக்குருவியின்
காலைநேரப் பரபரப்புடன்

அதல்லதென்று நிரூபிப்பதில்
எனக்கொன்றும் ஆவதில்லை

அது
இன்னதென்று நானும்
தீர்மானமாய் அறியவில்லை

என்றாலும் நிறுவுகிறேன்
அதுவும், நீயும் தவறென்பதை

இது எப்போதும் நடக்கிறது
இயல்பாக...
மிக இயல்பாக....

பின் நீ
சிறகுகள் பிய்ந்து
மரித்துப்போன
சிட்டுக்குருவியொன்றின் சடலத்தை
நானறியாமல் புதைக்கும்
முனைப்பிலிருக்கிறாய்,
வெகு சிரத்தையுடன்

Monday, June 07, 2010

ஆடி முடித்தவனின் பகல்

எப்போதோ படித்த ஏதோ ஒரு சிறுகதையில் வரும் ஒரு வயோதிகப் பாத்திரத்தை என்மேல் வாங்கிக் கொள்ளும் உந்துதலினால் எழுதிய கவிதை இது. முதுமையின் வாசம் இப்படித்தான் இருக்குமென்று தெரியவில்லை. இப்படியும் இருக்கக்கூடும்.

இப்போதெல்லாம்
யாரும் வருவதேயில்லை

காற்று மட்டும் அவ்வப்போது வந்து
கதவு தட்டிப் பார்த்துப் போகிறது

ஆடி முடித்த விளையாட்டுகளின்
பழைய நினைவிலேயே
ஊர்கின்றன
வெக்கை படிந்த
பகல் பொழுதுகள்

சுகவீனமுற்ற பாதங்கள்
சுமக்க முடியாமல் தள்ளாடுகின்றன
மனத்தின் சுமையை

பிடிமானமற்ற கழிவறையில்
கிழிந்துபோன மூட்டுச்சவ்வுகளை
மடித்து உட்கார்ந்து
சிறுநீர் கழிக்கையில்
ஏனோ வந்துபோகிறது
இறந்து போன மனைவியின் நினைவு

பழைய எதிரிகளோடு மீண்டுமொருமுறை
விட்டுக்கொடுத்து விளையாட
எத்தனிக்கிறது மனது

முதன்முதலாய்ப்
புணர்ந்தவளின் கதகதப்பு,
சுரப்பிகள் வற்றிப்போன
வாழ்வின் ஒரு நாளில்
பரவுகிறது தேகமெங்கும்

விருப்பமென்று பெரிதாய்
எதுவும் இல்லை

விட்டோடிவந்த முதல் காதலியிடம்
கதறியழுது கேட்க மன்னிப்பு

உள்ளங்கையை
உள்ளங்கைக்குள் வைத்தழுத்தி
கதை சொல்ல அல்லது
கதை கேட்க
ஒரு துணை

எனக்கே எனக்கான
சிநேகிதர்கள் எவரோடேனும்
தினமொருமுறை சந்திப்பு

இப்போதைக்கு....
யாரேனும் புகட்டுவதாயின்
கொஞ்சம் இருமல் மருந்து

அப்படியே
கொஞ்சம் தூக்கம்

முடிந்தால்
அப்படியே
மரணமும்

Friday, June 04, 2010

திண்ணை மின்னிதழ்

அன்பிற்கினிய நட்புக்கு,

'திண்ணை' மின்னிதழின் இவ்வார வெளியீட்டில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திண்ணைக்கு நன்றி! இவற்றுள் இரண்டு கவிதைகள் மழையைப் பற்றியனவாகவும், ஒன்று பனிக்கால இரவைப் பற்றியதாகவும் நானறியாமல் அமைந்துவிட்டது மிகவும் இயல்பானதே! கூடவே அழகானதும்.


வெளியான கவிதைகள் :

வெளியில் நனையும் மழை
ஞானம்
இன்னொரு மழை-ப்ரியமுடன்
சேரல்