புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, May 17, 2013

அந்தரங்கம்

இறந்தவர்கள் எழுதிவைத்த
நாட்குறிப்புகளைச் சேகரிக்கும்
வினோத பழக்கம் கொண்ட மனிதனின்
நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம்
அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு

தன் ஆராய்ச்சியின் பலனாக
மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்திருந்தான் அவன்

இப்போதெல்லாம் மனிதர்கள்

அதிகமாக நாட்குறிப்பு எழுதுவதில்லை

எழுதுபவர்களில் பெருமளவு

அதை அடுத்தவர் வாசிப்பதை மிகவும் விரும்புகிறார்கள்

இரண்டாம் முடிவின் விளைவாகவும்
அவர்களின் அந்தரங்கம் புதைந்தே போகிறது
முன்னெப்போதைப்போலவும்

Tuesday, May 07, 2013

சிதைவுப் புள்ளி

நான்கு சாலைகள்
சந்திக்கும் புள்ளியில்
காத்திருக்கிறேன்

ஒரு குழந்தையின் எதிர்பார்ப்புடன்
கிடக்கிறது மனது

எத்திசையிலிருந்தும் வரக்கூடும்
என்னைச் சிதைக்கப் போகும்
விபத்தின் கணம்
காற்றைப் போல லேசாக....

Monday, February 04, 2013

தேநீர்

அறிவியல் என்கிறேன்
 
ஆன்மீகம் என்கிறாய்

நெடிய சொற்போருக்குப் பின்
ஆசுவாசமாய்ச் சிறுநடைபோய்த்
தேநீர் பருகிவருகிறோம்

இருவரின்  தேநீரும்
இனிக்கவே செய்கிறது
மிதமான கசப்புடன்

Tuesday, January 29, 2013

அடையாளம்

நான் என்பதாய்
அடையாளப்படுத்துகிறது குழந்தை

ஒரு நிழலை
ஒரு மரத்தை
ஒரு கேலிச்சித்திரத்தை
ஒரு நட்சத்திரத்தை
ஒரு கூண்டு மிருகத்தை
ஒரு பேரலையின் மிச்சத்தை

வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
நான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும்