புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 30, 2010

கதைகள் கனவுகளை உமிழும்

மிகையதார்த்தம் பேசும்
கதைசொல்லியொருவனின் பிணம் மிதந்து வரும்
புராண நதிக்கரையில் காத்திருக்கிறேன்

வந்துசேரும் பிணத்தில் ஒளிந்திருக்கின்றன
வெகுகாலமாய் நான் தேடிச் சோர்ந்திருந்த
மிகையதார்த்தக் கதைகள்

கதைகளின் அரையுறக்கம் சேர்ந்த
தலைகளைத் தூக்கிப்பிடித்து
தோளில் இருத்தி நடக்கத் தொடங்குகிறேன்

கதைகள் உமிழ்ந்தபடி
வருகின்றன
வழியெங்கும் என் கனவுகளை

Thursday, July 08, 2010

நிலாச்சோறு

எல்லாத் தாய்களுக்கும்
கிடைத்துவிடுகிறதொரு நிலவு
தம்பிள்ளைக்குப் பறித்துக் கொடுத்து
உணவூட்ட

எல்லாக் குழந்தைகளும்
பத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை

எல்லா நிலவுகளும்
ஒன்றாகும் பொழுதில்
தொலைந்தே போகின்றன
எல்லா நிலவுகளும்,
எல்லாக் குழந்தைகளும்