புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, December 22, 2009

படிந்த வரிகள் - 12

கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது

-கவிஞர் கார்த்திக் முருகன்

(http://karthikmurugan.blogspot.com/)

புல்லாங்குழல்

இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்

மேலோடும்
விரல்கள் மட்டும்
இடம் பெயர்கின்றன

இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
உள்ளிழுக்கும் காற்றையும்
வெளிவிடும் இசையையும் போலவே....

Tuesday, December 15, 2009

நகரும் படிகளும்

ஏறவோ இறங்கவோ
செய்தோம்

அப்படியே இருந்தன
படிகள்

நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை

Friday, December 11, 2009

பிழை திருத்தம்

செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு

எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்

மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்

Monday, November 30, 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை - மக்கள் கலை இலக்கிய விழா


அழைப்பிதழ்


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா

நாள் :26 டிசம்பர் 2009

சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி

இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214

பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரிதெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள

முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.

நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு


தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)

முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)

சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.

நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்


அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை


களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.

வரவேற்புரை: தக்கை.வே.பாபு

துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை

கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

வாழ்த்துவோர்:

முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்


சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்

நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்

நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்

வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.


மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி

நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)

நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)


அமர்வு4- இரவு 10 மணி

மதுரை வீரன் (தெருக்கூத்து)

நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.

(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50


சான்றிதழ் மற்றும் விருது பெறுவோர்.

1.அமரர் மகாலிங்கம்
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 60 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : வீரன், கூத்து : மதுரை வீரன்

2. துரைசாமி
எலிமேடு, எலச்சிப்பாளையம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சின்னான், கூத்து : மதுரை வீரன்

3. மட்டம்பட்டி பழனி, சங¢ககிரி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : நாக கன்னி. கூத்து : அரவான் கடப்பலி

4. துரைசாமி
நல்லம்பள்ளி,
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : இரண்யன். கூத்து : இரண்ய சம்ஹாரம்

5. சின்னத்தம்பி
பென்னாகரம்
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பத்மா சூரன். கூத்து : பத்மா சூர வதம்

6. மனோன்மணி
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொம்மி, கூத்து : மதுரை வீரன்

7. முத்துலட்சுமி
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்

8. செ.சரோஜா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 45 ஆண்டுகள், கட்ட பொம்மலாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.

9. கருப்பண்ணன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், கட்ட பொம்ம லாட்டம்
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.

10. ராமநாதன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்
11. சித்தன்
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம்.

12. சின்னக்கண்ணு
நால்கால்பாலம்
கலைச்சேவை : 45 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பொன்னுருவி கூத்து : கர்ணமோட்சம்

13. வீராசாமி
எலிமேடு
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன், கூத்து : ஆரவல்லி சண்டை

14. மெய்வேல்
சீரகாபாடி
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பீமன் கூத்து : பதினெட்டாம் நாள் யுத்தம்

15. பெரியராஜ்
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : கிருஷ்ணன், கூத்து : அல்லி அர்ஜூனா

16. சின்ராசு
துத்திபாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : யசோதரை, கூத்து : கிருஷ்ணன் பிறப்பு

17. பச்சமுத்து
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள்,முகவீணைக்கலைஞர்- தெருக்கூத்து

18. குஞ்சு கண்ணு
கன்னந்தேரி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், முகவீணைக் கலைஞர் - தெருக்கூத்து

19. செல்லமுத்து
மோர்பாளையம்
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் :அல்லி முத்து கூத்து. : ஆரவல்லி பந்தயம்

20. ஹரிதாஸ்
எலிமேடு
கலைச்சேவை : 45 ஆண்டுகள், மிருதங்க கலைஞர்- தெருக்கூத்து

21. தங¢கவேல்
எலிமேடு
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : அர்ச்சுனன் தேவப்பட்டம்

22. சுப்பன்
நகுலூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் - தெருக்கூத்து

23. சுப்ரமணி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அபிமன்யு கூத்து : ஆரவல்லி அல்லி முத்து பந்தயம்

24. ஐயந்துரை
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : தருமர், கூத்து : படுகளம்

25. சத்தியவதி
எலச்சிபாளையம்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சுபத்திரை : பவளக்கொடி

26. செல்வம்
கரட்டூர்
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : உத்திர குமாரன் கூத்து : விலாடபருவம்

27. மாதேஸ்
எலிமேடு
கலைச்சேவை : 30 ஆண்டுகள், கட்டியங்காரன் தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம்

28. கணேசன்
கொம்பாடிப்பட்டி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : மண்டோதரி கூத்து : சூர்ப்பனகை கர்வபங்கம்

29. லதா
பெரிய சீரகாபாடி
கலைச்சேவை : 25 ஆண்டுகள், மிருதங்கக் கலைஞர் தெருக்கூத்து

30. செட்டி
சேடப்பட்டி
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : குறத்தி. கூத்து : குறவஞ்சி

31. சேட்டு
நல்லூர்
கலைச்சேவை : 25 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : துரியோதனன் கூத்து : மகுடவர்த்தகன் அரவான் சண்டை

32. ஆறுமுகம்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 40 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்டமைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : சனீசுவரன், கூத்து : சனிவிரதம்

33. மணி
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 30 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மெட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : பார்வதி கூத்து : துருவாசர் கர்வபங்கம்

34. அங்கமுத்து
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 50 ஆண்டுகள், ஆண் \ பெண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அலர்மேல் மங்கை, கூத்து : வெங்கடேசப் பெருமாள் கல்யாணம்

35. வேம்பன்
சிங்கிலியன் கோம்பை
கலைச்சேவை : 35 ஆண்டுகள், ஆண் வேடம் - தெருக்கூத்து
தனித்திறமைகள் : உரையாடல், உச்சரிப்பு, நடிப்பாற்றல்,
மொட்மைத்து பாடும் திறன், குரல்வளம், வேடப்பொருத்தம், காலடவு, நடையுடை பாவனை, ஒப்பனை
சிறப்புத்தோற்றம் : அர்ச்சுனன் கூத்து : பவளக்கொடி

36. துரையன்
கன்னந்தேரி
கலைச்சேவை : 30 ஆண்டுகள், பின்னணி இசை- தெருக்கூத்து
கலைச்சுடர்
1. காளிதாஸ்
2. ராசேந்திரன்
3. பழனிசாமி
4. ராஜமாணிக்கம்
5. ராஜேஷ்
6. சென்னகிருஷ்ணன்
7. சங்கர்
8. கலைஞன்
9. சகத்தி

பங்கு பெறுவோர்

ஷாஜகான்,உதயசங்கர்,அனுராதா,கு.ரா,தபசி,கே.வி.ஆர்,சந்தியூர் கோவிந்தன்,பாலமுருகன்,செல்வப்பெருமாள்,க.சீ.சிவக்குமார்,வசு மித்ர,பேய்க்காமன்,ஞா .கோபி,சௌந்தரசுகன்,இசை, இளங்கோகிருஷ்ணன்,ந.பெரியசாமி,ஜீவன் பென்னி,கலை இலக்கியா, ச.முத்துவேல்,சூர்யநிலா, பொன்.குமார், சக்தி அருளானந்தம்,அதிரதன்,முபாரக், மண்குதிரை,ச்விசயலட்சுமி,பாரதி நிவேதன்,இனிது இனிது காத்திகேயன்,எழில் வரதன், ரத்திகா, ரந்தீர்,இளஞ்சேரல்,சொ.பிரபாகர், யாத்ரா,சேரல்,நந்தா,தூரன்குணா,நக்கீரன்,ஆதிரன்,போப்பு,விவேகானந்தன்,தமிழ்நதி, ஞானதிரவியம்

மற்றும் எங்கள் பெருமைக்குரிய வாத்தியார்கள்: மாயவன்,குருநாதன்,செல்லப்பன்,ஜெயா,கனகராஜன்,அம்மாபேட்டை கணேசன்,கோவிந்தசாமி,எலிமேடு வடிவேல்,ரெட்டியார்(எ)ராசேந்திரன்,கொம்பாடிப்பட்டி ராஜு,கூலிப்பட்டி சுப்ரமணி,மாணிக்கம்பட்டி கணேசன்,பெரிய மாது,சித்தன்,வீரப்பன்,லட்சுமி அம்மாள் செட்டிப்பட்டி சின்னவர்.

-----------------------------------------------

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

Wednesday, November 18, 2009

பூனைகளும், சில நியதிகளும்

குறுக்கே ஓடிப்போகும்
பூனையைச் சபித்துச் செல்பவனைக்
கடந்துபோய்
நசுங்கிச் செத்த
பூனையின் விதியை
என்னவென்று சொல்வது?

***************

அதென்னவோ?
எப்போதும்
பக்கத்து வீட்டுப்பூனை
மதிற்சுவரில்
பத்திரமாய் நடந்து போய்
மறுமுனையை அடைந்தே விடுகிறது,
எப்புறம் விழுமெனக்
காத்திருப்பவனை ஏமாற்றி....

Monday, November 16, 2009

யுகமாயினியின் கூடல் திணை

யுகமாயினி இலக்கிய இதழ் நடத்தும் 'கூடல் திணை' எனும் இணைய இதழ், சோதனை ஓட்டமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. அதன் முகவரி...

http://www.viruba.com/chiththan/index.aspx

சித்தன் போக்கு....

http://www.viruba.com/chiththan/writings.aspx?id=8

இது குறித்த நண்பர் நிலாரசிகனின் பதிவு...

http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_16.html

இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறும்வாய்ப்பும், பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கூடல் திணையின் உயர் இலக்கு நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாய் இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும்....

-ப்ரியமுடன்
சேரல்

Thursday, November 12, 2009

தொடர் பதிவு

தொடர் பதிவுக்கு இதுவரை யாரும் என்னை அழைத்ததில்லை. என்னையும் நம்ம்ம்ம்பி ஒருவர் அழைத்திருக்கிறார். நண்பர் ஜெனோவாவுக்கு நன்றி.

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி பட்டியல்....

1.
பிடித்த தலைவர்கள் : காமராஜர், பெரியார், தோழர் ஜீவா
பிடிக்காத தலைவர்கள் : ராஜாஜி (இவரையும் பிடிக்கும். சில சம்பவங்களால் பிடிக்காது. இப்போதிருப்பவர்களைத் தலைவர்களாகவே நினைக்க முடியவில்லை)

2.
பிடித்த எழுத்தாளர்கள் : எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, கி.ராஜநாராயணன்
பிடிக்காத எழுத்தாளர்கள் : அப்படி யாரும் பெரிதாக இல்லை ;)

3.
பிடித்த கவிஞர்கள் : கல்யாண்ஜி, யுவன், வைரமுத்து
பிடிக்காத கவிஞர்கள் : தபு சங்கர் (காதலை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க சார்)

4.
பிடித்த இயக்குனர்கள் : மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, மணி ரத்னம், பாலா, தங்கர் பச்சான், சேரன், S.P.ஜனநாதன், மிஷ்கின், கமலஹாசன், சசி.... பெரிய பட்டியலாச்சே.....
பிடிக்காத இயக்குனர்கள் : S.P.முத்துராமன், பேரரசு, ராம.நாராயணன், A.வெங்கடேஷ்.... இதுவும் பெரிய பட்டியலாச்சே.....

5.
பிடித்த இசையமைப்பாளர்கள் : இளையராஜா, M.S.விஸ்வநாதன், A.R.ரஹ்மான்
பிடிக்காத இசையமைப்பாளர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி

6.
பிடித்த நடிகர்கள் : கமலஹாசன், நாகேஷ், மனோரமா
பிடிக்காத நடிகர்கள் : இப்பொழுது புதிதாக ஆட்டமாடும் தமிழ்நாட்டு சூப்பர் மேன்கள், காசுக்கேற்றாற்போல் உடையைக் கூட்டிக் குறைத்து, சமூக சேவை செய்பவர்கள்.

7.
பிடித்த பாடகர்கள் : M.S.சுப்புலட்சுமி, S.P.பாலசுப்ரமணியம்(இவரு மனவாடு ஆயிட்டாரு ;) ), P.B.ஸ்ரீநிவாஸ், சித்ரா, ஜேசுதாஸ், ஜானகி (இவங்க யாருமே தமிழ்நாட்டுக்காரங்க இல்லையே...ஆனாலும் பரவாயில்லை)

பிடிக்காத பாடகர்கள் : தமிழ்நாட்டுக் காரர்கள் யாரும் இல்லை. வேறு மொழியில் இருப்பவர்களும், தமிழில் பாடியது மட்டுமே பிடிக்காமல் போயிருக்கிறது (உதாரணம் - உதித் நாராயணன், அத்னான் சாமி.....இப்படி)

8.
பிடித்த பேச்சாளர்கள் : நெல்லை கண்ணன், சத்தியசீலன்
பிடிக்காத பேச்சாளர்கள் : சாலமன் பாப்பையா (தற்போது), லியோனி(தற்போது)

(அப்பாடி...எப்படியோ எட்டு கேள்வி தயார் பண்ணியாச்சு ;))

அழைக்கும் பதிவர்கள் :

Bee'morgan
ச.முத்துவேல்
கிருஷ்ணபிரபு

-ப்ரியமுடன்
சேரல்

Thursday, November 05, 2009

உயிர்மை

இயக்கமற்று
ஓய்ந்திருக்கின்றன மரங்கள்

எரிக்கும் வெயிலில்
உயிர் மீதமிருப்பதறியாது
உயிரிழந்து கொண்டிருக்கின்றன
இலைகள்

காற்றுங்கூடச்
சாவதற்கெத்தனிக்கிறது

உறைந்து கிடக்கவெனச்
சாபமிட்ட சூன்யக்காரியை
நொந்தபடி
விரிந்த சிறகசைத்துக்
கடந்து செல்கிறது
கடல் தாண்டி வரும்
ஒற்றைப்பறவை

உயிர் கொண்டெழுந்த காற்று
உயிர் பரப்புகிறது
ஒவ்வொரு இலையாக

Thursday, October 29, 2009

ஆணி வேர்களும், சல்லி வேர்களும்

பள்ளிப்பருவத்தில், டிரைவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. எப்பொழுதேனும் அபூர்வமாக வாய்க்கும் ஒவ்வொரு பயணத்தின் போதும் இந்த ஆசை மிகுந்து கொண்டே இருந்திருக்கிறது. ஓட்டுனர்களின் மீது அளவு கடந்த ஈர்ப்பு, அல்லது ஒரு மாதிரியான பொறாமை என்றும் கூடக் கொள்ளலாம். அலைவதையே அவர்கள் வாழ்க்கையாகக் கொண்டிருப்பதன் மீதான ஆச்சரியம் இன்று வரையிலும் என்னில் குறையவில்லை. சிறுவயதில் எனக்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, எப்படி இவர்கள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் சரியான பாதையிலேயே பயணித்து, சேரிடத்துக்குச் சரியாகச் சென்றடைகிறார்கள் என்பதுதான்.

தொலைந்து போவது குறித்தான பயம் அப்போது ஆக்கிரமித்திருந்தது. ஆனால், ஓட்டுனர்களுக்கு அந்தப் பயம் இருப்பதே இல்லையா? இவர்களுக்குப் பாதைகள் மறந்து போகாதா? எந்த வழி ஒரு வழிப்பாதை என்பதை இவர்கள் எப்படி அறிகிறார்கள்? சில சமயங்களில் குறுக்கு வழிகளில் செல்லும்படி நேர்கிற போதும் எந்தச் சலனமும் காட்டுவதில்லையே? ஒரு சாலையில் புதிதாகச் செல்லும் போது இவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? இரவுப் பொழுதுகளை ஓட்டியே கழிப்பவர்களிடம் நிலை கொண்ட இரவுகள் இருப்பதுண்டா? இது போன்ற கேள்விகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதை விட அதிகமாக என் அப்பாவையும், என் சிறு வயதில் பெரியவர்களாக இருந்தவர்களையும் பற்றி வியந்திருக்கிறேன். ஓட்டுனர்களாவது தொழில் என்கிற வகையில் பாதைகளையும், ஊர்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், என் அப்பாவும் மற்றவர்களும் எப்படி, எதற்காக இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள்?

எனக்குப் பழக்கமான முதல் மாநகரம், கல்லூரிக் காலத்தில் அறிமுகமான திருச்சி. என் ஊரில் இருந்து திருச்சி செல்வதென்றால் இரண்டு வழிகள் உண்டு. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, தஞ்சாவூர் வழியாகச் செல்லலாம். அல்லது திருவாரூர், தஞ்சாவூர் வழியாகச் செல்லலாம். பின்னாளில் அறிமுகமாகி நினைவோடு கலந்து போய்விட்ட இந்த வழிகளை முதன் முதல் பார்க்கும்போது நான் மிரண்டு தான் போனேன். ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்வதென்றால் எத்தனை ஊர்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது? எத்தனை அடையாளங்களைக் கவனிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பாதைகளைப் பதியவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?

பிரயாணத்தின் வழி வரும் ஊர்களை ரசிக்கும் மனம், ஊர்களைப் பிணைத்து வைத்திருக்கும் வழிகளை எத்தனை முறை ரசித்திருக்கும்? ஊருக்குள்ளோடும் குறுஞ்சாலைகளும், ஊருக்கு வெளியோடும் நெடுஞ்சாலைகளும் கூட தமக்கேயான அழகைக் கொண்டிருப்பவைதானே! மெல்ல பதிந்து நகரும் வாகனங்களின் நிழல், சுடும் வெயிலில் உருகியோடும் தாரில் தோன்றி மறையும் கானல் பிம்பம், இரு மேடுகளுக்கிடையேயான தொலைவில் வழிகள் ஒளித்து வைத்திருக்கும் மர்மம், எந்தத்திருப்பத்திலும் எதிர்ப்பட்டுவிடக்கூடும் ஓவியக்காட்சிகள் என்று கவிதைகளைச் சேர்த்து வைத்திருக்கின்றன வழிகள்.

இப்படியே அலைவதின் மீதான ஈடுபாட்டோடு, வழிகளைத் தெரிந்து கொள்வதின் மீதானதும் வளர்ந்தது. பின் நான் பயணித்த எந்தப் பாதையையும் மறந்ததாக நினைவில்லை.

அறிந்து கொண்ட எல்லா வழிகளின் வாசலிலும் வழிகாட்டி ஒருவன் நின்று கொண்டிருந்திருக்கிறான். வழிகாட்டும் நேரம் தவிர்த்து வேறென்ன இவர்கள் செய்யக்கூடும் என்ற கேள்வியும் எழுவதுண்டு. வேறென்ன? என்னைப்போலவே வேறோரிடத்தில் வழிகேட்கக்கூடும். நானும், வழி கேட்பவனாயும், வழி காட்டுபவனையும் அவ்வப்போது அவதாரமெடுத்தபடியே இருக்கிறேன்.

பின்னிப்பிணைந்தோடும் பாதைகள் எனக்கு வேர்களை நினைவுறுத்துவதாய் இருக்கின்றன. சில ஆணிவேர்களாகவும், சில சல்லி வேர்களாகவும் கிளை பரப்பிச் செல்கின்றன. உள்ளங்கை ரேகைகளைப் பார்க்கும்போதும் எனக்கு இப்பாதைகளின் சிக்கலான வலைப்பின்னல் அமைப்பு மனதுக்குள் தொன்றிச்செல்லும்.

பாதைகள் மீதான ஆச்சரியத்தின் நீட்சியாக இருக்கிறது சென்னை. நிறைய அலைந்து நிறைய இடங்களைத் தெரிந்து கொண்டபிறகு நான் நண்பர்களிடம் சொல்வது இதுதான், 'இந்த ஊரில் எங்கும் நான் தொலைந்து போய்விடுவதில்லை; அறிமுகமற்ற எந்தச் சாலையும், பரிச்சயமான ஏதாவதொரு இடத்துக்கு என்னை இட்டுச் செல்லும் மந்திரச் சாவியாய் இருக்கிறது.'

இறந்தகாலங்களில் கண்டு அதிசயித்த சாலைகளின் பிரம்மாண்டத்தை தகர்க்கும் வல்லமை கொண்டிருக்கின்றன சென்னையின் பிரதான சாலைகள்; கொஞ்சம் மிரட்டும் படியாகவும் கூட. ஈ.வே.ரா.பெரியார் சாலை எனும் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை எனும் நூறடி சாலை, அண்ணா சாலை எனும் மவுண்ட் ரோட் என்கிற முப்பெரும் சாலைகள் அமைக்கும் பிரம்மாண்ட முக்கோணம்தான் சென்னை வரைபடத்தில் நம்மை முதலில் ஈர்ப்பதாக இருக்கும். சென்னையின் மிகப் பரபரப்பான சாலைகள் என்று இம்மூன்றையும் சொல்லலாம்.

இந்தச் சாலைகளையும், இவற்றைத் தைத்தெடுத்திருக்கிற சிறு சாலைகளையும் நடந்தும், ஓட்டியும், நகர்ந்தும் கடந்தாயிற்று. எத்தனை முறை கடந்தாலும் மீண்டும் மீண்டும் வரத்தூண்டுகிற சாலைகளும் சென்னையில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து அடையாறு வரை நீண்டு கிடக்கும் சர்தார் படேல் சாலை என் விருப்பச் சாலைகளுள் ஒன்று. இரு புறமும் மரங்கள் நிறைந்த சாலையை வெறுமனே ரசிப்பதற்கேனும் அவ்வழியே போவதுண்டு. ராஜீவ் காந்தி சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்கரைச் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என்று என் விருப்பச் சாலைகளின் பட்டியல் மிகப்பெரியது.

ஒவ்வொரு நாளும் புதுப்பரிணாமம் கண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் எல்லா வயதிலும் உடனிருந்திருக்கின்றன இந்தச் சாலைகள். நான் படித்தும், கேட்டும் வளர்ந்த பல ஆதர்ச புருஷர்கள் இந்தச் சாலைகளில் நடந்திருக்கிறார்கள். நூற்றாண்டுகள் கடந்த வரலாறு இந்தப்பாதைகள் வழி வளர்ந்திருக்கிறது.

சென்னையின் ஒவ்வொரு சாலையில் பயணிக்கும் போதும் புதுப்புது அனுபவங்களுக்கு நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். அண்ணா சாலையில் கவனம் ஈர்க்கும் சில விஷயங்கள், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சாலையின் ஒரு புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். இது சமீபத்திய வரவு. வாகன ஓட்டிகள் இதைக் கவனியாதிருக்க வாய்ப்புகள் அதிகம். அவ்விதம் இருப்பதும் நல்லதே. நடந்தலைந்த ஓர் அதிகாலையில் இந்த ஓவியங்களை நிதானமாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரிருக்கும் சாலையை ஒரு மழை ஓய்ந்த மாலையின் மஞ்சள் வெயிலில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர். கனவுக் காட்சிக்கு அரங்கமைத்தது போன்றதொரு உணர்வைக் கொடுக்கும் அனுபவமது. சில ஆங்கிலேய காலத்திய கட்டிடங்கள், அகண்டு கருத்துக் கிடக்கும் அண்ணா சாலை, விளம்பரப்பலகைகள் நீக்கப்பட்ட பிறகு காட்சி தருகிற மரங்கள், இத்யாதி என நிறைய நம்மைக் கவரக்கூடும்.

மீதமிருக்கும் மரங்கள், இன்னும் சென்னை அழகாய் இருப்பதற்கான காரணங்கள். பசுமை வழிச் சாலை எனும் கிரீன் வேஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என்னும் கதீட்ரல் சாலை, ராமகிருஷ்ண மடம் சாலை போன்ற சாலைகளில் சென்னையின் உயிரைச் சுமந்து கொண்டு உயிர் பிழைத்து நிற்கின்றன நூற்றாண்டு கால மரங்கள்.

ஆங்காங்கே மேம்பாலங்கள், ஆங்காங்கே சுரங்கப்பாதைகள் என ஏற்றியும் இறக்கியும் அழைத்துச் செல்லும் சென்னையின் சாலைகளை நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மட்டுமே ரசிக்க முடிகிறது. எப்போதும் சொல்வதைப் போல மனிதர்கள் இல்லாத வரையில் எந்த இடமும் அழகாகவே இருக்கிறது.

மழை நீர் தேங்கிக்கிடக்கும் நாட்களில் மட்டும் ஒரு குஷ்டரோகியைப் போல பாவித்து, பின் அதே சாலைகளில் பரபரப்பாக சென்று வரும் நாகரிகத்தை நாம் பழகி வைத்திருக்கிறோம். சாலைகள் எப்போதும் சாலைகளாகவே இருக்கின்றன. நாம் தான் மனிதர்களாகவே இருப்பதில்லை.

சாலைகள் எப்போதும் போதிமரங்கள். ஏதேதோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஏதேதோ கொடுத்துக் கொண்டுமிருக்கின்றன. எங்கோ இட்டுச் சென்றுகொண்டுமிருக்கின்றன. மீண்டும் வழியெங்கும் தேடல் தொடர்கிறது.

எந்தப் பாதையிலும் எப்போதும் யாரோ ஒருவன் ஏதோ ஓரிடத்துக்கு வழி கேட்டபடி இருக்கிறான். நகரம் தன் எல்லா மூலைகளிலும், தேடியலையும் ஒருவனைக் கொண்டே இருக்கிறது. வழி காட்டுவதில் எல்லோருக்குமே ஒரு திருப்தி வாய்த்துவிடுகிறது. மூலைக்கடைக்கு வழி கேட்டபோது உணர்ச்சி வசப்பட்டு பட படவென பேசிய ஆட்டோ ஓட்டுனரின் முகம் இன்னும் வெகு வருடங்களுக்கு நினைவிருக்கும். சென்னையைச் சேர்ந்த பிறகான வழிகாட்டும் வார்த்தைகளில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இரண்டாவது இடதும், நான்காவது வலதும் இப்போது சரளமாக பேச்சில் வந்து விடுகின்றன. திசைகளை விட, திரையரங்குகளின் பெயர்கள் வழி சொல்ல ஏதுவாய் இருக்கின்றன.

எந்தப் புது இடத்துக்கும் செல்வதற்கு முன் வரைபடத்தைச் சரி பார்த்துக்கொள்ளும் பழக்கம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதைவிட, சென்று திரும்பிய பின்னர், இந்த வழிகளில் இன்று நான் அலைந்து திரிந்தேன் என்கிற திருப்தி, வரைபடத்தைப் பார்த்தபடி ஏற்படுகிறது.

இதுவரை நடந்த எந்தப்பாதையும் என் பாதையில்லை என்ற நினைவு மட்டும் ஆயாசப்படுத்துவதாய் இருக்கிறது.

யுவனின் கவிதையொன்று பாதைகளைப் பற்றிய என் சிந்தனையினூடே அடிக்கடி வந்துபோகும்.

மனிதர்கள் நடப்பதற்கான
பாதையும்
மனிதர்கள் நடந்தே உருவானது


நான் கண்ட பாதை இன்னும் சிலர் நடக்க ஏதுவாகுமானால், அதுவன்றி வேறென்ன வாழ்வின் பயன்?

Wednesday, October 28, 2009

வயது வராதவர்களுக்கு மட்டும்

மழைப்பூ உதிர்ந்து கிடக்கும்
தார்ச்சாலை எங்கும்
குட்டிக் குளங்கள்

குளத்துக்கொரு வானம்

வானத்துக்கொரு சூரியன்

ஆளுக்கொரு சூரியன்
வைத்து விளையாடுவோம்
வா

Tuesday, October 20, 2009

மாறுதல் - ஈரோடு கதிர்

நண்பர் நர்சிம் மூலம், இந்த வலைப்பூவைத் தெரிந்துகொண்டேன். முதலில் நர்சிம்முக்கு நன்றி. சிந்தனையைத் தூண்டும் பல கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் நண்பர் ஈரோடு கதிர். இயற்கை, வாழ்வு முறை, சமூகத்தின் மீதான அக்கறை என்பதாக விரிகின்றன இவர்தம் கட்டுரைகள். நான் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்க நிறைய இருக்கின்றன. எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன். என் மூலம் குறைந்தது ஒருவருக்கேனும் இந்த வலைப்பூ அறிமுகமாகுமெனில் மிக மகிழ்வேன்.

சினிமாவும் மூச்சுத்திணறலும்

ஒரு பிடி சோறு


நான் நிறுத்த வேண்டும்

-ப்ரியமுடன்
சேரல்

Monday, October 19, 2009

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள்

Tuesday, October 13, 2009

படிந்த வரிகள் - 11

மிருகங்கள் ஆடித் திரியும்
கனவில்
மிதிபடுகிறது
ஒரு புல்லாங்குழல்
நசுங்க நசுங்க
இசையின் வலி
பரவுகிறது காற்றில்

- கவிஞர் ராஜா சந்திரசேகர்

(http://raajaachandrasekar.blogspot.com/)

Monday, October 12, 2009

அகநாழிகை இதழில் என் கவிதைகள்

அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழின் முதல் இதழ் இம்மாதம் வெளியாகி இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் என் கவிதைகள்.

* மிருகம் நீயென்றுணர்
* எல்லா ஊர்களிலும் ஒரு கதை
* தன்னிரக்கம்
* ஒத்ததிர்வு
* வாயுள்ளது

இப்புதிய இதழ் தன் இலக்கை எட்ட என் வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

Friday, October 09, 2009

வெளியில் நனையும் மழை

மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்

மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்

முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை

வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை

இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்

Monday, October 05, 2009

தி.நகர்

தலைமுறை தலைமுறையாக
இந்தக் கடையில் தான்
நகையெடுக்கிறோம்

தலைமுறை தலைமுறையாக
இந்தக் கடை வாசலில் தான்
பிச்சையெடுக்கிறோம்

தலைமுறை தலைமுறையாக
இதையேதான்
எழுதிக்கொண்டிருக்கிறோம்

Friday, September 18, 2009

குந்துதல்

உடல் சதையை
வியர்வையில் கரைப்பவனுக்கு
ஓடுகளம்

வாகன இரைச்சலுக்கிடையிலும்
நெற்றிப்பொட்டில்
தீபமேற்றும் வித்தைக்காரனுக்கு
தியானபீடம்

முதல் போனியின்
சாத்தியம் தேடித் திரியும்
தேநீர்க்காரனுக்குப்
பிழைக்குமிடம்

வெளிச்சத்தின்
இருப்பையும்,
இருட்டையும்
ரசிக்கும் யாத்ரீகனுக்குச்
சொர்க்க பூமி

அமாவாசை
அதிகாலை
பித்ருக்களுக்குப்
பிண்டம் வைப்பவனுக்குப்
புனிதத்தலம்

என்றெலாமானது,
அவசரமாகவெழும்
சூரியனைச் சபித்தபடி
உள்ளாடை நீக்கி
உட்காருபவனுக்குக்
கழிப்பிடமுமாகிறது

சரிதான்

குந்தக்கூட இடமில்லாதவனுக்குக்
கடற்கரையாவது?
கருவறையாவது?

Wednesday, September 16, 2009

ஆனந்த விகடன் - 3

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

16/09/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் என் கவிதையொன்று பிரசுரமாகி இருக்கிறது.

பின்னோட்டம்

-ப்ரியமுடன்
சேரல்

Thursday, September 10, 2009

மஞ்சள் நிறத்தொரு கண்

காத்திருக்கவோ,
ஊடே புகுந்து செல்லவோ,
விதிகள் மீறவோ
யாருமின்றி
மஞ்சள் கண் பொருத்தி
இரவெல்லாம் விழித்துக்
கிடக்கிறது
ட்ராபிக் சிக்னல்
ஒரு
கைக்கிளைக்காரியென

Monday, September 07, 2009

ஒற்றைப்புள்ளியில் நான்

சக நிகழ்வுகளின் பின்னலாகவே அமைந்திருக்கிறது வாழ்க்கை. எதையெல்லாம் சக நிகழ்வுகள் என்று கொள்ளமுடியும்? இருவேறு திசைகளில் செல்கிற பயணங்கள் ஒரு புள்ளியில் இளைப்பாறுமானால், தொடர்பற்ற இரு போக்குகளில் திடீரென மாற்றமேற்பட்டு அவை ஒருமிக்குமானால், எதைப் பற்றிய சிந்தனையிலோ செயலிலோ ஆழ்ந்திருக்கையில் தொடர்பற்ற ஆனால் ஏதோ ஒரு வகையில் தொடர்புறும் சாத்தியமுள்ள மற்றொன்றின் குறுக்கீடு ஏற்படுமானால், அவற்றைச் சக நிகழ்வுகள் என்று சொல்லலாமா? ஆம் எனில், சக நிகழ்வுகளின் விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கிறது.

1. புத்தகம் வலைப்பூவில் தமிழகத்தடங்கள் என்ற நூலினைப் பற்றிய பதிவை எழுதியிருந்தோம். கீழ்வெண்மணி எனும் ஊரில் நடந்த ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான கொடுமையைப் பற்றி அப்புத்தக ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு அருகிலேயே இக்கிராமம் இருப்பதால், அது தொடர்பான என் அனுபவங்களையும் இணைத்துப் பதிவில் எழுதி இருந்தேன். பதிவிட்ட மறுநாள் அதிகாலையில், நண்பனொருவனைப் பார்க்கப் போக, யதேச்சையாக இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல் கிடைத்தது. இந்த நாவல் கீழவெண்மணி சம்பவத்தை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. பாலியல் சார்ந்து இப்பிரச்சினையை அணுகி இருப்பார் இ.பா. என்று அறிந்திருக்கிறேன்.

2. நேற்று உரையாடல் அமைப்பின் சார்பில், கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் நடந்த உலகத் திரைப்படக் காட்சிக்கு சென்றிருந்தேன். திரைப்படத் திரையிடலுக்கு முன்பாக, எழுத்தாளர் மௌனி பற்றிய ஆவணப்படம் திரையிட ஏற்பாடாகி இருப்பதாக திரு.சிவராமன் அறிவித்திருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் ரவி சுப்ரமணியன், சாகித்திய அகாடமி தயாரிப்பில் இதை இயக்கி இருக்கிறார். மௌனியிலிருந்து திடீரென்று இ.பா.வுக்குத் தாவிய நிகழ்வு என்னுள் இன்னொரு தாக்கத்தைக் கொடுத்தது. இந்நிகழ்வுக்குப் புறப்படும் வரை நான் குருதிப்புனல் படித்துக்கொண்டிருந்தேன் என்பது இங்கு குறிக்கத்தகுந்தது.

3. நண்பன் சேகர் 'பெயரற்ற யாத்ரீகன்' ஜென் கவிதைத் தொகுப்பு குறித்த தன் பார்வையைப் புத்தகம் வலைப்பூவுக்காக எழுதி அனுப்பி இருந்தான். அவன் அனுப்பிய வேளையில் நான் சிலாகித்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அதே 'பெயரற்ற யாத்ரீகன்'. யுவன் சந்திரசேகர் மொழி பெயர்த்த ஜென் கவிதைகளின் தொகுப்பு இது.

இம்மூன்று நிகழ்வுகளுமே கடந்த நான்கு நாட்களுக்குள் நடந்தேறியவை. இதைத்தான் ஆத்திகர்கள் கடவுள் என்கிறார்கள். நாத்திகர்கள் தற்செயல் என்கிறார்கள். நான் தொடர்புள்ள, அல்லது தொடர்பற்ற சக நிகழ்வுகள் என்கிறேன். இந்நிகழ்வுகளுக்கான காரணம் எதுவென்ற தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே இன்னும் சில ஆச்சரியங்கள் வந்து என்னை மூழ்கடித்துவிடுகின்றன. எது எப்படியோ? இந்த நிகழ்வுகளுக்குள் ஓர் அழகு இருக்கிறது. இந்த வலைப்பின்னலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் வரையிலும் வாழ்க்கையும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

Friday, September 04, 2009

பார்த்தன்களுக்குப் புதிய கீதை

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது

ஆம்
பார்த்தோம்

எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது

ஆம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்

எது நடக்கவிருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்

ஆம்
அதையும் பார்த்துத் தொலைப்போம்,
பிழைத்திருப்பின்

நடப்பதெதையும்
பார்த்துக்கிடப்பதன்றி
வேறென்ன கிழித்துவிட
முடிகிறது நம்மால்?

படிந்த வரிகள் - 10

கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்.
பச்சையைக் குறிக்கலாம்.
மூக்கைக் குறிக்கலாம்.
பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்
சிறையைக் குறிக்கலாம்.
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்.

-கவிஞர் யுவன் (சந்திரசேகர்)

'முதல் 74 கவிதைகள்' தொகுப்பிலிருந்து

Tuesday, September 01, 2009

'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இதழ்களில் என் கவிதைகள்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

என் படைப்புகள் 'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இலக்கிய இதழ்களின் செப்டம்பர் 2009 மாதப் பதிப்பில் பிரசுரமாகி இருக்கின்றன.

உயிர்மையில் நான் எழுதிய 'விழித்திருப்பவனின் இரவு' கவிதை வெளியாகி இருக்கிறது. நீளம் கருதியோ, அல்லது வேறென்ன காரணத்தாலோ கவிதையின் பாதியை மட்டுமே பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

வார்த்தை இதழில் கீழுள்ள கவிதை வெளியாகியிருக்கிறது.


காற்றைச் சுமந்து அலைபவர்கள்

காற்றின் அடர்த்தி குறைந்த
வீதிகளில்
இறுக்கமான முகத்துடனே
அலைகிறார்கள்
பலூன் காரர்கள்

குழந்தைகள் சத்தம்
கேட்காத வீடுகளை
அறவே வெறுக்கிறார்கள்

குரங்காட்டிகள் வழிகாட்ட
திருவிழாக்கள்
தேடி நடந்தே அலைகிறார்கள்

அடிவயிற்றில் இருந்து
இழுத்துச் செலுத்திய
காற்றடைக்கப்பட்ட பலூன்கள்
எப்போதும் அவர்கள்
கைகளைவிட்டுப் பறந்தோடத்
தயாராய் இருக்கின்றன

பெண்ணின் மதர்த்த தனங்களையும்,
வீட்டுக் கூரைகளில் நெளியும் சுரையையும்
சீட்டுக்கட்டு காதல் சின்னங்களையும்
நினைவுறுத்துவதாய்
இருக்கின்றன அவை

பலூன் காரர்களின்
ஞாபகத்தில் இருப்பதே இல்லை
சிறுவயதில் தாங்கள்
பலூன்கள் வைத்து விளையாடியதான
நினைவுகள்

பலூன் பரப்பும்
ரப்பர் வாசத்தை
தாயின் வாசம் ருசிக்கும்
குழந்தையெனப்
பருகிறார்கள்

எடையற்ற காற்றைச்
சுமந்தபடி
போய்க்கொண்டே இருக்கிறார்கள்
பலூன்கள் குறித்த
கனவுகள் கண்டிருக்கும்
குழந்தைகளைத் தேடி...


-ப்ரியமுடன்
சேரல்

Thursday, August 27, 2009

ஆனந்த விகடன் - 2

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

இவ்வாரம்(02/09/2009) ஆனந்த விகடனில் என் குறுங்கவிதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது.

வெட்கம்

-ப்ரியமுடன்
சேரல்

Monday, August 24, 2009

மணல் வீடு - சிற்றிதழ்

மணல்வீடு சிற்றிதழின் ஆகஸ்ட் பதிப்பில் பிரசுரமாகி இருக்கும் என் கவிதைகள்

* கவிதை
* புலம் பெயர்தல்

Friday, August 21, 2009

எல்லாக் கரைகளிலும் ஒரே கடல்

சுத்தமான காற்று, யாருமற்ற வெளி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் கடல், சலனப்படங்களிலும் நிழற்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கும் மணற்பரப்பு, இப்படியான ஒரு காட்சியைச் சென்னையில் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. ஆனாலும் இது சாத்தியம். திருவான்மியூரிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பதினைந்து கிலோமீட்டர் பயணித்தபிறகு, வழி தெரியும் எந்த இடத்திலும் கடலை நோக்கிச் சென்றால் இந்த காட்சி கிடைக்கும். நண்பர்களுடன் மாமல்லபுரம் போகும் வழியில் யதேச்சையாக இந்த இடம் அறிமுகமானது. மனிதர்கள் இல்லாத கடலாடுதல் என்பதே நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருக்கிறது.சென்னையில் இருக்கும் மற்ற கடற்கரைகளுக்கும் போய் வந்திருக்கிறேன். எல்லாமே ஒரே கடல்தானே என்று சிந்திக்கும் போது, உலகம் முழுவதும் கூட ஒரே கடல்தானே என்று எண்ணத்தோன்றும். என் கால் விரல் நனைத்த சமுத்திரத்தின் துளி, என்றேனும் ஒரு நாள் ஓர் ஆஸ்திரேலிய அழகியின் விரல் தொட்டுத் திரும்பலாம்; நீருக்கலையும் ஓர் அரேபியப் பயணியின் எரிச்சலுற்ற முகத்தைத் தரிசிக்கலாம்; தூந்திரம் சேர்ந்து உறைந்துபோய் பனிப்பெருவெளியின் பரப்பில் ஒரு துகளாகலாம்; உலகம் சுற்றி மீண்டும் இக்கரை சேர்ந்து என்னைத் தேடலாம்; அல்லது, வழியிலேயே சூரியனின் தாகம் தணித்துத் தொலைந்து போகலாம்.

சென்னைக்கு சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்பு தான் முதன் முறையாக வந்திருந்தேன். அதற்கு முன் மெரீனாவைப் பற்றி எனக்குக் கிடைத்திருந்த அறிமுகம் என்னைத் திகிலடையச் செய்வதாகவே இருந்தது. கல்லூரி காலத்தில், நண்பனொருவன் சென்னைக்கு வந்துவிட்டு, கடற்கரையில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும், தான் பார்த்த காட்சிகளையும் சொல்ல, சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு மேலிட்டது. மெரீனாவை முதல் முறை அதே நண்பனோடு நேரில் பார்க்க நேர்ந்த போது, அவன் சொன்ன செய்திகளையும் அதன் மீதான என் கற்பனைகளையும் முழுவதுமாகத் தவிர்த்துவிடமுடியவில்லை. கேள்வி ஞானத்தில் அறிமுகமாகிற பல விஷயங்களை நேரில் பார்க்கையில், இப்படியான அனுபவம் ஏற்படுவது இயல்பு.

மக்கள் கூட்டம் நிறைந்து கிடக்கும் மெரீனாவின் அந்தரங்கத்தை ரசிக்க பல நாள் ஆசைப்பட்டிருக்கிறேன். சென்ற மாதம் மழை பெய்த ஒரு விடுமுறை நாளின் இரவில் அந்த வாய்ப்பு கிடைத்தது. மழை தொடங்கிய சில நிமிடங்களில், நானும் நண்பர் ஒருவரும் எங்கள் பயணத்தினூடே மெரீனாவை ஒட்டி இருக்கும் கடற்கரைச் சாலையில் இருந்தோம். கடலுக்குப் போகலாம் என்றார் நண்பர். சென்றோம். இரவு எட்டரை மணிக்கு, மனிதர்களும், கடைகளும் இயங்காது இருந்த கடற்கரை ரம்மியமாக இருந்தது. அடித்துக்கொண்டிருந்த சாரல் சிறிது நேரத்தில் நின்று போனது. சில நிமிடங்கள் கடலாடிப் பின் திரும்பினோம்.

அதிகாலையில் சுமார் ஐந்து மணிக்கு வந்தால், யாருக்கும் மெரீனாவையும் பிடித்துப்போகும். உடற்பயிற்சி, கராத்தே, யோகா, நடை, ஓட்டம் இதற்காக வரும் சொற்பமான மனிதர்களை ஐந்தரை மணியிலிருந்து பார்க்கலாம். அந்த நேரத்தில் கடலைப்பார்ப்பதற்கென்று வந்தவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன் என்பதில் கொஞ்சம் கர்வமும் உண்டு.

மேல்தட்டு மக்கள் அதிகம் உலவுகிற பகுதியாக எனக்கு அடையாளப்படுகிறது பெசன்ட்நகர் கடற்கரை என்னும் எல்லியட்ஸ் கடற்கரை. இங்கே காலை வேளைகளில் நான் போனதில்லை. இரண்டு ரூபாயைத் தானமாகக் கொடுத்த பெண்ணிடம் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்ட பிச்சைக்காரரை இக்கடற்கரையைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் நண்பனொருவன் நினைவு கூர்வான். விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மெரீனா அளவுக்கு இங்கு கூட்டம் சேர்வதில்லை. ஆனால், இங்கும் நான் விரும்பும் தனிமை கிடைப்பதில்லை.

எங்கேயும், உடன் சுற்றும் மனிதர்கள் என் இருப்பை இல்லாததாக்குகிறார்கள். கடற்கரை கூட்டங்களில் ஒரே ஆறுதல், அங்கே விளையாடும் குழந்தைகள். அவர்களுக்கான ஒரு நூதன வித்தைக்காரன் என்பது போலும் வந்து வந்து மீண்டு, வித்தை காட்டுகிறது கடல். கடலின் ஆரவாரத்தைப் பெற்றுக் கொண்டு, தங்கள் புன்னகையைக் கடலுக்குக் கொடுத்துப்போகிறார்கள் குழந்தைகள்.

மெரீனாவை ஆக்கிரமித்திருந்த கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, எலியட்ஸ் கடற்கரையையும் தொட்டிருக்கிறது. அதை அடுத்திருக்கும் திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரைகளிலும் இப்போது ஐஸ்கிரீம் விற்பவர்களையும், ராட்டினக்காரர்களையும் பார்க்க முடிகிறது.

இதற்கு மாறாக, வட சென்னையின் கடற்கரைகளில் மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் இருப்பதில்லை. காசிமேடு, ராயபுரம் பகுதிகள் மீன் பிடித்துறைமுகங்களாக இருக்கின்றன. இங்கே காதலர்களோ, குழந்தைகளோ கொண்டாட என்று எதுவுமில்லை. அதைத்தாண்டி வடக்கே செல்லச்செல்ல மண்ணரிப்பைத் தடுக்க வேண்டி குவிக்கப்பட்டிருக்கும் பாறைகளைத்தான் கடற்கரை என்பதாகக் காண நேரிடுகிறது. இந்தக் கடற்கரையை ஒட்டிய சாலை, துறைமுகத்தைச் சேர்ந்த வாகனங்களின் போக்குவரத்துக்காகவே அமைந்திருக்கிறது. இங்கும் ரசிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அது கண்களைப் பொருத்தது. மற்ற கடற்கரைகளில் இருப்பவற்றை எதிர்பார்ப்பவர்கள் இங்கு வருவதைத் தவிர்க்கலாம். ஆனால், இது ஒரு வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.

சென்னையில் கடல் பார்த்த இடங்களில் சேர்ந்து கொள்பவை சாந்தோமும், திருவெற்றியூரும். இன்னும் பார்க்காமல் மீதமிருப்பது பட்டினப்பாக்கம் கடற்கரை. இந்த இடங்கள் அனைத்துமே மீனவர்களுக்கானவையே.

பல கரைகளையும் கண்ட பிறகு ஏற்பட்ட தெளிவு, எந்தக் கரையானாலும், கடல் ஒன்றே! கூட்டத்தில் தனியனாயும், தனிமையில் கூட்டமாயும் உணரச்செய்வது காதல் மட்டுமில்லை, கடலும்....

Thursday, August 20, 2009

ஆனந்த விகடன்

நான் எழுதிய 'யாரோ ஒருத்தி' கவிதை, இந்த வாரம் ஆனந்த விகடன்(26/08/2009) இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

பின் குறிப்பு : அட்டைப்படத்தில் நம்ம 'தல' இருக்காரு :)

-ப்ரியமுடன்
சேரல்

Saturday, August 15, 2009

சுதந்திரநாள் கவிதை

கவிஞர் யுவன் (சந்திரசேகர்) எழுதிய கவிதை இது. 'முதல் 74 கவிதைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

பேட்டி

ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால் கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாய்ச் சுருண்டிருக்கக்
கண்டேன்
பொழுது போகாமல்
கேட்டேன்
'இந்திய சுதந்திரத்தின்
பொன்விழா பற்றி....'
'என்ன பெரிய சுதந்திரம்
பையன்கள் இன்னும்
குத்துகிறார்கள் குச்சியால்'
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த்துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து.
பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து,
'என்றாலும்
வாழ்க்கைத் தரம்.....?'
என்றேன்.
'நோ கமெண்ட்ஸ்' என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள்
இழுத்து வைத்து.

Thursday, August 13, 2009

சுயம்

யாரும் பார்க்காத பொழுதொன்றில்
எல்லோரும் பார்க்க
பருத்த உடல் தூக்கி
ஓட்டமும் நடையுமாய்க்
கீழே குனிந்தபடி
மூச்சிறைக்க ஓடி வந்தும்
பேருந்தைத் தவற விட்டிருந்தாள்
ஒரு பெண்

எந்தச் சலனமும் அற்று
தத்தம் வழிதொடர்ந்தனர்
சுற்றி இருப்போர்

தன் சுயத்துக்குப்
பேரழிவு நிகழ்ந்ததெனச்
சூன்யத்தைச் சுமந்தபடி
இடம் விட்டகல எத்தனிக்கிறாள் அவள்

இன்றிரவு அவள்
தாமதமாகத் தூங்கக்கூடும்

Wednesday, August 12, 2009

படிந்த வரிகள் - 9

விரையும் பேருந்தில்
விடாது குழந்தையழ
முந்தியோடு
கூச்சத்தையும்
விலக்கும் தாயன்பு

- கவிஞர் யுகபாரதி

Tuesday, August 11, 2009

இல்லாத முகவரிகள் - 6

திருநெல்வேலி என்றதும் தமிழ்த் திரைப்படங்கள் ஏற்படுத்தி இருக்கிற பிம்பம் கண்முன் விரிந்துவிடுகிறது. அந்த பிம்பத்தின் நீள அகலங்களோடு கொஞ்சமும் தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அம்மாநகரம். மழை பெய்து முடித்திருந்த மாலைப் பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி திருநெல்வேலியில் இறங்கி நடந்தோம். தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நல்ல மழை என்றது செய்தித்தாள் விற்கும் கடையின் முன்னே தொங்க விடப்பட்டிருந்த விளம்பரத் தாள். காய்ந்து கிடந்த திருச்சியிலிருந்து பயணத்தைத் துவங்கிய நாமே இதற்கு நல்ல சாட்சி என்றான் நண்பன். உண்மைதான் என்றேன் நான்.

திருநெல்வேலியில் என்ன செய்வது என்ற அறிவில்லை. எங்கள் திட்டப்படி பயணத்தின் இந்த இரண்டாவது இரவை எங்காவது பயணித்துக் கடத்த வேண்டும். அவ்வளவே! மாநகரப் பேருந்து பிடித்து நெல்லையப்பர் கோயில் போய் (கோயிலுக்கெல்லாம் போகவில்லை.. :) )எதிர்ப்புறமிருந்த இருட்டுக் கடையில் அல்வா தின்றுவிட்டு, மீண்டும் பேருந்து பிடித்து திருநெல்வேலி பேருந்து நிலையம் வந்தடைந்தோம். தமிழ்நாட்டிலிருக்கும் இரட்டை நகரங்கள் இந்தத் திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும். இரண்டுக்கும் இடையே தாமிரபரணி, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டு ஓடுகிறது. இரண்டு நகரங்களையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்துக்கும் ஒரு தனி வரலாறு உண்டு. 'தமிழகத் தடங்கள்' புத்தகத்தில் மணா எழுதியிருப்பார்.

இரவு பேருந்து நிலையத்தில் எதைஎதையோ வேடிக்கை பார்த்துக் கழித்துக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்த விஷயம், இப்பொழுது வரை சொல்லிச் சொல்லிச் சிரிக்க வைக்கும். ஒரு கடையின் பெயர்ப் பலகையில் படித்தேன். 'சாந்தி ஸ்வீட்ஸ் - எங்களுக்கு திருநெல்வேலியிலோ வேறு எங்கோ கிளைகள் கிடையாது'. படித்து முடித்து விட்டு கண்களைச் சுழற்ற பார்க்கும் கடைகளில் எல்லாம் இதே பெயர், இதே வாசகம் கொண்ட பெயர்ப் பலகைகள். எது முதல் சாந்தி ஸ்வீட்ஸ்? யார் இந்த வாசகத்தை முதலில் எழுதியது என்று நெல்லை நண்பர்களைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை.

திருநெல்வேலியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கன்னியாகுமரி சென்றடைந்து விடலாம் என்றான் நண்பன். நடு ராத்திரியில் அங்கே போய் என்ன செய்வது? பேருந்தில் கடத்த இன்னொரு இரவும் காத்திருக்கிறது என்ற முடிவோடு திருச்செந்தூர் சென்று பின் அங்கிருந்து குமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். திருசெந்தூருக்குப் பேருந்துகள் எதுவும் அப்போது இல்லை. சரி...முதலில் தூத்துக்குடி போய் பிறகு அங்கிருந்து திருச்செந்தூர் பேருந்து பிடிக்கலாம் என்று தூத்துக்குடி செல்லும் பேருந்தில் ஏறினோம். ஏறியது தான் நினைவில் இருந்தது. மழை பெய்வதைக் கூட ரசிக்கவோ, பொருட்படுத்தவோ செய்யாமல் அப்படி ஒரு தூக்கம். தூத்துக்குடியில் இறங்கிய பொழுது மழை விட்டிருந்தது.

பிறகுதான் செய்தி சொன்னார்கள். தூத்துக்குடியில் இருந்து இரவு வேளைகளில் திருச்செந்தூருக்குப் பேருந்துகள் புறப்படாது. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் தான், இந்த வழியாகப் போகும் என்றதும் ஐயோ என்றானது. தேநீர் ஒன்றைக் குடித்தபடி காத்திருந்தோம். மழை பெய்த இரவில் ஊரைப் பற்றிய கணிப்புகள் எதுவும் செய்ய முடியவில்லை. மழை பெய்கிற இரவுகள் எப்போதும் தவளைகளுக்கு மட்டுமே கொண்டாட்டமாக இருக்கின்றன. மனிதர்கள் தத்தமக்கு ஏற்ற வெப்பம் தருவதான உபாயங்களைத் தேடத் தொடங்கி விடுகிறோம்.

அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தோம். திருச்செந்தூர் வந்த போது நள்ளிரவு ஆகியிருந்தது. கோயிலுக்கு எப்படிப் போவது என்று வழி கேட்டு நடந்தோம். எதற்காகக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமலே ஏதேதோ பேசியபடி நடந்தோம். கோயிலுக்குப் போவதை விட, கடலைக் காண வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்கியிருந்தது. நான் கடலைப் பார்த்து வெகு நாட்களாகி இருந்தது நினைவுக்கு வந்தது. நள்ளிரவு இருட்டில் கடலின் பேரோசை எழுந்த திசையை மட்டும் இனம் காண முடிந்தது. அந்த ஊரில் கடலுக்கு இருளில் செல்வது நல்லதல்ல, கரை முழுதும் பாறைகள் இருக்குமென்று அறிவுறுத்தினார்கள் சிலர். ஏமாற்றத்துடன் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே திரும்பி குமரியை நோக்கிப் பயணப்படலாம் என்று புறப்பட்ட பொழுதுதான் அவனை(ரை)ச் சந்திக்க நேர்ந்தது. இன்று வரைக்கும் அந்த மனிதனை நினைத்து, சிரித்துக் கொள்கிறோம் நானும் நண்பனும். இந்தப் பயணத்தைப் பற்றி எழுதும் போது, அந்த மனிதனைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டான் நண்பன்.

Friday, August 07, 2009

முதல் மழை

குழந்தை அழும்போது, அது பாலுக்கானதா, அணைப்புக்கானதா, ஈரத்திலிருந்து விடுபடும் நோக்கத்துக்கானதா, புறப் பொருட்களின் இம்சையினின்றும் மீள்வதற்கானதா என்பதைப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்யும் தாயின் செயல்களில் துவங்குகிறது அங்கீகாரம் என்கிற விஷயம். ஒவ்வொரு வயதிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதோவொரு சொல்லுக்கான, செயலுக்கான அங்கீகாரத்தை மனித மனம் யாசித்துக் கொண்டே இருக்கிறது. சரியான அங்கீகாரம் கிடைத்து விடுகிற பொழுதில் கிடைக்கும் இன்பம் சிந்தனைக்கப்பாற்பட்டது. எனக்கு சமீபத்தில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற தெர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளுள் என்னுடையதும் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. சிறுகதை என்ற தளத்தில் நான் ஒரு நல்ல வாசகன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எந்த அளவுக்கு நான் ஒரு நல்ல படைப்பாளி என்பதைப் படிப்பவர்களே சொல்ல வேண்டும். முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டதைப் போல, நான் தீராத காதல் கொள்கிற ஓர் இலக்கிய வடிவம் சிறுகதை. கவிதைகளை விடவும் நான் சிறுகதைகளை அதீதமாக நேசிக்கிறேன். என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை, நான் பார்த்த மனிதர்களை, நான் விரும்புகிற வாழ்வைப் பதிவு செய்ய ஒரு நல்ல ஊடகமாக சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் நான் சிறுகதைகளை அதிகமாக எழுதியதில்லை. சமீபத்தில் அதிர்ஷ்ட வசமாகவோ, துரதிர்ஷ்ட வசமாகவோ எனக்குப் பணியில் இருந்த கிடைத்த மூன்று மாத இடைவெளியில் சில சிறுகதைகளை எழுதி, பதிவிடாமலே வைத்திருக்கிறேன். கொஞ்சம் திருத்தங்கள் செய்து அவற்றை வெளியிடும் எண்ணம் உண்டு.

இந்த முதல் அங்கீகாரம் எனக்குத் தெம்பளிக்கிறது. நானும் சிறுகதைகள் எழுதலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்.

இந்தப் பதிவை ஒரு நன்றி சொல்லும் பதிவாகக் கொள்ளலாம். வலைப்பதிவர்களுக்கென்று ஒரு போட்டியை, வெகு சிரத்தை எடுத்து நடத்தி முடித்திருக்கும், இன்னும் பல நிகழ்வுகளை நடத்தவிருக்கும் திரு 'சிவராம்'(பைத்தியக்காரன்) மற்றும் திரு 'ஜ்யோவ்ராம் சுந்தர்' இவர்களுக்கும், இவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட அனைவருக்கும், 20 சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட இசைந்திருக்கும் 'கிழக்கு' பதிப்பகத்தாருக்கும், திரு பத்ரி அவர்களுக்கும், பரிசு பெற்ற மற்ற பதிவர்களுக்கும், போட்டியில் உற்சாகத்தோடு கலந்து கொண்ட பதிவர்களுக்கும், என் எழுத்தை தொடர்ந்து வாசித்து ஊக்குவித்தும், குறைகள் சொல்லியும் பின்னூட்டமிடும் நண்பர்கள் அனைவருக்கும், இந்தப் போட்டிக்கென நான் எழுதி இருந்த மூன்று சிறுகதைகளில் இதைத் தான் அனுப்ப வேண்டும் என்று ஒரு மனதாகத் தெரிவித்த நண்பர்கள் சுரேஷ்பிரபு, சுரேன் கீர்த்தி, ஞானசேகர் இவர்களுக்கும், என் படைப்புகளுக்கு முதல் வாசகியாகவும் இக்கதைக்காக நான் வைத்திருந்த இரு தலைப்புகளுள் இதைத் தேர்வு செய்து அளித்தும் இருக்கும் என் தோழி சுசித்ராவுக்கும், என்றும் என்னை முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கும் என் பிரியத்துக்குரிய, என் மீது பிரியமான அனைவருக்கும் என் நன்றிகள் எப்போதும்.....

-ப்ரியமுடன்
சேரல்

சிறுகதைக்கான தொடுப்பு : http://seralathan.blogspot.com/2009/06/blog-post_29.html

போட்டி முடிவுகள் : http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

Wednesday, August 05, 2009

எவளுக்கும் எவனுக்கும் ஒரே இரவு

இதுவரை
எது எதற்கோ
தன்னுடலில்
இருப்பதாக நினைத்த
எது எதுவோ
எல்லாம்,
வேறு
எது எதற்கோ
என்று புரியவைக்க
எவனோ வந்த பிறகு
எது எதுவும்
எது எதுவுமாகிப் போகட்டும்
என்று
எது எதுவோ
ஆகிவிடுகிறாள்
எவளும்

Monday, August 03, 2009

Spring, Summer, Fall, Winter and Springஇந்த ஆக்கம் 'யுகமாயினி' இலக்கிய இதழின் ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது


மார்புக் கச்சையை இறுக்கிக்கொண்டு தயாராகிறாள் நர்த்தகி. மடம் இதுவரை காணாத வித்தியாசமான நிறத்தைப் பூசிக்கொள்கிறது. சுற்றிச் சுழன்று, காற்றின் திசை மாற்றுகிறாள். வேர்களைப் பற்றிய நினைவுகளின்றி இலைகளும் பூக்களும் நர்த்தகியின் அழகில் மயங்கிக்கிடக்கின்றன. வியர்த்துப்பெருகுகிறார்கள் ஞானம் தேடிவந்த சீடர்கள். மானுடப்புழக்கமேதும் இல்லாது தனிமையில் உறைந்திருக்கும் பின்னிரவுக் குளமென சலனமேதுமற்று அமைதியில் நிறைந்திருக்கிறார் குரு. காமத்தின் பிரவாகத்தில் எல்லோரையும் மூழ்கடித்துவிடுவதென்று ஆடத்தொடங்கியவள் களைத்துச் சரிகிறாள். விம்மிச் சரியும் மார்புகளில் கண்களைத் தொலைத்திருக்கிறார்கள் சீடர்கள். எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதான ஒரு நிலையைத் தனதாக்கிக்கொண்ட குரு அவளை வழியனுப்புகிறார். தோல்வியின் சுவடுகளின் வழி அவள் பல்லக்கு ஊர்ந்து போகிறது. தீராத தாகத்தின் பிடியில் சிக்குண்டு, தாகமேற்படுத்திய தடாகம் தொலைவில் சிறுபுள்ளியாய் மறைவதைப் பார்ததவண்ணமிருக்கின்றனர் சீடர்கள். குரு பேசுகிறார். 'எல்லாவற்றையும் கடந்த நிலை என்பதை விளங்கிக்கொள்வதற்கோர் வாய்ப்பான நிகழ்வு இது. அவள் நடனத்தில் நீங்கள் வியர்த்தீர்கள்; உணர்வுகளின் வசம் உங்களை இழந்தீர்கள்; அவள் போன வழியில் நீங்கள் தொலைந்து போயிருக்கிறீர்கள். மெல்ல மெல்ல அவிழும் பூக்களுக்கும், அவள் மேனிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று உணர்கிறீர்கள் நீங்கள். அப்படியே உணர்கிறேன் நானும். பூக்களின் மென்மையின்பாலான மோகம் உங்களை அப்படி எண்ண வைத்திருக்கிறது. பூக்களின் பலவீனமான இயல்பைக் குறித்த பரிதாபம் என்னை இப்படி எண்ணவைத்திருக்கிறது. கடந்து போகும் நிலையைக் கைக்கொள்ளும் வேளையில் உங்களுக்கும் இது விளங்கக்கூடும்; நீங்களும் இவ்விதமே எண்ணக்கூடும்'. புரியாதமொழியில் இலக்கியச் சொற்பொழிவு கேட்டவர்களெனச் சமைந்திருக்கிறார்கள் சீடர்கள். இருளும் ஒளியும் புணர்ந்த நிலையில் வாசல் வழியோடும் ஆற்றில் மங்கலான தன் பிம்பம் பார்த்திருக்கிறது மடம்.

வழிகள் எதுவும் இன்றி மரங்களுக்கிடைப்பட்ட நிலப்பரப்பில் நடக்கிறார்கள் இருவர். சூரியன் உச்சியில் நிற்கிறது. ஞானத்தின் கூறுகளை விளக்கிக்கொண்டே நடக்கிறார் குரு. கேட்டபடியே சூழ்நிலையை அவதானித்துக்கொண்டு நடக்கிறான் சீடன். இலக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கலாம். அந்தப் பருத்த மரத்தின் பின்னே மறைந்துமிருக்கலாம். இலக்குகள் எப்போதும் தன்னிருப்பிடத்தை அறிவித்துக்கொள்வதில்லை. அலைந்து திரிபவர்கள் எப்படியேனும் அடைந்து விடுகிறார்கள். இவர்களும் அடையவிருக்கிறார்கள். வழியில் காலாறப் படுத்துக்கிடக்கிறது ஒரு காட்டாறு. மறுகரையில் விரிந்துகிடக்கும் பள்ளத்தாக்கை நோக்கியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இவர்கள் பயணம். இக்கரையை அடைந்ததும் கண்ணுக்குத் தெரிகிறாள் காட்டாறு கடக்கக் காத்திருக்கும் ஓர் இளம்பெண். கரை புரண்டோடும் வெள்ளம் அவளை அக்கரை பற்றிய கனவுகளில் மட்டும் ஆழ்த்தி வைத்திருக்கிறது. ஆழம் எவ்வளவு இருக்குமென்ற அனுமானம் எவருக்கும் இல்லை. கண்களில் கேள்வியோடும், தயக்கத்தோடும் நின்றவளை தூக்கிச் சுமந்து மறுகரையேற்றுகிறார் குரு. சீடன் காட்சிகளை உள்வாங்கிக்கொள்கிறான். மூவரும் கரையேறி இருவேறு வழிகளில் பயணிக்கிறார்கள். மனதை அரிக்கும் கேள்வியொன்றைச் சுமந்தவண்ணம் அமைதியிழந்தவனாகிறான் சீடன். போதனையில் மனம் லயிக்காதவனின் போக்கறிந்து கேட்கிறார் குரு. சீடன் தயக்கத்துடன் 'இளைஞன் நான் அப்பெண்ணைத் தூக்கிச்சுமந்திருந்தால் அதுவே ஞானமார்க்கத்தினின்றும் வேறு பாதையில் இட்டுச்செல்லும் விசையாய் இருந்திருக்கும். இப்படி இருக்கையில் முற்றும் துறந்த குரு தாங்கள் ஒரு இளம்பெண்ணைச் சுமப்பது எப்படி தகும்?' என்கிறான். குரு ஒரே பதிலைக் கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்கிறார். 'நான் அப்பெண்ணை அந்த ஆற்றங்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?'. பதில் கிடைக்கப்பெறுகிற சீடன் ஒளி தெரியும் புது வழியில் நடக்கத் தொடங்குகிறான்.

ஞானத்தின் வழிநடத்தும் குருவைத் தேடி வருகிறான் ஒரு சம்சாரி. 'ஞானம் என்பது என்ன? அதை எப்படி அடைவது?' என்று காற்றெல்லாம் கிழிய கேட்டு வந்தவனைத் துரத்தி அனுப்புகிறார் குரு. ஆண்டுகள் கழித்துத் திரும்பி வா என்ற பதிலோடு அவன் திரும்பிப்போகிறான். மீண்டும் ஆண்டுகள் கழித்து மீண்டு வருபவன், ஞானத்தின் மர்மம் நோக்கிச் செல்லும் வழி எங்கே தொடங்குகிறது என்கிறான். மீண்டும் பழைய பதிலோடு திரும்பிப் போகிறான். ஆண்டுகள் கழித்து மீள்கிறான். ஞானம் நமக்குத் தருவதுதான் என்ன? என்கிறான். மீண்டும் அதே பதில். அதன் பின் அவன் திரும்பி வரவேயில்லை. கேள்விகளின் பரப்பில் அலையத்தொடங்கும் சீடர்கள் கேட்கிறார்கள். 'ஏன் அந்த சம்சாரி திரும்பவில்லை?'. குரு சொல்கிறார், 'இல்லற தர்மத்தில் இருக்கும் ஞானத்தையும் அதை அடையும் மார்க்கத்தையும், அதன் மர்மம் அறியும் வழிமுறையையும், அது அவனுக்குத் தரும் யோகத்தையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான். இனி அவன் திரும்ப மாட்டான்'. துறவறத்தின் ஞானமார்க்கத்தில் இன்னுமோர் அடி எடுத்து வைக்கிறார்கள் சீடர்கள்.

விதைகள் விழுந்து, வேரூன்றி, தளிர்கள் துளிர்த்து, கிளைகள் தோன்றி, வேர்கள் பரப்பி, இலைகள் உதிர்த்து, மீண்டும் துளிர்த்து, பூக்கள், காய்கள், கனிகள் தோன்றி மீண்டும் விதைகள் விழுந்து காலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. சீடர்கள் குருக்களாகிறார்கள். வாழ்க்கை தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது. ஞானம் தனக்கென்று விதிக்கப்பட்ட வழியில் மீண்டும் பரப்பப்படுகிறது. இந்தச் சுழற்சிக்கு ஓரணு உயிர்களிலிருந்து, அணுக்களைப் பகுத்துணர்ந்திருக்கும் மனிதர்வரை எல்லோரும் பொதுவானவர்களே!

இந்திய ஆன்மீகம் சொல்லும் இந்தக்கதைகளும், அவை உணர்த்திச்செல்லும் உண்மைகளும் நமக்குள் புதிய கண்களைத் திறந்து வைக்கும் திறவுகோல்களாகின்றன. இதே போன்றதொரு உணர்வை என்னுள் எழுப்பிய ஒரு திரைப்படம் எனக்குச் சற்றும் புரியாத கொரிய மொழியில் அமைந்திருந்தது. மனித வாழ்வின் படிநிலைகளை, ஒவ்வொரு நிலையிலும் மனிதனின் உணர்வுகளை, அவன் கடந்துபோகும் நிகழ்வுகளை, அவன் பெறும் ஞானத்தை, பருவ கால நிலைகளைப் படிமமாக்கிப் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திரைப்படத்தின் பெயரே மேற்சொன்ன சுழற்சியை அழகுறக் கொண்டிருக்கிறது.குரு-சீடன் என்கிற அமைப்பும் கூட இந்தக் கதைகளை எனக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும். திரைப்படத்தைக் கதை சொல்லும் ஓர் ஊடகமாக மட்டும் பார்க்காமல், அதையும் மீறிய வாழ்வின் அற்புதங்களையும், ஆகச் சிறந்த கணங்களையும் பதிவு செய்யும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருக்கும் விதத்தை நாம் வியந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழ்கிற வாழ்க்கைச்சுழற்சி, அனுபவ மாற்றம், அறிவு முதிர்ச்சி இவைகளை மிக நுண்ணிய கண்கள் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.Spring பருவத்தில் துவங்குகிறது திரைப்படம். மரங்கள் நிறைந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கில் ஓர் ஏரி. ஏரியின் நடுவே ஒரு கோயில். அது ஒரு சிறு குடிலைப் போல அமைக்கப்பட்டிருக்கிறது. மிதந்து போகும் தன்மை கொண்டிருக்கிறது. அதில் ஒரு குரு தன் சீடனுடன் வாழ்கிறார். சீடன் ஒரு சிறுவன். அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக, படகில் ஏறி மறுகரைக்குச் சென்று காட்டுக்குள் மூலிகைகள் பறிக்கும் நிகழ்வு அமைகிறது. சிறுவனுக்கு எல்லாம் விளையாட்டு நிறைந்ததாகவே தெரிகிறது. ஏரியில் ஓடும் மீனுக்கும், தவளைக்கும், பாம்புக்கும், உடலில் கல்லைக் கட்டி ரசிக்கிறான். அவை இயங்க இயலாமல் இருக்கும் நிலை இவனைக் குதூகலிக்கச்செய்கிறது. குரு இவற்றைப் பார்க்கிறார்.இரவில் அவன் உறங்குகையில் அவன் முதுகில் அளவில் பெரிய கல்லைக் கட்டி விடுகிறார். காலையில் எழுந்து, நடமாட வெகு சிரமப்படும் சிறுவன் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறான். 'நீ துயரத்துக்குள்ளாக்கிய உயிர்களை விடுவித்து விட்டு வா; நான் உன்னை விடுவிக்கிறேன். ஆனால், அந்த உயிர்களில் ஏதேனும் ஒன்று இந்நேரம் இறந்திருந்தாலும், அந்தப் பாரத்தை உன் வாழ்வு முடியும் வரையிலும் உன் மனதில் சுமப்பாய்' என்கிறார் குரு. சீடன் மீனையும், தவளையையும், பாம்பையும் தேடிக் கண்டடைகிறான். மீனும், பாம்பும் இறந்திருக்கின்றன. தவளை ஊனத்துடன் நீந்திச் செல்கிறது. மீளாத் துயரில் ஆழும் சிறுவன், பீறிட்டு அழும் ஓசையோடு Spring நம்மைக் கடந்து செல்கிறது.

ஏரியில் சற்றே குறைந்த நீருடன் துவங்குகிறது Summer. வாலிபப் பருவத்தை எட்டியிருக்கும் சீடன், காட்டில் புணர்ந்து கிடக்கும் பாம்புகளைப் பார்க்கிறான். சொற்களில் சிக்காத ஏதோ உணர்வு அவனுள் ஊற்றெடுக்கிறது. நகரத்தில் இருந்து அறியப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருத்தி, தன் தாயுடன் சிகிச்சைக்காக குருவின் குடிலுக்கு வருகிறாள். குருவின் வசம் மகளை ஒப்படைத்து வெளியேறுகிறாள் தாய். முதல் முதல் பெண் வாசம் அறிபவனுக்குள் காமம் பீறிட்டெழுகிறது. தனிமையின் பொழுதொன்றில் அவளது அந்தரங்கத்தின் எல்லை மீறுபவனை அறைகிறாள் இளம்பெண். காமத்தின் தீ அவனை எரியும் மெழுகென உருக்குகிறது. இயற்கை சோபிதமாக இருக்கும் ஒரு வேளையில் அவளைப் படகில் இழுத்துச் சென்று காட்டில் வைத்துப் புணர்கிறான் சீடன். அதன் பின் அப்பெண்ணும் அவனோடு இணக்கமாகிறாள். அவனுக்கு வாழ்க்கை அர்த்தப்படுவதாய் உணர்கிறான். அவள் நோய் குறைவதாய் உணர்கிறாள். குருவுக்குத் தெரியாமல் இவர்களின் உறவு வளர்கிறது.குருவுக்கு இவர்களின் உறவும், உடலுறவும் தெரியும் நாளில், 'உன் நோய் குறைந்ததா?' என்று கேட்கிறார் பெண்ணிடம். அவள் 'ஆம்' என்கிறாள். 'என்றால் உன் நோய்க்கு அதுவே மருந்து. நீ குணமடைந்து விட்டாய். இனி நீ இங்கிருந்து செல்லலாம்' என்கிறார். சீடன் அது கூடாது என்று தடுக்கிறான். அவனைக் கண்டுகொள்ளாதவராக, அவளை அனுப்பி வைக்கிறார் குரு. அடங்காத காமத்துடனும், கோபத்துடனும், வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையைத் தூக்கிக்கொண்டு வெளியேறுகிறான் சீடன். தூரத்தில் குடில் அமைதியில் உறைந்திருக்கிறது. உள்ளே குரு உறங்கிக் கொண்டிருக்கிறார். Summer தன் உக்கிரத்தைக் காட்டிவிட்டு ஓய்கிறது.

சிவந்திருக்கும் இலைகளுடன் தொடங்குகிறது Fall. முப்பதுகளின் நாட்களில் மீண்டும் குடிலுக்குத் திரும்புகிறான் சீடன். அவன் தன் மனைவியைக் கொன்றிருப்பதை முன்பே அறிந்து வைத்திருக்கிறார் குரு. அதைப் பற்றிய பேச்சுகள் இருவரிடமும் இல்லை. ஆத்திரத்தின் பிடியில் சிக்குண்டவனுக்கு எல்லாமே வெறுப்பேற்படுத்துகின்றன. ஆத்திரத்தின் உச்சியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறான். அவனை அடித்து உயிர் காக்கிறார் குரு. சீடனின் ஆத்திரத்தை அடக்க வழி காண்கிறார்.அவர் இடும் பணியை அவன் செய்துகொண்டிருக்கும் நேரம், அவனைக் கைது செய்ய நகரத்திலிருந்து காவலர்கள் வந்து சேர்கிறார்கள். மறுநாள் வரைக் காத்திருந்து, அவன் பணி முடித்த பிறகு அழைத்துச் செல்கிறார்கள். குரு அவனுக்கு விடை கொடுத்தனுப்புகிறார். தன் பணிகள் முடிந்து தன் அந்திமக்காலம் முடிவதை உணர்ந்த குரு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அவரது உடமைகள் சீடனுக்காகக் காத்திருக்கின்றன. கூடவே குருவின் ஆன்மாவும். Fall ஒரு உன்னதமான உயிரின் வீழ்ச்சியைக் காற்றெங்கும் கூவியபடி அடங்குகிறது.Winter இல் குடிலைச் சுற்றிலும் பனி ஆக்கிரமித்திருக்கிறது. குரு அமர்ந்து மரித்துப் போன படகு பனியில் சிக்கியிருக்கிறது. நடுத்தர வயதுக்காரனாக திரும்புகிறான் சீடன். குருவின் ஆடைகளை அணிந்துகொள்கிறான். குருவின் குறிப்பேட்டில் இருக்கும் martial arts இன் படிநிலைகளைக் கற்றுக்கொள்கிறான். சிறுகுழந்தையோடு குடிலுக்கு வந்து சேரும் ஒரு பெண் தன் முகத்தை மூடியே வைத்திருக்கிறாள். குழந்தையை விட்டுவிட்டு இரவில் வெளியேறும்போது பனியில் புதையுண்டு இறக்கிறாள். குழந்தை பகல்பொழுதில் பனியில் தவழ்கிறது. வட்டமாகச் செதுக்கப்பட்ட கலலொன்றைத் தன் உடலோடு சேர்த்துக்கட்டிக்கொண்டு, புத்தர் சிலை ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு மலையின் உச்சியை நோக்கி நடக்கிறான் சீடன். உச்சியை அடைந்து தியானிக்கிறான். தூரத்தில் பனியின் மத்தியில் குழந்தையைத் தாங்கி நிற்கிறது குடில்.

மீண்டும் வந்து சேர்கிற Spring இல், குடிலைச் சுற்றிலும் நீர் நிறைந்திருக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனாகி, சீடனாகி விட்டிருக்கிறான். சீடன் குருவாகி இருக்கிறான். சிறுவனின் கையில் சிக்கும் இன்னொரு மீனும், இன்னொரு தவளையும், இன்னொரு பாம்பும் வதைபடுகின்றன. மலையின் உச்சியில் இருக்கும் புத்தரின் பார்வையில் அடிவாரத்தில் இருக்கும் குடில் புலனாகிறது. மென்மையான இசையுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

பெயர்கள் ஓடத்தொடங்க அசாத்தியமான அமைதி ஒன்று மனதுக்குள் வந்து சேர்கிறது. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச் சாதாரணமாக நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம். ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் வசனங்களை ஒரு முழு நீள வெள்ளைத்தாளின் ஒரு பக்கத்தில் எழுதிவிடமுடியும். செயல்களின், முக பாவனைகளின், அங்க அசைவுகளின் வழி கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இயற்கையும் கூட ஒரு பாத்திரமாகப் பங்கேற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நான்கு பருவ நிலைகள் மனித வாழ்வின் நால்வேறு படிநிலைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன.

படிமமாக, பூடகமாக, பல செய்திகள் படம் முழுவதும் உணர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு கால நிலையிலும் ஒரு மிருகம் குருவின் குடிலில் இருப்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பருவத்தில் இருக்கும் நாய்க்குட்டி, அறியாமையையும், செலுத்தும் வழி செல்லும் தன்மையையும் விளக்குவதாயிருக்கிறது. வாலிபப் பருவத்தில் உடன் இருக்கும் சேவல், ஆண்மையையும், காமத்தையும் குறிக்கும் விதமாக இருக்கிறது. முப்பதுகளில் உடனிருக்கும் பூனை, உக்கிரத்தையும், நிலை கொள்ளாத அமைதியற்ற மனநிலையையும் பிரதிபலிப்பதாயிருக்கிறது. இறுதியில் வந்து சேர்கிற பாம்பு, ஆன்ம பலத்தைக் காட்டுவதாகவும், ஞானத்தின் உச்ச நிலையை உணர்த்துவதாகவும் அமைகிறது.

திறந்த வெளியில் இருக்கும் வெறும் கதவுகள், மனிதன் தனக்கென வரித்துக்கொண்ட நெறிகளுக்குப் படிமமாக இருக்கின்றன. கதவுகள் தாண்டிய வழிகளும் நிறைய உண்டு. நெறிகளை மீறிய நடைமுறைகளும் உண்டு. சிறுவயதில் கதவுகளின் வழி மட்டுமே செல்லும் சீடன், வாலிபப் பருவத்தில் காமத்தின் உச்சத்தில் நெறிகளை மீறிய வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அது இருளில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இங்கே மகுடேஸ்வரனின் கவிதை ஒன்று நினைவில் தட்டுப்பட்டது.

'சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்'


காலமாற்றத்தில் மனித மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்களையும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் இயக்குனர். சிறுவயதில் காட்டில் இருக்கும் புத்தர் சிலை மீதேறி நின்று பார்க்கும் சிறுவனின் பார்வை, தொலைவில் தெரியும் குடிலின் மீதே குவிகிறது. அது உள்நோக்கியதாக அமைகிறது. வாலிபப்பருவத்தில் அதே சிலை மீதேறி நிற்பவனின் பார்வை நகரத்துக்குச் செல்லும் வழியின் மீது படிகிறது. இது வெளிநோக்கியதாக அமைகிறது.

சிறுவயதில் ஒரு பீடத்தின் மீது கால் வைத்துப் படுத்துத் தூங்குகிறான் சீடன்; வாலிப வயதில், அதே பீடத்தில் குடிலுக்கு வரும் யுவதி அமர, குருவுக்குப் பிடிக்காது என்று அவளை எழச் சொல்கிறான். பின், அவளோடு புணர்ந்தான பிறகு அவளுக்கு அதே பீடத்தை, அமரத் தருகிறான். இப்படி மன நிலையில் விளைகிற சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

காமம் மேலிட, தன் வசம் இழந்த சீடன் படகை ஏரியின் நடுவே சுற்றச் செய்யும் காட்சி இயக்குனரின் திறமைக்கு இன்னுமொரு உதாரணம். சீடனுக்கும் யுவதிக்குமான காட்சிகள் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கோபத்தின் உச்சத்தில் சீடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள மூச்சை அடக்கிச் சாக முனைகிறான். அப்போது அவனைக் காப்பாற்றும் குரு, பின் அதே உத்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.

கடைசி காட்சிகளில் கல்லைக் கட்டிக்கொண்டு சீடன் மலையுச்சிக்கு ஏறும் காட்சியில், இடைக்காட்சிகளாக கல் கட்டப்பட்டு துயருறும் மீனும், தவளையும், பாம்பும் காட்டப்படுவது காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தும் விதத்திற்கு நல்ல சான்று. இக்காட்சிகளில் பின்னணியில் வரும் இசை நம்மை எங்கோ இட்டுச்செல்கிறது. திரைப்படம் முழுவதுமே இசையும் ஒலிப்பதிவும், மிகப் பொருத்தமாக, மிகத்துல்லியமாக அமைந்திருக்கின்றன. ஒளிப்பதிவும் மிகத் தெளிவாக, காட்சிகளைத் தொட்டு ரசிக்கும் உணர்வை நமக்குத் தருகிறது. நடிப்பு நன்றாக இருந்தது என்று சம்பிரதாயமாக எதுவும் சொல்லத்தேவையில்லை எனுமளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எந்தவொரு காட்சியும் தேவையற்றது என்ற விவாதத்துக்கு வழிவகுக்கவேயில்லை.

நல்ல இலக்கியம், நல்ல திரைப்படம் இவற்றிற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு சமீபத்தில் எனக்கொரு நல்ல பதில் கிடைத்தது. ரசனை என்பது நம் அறிவு வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்று கணினிகளில் உருவம் பெறுகின்றன. வெறும் ஒலிக்குறிப்புகளாக இருந்த இசை, இன்று சுதியும் லயமும் சேர இன்பத்தில் ஆழ்த்துகிறது. பேச மட்டுமே என்றிருந்த மொழி இன்று இலக்கியங்கள் படைத்தளிக்கிறது. எல்லாக் கலைகளின் வளர்ச்சியுமே அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக அமைகின்றன என்பது உண்மை. ரசனையின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதென்பது, அறிவின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதே யாகும். அந்த இன்னொரு படியாக இத்திரைப்படம் நிச்சயம் இருக்கிறது.

பின்குறிப்புகள் :

1. 2003ல் வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் 'கி டுக் கிம்'. அடிப்படையில் இவர் ஓர் ஓவியர். கொலாஜ் ஓவியங்களின் மீது இவருக்கு அபரிமிதமான ஈடுபாடு உண்டு. அந்த முறையை திரைப்படத்திலும் செய்துபார்க்கலாம் என்ற எண்ணத்தில் இவர் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சி வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

2. கி டுக் கிம், திரைப்படத்தில் Winter பருவத்தில் வரும் சீடனின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

- சேரல்

Saturday, August 01, 2009

ஏலியன்கள் வாசம் செய்யும் வீதி

இரண்டு வருடங்கள் கழிந்தோடிவிட்டிருக்கின்றன. கிராமத்தில் தொடங்கிய பயணம், திருச்சி என்கிற சிறு மாநகரில் நான்காண்டுகள் வளர்ந்து, பெங்களூர், ஐதராபாத் என்ற மாநகரங்களில் இரண்டாண்டுகள் நீண்டு, பின் சென்னை மாநகரைச் சேர்ந்திருக்கிறது. சென்னையில் தினம் தினம் 5000 புதுமனிதர்கள் பிரவேசிப்பதாகச் சொல்கிறார்கள். அதில் தற்காலிகமாக வருபவர்கள் பலர், நிரந்தரமாகத் தங்கிவிடுகிறவர்களும் பலர். இதில் எந்த வகையில் சேர்வது என்ற தெளிவில்லாமல் இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்திறங்கினேன். இன்னும் கூட அத்தெளிவு பிறக்கவில்லை. தற்காலிகமாக, நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த இரண்டாண்டுகள், எத்தனையோ வித்தியாசமான மனிதர்களையும், அனுபவங்களையும், சந்தோஷங்களையும், துக்கங்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் என்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தனிப்பட்ட ஒருவனுடைய இத்தகையதான எந்த உணர்வு பற்றிய பிரக்ஞையும் இன்றி தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது மாநகரம். என் குறிப்பேடுகளில் சென்னையை ஏலியன்கள் வாழும் வீதி என்று தான் வரித்து வைத்திருக்கிறேன். தொடர்பற்ற இந்த மனிதர்கள் விளையாடும் வினோத விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு வாழிடம் என்பதைத் தாண்டியும் சென்னை என்னுள் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாங்குழியின் காய்கள் போல ஒவ்வொரு குழியிலும் என்னை மாற்றி மாற்றி நிரப்பி வந்த காலம், இப்போது சென்னையில் இட்டு நிரப்பி வைத்திருக்கிறது. இதமான இம்சை தரும் இம்மாநகரம் குறித்தான் பிம்பம் இங்கு வந்துசேரும் வரை என் மனதில் வேறு மாதிரியானதாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் உடைத்தெறிந்து நிற்கும் நிதர்சனம் சில சமயங்களில் என்னைத் திகைக்கவும் வைக்கிறது.

பிழைப்புக்காக என்று வந்திருக்கிற ஊர், ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும்? இந்த ஊரை எனக்குப் பிடிக்கவில்லைதான். பிழைப்புக்காக வந்திருக்கும் ஊரை எப்படிப் பிடிக்காமல் போகமுடியும்? இந்த ஊர் எனக்குப் பிடிக்காமலும் போகவில்லைதான். ஒரு மாதிரியான கூட்டாஞ்சோற்று மனநிலைதான் எழும்பி நிற்கிறது.

ஒரு விஷயத்தைப் பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை (ஏதோ திரைப்படத்தில் கேட்ட வசனம் :)). அதிருப்தியான, பிடிக்காத விஷயங்களைச் சொல்வதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகிழ்ச்சியான விஷயங்களைச் சொல்வதில் திருப்தியுடன், அது நமக்குப் பிடித்தும் இருக்கும் தானே!

பட்டியல் என்றில்லாமல், சென்னையின் சுவாரஸ்யங்கள், மனதோடு அணுக்கமாகிவிட்ட விஷயங்கள், இன்னும் சென்னையிலிருந்து என்னைத் துரத்திவிடாமல் பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை எழுதிப்பார்க்கலாம். ஏலியன்கள் வாசம் வீசும் இந்த வீதியில் கொஞ்சம் காலாற நடந்து பார்க்கலாம்....

Friday, July 31, 2009

மண்ணியல்

விளைநிலத்தின் மீதேறி
வளர்ந்து செல்கிறது
மேலே மேலே உயரும்
கட்டிடத்தின்
நிழல்

படிந்த வரிகள் - 8

நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-கவிஞர் மகுடேசுவரன்
(காமக்கடும்புனல்)

Tuesday, July 28, 2009

நனைப்பதை நனைப்பவன்

யார்யாரையோ மெழுகிய காற்று
என்னையும் மெழுகிப் போகிறது

யார்யாரையோ நனைத்த அலை
என்னையும் நனைத்துப் போகிறது

யார்யார் மீதோ படிந்த உப்பு
என் மீதும் கரிக்கிறது

யார் யார் கண்களிலோ விழுந்து
நினைவுக்குள் சிக்குண்ட துளி
எனக்குள்ளும் விழுந்து
தொலைந்து போகிறது

இந்த வரிகளைப்
பாடிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால் சொல்லுங்கள்
அந்த யாரோவில்
நானும் ஒருவன் என்று

-கடலை நனைப்பவன்

Monday, July 27, 2009

கதவுகளுக்கு வெளியே

கதவுகளுக்கு முன்னால்
தயக்கத்துடன் நிற்கிறேன்
எப்போதும்

நிராகரிப்பின் மீதான பயம்
இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது
தட்டப்போகும் கைகளை

வழிநெடுகக் கதவுகளைச்
செய்துவைத்து
கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
நீங்கள்

திறப்பதைவிட
உடைப்பதே சிறந்தது
என்றெனக்குப் புரியும்
ஒரு நன்னாளில்
உங்கள் ஆதிக்கமுகங்கள்
நொறுங்கிச் சிதைவது பார்த்து
தற்கொலை செய்துகொள்ளவும்
கூடும் நீங்கள்

அத்தைரியத்தின் வேர்கள்
என்னுள் கிளைத்துப் பரவும் வரை
பட்ட மரமென நின்றிருப்பேன்
உங்கள் கதவுகளின் முன்

பின்குறிப்பு : இதுவும் இப்பொழுது எழுதியதன்று. இன்னொரு வகை சுயபுலம்பல் இது. சிலருக்குப் பிடிக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை

Tuesday, July 21, 2009

நிராகரித்தவன்

உங்கள் அழைப்புகளை
மறுதலிக்கிறேன்

உங்கள் போலியான
புன்னகைகளுக்குக்
கருப்பு வர்ணம் பூசுகிறேன்

மிட்டாய் தின்ற சிறுவனின்
வாய் போல் பிசுபிசுக்கும்
உங்கள் நினைவுகளை
அழுத்தி அழிக்கிறேன்

எதிர்பாராமல்
எதிர்ப்பட்டுவிடுவீர்களோ
என்ற அச்சத்தில்
உங்கள் வீதிகளைக்
கவனமாகத் தவிர்க்கிறேன்

நட்பு வேண்டியதாய்க்
காட்டிக்கொள்ளும்
உங்கள் கடைசி
உபாயங்களை
உடைத்தெறிகிறேன்

சிதிலமாகிப்போன
நம் நட்பு கணங்களின் மேல்
உங்கள் கல்லறைகளை
எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

நம்மில் இருந்த
உங்களை மட்டும்
பூரணமாய்ப் பிய்த்தெறிகிறேன்

என் நிராகரிப்பின்
எந்தவொரு வலியுமற்று
எங்கேயோ சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறீர்கள் நீங்கள்

நிராகரித்துவிட்ட
வலி பொறுக்காமல்
உங்களுக்காகவும் சேர்ந்து
இப்படித்தான் அழுதுகொண்டிருக்கிறோம்
நானும் என் பேனாவும்


பின்குறிப்பு : இது இப்பொழுது எழுதியதன்று; விரக்தியின் அலைகள் அடிக்கும் கரையில் உப்புக்காற்றில் எழுதி வைத்தது. இன்னும் பிசுபிசுப்பு மீதமிருக்கிறது.

Monday, July 20, 2009

நன்றியும், விருப்பமும்


நேசமித்ரன் அவர்களின் அன்புக்கு நன்றி! அன்புக்கு நன்றி செய்துவிட ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்ன?

சுவாரஸ்யம் நிறைந்த வலைப்பூ என்ற விருதினை வழங்கியிருக்கிறார் நண்பர் நேசமித்ரன். மகிழ்ச்சி. என்னோடு இந்த விருதினை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தமிழ்நதி, நந்தா, பிரவின்ஸ்கா, ச.முத்துவேல் மற்றும் கௌரிப்ரியா இவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இப்போது, இந்த விருதினை நான் ரசிக்கும், வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டிய தருணத்தில் நான் இருக்கிறேன். சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்; நான் தொடந்து படிக்கும் மீதமிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் எனக்கு நண்பர்களாய் இருக்கிறார்கள். அவர்களும், வேறு யாரேனும் விருது கொடுத்து, அங்கீகாரம் பெறும் தகுதி உடையவர்களே. நான் கொடுப்பதை விட, முகம் தெரியாத யாரோ கொடுப்பதே அவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். எனவே, நான் மிகப் பிரயத்தனப்பட்டு கண்டெடுத்த ஆறு பேர் பெயர்களை மட்டும் தருகிறேன். இவர்கள் என்னைக் கவர்ந்த பல ஆக்கங்களைத் தந்திருப்பவர்கள். இதில் இடம்பெறாத பலரும் கூட எனக்கு விருப்பமானவர்களே! ஆனால், நான் மேற்சொன்ன காரணத்தினாலும், ஆறு பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டினாலும் அவர்கள் பெயர்களைச் சொல்ல முடியவில்லை. மற்றபடி, அனைவரும் விருப்பத்துக்குரியவர்களே!

கார்த்தி - நீ
திக்குமுக்காடச் செய்துவிடும் பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஒத்த வயதுக்காரன் என்ற பெயரில் இவர் எனக்கிட்ட பின்னூட்டம் இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது. வித்தியாசமான வாசிப்பானுபவத்தைத் தரும் என் விருப்பமான ஒரு படைப்பாளி

வெங்கிராஜா - பாதசாரியின் பால்வீதி
இவரது புகைப்படங்களுக்கு நான் மிகப்பெரிய விசிறி. இவரது எழுத்தும் கொஞ்சம் வித்தியாசமானதே.

மண்குதிரை - மண்குதிரை
என் விருப்பக் கவிஞர். மிக அற்புதமான கவிதைகளை சாதாரணமாக வழங்கும் அசாத்திய திறன் கொண்டவர்.

யாத்ரா - யாத்ரா
வாழ்க்கையின் இருள் பக்கங்களைக் கவிதையாக்கும் என் பிரியத்துக்குரிய நண்பர். வலைப்பூவின் மூலமாக என் நண்பரானவர். இவரது வலைப்பூவைப் படிக்கும் யாரும், அமைதியற்ற ஒரு நிலையை சில நிமிடங்களுக்கேனும் பெறுவது நிச்சயம். அது எனக்குப் பிடித்தே இருக்கிறது.

ராஜா சந்திரசேகர் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்
வாழ்கையின் அற்புதமான, அழகான விஷயங்களைப் பதிவு செய்யும் ஒரு கருவி இவருக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார்கள்.

காயத்ரி - பாலைத்திணை
இவர் கடைசியாகப் பதிவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகின்றன. ஆனால், அடுத்தப் பதிவை எப்போது இடுவார் என்ற எதிர்பார்ப்போடு எப்போதும் இருக்கிறேன். என்னை இப்படிச் செய்தவை இவரது கவிதைகள்.

இங்கே நான் கொடுத்திருக்கும் பதிவர்கள் பெரும்பாலும் உங்களுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். என் விருப்பத்தெரிவின் மிகச் சிறிய பட்டியல் இது. இது போன்றதொரு விருப்பப்பட்டியலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய நண்பர் நேசமித்ரனுக்கு மீண்டும் நன்றிகள்.