புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, March 03, 2009

மிருகம் நீயென்றுணர்

(உயிர்மை.காமின் 'உயிரோசை' இதழில் இக்கவிதை வெளியானது. )

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)


ஊருக்குள் மிருகங்கள்
உலவுவதாய்ச் சொன்னார்கள்

இருள் கவிந்ததும்
வெளிவருவதாயும்
ஒளி வந்ததும்
மறைந்து போவதாயும் பேச்சு

பகலும் இரவுமற்ற
பொழுதுகளில் பார்த்தொமேன்றனர்
நரிகளை ஆடுகளெனச்
சத்தியம் செய்தவர்கள்

ரத்தமும் சதையுமாய்
உண்டு செரித்து, மிருகங்கள்
எச்சமாய் விட்டுச்செல்கின்றன
மிச்ச மீதி உயிரையோ,
அழிக்கப்படாத கொஞ்சம் கற்பையோ,
கிழிக்கப்பட்ட இதயத்தின் கடைசி ஒலியையோ,
ஒன்பதரை மாதங்கள்
ஒன்று சேர்ந்து
ஒரு நொடிக்குள்
உருக்குலைக்கப்பட்ட சிதைவையோ!

மிருகங்களின் வாயொழுகும்
குருதியில் தோய்ந்தபடி,
குற்ற உணர்வோடு
வீடு சேர்கின்றன
செய்தித்தாள்கள்

வளர்ந்த வண்ணமேயிருக்கின்றன
மிருகங்கள் குறித்தான
பேச்சும், பயமும்

தீராதிருப்பது,
மிருகத்தின் உருவம் பற்றிய
சர்ச்சையும்,
மிருகத்தின் மீதான ரகசிய
மோகமும்தான்

புகையுருவமாய்ப்
புலப்படாமல்
எழுந்தலைகின்றன உருவங்கள்!

பிறப்புறுப்பைத் தீண்டிச்சென்ற
பககத்துவீட்டுக்காரனைப்
போலிருந்ததாய்ச் சொன்னாள்
புன்னகைக்க மட்டுமே
அறிந்திருந்த ஒரு சிறுமி

சிகரெட் புகையடைந்த
விடுதியறையொன்றில்
வன்புணர்ந்தவனின்
கண்களைக் கொண்டிருந்ததென்றாள்
வீதியோரத்தில் கிடக்குமொருத்தி

உயிர் பிழிந்து ரசித்த
உருவங்களினூடே
ஒளிந்துகொண்ட
காதலனைப்போல்
கோரமாக இருந்ததென்றாள்
இமைப்பதை மறந்துபோன
இமைகளைக் கொண்டவள்

ஆண்மையைத் தன்னிடம் மட்டும்
நிரூபிக்கும்
கணவனின் உயரமிருக்குமென்றாள்
தேனிலவில் உடல் தொலைத்த
மனைவிகளில் ஒருத்தி

தெருமுனையைக் கடக்கையில்
துகிலுரியும் பார்வையை வீசிச்செல்லும்
எவனோ ஒருவனை
ஒத்திருந்ததென்றாள்
எப்போதும் உடை சரி செய்யும்
எவளோ ஒருத்தி

மிருகத்தின் உருவம்
இன்னதென்று தெளியவில்லை.
தன்னைப்போலில்லை
என்பதே
சந்தோஷம் எல்லோருக்கும்

ஆனால்,
யாருமற்ற இரவுகளில்,
எல்லோரும் சரி பார்க்கிறார்கள்
கண்ணாடி காட்டும் பிம்பத்தில்
கொஞ்சமேனும்
மிருகத்தின் சாயலை.

14 comments:

MaYa said...

வரிகளில்.. வார்த்தை தேர்வுகளில் .. சொல்ல வந்த உணர்வின் வன்மம் தெளிவு. அங்கங்கே தூவிய பிஞ்சு உணர்வுகள் அதனின் அருமை..!

வனம் said...

வணக்கம் சேரல்

அட்டகாசம் யா

எங்கிருந்து பிடித்தீர்கள் வார்த்தைகளை
நன்றி
இராஜராஜன்

சேரல் said...

@Maya
//வரிகளில்.. வார்த்தை தேர்வுகளில் .. சொல்ல வந்த உணர்வின் வன்மம் தெளிவு//
நன்றி நண்பா!

@வனம்

வாருங்கள் இராஜராஜன்,

கருத்துக்கு நன்றி! உணர்வுகளை அதன் வழி விட்டுவிட, அவை தேடிப் பிடித்து வருகின்றன வார்த்தைகளை.

-ப்ரியமுடன்
சேரல்

J.S.ஞானசேகர் said...

'மிருகம்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, 'மனிதன்' என்ற வார்த்தையைப் போட்டு இக்கவிதையைப் படித்துப் பார்த்தேன். சரியாக இருந்தது.

சேரலாதன் பாணியிலேயே சொன்னால் "மனிதர் கலவியில் நாய்கள் கல்லெறிவதில்லை".

கஷ்டமான வேலையே மிருகக்கூட்டத்தில் மனிதனை உணர்வதுதான்.

காமக்கொடூரன், வன்புணர்ந்தவன், காதலன், ஆண்ண்ண்ண்ண்ண் கணவன் இதுபோன்ற மனிதவகைகளை மிருகங்களுடன் ஒப்பிட்ட சேரலாதனை, "ஹோமோசெப்பியன்ஸ்" சேகரும், "மிருகநேயம்" பிரேமும் கண்டிக்கிறோம்.

கல்வெட்டின் கருத்தை எதிர்பார்த்து,

-ஞானசேகர்

gokul said...

வணக்கம் தோழரே,

பாரதியின் கோபம் கண்டேன் உங்கள் வரிகளில்.என் காலத்திலும் ஒரு பாரதி இருக்கிறான் என்ற சந்தோசம் எனக்கு.

///தீராதிருப்பது,மிருகத்தின் உருவம் பற்றிய சர்ச்சையும்,மிருகத்தின் மீதான ரகசிய மோகமும்தான்///

இந்த வரிகளுக்காக உங்களுக்கு "தமிழ் ஞானி" என்ற பட்டத்தை கொடுத்தாலும் தகும். அல்லது நண்பர்கள் ஒரு உயர்ந்த விருதையும், விருந்தையும் தயார் செய்யவேண்டும்.

கவிதையின் பின்புலமாக அமைந்த நிகழ்வு எதுவோ?

வாழ்த்துகளுடன்,

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

சேரல் said...

கோகுல்,

சங்கடத்தின் விளிம்பில் என்னை நிற்க வைத்துவிட்டீர்கள். வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. பாராட்டுக்கு எந்தத் தகுதியும் இல்லாதவன் நான் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

//உயிர் பிழிந்து ரசித்த
உருவங்களினூடே
ஒளிந்துகொண்ட
காதலனைப்போல்
கோரமாக இருந்ததென்றாள்
இமைப்பதை மறந்துபோன
இமைகளைக் கொண்டவள்//

இந்த வரிகள்தான் முதலில் என் மனத்தில் உதித்தவை. இந்த வரிகளுக்கு தூண்டுதலாக இருந்த ஒரு கோர நிகழ்வும், அதில் சம்பந்தப்பட்ட ஒரு மிருகமும், என் பல நாள் தூக்கத்தைக் களவாடிச் சென்றனர். அந்த நிகழ்வை வெளிப்படையாகச் சொல்ல எனக்குள் இருக்கும் மனிதனுக்கு விருப்பமில்லை.

-ப்ரியமுடன்
சேரல்

Subi said...

சேரல்! உணர்வுகளைப்போல் வார்த்தைகளையும் கொட்டித் தீர்க்காமல், சிரத்தையோடு வார்த்தைகள் சேகரித்துக் கவிதை கோத்த உங்களுக்கு ஒரு சபாஷ்!

இரு பாலரையும் குறிக்கும் "மனிதன்" என்ற சொல்லே ஆணாதிக்கத்தின் விளைவே! ஆக, மனிதன் என்ற சொல்லிலேயே "மிருகம்" புலப்பட்டுவிட்டது. இந்தக் கவிதையில் நீங்கள் கூறி இருக்கிற நிகழ்வுகள், ஆண்களின் இழி செயல்களாக இருப்பினும், "மிருகம்" இரு பாலருக்கும் பொது என்பதனை நீங்கள் ஆமோதிப்பீர்கள் என நம்புகிறேன்.

"சமூகம்" என்பதின் நோக்கமே, மிருகத்தினின்று மனிதத்தைப் பிரிப்பதுவே! ஆனால், நிகழ்ந்ததென்னவோ மிருகத்தினைக் கூண்டிலிட்டு, "மனிதன் ரெடி!" என்றக் கண்துடைப்பு வேலையே! எட்ட நின்று பார்த்தால் கொள்ளை அழகுதான்... கூடி நின்று பார்ப்பவர் கிட்ட நெருங்கினாலோ (காதல்) அல்லது சமூகம் கூண்டை விடுவித்தாலோ(திருமணம்) வெளிவருவது மிருகம்! கூண்டைவிட்டுத் தானே வெளிவந்து சுற்றி இருப்பவகர்களைப் பலியிடும் (கொடூர) மிருகம் தான் நீங்கள் சொல்லி இருக்கிற வகை, இல்லையா? எவ்வாறாய் இருப்பின்னும் 'டார்வின்'-இன் சித்தாந்தம் இன்றும் பொருந்துகிறது; ஆண் மிருகத்திருக்கும், பெண் மிருகத்திற்கும்!

காட்டினில் இருந்தேன்
மனிதனாய்.
நாட்டினில் அலையவிட்டீர்
மிருகமாய்.

- என்றுதான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது!

மதி said...

உங்களுடைய பதிவுகள் பல படித்திருந்தாலும், பின்னூட்டமிட ஏனோ தோன்றவில்லை..

முதன்முதலில் படித்தவுடன் பதிலெழுதத் தூண்டிய வரிகள், வார்த்தைகள், உணர்வுகள்.

மேலும் எழுதுங்கள்...

சேரல் said...

@Subi,
நன்றி நண்பா!
மிருகம் என்பது இரு பாலருக்கும் பொது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நான் சொல்லியிருக்கும் மிருகத்தன்மை இன்னும் ஆண் சமூகத்தில் இருக்கின்றதென்பது உண்மையே!

@மதி
நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

rasiththeen nanbaree

vazhththukkal

சேரல் said...

@ மண்குதிரை,

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

J.S.ஞானசேகர் said...

எதிர்ப்படும் நபர்களில்
ஏசுவைத் தேடுகிறேன்.

- மகுடேசுவரன் (இன்னும் தொலையாத தனிமை, தமிழினி பதிப்பகம்)

தமிழ்ப்பறவை said...

சேரல்... வார்த்தைகளில்லை வாழ்த்த ...
கவிதை அருமை.. அவ்வளவுதான் என்னால் சொல்ல இயலும்...

பா.ராஜாராம் said...

கண் நிறைகிறது சேரல்.

ரொம்ப நாளாச்சு மக்கா.நல்லா இருக்கீங்களா சேரல்.