புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, August 11, 2009

இல்லாத முகவரிகள் - 6

திருநெல்வேலி என்றதும் தமிழ்த் திரைப்படங்கள் ஏற்படுத்தி இருக்கிற பிம்பம் கண்முன் விரிந்துவிடுகிறது. அந்த பிம்பத்தின் நீள அகலங்களோடு கொஞ்சமும் தன்னைப் பொருத்திக் கொள்ளாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அம்மாநகரம். மழை பெய்து முடித்திருந்த மாலைப் பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி திருநெல்வேலியில் இறங்கி நடந்தோம். தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நல்ல மழை என்றது செய்தித்தாள் விற்கும் கடையின் முன்னே தொங்க விடப்பட்டிருந்த விளம்பரத் தாள். காய்ந்து கிடந்த திருச்சியிலிருந்து பயணத்தைத் துவங்கிய நாமே இதற்கு நல்ல சாட்சி என்றான் நண்பன். உண்மைதான் என்றேன் நான்.

திருநெல்வேலியில் என்ன செய்வது என்ற அறிவில்லை. எங்கள் திட்டப்படி பயணத்தின் இந்த இரண்டாவது இரவை எங்காவது பயணித்துக் கடத்த வேண்டும். அவ்வளவே! மாநகரப் பேருந்து பிடித்து நெல்லையப்பர் கோயில் போய் (கோயிலுக்கெல்லாம் போகவில்லை.. :) )எதிர்ப்புறமிருந்த இருட்டுக் கடையில் அல்வா தின்றுவிட்டு, மீண்டும் பேருந்து பிடித்து திருநெல்வேலி பேருந்து நிலையம் வந்தடைந்தோம். தமிழ்நாட்டிலிருக்கும் இரட்டை நகரங்கள் இந்தத் திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும். இரண்டுக்கும் இடையே தாமிரபரணி, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டு ஓடுகிறது. இரண்டு நகரங்களையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்துக்கும் ஒரு தனி வரலாறு உண்டு. 'தமிழகத் தடங்கள்' புத்தகத்தில் மணா எழுதியிருப்பார்.

இரவு பேருந்து நிலையத்தில் எதைஎதையோ வேடிக்கை பார்த்துக் கழித்துக் கொண்டிருந்தோம். அப்போது பார்த்த விஷயம், இப்பொழுது வரை சொல்லிச் சொல்லிச் சிரிக்க வைக்கும். ஒரு கடையின் பெயர்ப் பலகையில் படித்தேன். 'சாந்தி ஸ்வீட்ஸ் - எங்களுக்கு திருநெல்வேலியிலோ வேறு எங்கோ கிளைகள் கிடையாது'. படித்து முடித்து விட்டு கண்களைச் சுழற்ற பார்க்கும் கடைகளில் எல்லாம் இதே பெயர், இதே வாசகம் கொண்ட பெயர்ப் பலகைகள். எது முதல் சாந்தி ஸ்வீட்ஸ்? யார் இந்த வாசகத்தை முதலில் எழுதியது என்று நெல்லை நண்பர்களைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை.

திருநெல்வேலியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கன்னியாகுமரி சென்றடைந்து விடலாம் என்றான் நண்பன். நடு ராத்திரியில் அங்கே போய் என்ன செய்வது? பேருந்தில் கடத்த இன்னொரு இரவும் காத்திருக்கிறது என்ற முடிவோடு திருச்செந்தூர் சென்று பின் அங்கிருந்து குமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். திருசெந்தூருக்குப் பேருந்துகள் எதுவும் அப்போது இல்லை. சரி...முதலில் தூத்துக்குடி போய் பிறகு அங்கிருந்து திருச்செந்தூர் பேருந்து பிடிக்கலாம் என்று தூத்துக்குடி செல்லும் பேருந்தில் ஏறினோம். ஏறியது தான் நினைவில் இருந்தது. மழை பெய்வதைக் கூட ரசிக்கவோ, பொருட்படுத்தவோ செய்யாமல் அப்படி ஒரு தூக்கம். தூத்துக்குடியில் இறங்கிய பொழுது மழை விட்டிருந்தது.

பிறகுதான் செய்தி சொன்னார்கள். தூத்துக்குடியில் இருந்து இரவு வேளைகளில் திருச்செந்தூருக்குப் பேருந்துகள் புறப்படாது. திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் தான், இந்த வழியாகப் போகும் என்றதும் ஐயோ என்றானது. தேநீர் ஒன்றைக் குடித்தபடி காத்திருந்தோம். மழை பெய்த இரவில் ஊரைப் பற்றிய கணிப்புகள் எதுவும் செய்ய முடியவில்லை. மழை பெய்கிற இரவுகள் எப்போதும் தவளைகளுக்கு மட்டுமே கொண்டாட்டமாக இருக்கின்றன. மனிதர்கள் தத்தமக்கு ஏற்ற வெப்பம் தருவதான உபாயங்களைத் தேடத் தொடங்கி விடுகிறோம்.

அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தோம். திருச்செந்தூர் வந்த போது நள்ளிரவு ஆகியிருந்தது. கோயிலுக்கு எப்படிப் போவது என்று வழி கேட்டு நடந்தோம். எதற்காகக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமலே ஏதேதோ பேசியபடி நடந்தோம். கோயிலுக்குப் போவதை விட, கடலைக் காண வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்கியிருந்தது. நான் கடலைப் பார்த்து வெகு நாட்களாகி இருந்தது நினைவுக்கு வந்தது. நள்ளிரவு இருட்டில் கடலின் பேரோசை எழுந்த திசையை மட்டும் இனம் காண முடிந்தது. அந்த ஊரில் கடலுக்கு இருளில் செல்வது நல்லதல்ல, கரை முழுதும் பாறைகள் இருக்குமென்று அறிவுறுத்தினார்கள் சிலர். ஏமாற்றத்துடன் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே திரும்பி குமரியை நோக்கிப் பயணப்படலாம் என்று புறப்பட்ட பொழுதுதான் அவனை(ரை)ச் சந்திக்க நேர்ந்தது. இன்று வரைக்கும் அந்த மனிதனை நினைத்து, சிரித்துக் கொள்கிறோம் நானும் நண்பனும். இந்தப் பயணத்தைப் பற்றி எழுதும் போது, அந்த மனிதனைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டான் நண்பன்.

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

இருட்டுக்கடை அல்வாவை விட லாலாசத்திர முக்கில் இருக்கும் அல்வா கடைகளில் தான் அல்வா நன்றாக இருக்கும்.

மண்குதிரை said...

thirunelveli pitiththa uurkalil onru. mukkiyamaana kooyil viithi athai suRRiyulla pakuthikalum.

katturai suvarashyamaaka irukkirathu.

naanun kaaththirukkiren

☼ வெயிலான் said...

மனம் போன போக்கில், கால் போன திசைகளெல்லாம் நடந்திருக்கிறீர்கள் சேரலாதன்.

மகிழ்வாயும், நிறைவாயும் இருந்திருக்கும் உங்கள் பயணம்.

மகுடேசுவரன் கவிதைகளின் ரசிகரா நீங்கள்?

Nundhaa said...

பயணக் கட்டுரைகளிலும் நீங்கள் ஒரு specialist தான்

" உழவன் " " Uzhavan " said...

மழை பெய்கிற இரவுகள் எப்போதும் தவளைகளுக்கு மட்டுமே கொண்டாட்டமாக இருக்கின்றன//

அருமை சேரல்.

திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளது. அதன் அருகில் லட்சுமி ஸ்வீட்சும் உள்ளது. இருட்டுக்கடையில் எல்லா நேரங்களிலும் அல்வா கிடைக்காது. அங்கே அல்வா வாங்க இயலாதவர்கள் இந்தக் கடைகளில்தான் வாங்குவார்கள். குறிப்பாக சாந்தி ஸ்வீட்ஸ்டாலில் கூட்டம் அலைமோதும். இந்தக் கடையின் பெயரை வைத்து வியாபாரம் செய்துவிடலாம் என்று எண்ணி, புதிய பேருந்து நிலையம் ஆரம்பித்தபோது, நியூ சாந்தி என்று எண்ணற்ற கடைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. நியூ என்ற வார்த்தையை அருகினில் சென்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால்தான் தெரியும். இதுதான் ஆரம்ப கால கதை. அதற்குப்பின்னால் இந்த இரு கடைக்காரர்களுக்குமிடையை நீதிமன்றத்தில் வழக்கெல்லாம் நடந்ததாகக் கேள்வி. அதனால்தான் அப்படி எழுதப்பட்ட போர்டை உங்களால் பார்க்கமுடிந்தது. :-)