புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, August 01, 2009

ஏலியன்கள் வாசம் செய்யும் வீதி

இரண்டு வருடங்கள் கழிந்தோடிவிட்டிருக்கின்றன. கிராமத்தில் தொடங்கிய பயணம், திருச்சி என்கிற சிறு மாநகரில் நான்காண்டுகள் வளர்ந்து, பெங்களூர், ஐதராபாத் என்ற மாநகரங்களில் இரண்டாண்டுகள் நீண்டு, பின் சென்னை மாநகரைச் சேர்ந்திருக்கிறது. சென்னையில் தினம் தினம் 5000 புதுமனிதர்கள் பிரவேசிப்பதாகச் சொல்கிறார்கள். அதில் தற்காலிகமாக வருபவர்கள் பலர், நிரந்தரமாகத் தங்கிவிடுகிறவர்களும் பலர். இதில் எந்த வகையில் சேர்வது என்ற தெளிவில்லாமல் இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்திறங்கினேன். இன்னும் கூட அத்தெளிவு பிறக்கவில்லை. தற்காலிகமாக, நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த இரண்டாண்டுகள், எத்தனையோ வித்தியாசமான மனிதர்களையும், அனுபவங்களையும், சந்தோஷங்களையும், துக்கங்களையும், நெகிழ்ச்சியான தருணங்களையும் என்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தனிப்பட்ட ஒருவனுடைய இத்தகையதான எந்த உணர்வு பற்றிய பிரக்ஞையும் இன்றி தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது மாநகரம். என் குறிப்பேடுகளில் சென்னையை ஏலியன்கள் வாழும் வீதி என்று தான் வரித்து வைத்திருக்கிறேன். தொடர்பற்ற இந்த மனிதர்கள் விளையாடும் வினோத விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு வாழிடம் என்பதைத் தாண்டியும் சென்னை என்னுள் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாங்குழியின் காய்கள் போல ஒவ்வொரு குழியிலும் என்னை மாற்றி மாற்றி நிரப்பி வந்த காலம், இப்போது சென்னையில் இட்டு நிரப்பி வைத்திருக்கிறது. இதமான இம்சை தரும் இம்மாநகரம் குறித்தான் பிம்பம் இங்கு வந்துசேரும் வரை என் மனதில் வேறு மாதிரியானதாகத்தான் இருந்தது. எல்லாவற்றையும் உடைத்தெறிந்து நிற்கும் நிதர்சனம் சில சமயங்களில் என்னைத் திகைக்கவும் வைக்கிறது.

பிழைப்புக்காக என்று வந்திருக்கிற ஊர், ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும்? இந்த ஊரை எனக்குப் பிடிக்கவில்லைதான். பிழைப்புக்காக வந்திருக்கும் ஊரை எப்படிப் பிடிக்காமல் போகமுடியும்? இந்த ஊர் எனக்குப் பிடிக்காமலும் போகவில்லைதான். ஒரு மாதிரியான கூட்டாஞ்சோற்று மனநிலைதான் எழும்பி நிற்கிறது.

ஒரு விஷயத்தைப் பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை (ஏதோ திரைப்படத்தில் கேட்ட வசனம் :)). அதிருப்தியான, பிடிக்காத விஷயங்களைச் சொல்வதில் என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகிழ்ச்சியான விஷயங்களைச் சொல்வதில் திருப்தியுடன், அது நமக்குப் பிடித்தும் இருக்கும் தானே!

பட்டியல் என்றில்லாமல், சென்னையின் சுவாரஸ்யங்கள், மனதோடு அணுக்கமாகிவிட்ட விஷயங்கள், இன்னும் சென்னையிலிருந்து என்னைத் துரத்திவிடாமல் பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை எழுதிப்பார்க்கலாம். ஏலியன்கள் வாசம் வீசும் இந்த வீதியில் கொஞ்சம் காலாற நடந்து பார்க்கலாம்....

13 comments:

ச.பிரேம்குமார் said...

அருமையான தலைப்பும், மிக அழகான நடையும் கொண்ட கட்டுரை. தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறேன்

ச.பிரேம்குமார் said...

சென்னையில் இருக்கும் எல்லோருக்கும் ஏதோவொன்று சுவாரசியமாய் தான் இருக்கிறது. உன் பார்வையில் சென்னை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்

Venkatesh Kumaravel said...

எஸ்.ரா-வின் நடையை ஒத்திருந்தாலும் சுவாரஸியமாக இருக்கிறது. சென்னையை வைத்து நானும் ஒரு சரம் எழுதலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். பார்க்கலாம்! வாழ்த்துகள்!

ரெஜோ said...

காத்திருக்கிறோம் தல :-)

- பெயர் தெரியாத இன்னொரு ஏலியன்கள் வாசம் செய்யும் வீதியில் வசிப்பவன் ...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரேம்!

வெங்கிராஜா,
எஸ்ராவைப் போல எழுத வேண்டுமென்ற நோக்கத்தோடெல்லாம் எழுத்தப்பட்டதில்லை இது. தாக்கம் இருக்கலாம். அவ்வளவுதான் :)

@ரேஜோ
நன்றி தம்பி. விரைவில் வருகிறேன் :)

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

mee too

Vidhoosh said...

வாங்க சேரல். அருமை.
கிட்டத் தட்ட 19 வருடம் முன் பிழைப்புக்காக சென்னை வந்து, இனி சென்னையில் இருக்கவே கூடாது என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்வேன். நாளையோடு, 20 வருடங்கள் முடிகின்றன. :( இதே சென்னையில் இன்றும்
வித்யா/:)

நாடோடி இலக்கியன் said...

எனக்கும் சென்னையைப் பற்றி இதே பார்வைதான்.இப்போதைக்கு சென்னையில் இருந்து வெளியே வந்துவிட்டேன்,ஆனாலும் எங்கே காலம் திரும்பவும் அங்கேயே உதைத்துத் தள்ளிவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.

அசத்தலான ஆரம்பம்,அடுத்தப் பதிவிற்கு வெயிட்டிங் சேரல்.

Bee'morgan said...

ithuthaana athu.?
aarambame swarasyam.. :) thodarthu vaarungal.. :)

நேசமித்ரன் said...

நல்ல பதிவு சேரல்
தொடருங்கள் ..!

நந்தாகுமாரன் said...

வழக்கம் போலவே உங்களின் இந்த அனுபவப் பயணமும் நன்றாக இருக்கிறது ... தொடருங்கள்

பா.ராஜாராம் said...

நல்லா...நடக்கலாமே...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே! விரைவில் இராண்டாம் பகுதியோடு வருகிறேன் :)

-ப்ரியமுடன்
சேரல்