புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, June 04, 2009

யாசகன்

நான் உதிர்த்துவிட்ட
ஒற்றை வார்த்தையில்
பற்றி எரிகிறது நெருப்பு

பாம்புகள் பின்னிப்பிணைந்து
கிடக்கும் உலகமொன்றின்
விஷக்காற்றை சுவாசித்துவிட்டு
வருகிறேன் ஒரு வினாடி

உன்னைக் கலங்கடித்துவிட்ட
ஒற்றை வார்த்தையின்
கருதேடி அழித்துவிட
ஓடுகிறேன்

எங்கெங்கோ சுற்றிவந்து
முடிந்துவிடுகிறது
தேடல் என்னிலேயே

சில நிமிடங்கள்
முன்னிருந்த நம்மை
மீண்டும் உயிர்ப்பிக்க
உன் மன்னிப்பு என்னும்
மந்திரத்தை உச்சரிக்கிறாய்

கூனிக்குறுகி
அதை ஏற்றுக்கொள்ளும்
தகுதியற்ற யாசகனாகிறேன்

வார்த்தை உதிர்ந்துவிட்ட
கணத்தின் முன்பிருந்து
வாழ்க்கையைத் தொடர்கிறாய் நீ

வார்த்தை விழுந்துவிட்ட
கணத்திலேயே நின்றுகொண்டு
எதையென்று தெரியாமலேயே
எதையோ யாசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்

ஒரு பிரபஞ்ச அழிவிற்கான
விளைவுகளைக் கொடுத்துவிட்டு
அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை

13 comments:

நட்புடன் ஜமால் said...

சேரலின் தேடல் இங்கு

தூரலாய் வார்த்தைகள்

சாரலாய் நினைந்தோம்

நட்புடன் ஜமால் said...

\\அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை \\


நல்லாயிருக்கு சேரல்

ஆ.சுதா said...

எங்கெங்கோ சுற்றிவந்து
முடிந்துவிடுகிறது
தேடல் என்னிலேயே/

ஒரு பிரபஞ்ச அழிவிற்கான
விளைவுகளைக் கொடுத்துவிட்டு
அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை/

கவிதையின் வரிகள் சிரந்ததாக உள்ளது. ரொம்ப நல்லக் கவிதை.
(இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்)

இன்று நானும் 'வார்த்தை'பற்றியே இரண்டு கவிதைகள் பதிவிட்டுள்ளேன்.

நாடோடி இலக்கியன் said...

//ஒரு பிரபஞ்ச அழிவிற்கான
விளைவுகளைக் கொடுத்துவிட்டு
அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை//

"நெல்லை கொட்டினா அள்ளிடலாம், ஆனா சொல்லை கொட்டினா?"

"சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்,சொல்லிவிட்ட வார்த்தை நமக்கு எஜமான்".

இப்படியெல்லாம் படிச்சிருக்கேன். ஆனா அதைவிட ஷார்ப்பா இருந்தது உங்க இந்த கவிதையின் இறுதி வரிகள்.

வாழ்த்துகள் சேரல்.

Abbasin Kirukkalkal said...

Good one!!!

ஆனா அது அப்படி என்ன வார்த்தையாய் இருக்கும் :(((
வார்த்தைகளை தேடி துரத்த
பல வார்த்தைகள் என்னை துரத்துகின்றன :)))

நந்தாகுமாரன் said...

உங்கள் வார்த்தையின் deconstruction எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

ச.பிரேம்குமார் said...

ரொம்ப அழகா இருக்கு சேரல். வள்ளுவர் சொன்னது போல் கனியிருக்க கவர்ந்தால் சிக்கல் தான் :(

யாத்ரா said...

இப்படித் தான் நேர்ந்து விடுகிறது சேரல், என்ன செய்வது, கவிதையில் இதை நுட்பமாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

பிரவின்ஸ்கா said...

//சில நிமிடங்கள்
முன்னிருந்த நம்மை
மீண்டும் உயிர்ப்பிக்க
உன் மன்னிப்பு என்னும்
மந்திரத்தை உச்சரிக்கிறாய்
//

//வார்த்தை உதிர்ந்துவிட்ட
கணத்தின் முன்பிருந்து
வாழ்க்கையைத் தொடர்கிறாய் நீ
//

//ஒரு பிரபஞ்ச அழிவிற்கான
விளைவுகளைக் கொடுத்துவிட்டு
அமைதியாக எங்கேயோ
உறங்கிக்கொண்டிருக்கிறது
நானறியாமல் உதிர்ந்துவிட்ட வார்த்தை //

ம்...ம்....ம் நல்லா இருக்குங்க சேரல்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

thamizhparavai said...

நல்லதொரு கவிதை சேரல்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி ஜமால்!

@ஆ.முத்துராமலிங்கம்,
நன்றி நண்பரே!
உங்கள் கவிதைகளையும் படித்தேன். நான் வார்த்தையற்றவனே!

@நாடோடி இலக்கியன்
மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

@Abbasin Kirukkalkal,
நன்றி!
வார்த்தைகள் அப்படித்தான் நண்பரே! வார்த்தைகளைப் பற்றி எத்தனையோ வார்த்தைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

@Nundhaa,
நன்றி!

நன்றி பிரேம்!

நன்றி யாத்ரா!

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி தமிழ்ப்பறவை!

-ப்ரியமுடன்
சேரல்

யாழினி அத்தன் said...

நல்ல கவிதை சேரல்.

நல்ல கவிதை படிக்க உள்ளம் கொள்கிற இன்பமே அலாதி!

வாழ்த்துக்கள்!

anujanya said...

அருமையான சொல்லாடல். மிக அழகாக எழுதி இருக்கீங்க சேரல்.

அனுஜன்யா