புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, June 06, 2009

பழைய திறவுகோல்

எங்கேயோ படித்துவிட்ட, யார் சொல்லியோ கேட்டு விட்ட சில வரிகள், வருடங்கள் கழித்தும் மூன்றாம் ஜாமத்தூக்கத்தில் எழுப்பி நம்மைக் குலைத்துப் போடுவதுண்டு. கவிதைகள் என்றில்லாமல் எதுவொன்றாக இருப்பினும் இந்த அனுபவம் நேர்ந்துவிடுகிறது. இந்த வரிகள் ஏற்படுத்துகிற பாதிப்பு, நம் அனுபவம் சார்ந்த, விருப்பங்கள் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் அமைகின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். ரயில் பயணத்தில், காய்கறிக்கடையில், மழைக்கொதுங்கிய மரத்தினடியில், பெண்கள் படம் போட்ட விளம்பரப்பலகையில், தேர்தல் பிரச்சாரச் சொற்பொழிவில், குதிரைகள் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் கடற்கரையில், எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் கையிலிருக்கும் செய்தித்தாளில், புதிதாக வெட்டப்பட்டிருக்கும் குளத்தின் அருகாமையில் நிலவொளியில், ஓசி வாங்கிப்படித்த வாரமலரில், எங்கேயிருந்தும் நம்மிடம் வந்து சேர்ந்து விடலாம் இந்த வரிகள்.

'இன்னைக்கு வீட்டுக்கு வராம போன, அப்புறம் என்னப் பாக்க நீ உசுரோட இருக்க மாட்ட' என்று திருவெறும்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் போதையில் இருந்த ஓர் ஆணிடம் உரக்கக் கத்திப்போன பெண்ணின் குரல் இன்னும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வார்த்தைகளில் நினைவில் வைத்திருக்கும் படி அழகு எதுவும் இல்லை. கவித்துவம் இல்லை. ஒரு மிகச்சிறந்த வசனத்துக்கான பூச்சு வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால், கோபம் இருக்கிறது; பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. அவன் பெரும்பாலும் அவளின் கணவனாக இருக்க வேண்டும். கணவனின் குடியை நிறுத்த தான் இறந்து போவேன் என்று சொல்கிற பெண்களைப் பார்த்திருக்கிறேன். இரண்டு பேர் சாகவும் செய்திருக்கிறார்கள் எனக்குத் தெரிந்து. நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று சொன்ன பெண்ணை அன்றுதான் பார்த்தேன். அவள் முகம் கூட எனக்கு மறந்து விட்டது. இந்த வார்த்தைகள் இன்னும் உள்ளேயே இருக்கின்றன.

'உரிமையைக் கேட்க
உயர்த்தும் கைகளைக்
கடமையைச் செய்யத்
தாழ்த்துங்கள்
தப்பில்லை'

எனக்குப் பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடம் நடத்திய ஆசிரியர் ஒரு சுதந்திர தின விழாவில் வாசித்தளித்த கவிதையின் ஒரு வரி இது. இன்னும் சட்டை மேல் கொட்டி விட்ட இளநீர் மாதிரி மனத்தின் ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டே இருக்கிறது, ஒரு விதமான உறுத்தலுடன். வாழ்க்கையில் பல விஷயங்கள் குறித்தான பார்வைகளை மாற்றிப்போட்ட வரிகள் இவை. கம்யூனிசம், சோஷலிசம் என்று புது வார்த்தைகளைப் பழக ஆரம்பித்திருந்த பதின்பருவத்தின் இறுதி காலத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்திய வரிகள் இவை. கம்யூனிசத்தின் உண்மையான ஆதாரம் எது என்ற சிந்தனைத் தெளிவு ஏற்பட்டது. ஒரு வரி ஒரு மனிதனின் வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போட்டுவிடுமா? விடும். இது நினைவுக்கு வரும்போதெல்லாம் வந்து போகும் இன்னொரு வரி,

'நாப்பது வயசு வரைக்கும் கம்யூனிஸ்டா இல்லாதவனும் மனுஷன் இல்ல. நாப்பது வயசுக்கு மேல கம்யூனிஸ்டா இருக்கவனும் மனுஷன் இல்ல'

கவிஞர் வைரமுத்துவின் 'வானம் தொட்டு விடும் தூரம்தான்' என்ற முதல் புதினத்தில் கதாநாயகியின் அப்பாவாக வரும் வில்லன் பேசும் வசனம் இது. வாழ்க்கையின் ஓட்டத்தில் பார்த்துவிட்ட எத்தனையோ பேர்களின் கதைகள், இது உண்மைதானோ என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஒரு வேளை நாற்பதைத் தாண்டியபின் உண்மை தெளியலாம்.

பாரதி மீது அபிரிமிதமான காதல் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், நிதர்சனத்தை ஒதுக்கிவிட்டு கற்பனையின் போதையில் வாழ்ந்தவன் பாரதி என்றொரு தீயை என்னுள் கொளுத்திப் போட்ட வரிகள்,

'பாரதி,
கண்ணம்மாவை உயிர்ப்பித்துச்
செல்லம்மாவைப் பட்டினி போட்டவன்'

மேலே குறிப்பட்ட அதே ஆசிரியர் தான் இதற்கும் சொந்தக்காரர்.

பாரதி ஒரு கவிஞனாக வென்றான். ஒரு கணவனாகத் தோற்றுவிட்டான். அவன் கணவனாக வென்றிருந்தால், கவிஞனாகத் தோற்றிருக்கலாம் என்பதும் உண்மையே. ஆனால், இந்த வரிகள் என்னுள் வெட்டி வைத்திருக்கும் குழியில் அடிக்கடி விழுந்துவிடுகிறேன். மீண்டும் பாரதி கொண்டே கரையேறுகிறேன்.

சிறந்த உலகக்கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பெயர் நினைவில்லாத ஒரு பத்திரிகையில் ஆறேழு வருடங்களுக்கு முன் வெளிவந்த வரி,

'எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் சும்மா இருங்கள்'

இது கவிதையா என்று தெரியாது. இதில் கவிதை இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எதில்தான் கவிதை இல்லை?

நான் நல்லவனாக இருக்கிறேன் என்பதை விட நல்லவனாக இருப்பதாக நிரூபித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிரூபித்தலின் மீதான வேட்கை குறையும்போது நான் நல்லவனாக உணரப்படுவேனா என்பது கேள்விக்குறி. அந்தத் தருணம் தோன்றிவிடுவதற்கான கால அவகாசத்தைக் கொடுக்காமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒரு புத்திசாலி என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள். பூக்கள் கொடுக்கும் ஒரு காதலன் தன் காதலியை நேசிப்பதாக நிரூபித்துக் கொண்டிருக்கிறான். நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு வினாடியும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறோம். தாங்கள் அறிவு ஜீவிகள் என்று நிரூபிப்பதற்காக சுஜாதாவையும், கமல்ஹாசனையும் ரசிப்பதாக நிரூபிக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். மொத்தத்தில் எந்தச் செயலையும் நான் செய்வதில்லை. செய்வதாக நிரூபிக்கிறேன். எதுவாகவும் நான் இல்லை. அதுவாக இருப்பதாக நிரூபிக்கிறேன். இந்த நிரூபித்தலின் உலகிலிருந்து வெளிவந்து சுவாசிக்கிற கணம் நான் நானாக இருப்பேன்.

இந்தத் தெளிவைக்கொடுத்துப்போனது அந்த வரி.

வரிகள் இன்னும் தொடர்கின்றன. அவை ஏற்படுத்தும் வலிகளும், காட்டிச்செல்லும் வழிகளும் இன்னும் ஏராளம் இருக்கின்றன. எப்போதோ கேட்ட வார்த்தைகள் இப்போது அர்த்தப்படுகின்றன. புதிய கதவொன்றைத் திறந்துவிட்டுச் செல்கிறது பழைய திறவுகோல். திறந்த கதவின் வழி தெரிகிறது இன்னொரு புது உலகம். புது உலகில் பிரவேசிக்கிறேன் இன்னொரு புது நான்.

10 comments:

kartin said...

கையாண்ட வரிகள் கூடவே வருகின்றன..
உயிரியல் ஆசிரியரின் உயரம் தாங்கி!

//சட்டை மேல் கொட்டி விட்ட இளநீர் மாதிரி//
//கவிதையா என்று தெரியாது. இதில் கவிதை இருக்கிறது //
//புதிய கதவொன்றைத் திறந்துவிட்டுச் செல்கிறது பழைய திறவுகோல் //

என்பதிலெல்லாம் எழுந்து,

//இந்த வரிகள் என்னுள் வெட்டி வைத்திருக்கும் குழியில் அடிக்கடி விழுந்துவிடுகிறேன் //

என்று நீங்கள் நின்றுவிடுகிறீர்கள் !

bhupesh said...

"எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் சும்மா இருங்கள்"

இந்த வரிகளைப் பற்றி முன்னொரு முறை நீ எனக்குக் கூறியிருக்கிறாய்.
பல முறை GOOGLE பண்ணியும் அகப்படவில்லை. என் மனதில் பதிந்த, பல சூழ்நிலைகளில் எனக்கு வழிகாட்டியாக இருக்கும் தத்துவங்களில் இதுவும் ஒன்று. இது பற்றி எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக என் பின்னந்தலையிலும் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒரு வீடியோ கேமின் ஒரு அத்தியாயத்தில் கண்டெடுத்த சாவி எந்தக் கதவைத்திறக்கும், எதையாவது திறக்குமா என்று தவித்தது நினைவுக்கு வருகிறது.....அது போன்று கடந்த 25+ ஆண்டுகளில் எத்தனைச் சாவிகள் என்னிடத்தில் தங்கியிருக்கின்றன எனத்தெரியவில்லை!! ஒரு வேண்டுகோள், கவிதைகள் போலவே, கவிதை உருவில் இல்லாதவைகளையும் அடிக்கடி எழுதவும்!

ச.பிரேம்குமார் said...

//எப்போதோ கேட்ட வார்த்தைகள் இப்போது அர்த்தப்படுகின்றன. புதிய கதவொன்றைத் திறந்துவிட்டுச் செல்கிறது பழைய திறவுகோல்//

பல வரிகளின் சுவை அதை நாம் அனுபவிக்கும் போது தெரியும்.நல்ல பதிவு சேரல்.

தமிழ்ப்பறவை said...

மீண்டும் ஒருமுறை என்னைச் சுயசோதனை செய்யத்தூண்டி விட்ட எழுத்துக்கள்... நன்றி சேரல்..
இதற்கு மேல்(இப்போது எழுதுவதும் கூட) என்னைப் புத்திசாலி என நிரூபிப்பது போலிருப்பதால்...நிறுத்தி விடுகிறேன் நிரூபிப்பதை...

பிரவின்ஸ்கா said...

//மொத்தத்தில் எந்தச் செயலையும் நான் செய்வதில்லை. செய்வதாக நிரூபிக்கிறேன். எதுவாகவும் நான் இல்லை. அதுவாக இருப்பதாக நிரூபிக்கிறேன். இந்த நிரூபித்தலின் உலகிலிருந்து வெளிவந்து சுவாசிக்கிற கணம் நான் நானாக இருப்பேன் //

நல்லாருக்கு சேரல் .


-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

yathra said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல், அனுபவிச்சு படிச்சேன், கவிதைகளுக்கு நடுவில் இம்மாதிரி அனுபவங்களையும் எழுதுங்கள், நன்றாயிருக்கிறது.

சேரல் said...

@kartin,
மிக்க நன்றி நண்பரே!

@Bhupesh,
கவிதை அல்லாதவற்றையும் தொடர்ந்து எழுத முயல்கிறேன் நண்பா.

உண்மைதான் பிரேம். என்றைக்காவது ஒரு நாள் அர்த்தப்பட்டுவிடும் என்றுதான், நினைவுகளில் பல வார்த்தைகளைச் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தமிழ்ப்பறவை.

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி yathra!

- ப்ரியமுடன்
சேரல்

Arunkumar Selvam said...

Nice one seral. Another one is "Idhuvum katandhu pougum"

Thanks,
Arun

Dharini said...

Hmm.. Good one!!

சுபஸ்ரீ இராகவன் said...

//'எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் சும்மா இருங்கள்'//

// இந்த நிரூபித்தலின் மீதான வேட்கை குறையும்போது நான் நல்லவனாக உணரப்படுவேனா என்பது கேள்விக்குறி. அந்தத் தருணம் தோன்றிவிடுவதற்கான கால அவகாசத்தைக் கொடுக்காமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்//

நல்ல சிந்தனை. பகிர்ந்தமைக்கு நன்றி .