புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, January 26, 2009

இருளில் நடப்பவனின் நிழல்

நான் தீராத காதல் கொண்டிருக்கும் ஓர் இலக்கிய வடிவம் சிறுகதை. கவிதையை விட அதிகமாக என்னுடன் இணக்கமாகி விடுகின்றன நான் படிக்கும் சிறுகதைகள். ஆனால் இந்த இலக்கிய வடிவம் எனக்கு எப்போதுமே கைவந்ததில்லை. சொல்லப்போனால் அதற்கான முயற்சியையே நான் மேற்கொண்டதில்லை. கல்லூரியில் எப்போதோ ஒரு போட்டிக்காக எழுதிய ஏதோ ஒன்றுதான் என் நினைவு தெரிந்து நான் எழுதிய முதல் 'சிறுகதை' (அது சிறுகதையா என்பது படித்தவர்களுக்கே வெளிச்சம். நன்றாக இருந்ததாக என் நெருங்கிய நண்பன் மட்டும் சொன்னான்). கவிதை என்ற பெயரில் எழுதியவற்றை சிலர் ரசிக்கத் தொடங்கியதும், நமக்கான வட்டம் இதுதான் என்று சுருங்கிக்கொண்டுவிட்டேன்.

ஆனால் மேலும் மேலும் படிக்கின்ற சிறுகதைகள், பார்க்கின்ற காட்சிகள், சந்திக்கிற மனிதர்கள் ஏற்படுத்துகின்ற பாதிப்பு வெயிலில் ஊர்ந்தோடும் நெடுஞ்சாலைகள் போல நீண்டுகொண்டே இருக்கிறது; மீண்டும் சிறுகதை எழுத வேண்டும் என்ற தாகமும் கருக்கொள்கிறது. எனவேதான் இந்த முயற்சி. ஓரிரவுப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் கதை வடிவில் தர முயன்றிருக்கிறேன். கதைகளைச் சுமந்து கொண்டு செல்லும் மனிதர்களில் ஒருவன் என் சக பயணியாய் இருந்தான். அவனுடனான என் அனுபவமே இது. இது சிறுகதை வடிவம் கொள்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை; ஆனால் எனக்குப் பிடித்தமானதொரு வடிவம் கொண்டிருக்கிறது.

---------------------------------------------------------------------

'நீங்க வேளாங்கன்னியா?'

'இல்லங்க. நான் நாகப்பட்டினத்துல இறங்கிடுவேன்', சொன்ன பிறகு தான் அவனை நன்றாகப் பார்த்தேன். அழுக்காய் இருந்தான். கண்கள் தீர்க்கமாய் இருந்தன. உதட்டில் புன்னகையைப் படரவிட்டிருந்தான். சிகரெட் பிடிக்க மாட்டான் போலிருந்தன உதடுகள். இருபத்தைந்தைத் தாண்டியிருக்க மாட்டான்.

பேருந்து புறப்பட்ட பின் வந்து ஏறிக்கொண்டான். நல்ல கூட்டம். படிக்கட்டில் தான் இடம் கிடைத்தது எனக்கு. இரவு தூக்கம் இருக்காது. அவனும் என்னோடு சேர்ந்து கொண்டான். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். அவன்தான் ஆரம்பித்தான்.

'நீங்க வேளாங்கன்னியா?'

'இல்லங்க. நான் நாகப்பட்டினத்துல இறங்கிடுவேன்'

'எங்க ஊரு வேளாங்கன்னி தாண்டி போகணும். வேதாரணியம் போற வழியில'

'.................'

'ரொம்ப மாசமாச்சுங்க ஊருக்குப் போயி. இப்ப தீவாளிக்குதான் போறேன். எவ்வளவு கூட்டங்க. வேற பஸ்சுல எல்லாம் டிக்கட் எரநூத்தம்பது முந்நூறுங்கறாங்க. தீவாளி, பொங்கல்னு வந்துட்டாலே இப்புடித்தான். காசத் தின்னுடுவானுங்க. இதுல எவ்வளவுங்க?'

'இன்னும் எடுக்கலைங்க'

அவன் என் பதிலுக்குக் காத்திருந்தவனாய் இல்லாமல் தொடர்ந்தான்.

'நாம பரவா இல்லங்க. இன்னும் ஏழ பாழைங்க என்ன செய்யும்? எல்லாம் மெட்ராஸ்லதான் இருக்குது. ஊர்ல இருந்து என்ன செய்ய? சொல்லுங்க. வெவசாயம் எல்லாம் முடிஞ்சு போன விஷயங்க. பதினஞ்சு வருஷமா மெட்ராஸ்லதான் இருக்கேன். 12 வயசுல வந்தது'

நான் அவன் வயதைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன்.

கண்டக்டர் அருகில் வந்தார். நான் கொடுத்த 150 ரூபாயில் 135கு டிக்கட்டும், மீதி 10 ரூபாயும் கொடுத்து புன்னகைத்து நகர்ந்தார். நான் ஐந்து ரூபாயைப் பற்றிய கவலை இல்லாதிருந்தேன்.

அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ஐந்து ரூபாய்க்காக வாக்குவாதம் செய்தான். நான் தடுத்துப் பார்த்தேன். அவன் விடுவதாய் இல்லை. அவனுக்கு மட்டும் சரியான சில்லறையைக் கொடுத்து நகர்ந்தார் கண்டக்டர்.

அவன் கோபம் தீர்ந்ததாய்த் தெரியவில்லை. 'இப்படி எல்லாம் விடக்கூடாதுங்க. விட்டா நல்லா ஏமாத்திடுவானுங்க'. நான் புன்னகைத்தேன். கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தான். நான் அவனையே பார்த்த வண்ணம் இருந்தேன்.

'அஞ்சு ரூபான்னா சாதாரணமா நெனக்காதீங்க. நான் மெட்ராஸ் வந்தப்போ ஒரு நாளக்கி எனக்கு பத்து ரூபாதாங்க சம்பளம். அப்போ அமிஞ்சிக்கரைல இருந்தேன். டீ கடைல கிளாஸ் கழுவுற வேலை. எங்க ஊரு வாத்தியாரு மவந்தான் சேத்துவுட்டாரு. ஊர்ல படிப்பு வரலங்க. அப்பா செத்தப்புறம் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிச்சு. மாமா தான் வாத்தியாரு கிட்ட பேசி மெட்ராஸ் அனுப்புனாரு.

வேல கஷ்டம் ஒன்னுமில்லீங்க. மொதலாளிதான் கோவம் வந்தா வயத்துலயே மிதிப்பாரு. ஒரு தடவ அங்கேயே பேஞ்சிட்டேன். கடைலேர்ந்து தொரத்திவுட்டுட்டாரு. அப்புறம் எங்கெங்கேயோ சுத்தி இப்ப கடைசில வடபழனில ஒரு கடைல இருக்கேன். மாஸ்டர் ஆயிட்டேன்ல. என்ன எப்ப பாத்தாலும் பாய்லர் கூடயே நிக்கணும். காலைல பத்து மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி ஒன்னு ரெண்டு ஆயிடும். தெனம் 250 ரூபா குடுக்குறாங்க.'

அவன் முகத்தில் ஒரு பரவசம் தெரிந்தது. எதற்காகக் சொல்கிறான் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை என்றே உணர்ந்தேன். என் பதில்களுக்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் அவனிடம் இல்லை. பல வருடங்களாகியும் சென்னை பாஷை அவனை விட்டு வைத்திருந்தது

தன் மொத்த வாழ்க்கையையும் ஒரே ராத்திரியில் எனக்குள் ஊற்றிவிடும் வெறியில் அவன் பேசிக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது.

இடையில் எங்கேயோ நிறுத்தியபோது இறங்கி சிகரெட் பிடித்தான். எனக்கு வேண்டுமா என்றான். நான் சிரித்தேன். என்ன புரிந்து கொண்டானோ? அதன் பின் கேட்கவில்லை. சுத்தமில்லாது இருந்த கழிவறையைக் குறை சொல்லிக் கொண்டே வந்தான். ஏதேதோ தளங்களில் சுற்றுகிற அவன் பேச்சு மீண்டும் அவன் வாழ்க்கையை நோக்கியே வருகிறது. நான் கேட்பவனாக மட்டுமே இருந்தேன். நான் கேட்கிறேனா என்ற பிரக்ஞை கூட அவனுக்கில்லை. கதை சொல்கிற லயிப்பில் இருந்தான் அவன்.

'அஞ்சு வருசத்துக்கு முன்னாடி மாமா ரெண்டாவது பொண்ண எனக்குக் கட்டி வச்சிட்டாரு. மாமா கிட்ட கேட்டேன் ஏம்மாமா எனக்கு கட்டிக்குடுக்குறேன்னு. வேற எவனும் காசு வாங்காம கட்டிக்கிட மாட்டான்னுட்டாரு.

கல்யாணத்தன்னிக்குதாங்க வயத்து வலி பெருசாகி ஆஸ்பத்திரியில சேத்தாங்க. கொஞ்ச நாளாவே இருந்துச்சி. டாக்டர் பாத்துட்டு உள்ள எதோ கட்டி வளருது. ஆபரேஷன் பண்ணிடலாம்னாரு. கொஞ்சம் தான் செலவாகும்னு சொல்லி மறுநாளே பண்ணிட்டாரு. மொய் வந்த பணம் எல்லாம் இதுக்கே போயிருச்சு. அப்பத்தாங்க டாக்டர் சொன்னாரு எனக்கு 'அது'ல பிரச்சினை இருக்குன்னு. 'உன்னால எதுவும் முடியாது' ன்னுட்டாரு. கஷ்டமாப் போச்சு.

ரெண்டு நாளைக்கு முன்னாடி தெரிஞ்சு இருந்தா கல்யாணத்தையாவது நிறுத்தி இருக்கலாம். பாய்லர் சூட்டால இருக்கலாம்னாங்க. எனக்கு மொதலாளி வயத்துல மிதிச்துதான் ஞாபகம் வந்துச்சு. நெனச்சாலே ஒரு மாதிரி வலிக்குது இப்ப கூட.

எனக்கு அந்தப் பொண்ண எப்படி நிமிர்ந்து பாக்குறதுன்னு ஆயிப்போச்சுங்க. சின்ன வயசுலேர்ந்து பாத்து வளர்ந்த பொண்ணு. நல்ல பொண்ணு. அப்பா சொல்லிட்டாரேன்னு என்ன கட்டிக்கிச்சு. 12 வது வரைக்கும் படிச்சிருக்கு. அதுகிட்ட இந்த விஷயத்த எப்படி சொல்றதுன்னே தோணல. ஒரு மாதிரி சொல்லிட்டேன். என்னப் பாத்து சிரிச்சிகிட்டே இருந்திச்சு. நான் அழுதுட்டேன்.'

அவன் கண்கள் இப்போதும் பனித்திருந்ததைப் பார்த்தேன். யாரோ ஒரு கிராமத்து பெண்ணின் உருவம் என் மனதில் நிழலாடி விட்டுச்சென்றது. அதற்கு மேல் அவன் பேச வலுவற்றவனாக இருந்தான். மௌனம் அவனுக்குத் துணையாய் இருந்தது. நானும் பேசவில்லை.

வெகு நேரம் கழித்து கொஞ்சம் சகஜ நிலைக்கு மீண்டவனாக 'அப்புறம் வடபழனில ஒரு டாக்டர் கிட்ட போனேங்க. விஜய லாட்ஜ் இல்ல. அங்க தான் ஒரு டாக்டர் 23ந்தேதியனா வருவாரு. 6 மாசத்துல சரியாகிரும்னாரு. 2 வருசம் ஆகியும் ஒன்னும் நடக்கல. விட்டுட்டேன். இன்னும் ஊருக்குப்போனா அந்தப்பொண்ணு பாசமாத்தான் நடந்துக்குது. ஒரு பொண்ணு இத யாருகிட்ட போய்ச் சொல்லும் சொல்லுங்க.' என்றான்.

எனக்கு என்னவோ போலிருந்தது. அதன்பின் அவன் பேசவே இல்லை. எதையோ வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தான். சீரான சப்தத்துடன் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ நினைவில் தூங்கிப் போயிருந்தான். என்னால் தூங்க முடியவில்லை. அவனை அசை போட்டபடியே விழித்திருந்தேன்.

கடைசி வரை சில கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவே இல்லை. என்னிடம் இதையெல்லாம் இவன் ஏன் சொல்கிறான்? அறிமுகம் இல்லாத ஒருவனிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள என்ன தூண்டுதல் இருக்க முடியும்? இவனுக்கு இத்தனை நாள் இப்படிப்பேச துணையேதும் வாய்த்ததில்லையா? இவ்வளவு நேரம் பேசியவன் தன் பெயரைக்கூடச் சொல்லவில்லையே! என் பெயரையோ என்னைப் பற்றியோ தெரிந்து கொள்ளும் சிறு விருப்பம் கூட இவனுக்கு இல்லையா?

நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல துணை இருப்பது எத்தனை அற்புதமானதொரு விஷயம்?

நாகப்பட்டினத்தை அடைந்து கொண்டிருந்தது பேருந்து. இன்னும் சற்று நேரத்தில் இறங்கப்போகிறேன். அவன் உறங்கிக்கொண்டிருந்தான். பேருந்து நின்றது. எழுப்பிச் சொல்லிவிட்டுப்போகலாம் என நினைத்து, ஏனோ செய்யாமல் இறங்கினேன். அவன் தூங்கிக்கொண்டே இருந்தான். நான் மட்டும் தூரமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

10 comments:

Anonymous said...

"நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல துணை இருப்பது எத்தனை அற்புதமானதொரு விஷயம்?"

Sekar an urgent investigation is required.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தம்பி,

இதில் investigationகு என்ன தேவை இருக்கிறது? நான் சொல்லி இருப்பது உண்மைதானே.

-ப்ரியமுடன்
சேரல்

G K said...

வணக்கம் தோழரே...

முதல் முயற்சியிலேயே நீங்கள் வென்று விட்டதாகவே கருதுகிறேன்.

///'நீங்க வேளாங்கன்னியா?'

'இல்லங்க. நான் நாகப்பட்டினத்துல இறங்கிடுவேன்'

'எங்க ஊரு வேளாங்கன்னி தாண்டி போகணும். வேதாரணியம் போற வழியில'

'.................'

'ரொம்ப மாசமாச்சுங்க ஊருக்குப் போயி. ///

வேண்டுமென்றே ஊர் பெயர் வெளியிடவில்லையென நினைக்கிறேன்.நல்லது.

///கடைசி வரை சில கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவே இல்லை. என்னிடம் இதையெல்லாம் இவன் ஏன் சொல்கிறான்? அறிமுகம் இல்லாத ஒருவனிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள என்ன தூண்டுதல் இருக்க முடியும்?///

ரொம்ப சில மனிதர்களின் வாழ்க்கையிலே மட்டும்தான் இந்த மாதிரியான நிகழ்வு இருக்கும். ஒரு மனுசன பார்த்ததும்
அவன் கிட்ட நெறைய விசயங்கள பகிர்ந்துக்கணும்னு தோணும்...அது மாதிரி தாங்க நீங்களும்....

///நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல துணை இருப்பது எத்தனை அற்புதமானதொரு விஷயம்? ///
ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க.
சமுக அக்கறையோடு சொல்ல பட்ட பதிவாக தான் எனக்கு தோணுது....
கிராமங்களில் மட்டுமே இந்தமாதிரி உயிர்ப்பான நிகழ்வுகள் இருக்கும்....அதுவும் உறவுகளுக்குள் மட்டுமே...

எழுத்துப் பிழைக்கும் கருத்துப் பிழைக்கும் யாமே பொறுப்பு....
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல... நம்ம தமிழ் ஜுனூன் தமிழாகவே இருக்கு...

தொடர்ச்சியா எழுதுங்க.... வாழ்த்துக்கள்...

இப்படிக்கு,

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கோகுல்,

பின்னிட்டீங்க. என் மன உணர்வுகளை அப்படியே படம் பிடிப்பவர் நீங்கள் என்று, இன்றுதான், நான் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். நன்றி!

//ரொம்ப சில மனிதர்களின் வாழ்க்கையிலே மட்டும்தான் இந்த மாதிரியான நிகழ்வு இருக்கும். ஒரு மனுசன பார்த்ததும்
அவன் கிட்ட நெறைய விசயங்கள பகிர்ந்துக்கணும்னு தோணும்...அது மாதிரி தாங்க நீங்களும்....//

அவனா நான்? சரிதான்.

//ரொம்ப ரொம்ப முக்கியம்ங்க.
சமுக அக்கறையோடு சொல்ல பட்ட பதிவாக தான் எனக்கு தோணுது....
கிராமங்களில் மட்டுமே இந்தமாதிரி உயிர்ப்பான நிகழ்வுகள் இருக்கும்....அதுவும் உறவுகளுக்குள் மட்டுமே...
//

மிகச் சரியான கருத்து. நீங்கள் ஏன் எழுதத்தொடங்கக்கூடாது?

//எழுத்துப் பிழைக்கும் கருத்துப் பிழைக்கும் யாமே பொறுப்பு....
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல... நம்ம தமிழ் ஜுனூன் தமிழாகவே இருக்கு.//

உங்கள் தமிழ் நன்றாகவே இருக்கிறது.

வாழ்த்துகளுக்கும் நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

J S Gnanasekar said...

Good narration Seral.

Prem, investigation in progress; my report will be submitted soon in Thamizh.

-ஞானசேகர்

Anonymous said...

நல்ல தொடக்கம்!
Keep going! :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

தாரிணி, சேகர்,

கருத்துக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

rajkumar said...

ungal padaipugal ..remember me some guys..nangill nadan..ramakrishnan..but.. ?...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துக்கு நன்றி ராஜ்குமார். ஆனால் நீங்கள் சொல்லும் உயரத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் நடை போட வேண்டியிருக்கிறது. காலம் அதற்கான அவகாசத்தைத் தருமா என்று மிட்டாய் பார்த்து எங்கும் சிறுவன் போலக் காத்துக்கிடக்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Selva said...

சேரல், நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் படிக்கலாம் என்று தேடினேன் கிடைத்தது. மன நெகிழ்வும் கிடைத்தது.
வாசகரை சிந்திக்க வைக்கும திறமை
அபாரம்.