புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, February 13, 2009

நதி மூலம்

நன்றி : புதிதாகக் கைக்கு வந்திருக்கும் Second hand Bike, அதை வாங்கிக் கொடுத்த அப்பா

நண்பனின் முதல் ஆவணப்படத்துக்காகத் தோன்றிய எண்ணம் இது. கூடப் போய் வரலாம் என்று தொடங்கியது இப்பயணம். இரண்டு பைக்குகளில் நான்கு பேர் கிளம்பினோம். விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கியது பயணம். சூரியன் உதிப்பதற்குள் நதிமூலத்தைச் சென்றடைய வேண்டுமென்பது குறிக்கோள். சூரிய உதயத்தை அவன் அங்குதான் படமாக்குவதாகத் திட்டம்.

அதிகாலைப் பயணத்தில் பனியின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் ரசித்தபடியும், கொஞ்சம் சிரமப்பட்டபடியும் பயணப்பட்டோம். நகர எல்லை கடந்த பிறகு பனியின் அடர்த்தி இன்னும் அதிகரித்தது. அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம், பூவிருந்தவல்லி, திருமழிசை, வெள்ளவேடு, நேமம் என்று பல இடங்களைக் கடந்து சேரிடமான புதுச்சத்திரம் வந்தடைந்தோம்.








இப்புதுச்சத்திரம், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் - பூவிருந்தவல்லி பிரதான சாலையில், திருவள்ளூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஒரு மணி நேரப் பயணத்துக்குப்பின் நாங்கள் வந்து சேர்ந்திருந்த இடம், கூவம் நதியின் தோற்றுவாய். அதை, ஒரு அகன்ற நதிப்பரப்பு என்றோ, சிறு ஏரி என்றோ சொல்லலாம். இந்த இடத்துக்கே கூவம் என்றும் பெயர் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார்.








அதிகம் அசுத்தப்படுத்தப்படாமல் அழகாக இருக்கிறது தோற்றுவாய். நீர் நிறைந்த நிலப்பகுதி என் கிராமத்துக் குளங்களையும், ஆறுகளையும் நினைவூட்டியது. என் கிராமத்தின் வழியோடிவரும், காவிரியின் எத்தனையோ சிறு கிளைகளில் ஒன்றான அரிச்சந்திரா நதி என் கண்களுக்குள் தளும்பியது. அவ்வாற்றின் எல்லா பரிமாணங்களையும் பார்த்து வளர்ந்தவன் நான். இரவெல்லாம் விழித்திருந்து உடைப்படைக்கக் காத்திருக்கும் இளைஞர் கூட்டத்துக்கு சவால் விட்டுச் செல்லும் வெள்ளக்காடாகவும், ஊர் ஊராய்ச் சுற்றித்திரியும் வாத்துக் கூட்டங்களின் கோடை வாச ஸ்தலமான மணல் வெளியாகவும் அதைப் பார்த்திருக்கிறேன்.

அதைப் போன்றதொரு மாயத்தோற்றத்தினை ஒரே நேரத்தில் கொண்டு விளங்குவதாக இருக்கிறது கூவம் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது. முடிந்த வரையில் கூவம் ஆற்றின் கரையிலேயே பயணம் செய்வதெனத் தீர்மானித்துப் புறப்பட்டோம். வெள்ளவேடு வரையில் பிரதான சாலையில் அமைந்த பயணம், பின் கிராமச் சாலைகளை நோக்கித் திரும்பியது. இந்தச்சாலையில் 20 நிமிடங்கள் பயணித்தபின் கூவம் மீண்டும் நம்மோடு சேர்ந்துகொள்கிறது.

சென்னையிலிருந்து 40 கி.மீ சுற்றுவட்டாரத்தில் இத்தனை அழகான கிராமங்கள் இருக்கின்றன என்பது ஆச்சரியமூட்டும் உண்மையாக இருந்தது. நண்பனிடம் கேட்டேன்.

'இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் சென்னையைப் பார்த்திருப்பார்கள்?'

'இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் தாங்கள் சென்னையில் வசிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்? என்றான் நண்பன்.

ஒரு கணம் என்னைத் திகைக்க வைத்தது இக்கேள்வி. இருப்பிடம் குறித்தான பெருமிதம் எப்போதும் மனிதர்களுக்கு உண்டு. கும்மிடிப்பூண்டியில் வசித்துக்கொண்டு சென்னையில் இருப்பதாய்ச் சொன்னவர்களை நான் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைவுக்குள் வந்து போனார்கள்.

தன் அகன்ற வாயைத் திறந்து கொண்டே செல்லும் நகரம் இந்தக் கிராமங்களையும் இன்னும் சில ஆண்டுகளில் விழுங்கிச் செரித்துவிடும். அப்போதும் இவர்கள் சென்னையிலேயே வசிப்பார்கள். ஆனால் இவர்கள் வீடுகளின் கொல்லைப்புறங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நதி நகரத்துச் சாயம் பூசிக்கொண்டு விடலாம்.

கூவத்தோடு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்காங்கே நிறுத்திப் படப்பதிவைத் தொடர்ந்தான் நண்பன். கிராமச் சாலைகளிலிருந்து, ஆவடி - பூவிருந்தவல்லி பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தோம். இதுவரை கூவம் 'ஆறாகவே' இருப்பது சந்தோஷமளித்தது. மீண்டும் கிளைச்சாலையில் பிரிந்து செல்கையில் சில நிமிடங்களில் நாங்கள் பார்த்த ஓரிடம், கூவத்தில் குப்பை கொட்டப்படுகிற முதல் இடம்.









நண்பன் அதைப் படமெடுக்க, வேகமாக பைக்கில் வந்த ஒருவர் நின்று,

'இன்னாத்துக்கு குப்பையெல்லாம் படம் எட்த்துகினு கீறீங்க?' என்றார்.

'குப்பையை இல்லங்க. கூவத்த எடுக்கறோம்' என்றான் இன்னொரு நண்பன்.

'அத்த எட்த்து இன்னா பண்ணுவீங்க? ஐயோ ஐயோ' என்று பரிதாபப்பட்டு நகர்ந்தார்.

இது வரையிலும் கூவம் ஆறாகப் பயன்படுத்துப்படுகிறது. இந்தப்புள்ளியிலிருந்து அது சாக்கடையாக மாற்றப்படுகிறது. அங்கிருந்து திருவேற்காடு வரைக் கூவத்துடன் பயணித்தோம். பூவிருந்தவல்லி பிரதான சாலையை மீண்டும் தொட்ட பிறகு நதியுடன் பயணிக்கும் வாய்ப்பு இல்லாது போனது.

கடைசிக்கட்டப்பயணத்தில் பல இடங்களில், கூவம் 'ஆறு இல்லை' என்று சாட்சி கூறி நிற்கிறது வெற்று நிலப்பரப்பு. தோற்றுவாயிலிருந்து நடக்கிற ஆற்றின் பயணம் பாதியிலேயே நின்று போய் விட்டது. சென்னை மாநகருக்குள் ஓடும் சாக்கடை நதிக்கும், அந்தக்கூவத்துக்கும் இடையேயான சங்கிலித்தொடர்பு அறுபட்டிருக்கிறது. அங்கே ஊற்றெடுக்கிற, பெய்து சேகரமாகிற நீர்த்துளிகள் நகரத்து வாசனையை நுகர்வதேயில்லை. நகருக்குள் ஓடுவது, அல்லது நிற்பது, வெளியேற முடியாமல் இருக்கிற வெறும் சாக்கடை மட்டுமே!

ஆறு மணி நேரப்பயணம் முடிவுக்கு வந்திருந்தது. கூவத்தின் 65 கி.மீ நீளத்தையும் பயணத்தில் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டே இருக்கிறது. குறைந்தது, விட்ட இடத்திலிருந்து நதி கடலில் கலக்கும் புள்ளி வரையிலாவது பயணத்தைத் தொடர வேண்டும்.

இக்கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சுமார் 450 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு, அது வேறு ஏதோ 'நல'த்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, கொடுத்ததை மத்திய அரசும், வாங்கியதை மாநில அரசும் மறந்துபோய்விட்டன. இப்போது மீண்டும் சில நூறு கோடிகளை வழங்கியிருக்கிறது மத்திய அரசு, இதே திட்டத்திற்காக.

இன்னும் பல திட்டங்கள் தீட்டப்படலாம். நிதியும் ஒதுக்கப்படலாம். ஆச்சரியமூட்டும் விதமாக நதி சுத்தம் கூடச் செய்யப்படலாம். அனால் மீண்டும் இதே நிலை வருவதும், வராதிருப்பதும் நகரவாசிகளின் கையில்தான் இருக்கிறது.

8 comments:

MaYa said...

கண்டிப்பாய் ஒரு “சபாஷ்” போடலாம்..! கலக்கரேள் போங்கோ..!

Bee'morgan said...

அருமையா எழுதியிருக்கீங்க சேரா. படிக்கும் போதே நாமும் இப்படிப்போகனும்னு எண்ண வைக்குது.

அந்த சூரிய உதயத்தின் புகைப்படம் அற்புதமா வந்திருக்கு.

எனக்குப் பிடித்த வரிகள்
//
தன் அகன்ற வாயைத் திறந்து கொண்டே செல்லும் நகரம் இந்தக் கிராமங்களையும் இன்னும் சில ஆண்டுகளில் விழுங்கிச் செரித்துவிடும். அப்போதும் இவர்கள் சென்னையிலேயே வசிப்பார்கள். ஆனால் இவர்கள் வீடுகளின் கொல்லைப்புறங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நதி நகரத்துச் சாயம் பூசிக்கொண்டு விடலாம்.
//

Boston Bala said...

வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

வணக்கம் தோழரே...
"ஆற்றின் தோற்றுவாய் " என்றதும் இரண்டு ஆறுகள் நினைவுக்கு வந்தன. புற்றடி அம்மன் திருவிழாவிற்கு இரயில் பாதைவழியே வரும்போது இணையாக பயணிக்கும் ஆறு மற்றும் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வரும்போது பயணிக்கும் ஆறு.
சென்னையில் ஆறு என்றதும் கூவம் ஆறும், அடையாறும் (ஆறு) நினைவுக்கு வருகிறது.கூவம் ஆறு பலசிறு ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதி. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேசவரம் அணைக்கட்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை திருப்புகிறது.
கூவலன் என்பவன் நீர் கண்டறிவதில் வல்லவன் என்றும், அவன் பெயராலே அது கூவம் என்றும் அழைக்கப்படுகிறது.
மிகுந்த அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் செய்கின்ற எந்தவொரு செயலும் அதற்குரிய வெகுமதியை அடைந்து விடுகிறது.அதற்கு தங்களுடைய பதிவுகள் மீண்டு மீண்டும் எடுத்துக்காட்டாகிறது. வாழ்த்துக்கள்.
கலை, இலக்கியம் வளர்க்க ஒரு தலைமுறை தன்னை அர்ப்பணிக்க தயாராகவே இருப்பது வியப்பு.கூடவே சமுகம் வளர்க்க இல்லையே என்றொரு ஆதங்கம்.
புகைப்படகாரருக்கு தனிப்பட்ட மரியாதைக்குரிய வாழ்த்துக்கள்.
எல்லா காமிராவிலும் இந்தமாதிரி படம் வரும்மா...இல்ல உங்க காமிராவில் மட்டும்தான் வரும்மா...(உதவி:"தில்லானா மோகனாம்பாள்")
இது மூன்றாவது முறை தோழரே...வெள்ளிகிழமை இரவே பின்னூட்டம் அடித்தேன். திடீரென்று கணிப்பொறி வேலை செய்யவில்லை...இன்று காலையும் முயன்றேன் கணிப்பொறி சதி செய்துவிட்டது...ஒருவழியாக இப்போது முடித்து விட்டேன். நேற்று திருப்பதி சென்றபோது நீங்கள் கூறியுள்ள வழி முழுதும் கூவத்தை பார்த்துக்கொண்டே சென்றேன்.
எல்லா ஆறும் அழகாகவே இருக்கிறது...ஏனோ பார்க்குபோதுதான் பருவப் பெண்களின் நினைவு வந்துவிடுகிறது...

"எலேய்..சட்ரச தொறந்து விட்டுட்டாங்கடா...மடைய அடைக்காம வந்திட்டேன்...எழுந்திரிடா"

எல்லா கூக்குரலிலும் யாரோ சிலரின் தூக்கம் கலைகிறது

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ மாயா,
நன்றி! வெகு நாட்களுக்குப் பிறகு என் வலைப்பூவிற்கு வந்துள்ளாய் என்று நினைக்கிறேன் நண்பா.

@பாலா,
நன்றி! இதில் குப்பைக்குவியலின் படம் மட்டும் நான் எடுத்தது. மற்றவை நண்பர்களின் கைவண்ணம்.

@Boston Bala
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

@கோகுல்
'கூவலன்' என்பது பூமிக்கு அடியில் நீர் இருப்பைக் கண்டறியும் திறன் பெற்றவர்களுக்கான பொதுப்பெயர் என்பது என் அறிவு.

//கலை, இலக்கியம் வளர்க்க ஒரு தலைமுறை தன்னை அர்ப்பணிக்க தயாராகவே இருப்பது வியப்பு.கூடவே சமுகம் வளர்க்க இல்லையே என்றொரு ஆதங்கம்//

சமூகம் வளர்க்கவும் இந்தத் தலைமுறை தன்னால் இயன்ற அளவு உழைக்கும் என்பது உண்மை.

//புகைப்படகாரருக்கு தனிப்பட்ட மரியாதைக்குரிய வாழ்த்துக்கள்.
எல்லா காமிராவிலும் இந்தமாதிரி படம் வரும்மா...இல்ல உங்க காமிராவில் மட்டும்தான் வரும்மா..//

எல்லா காமிராவிலும் வரும் கோகுல். புகைப்படம் எடுத்த நானும், என் நண்பர்களும் உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டோம் :)

//எல்லா ஆறும் அழகாகவே இருக்கிறது...ஏனோ பார்க்குபோதுதான் பருவப் பெண்களின் நினைவு வந்துவிடுகிறது...//

அழகான விஷயம் ஒன்றைப் பார்க்கும்போது அதே போன்ற இன்னொன்று நினைவுக்கு வருவதில் வியப்பொன்றுமில்லை :)

//எல்லா கூக்குரலிலும் யாரோ சிலரின் தூக்கம் கலைகிறது//

அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

Ramprabu said...

சேரல்!
நதிமூலம் காண எத்தனித்த உன் நண்பருக்கு எனது முதல் பாராட்டுக்கள்.
தனது எண்ணங்களை பதிவு செய்த தோழர் கோகுலுக்கு எனது சிறப்பு பாராட்டுக்கள்!

அன்புடன்,
இராம்.

Anand R said...

அவனவன் location பார்க்க வெளிநாட்டுக்கு செல்கிறான். ஆனால் நீயோ, சென்னையிலேயே ஒரு நல்ல location -ஐ மிக அருமையாக விவரித்திருக்கிறாய். சபாஷ் சேரா... (பி.கு. அந்த ஆவணப்படம் தயாரானால் காண்பிப்பாயாக...)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Ramprabu
பாராட்டுகளுக்கு நன்றி நண்பா!

நதிமூலம் காண எத்தனித்த நண்பன் சுரேன் தான். அவனுக்கும் நண்பர் கோகுலுக்கும் உன் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

@Anand R
பாராட்டுக்கு நன்றி நண்பா!
ஆவணப்படம் தயாரானவுடன் கண்டிப்பாகக் காட்டுகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்