புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, October 28, 2010

காளமேகப்புலவர்

இரட்டை அர்த்தத்துக்கென்று தமிழிலக்கியத்தில் ஒரு தனி இடம் உண்டு. சிலேடை என்கிற பெயரில் வழங்கப்பட்ட இவ்வகை செய்யுள்கள் இன்றைய இரட்டை அர்த்தங்கள் போலல்லாமல், பா இயற்றுபவரின் திறமையையும், வாசிப்பவரின் அல்லது கேட்பவரின் திறமையையும் சோதிக்கும் ஒரு களமாக இருந்திருக்கின்றன. சிலேடைப் பாடல்களுக்கென்றே பெயர்பெற்றவர் காளமேகப்புலவர். இவரது பாடல் ஒன்றை பள்ளிக்காலத்தில் படித்த நினைவு.

சமீபத்தில் மணல்வீடு இதழில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' தொடரை வாசித்தேன். நெடுங்காலச் சமுதாய அமைப்புகளால் கெட்டது என்று ஒதுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் செய்யுள்களில் பயின்று வருவது, அவ்வார்த்தைகளின் மூலங்கள், அவை திரிந்த வரலாறு குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுய்தி வருகிறார் திரு.பா.மணி.

இம்மாத இதழில் மறைக்கப்படும் பழந்தமிழ்ப் பாடல்களைப் பற்றிய தன் கருத்துகளைச் சான்றுகளுடன் பதிந்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வெளிவந்த செய்யுள் தொகுப்பு நூலின் தற்போதைய மறுபதிப்பில் பல பாடல்கள் விடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். இவை பெரும்பாலும் பயின்று வரும் வார்த்தைகளின் பயனாகவே நீக்கப்பட்டிருக்கின்றன. செய்யுளில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தகுதியான ஒரு சொல் அடுத்தத் தலைமுறைக்குப் போகக்கூடாது என்கிற பண்பாட்டு அக்கறை பதிப்பகங்களை ஆட்கொண்டுள்ளதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ்ச் சமுதாயம் பழமையானது என்பதற்கு நம் இலக்கியங்களையும் ஒரு சான்றாகவே சொல்லி வருகிறோம். ஆனால், இப்படியாக இலக்கியங்கள் மறைக்கப்பட்டு வருமானால் எதிர்காலத்தில் நம் தொன்மைக்குச் சான்றாக எது மீதமிருக்கும் எனத் தெரியவில்லை என்ற கட்டுரையாசிரியரின் கவலை நம்முடையதும் கூட.

அவர் குறிப்பிட்டுள்ள நூலின் தற்போதைய பதிப்பில் நீக்கப்பட்ட காளமேகப்புலவரின் ஒரு பாடல் இது

மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை


ஒரு பார்வையில் யாரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் இச்செய்யுள். சமுதாய அடுக்குகளில் பல்வேறாகப் பிரித்து வைக்கப்பட்ட மனிதர்களின் குலத்தொழில்கள் இன்னின்ன என்று வரையறுக்கப்பட்டிருந்தன. அக்கோடுகளைத் தம் பாடல் வரிகளால் சூசகமாக அழிக்கும் துணிவு காளமேகப்புலவருக்கு இருந்திருக்கிறது; எதிர்த்து எழும் குரல்களுக்குப் 'பூட்டுவிற் பொருள்கோள் அணியைப்' பதிலாகச் சொல்லும் தெளிவும் கூடவே இருந்திருக்கிறது. வில்லின் இரு முனைகளைப் பூட்டும் நாணைப் போல செய்யுளின் இறுதிப் பதத்தை முதல் பதத்துடன் இணைத்துப் பொருள் கொள்ளச் சொல்கிறது இவ்வணி. எந்த அணியுமில்லாமலும் அழகுடன் இருப்பதாகவே படுகிறது இச்செய்யுள்.

2 comments:

Praveenkumar said...

காளமேகப் புலவர் பற்றிய பாடல்களின் விளக்கம் அருமை..!!

ஈரோடு கதிர் said...

சூசகமாக அழிக்க முனைந்த பாடல் அருமை