புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, April 27, 2007

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

20 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என்ற செய்தியை அறிந்து கொண்டு கோவில்பட்டியில் பேருந்தில் ஏறினோம் நானும் நண்பன் சேகரும். சுமாராக 30 நிமிடம் ஆகி இருக்கும். தென் தமிழ் நாட்டில் சில பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், எங்கெங்கே போகவேண்டும் என்று தயாரான சிறு பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்த, எட்டையாபுரம் என்று வழங்கப்படுகிற 'எட்டயபுரம்' வந்தடைந்தோம்.

ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும், 'வாழ்வில் இதுவரை நான் சென்று வந்திராத ஒரு சிறு தெருவிலேனும் பயணிக்க வாய்ப்பிருக்கிறதா?' என்று யோசிப்பதுண்டு. தமிழகத்தில் மதுரையின் தெற்கே எங்கேயுமே சென்றிராத எனக்கு, இந்தப் பயணம், என் கேள்விக்கான நிறைய பதில்கள் அளிப்பதாக இருந்தது.

எட்டயபுரம்! 'காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்தன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்' என்று பாடிய பாரதியைத் தந்த ஊர். அந்தப் பிரமிப்பு ஏதுமின்றி, இன்னுமொரு வளரும் சிறு நகரம் என்ற யதார்த்தத்துடன் நிற்கிறது எட்டயபுரம்.













எட்டயபுரத்தின் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறது பாரதியார் மணி மண்டபம். 1947ல் உருவாக்கப்பட்டிருக்கிற இம்மணிமண்டபத்தில் முதலில் நம் கண்களில் படுவது வெறுமை. யாரோ சிலர் இளைப்பாறும் இடமாக அது மாறியிருக்கிறது. மண்டபத்தின் மத்தியில் தமிழக அரசால் நிறுவப்பட்ட பாரதியார் முழு உருவச்சிலை.பாரதி சிலையை மட்டும் நிழற்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டோம். பாரதி உடன் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொண்டோம். இடப்பக்கத்தில் ஓர் அறையில் பாரதி சம்மந்தப்பட்ட நிழற்படங்கள், அவரின் கையெழுத்திலான சில கவிதைகள், கடிதங்கள் இவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றைப் படம் எடுக்க அனுமதி இல்லை.










மண்டபத்தை விட்டு வெளியே வந்த பொழுது மனதில் கொஞ்சம் அமைதி. பாரதி வீட்டுக்கு வழி கேட்டபடியே நடக்கத் தொடங்கினோம். மனம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது. காசிக்குப் போகும் முன் பாரதி இந்த வீதிகளில்தானே ஓடி விளையாடி இருப்பான். அவனைக் கவிதை எழுதத் தூண்டிய காக்கைக் குருவிகளின் சந்ததி இப்போது எங்கே இருக்கும்? அவன் வெளிவிட்ட மூச்சுக்காற்று இன்னும் இங்கேயே சுழன்று கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறதா? கேள்விகளை அடுக்கியபடியே நடை போட்டோம்.

சில மனிதர்களோடு, ஓர் அறிவிப்புப் பலகையும் நாங்கள் பாரதியின் வீட்டைக் கண்டறிய உதவி செய்தது. அக்ரஹாரத் தெரு. மதிய நேரத்து அமைதியை அனுபவிக்க மறந்து, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனிதர்கள். 'பாரதியின் வீடு' என்று பெயர்ப்பலகை மாட்டியிருந்த வீட்டை அடைந்தோம். கொஞ்சம் பரவசம். கொஞ்சம் அறியாமை, என்ன செய்வது என்று தெரியாமல். வீட்டுப் பொறுப்பாளர் மதிய உணவுக்காகச் சென்றிருப்பதாகத் தெரிந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தோம்.

'எங்கள் தலைமுறைக்குத் தமிழ் மீது காதல் ஏற்படுத்திவிட்டுப் போனவனே! உன் தமிழ்ச் சந்ததியின் இரு துளிகள் வந்திருக்கிறோம்' என்று சத்தமிட்டது மனது. வெளிப்புறத்தில் பாரதியின் கையொப்பமும், ஒன்றிரண்டு நிழற்படங்களும், காட்சிக்கு இருந்தன. வீட்டினுள் பாரதி, செல்லம்மா, பாரதியின் குடும்பம், பாரதியின் நண்பர்கள் இருந்த பல படங்கள் இருந்தன. பாரதி கைப்பட எழுதிய கடிதங்கள், கவிதைகள் சிலவும் இங்கேயும் இருந்தன.




















வீட்டின் ஒரு பகுதியில் 'பாரதி பிறந்த இடம்' என்ற வார்த்தைகளுடன் பாரதியின் மார்பளவுச் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எங்களின் ஆர்வம் உடனே நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரை உணர்ந்திராத, இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு, பரவசம் என்னை ஆக்கிரமித்தது. அது சொல்லில் விளங்காதது. மீண்டும் அனுபவிக்க முடியாதது. இரவு முழுதும் பயணம் செய்த களைப்பை எல்லாம் தூரப்போட்டுவிட்டு துள்ளிக்குதித்தது மனது! 'பாரதி! நீ வாழும் காலத்தில் உன்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. உன்னைக் கொஞ்சமேனும் புரிந்து கொண்டவர்கள் வந்திருக்கிறோம். உன் தமிழில் எங்களுக்கும் கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பாயா?' என்று ஏங்கியபடியே வெளியில் வந்தேன்.















லேசாகத் தூறத்தொடங்கியிருந்தது. வீட்டை வெளியிலிருந்தும் சில படங்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். பாரதியின் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வீடு தமிழர் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்த்துவர வேண்டிய இடம் என்று பொதுப்படையாகச் சொல்ல மனம் ஒப்பவில்லை. குறைந்த பட்சம், இந்த மரியாதையை கூட அந்த மகாகவிக்கு வழங்கமுடியவில்லை என்றால் நாம் தமிழர் என்று தலை நிமிர்த்திச் சொல்வதில் அர்த்தமில்லைதான்(பொருளாதாரத்தால் முடிந்தவர்களாவது, பார்க்க முயற்சி செய்யலாம்).















இன்னும் கொஞ்சம் பராமரிப்பில் கவனம் வேண்டும் என்ற என் எண்ணத்தை வலுப்படுத்தின தெருவோரம் ஓடிக்கொண்டிருந்த சில பன்றிகள். அரசு மட்டுமில்லை. அருகிருக்கும் மக்களுக்கும் அந்த கவனம் தேவை!

பாரதியின் கவிதை வரிகள் சிலவற்றை மனதிற்குள் முணுமுணுத்தபடி, பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது ஏதோ ஒரு கடையில் பாடிக்கொண்டிருந்தது, 'வேதாளம் முருங்கை மரம் ஏறிச்சு!' என்ற பாடல். (இது கேலிக்காக எழுதப்பட்டதில்லை. உண்மையில் நடந்த விஷயம்). நண்பனிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டேன்.

மினி லாரியில் கோவில்பட்டிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, நண்பனுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் வேடிக்கை பார்த்துக் கொண்டே கொஞ்சம் பாரதியை அசை போட்டுக்கொண்டிருந்தேன். இன்னொரு கவிஞன் இப்படிக் கிடைப்பானா? இன்னொரு மனிதன் இப்படிப் பிறப்பானா? கேள்விகள் பதில் கிடைக்காமல் நீண்டுகொண்டிருந்தன.

பயணத்தின் அடுத்த கட்டம் நோக்கி மன அலைவரிசை மாறியது. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் எட்டயபுரம் வர வேண்டும். எண்ணங்கள் குவியத் தொடங்கின.

'எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்'

11 comments:

Raveendran Chinnasamy said...

Thanks for brining the meories of my land

Sundar Padmanaban said...

அருமையான பயணக்க கட்டுரைக்கு நன்றி.

//இதுவரை உணர்ந்திராத, இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு, பரவசம் என்னை ஆக்கிரமித்தது. அது சொல்லில் விளங்காதது. மீண்டும் அனுபவிக்க முடியாதது.//

இதைப் படிக்கும்போதே மனம் நெகிழ்கிறதென்றால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

நன்றி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரவீந்திரன் சின்னசாமி,

கருத்துக்கு நன்றி!


வற்றாயிருப்பு சுந்தர்,

கருத்துக்கு நன்றி!
உங்கள் ஊரின் பெயர் பேருந்துப்பலகைகளில் 'வத்ராப்' என்று மாறியிருப்பதைக் கண்டேன்.
'வற்றியிராயிருப்பு' என்பதே அதன் முந்தைய பெயராக இருக்கும் எனத் தோன்றுகிறது. சரியா?

-ப்ரியமுடன்
சேரல்

சீமாச்சு.. said...

சேரல்.. உங்கள் உணர்வுகளை அருமையாகப் பதிந்துள்ளீர்கள்.. எல்லோரும் பார்த்து வணங்க வேண்டிய ஒரு இடம்,


நமது தமிழ் வலைப்பதிவுகளில் எட்டயபுரத்தைப் பற்றி ஒருவர் எழுதியுள்ளார் !! ரொம்ப தெரிந்த நபர் தான். பதிவைத் தேடவேண்டும். பாரதியின் இல்லம் அவர் நினைவாக அரசுடமையாக்கப்படுவதற்கு முன் அவர் அந்த வீட்டில் குடியிருந்ததாக எழுதியிருந்தார்.

நிறையப் படங்கள் போட்டிருந்ததாக நியாபகம். உங்கள் படங்களைப் பார்த்த போது அந்தப் பதிவு நினைவு
அவர் பதிவு நினைவு வந்தது..

சுட்டி தேடவேண்டும்

அன்புடன்,
சீமாச்சு

சீமாச்சு.. said...

சேரல்,
இந்தச் சுட்டியைப் பாருங்கள்..

அவர் கடையத்தில் பாரதி இருந்த இடத்தைப் பற்றி எழுதியிருப்பார்.. கார்த்திக் பிரபு..
http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post_18.html

அன்புடன்,
சீமாச்சு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துக்கு நன்றி சீமாச்சு!

-ப்ரியமுடன்
சேரல்

J S Gnanasekar said...

பாரதி பிறந்த இடத்தில் உள்ள அவரின் மார்பளவு சிலையுடன் நின்று எடுத்த புகைப்படத்தில், சற்று விலகி அவர் பக்கம் நான் சாய்ந்து நிற்பதைப் பார்க்கும்போதெல்லாம் அக்கணத்தில் நான் பிரமிப்புக்கும் பரவசத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் உணர்விழந்து போயிருந்ததை உணரமுடிந்தது.

வீட்டினுள் யாரும் இல்லை என்று தெரிந்தும், செருப்பு கழட்டியதில் இருந்து திரும்ப அணிந்ததுவரை, சைகைகளால் பேசிக்கொண்டு, வீட்டின் எப்பொருளின் மீதும் விரல்படாமல் வந்தோம். அம்மகாகவிக்கு எங்கள் விரல்களால் பாமாலை வடிக்கமுடியாதெனினும், விரல் தொடாமல் மவுனம் காப்பதே மிகப்பெரிய மரியாதை ஆகும் என நினைத்தோம்; நினைப்போம்

கோட்சே பிறந்த ஊரைச் சாலையோரம் நின்றும், மேற்குத் தொடர்ச்சிமலையில் இருந்தும் நான் பார்த்திருக்கிறேன். உக்ஸன் என்ற அச்சிற்றூரைப் பார்க்கும்போது, 'இதுவரை வளரா சிற்றூர்' என்ற எதார்த்தமின்மையை உணர்ந்தேன். எட்டையபுரத்தைப் பார்க்கும்போது, சேரலைப்போல 'இன்னுமொரு வளரும் சிற்றூர்' என்ற எதார்த்தத்தை உணர்ந்தேன்.

-ஞானசேகர்

Sundar Padmanaban said...

//உங்கள் ஊரின் பெயர் பேருந்துப்பலகைகளில் 'வத்ராப்' என்று மாறியிருப்பதைக் கண்டேன்.
'வற்றியிராயிருப்பு' என்பதே அதன் முந்தைய பெயராக இருக்கும் எனத் தோன்றுகிறது. சரியா?
//

வற்றாயிருப்பு-என்ற அசல் பெயர் மருவி இப்பொழுது 'வத்திராயிருப்பு' என்று ஆகிவிட்டது. சுருக்கமாக வத்ராப் (Watrap) என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்பொழுது காமராஜர் மாவட்டத்தில் - முன்பு ராமநாதபுர மாவட்டத்தின் கீழ் இருந்தது. "ராமநாதபுர மாவட்டத்தின் நெற்களஞ்சியம்" என்று பெயர் வாங்கிய ஊர்.


நன்றி.

yuva said...

hey sera, this was a very nice article. when did you go there?

For the past two years, Only when i sign , i remember that my mother tounge is Tamil. And after a long time i'm reading a full paragraph in Tamil.

Pics and the text below, were nice.

sorry, i couldn't type the comments in Tamil.

bye
yuvaraj

SurveySan said...

அருமையான கட்டுரை.

நெகிழ்ச்சியானதும் கூட.

என்றாவது ஒரு நாள் பாத்தே ஆகணும்னு ஒரு தோணல் உண்டு பண்ணிட்டீங்க..

//இன்னொரு கவிஞன் இப்படிக் கிடைப்பானா? இன்னொரு மனிதன் இப்படிப் பிறப்பானா? //

ரொம்ப கஷ்டம்.

Unknown said...

நண்பரே உங்கள் வலை பக்கம் கண்டேன் ...அருமை மிக அருமை.உங்கள் தமிழ் தொண்டிற்கு தலை வணங்குகிறேன் உங்கள் தமிழ் ஆர்வம் மென்மேலும் பண்பட வாழ்த்துகிறேன் ..........மலை