புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, February 26, 2009

ஓவிய(ன்)ம்















ஒரு மலை
ஒரு பனைமரம்
ஒரு வீடு
ஒரு நதி
ஒரு பூ கொண்ட ஒரு செடி

அழகுகளால் நிரப்பப்படுகிறது
அந்த உலகம்
எப்போதும்

நிறங்கள் எப்போதோ
நிர்ணயிக்கப்பட்டுவிட்டன

மலையா? - பழுப்பு
செடியா? - பச்சை
முகமா? - மஞ்சள்
கடலா? - நீலம்
மலரா? - மஞ்சள்
இல்லை சிவப்பு
இல்லை ஆரஞ்ச்
இல்லை
தீர்ந்து போகாத
ஏதோ ஒரு நிறம்

உலகைப் படைத்தவனின்
சிரத்தையை,
அவதானிப்பை
இங்கே பார்த்தேன்

ஆச்சரியங்கள்
வியாபித்திருக்கின்றன
எங்கும்

நீல நிறச் சூரியன்,
நான்கு கைகளோடு
என் போலொருவன்,
நட்சத்திரங்களோடு
கை கோர்த்துத் திரியும்
பறவை,.....

கோட்டோவியத்தில்
வீட்டின் ஜன்னல் வழி
எட்டிப்பார்க்கின்றன
என் பால்யப் பிராயத்து
நிலாக்கள்

இலைகளின்
விளிம்பு தாண்டி
வழிகிறது
பசுமை,
கொஞ்சம் விரல்களிலும்

உருவமற்றதொரு உருவம்
சொல்கிறது
எத்தனையோ அர்த்தங்கள்.

அழகுகளால் நிரப்பப்படுகிறது
அந்த உலகம்
எப்போதும்

வரையப்படுகிற ஓவியங்களே
மிக அழகாக இருந்தன
வரைகின்ற ஓவியங்களைப்
பார்க்குமுன்வரை

- என்றோ ஒரு நாள் ஓவியமாய் இருந்தவன்

6 comments:

Unknown said...

"தீர்ந்து போகாத
ஏதோ ஒரு நிறம்"

-ஆமாங்க... நான் தூரிகை புடிச்ச காலத்துல சீக்கிரம் தீர்ந்து போகும் வில்லை பச்சை.. மஞ்சளும் நீலமும் கலந்தா பச்சை வரும் என்கிற விஷயம் ஒரு மதிப்பெண்ணையும் தாண்டி அப்போதான் எனக்கு மிகவும் பிடித்தது.

"இலைகளின்
விளிம்பு தாண்டி
வழிகிறது
பசுமை,
கொஞ்சம் விரல்களிலும்"

- இதுதான் உங்களுக்குப் பிடிச்ச வரிகளாய் இருக்கும்னு நம்பறேன் :) . இந்த தடவை(யும்) கணிப்பு சரியா? ஓவியம் என்கிற தலைப்புல இந்த வரிகளே ஒரு கவிதைதானே!

எல்லாம் சரி.. கடைசில என்ன, "எப்படி இருந்த நான், இப்படி ஆய்ட்டேன்"னு ஒரு சோகம் இழையோடுது? ;)

J S Gnanasekar said...

இறந்தகாலம், நிகழ்காலம், செய்வினை, செயப்பாட்டுவினை இவையெல்லாம் அழகாகப் பயன்படுத்தப்பட்ட கடைசி வரிகளில், "உலகைப் படைத்தவனின்
சிரத்தையை, அவதானிப்பைப் பார்த்தேன்".

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Subi,
நண்பா! உன் கணிப்பு மிகச்சரியே.
//கடைசில என்ன, "எப்படி இருந்த நான், இப்படி ஆய்ட்டேன்"னு ஒரு சோகம் இழையோடுது? ;)//

குழந்தைத்தன்மையை இழந்துவிட்ட துயரம் எல்லோருக்குள்ளும் புதைந்திருக்கிறது.

@J.S.ஞானசேகர்
நன்றி நண்பா!

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

வணக்கம் தோழரே,
உங்களுடைய படைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு ஒரு தகுதி வேண்டும்.
அது எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது.வியப்பாக இருப்பது ஒரே மனிதன் கதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், இசையென பல தளங்களில்
இயங்குவது.பாராட்டுக்கள்.
///அழகுகளால் நிரப்பப்படுகிறதுஅந்த உலகம்எப்போதும்///
அருமையான வரிகள்.
///தீர்ந்து போகாத ஏதோ ஒரு நிறம்///
எதார்த்தமான வரிகள்.
///ஆச்சரியங்கள் வியாபித்திருக்கின்றன எங்கும்///
சத்தியம்.
///இலைகளின் விளிம்பு தாண்டிவழிகிறது பசுமை, கொஞ்சம் விரல்களிலும்///
கவிதை.
///உருவமற்றதொரு உருவம்சொல்கிறது எத்தனையோ அர்த்தங்கள்.///
தத்துவம்.
///வரையப்படுகிற ஓவியங்களே மிக அழகாக இருந்தன வரைகின்ற ஓவியங்களைப் பார்க்குமுன்வரை///
ஞானம்
///என்றோ ஒரு நாள் ஓவியமாய் இருந்தவன்///
ஆதங்கம்

எத்தனைவிதமான உணர்வுகளை ஒரே கவிதைக்குள் எப்படி அடக்க முடிந்தது
என்று தெரியவில்லை.
///நான்கு கைகளோடுஎன் போலொருவன்,///

நான்கு கைகளோடு ஒரு பெண்ணும் இருக்கிறது ஓவியத்தில், யாரது?
கவிதையும் ஓவியமும் சரியாகவே பொருந்துகிறது.

ஓர் ஆண், ஓர் பெண்,
ஓர் ஆண் குழந்தை , ஓர் பெண் குழந்தை,
பெண் உடையோடு,
ஆண் வழக்கம்போல
நிர்வாணமாக,
ஒன்றும் புரியவில்லை...
@#$#^@#%!@
வண்ணங்கள் உடைய வண்ணமாகவே வாழ்க்கை .

வாழ்த்துகளுடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

குறிப்பு:-
சிவப்பு நிற முக்கோண பாவாடை வேறொரு பொருளை தருகிறதே ஏன்?

Unknown said...

சொல்லமறந்த ஒன்று,
நீங்கதான் மீசை வச்ச குழந்தையாச்சே!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி கோகுல்!

//உங்களுடைய படைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு ஒரு தகுதி வேண்டும்.
அது எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது//

இந்த வரிகளுக்கு நான் தகுதியானவனா, என் எழுத்து தகுதியுடையதா, என்று தெரியவில்லை. என்ன சொல்ல?

//வியப்பாக இருப்பது ஒரே மனிதன் கதை, கட்டுரை, கவிதை, விமர்சனம், இசையென பல தளங்களில்
இயங்குவது.பாராட்டுக்கள். //

பாராட்டுக்கு நன்றி நண்பரே! ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல், இதுதான் செய்ய வேண்டும் என்று குவிகின்ற போது இன்னும் வலுப்பெறுகிறது. நீங்கள் சொன்னவை தான் நான் செய்யத் தீர்மானித்தவை. இன்னும் நன்றாகச் செய்ய முயல்கிறேன்.

//எத்தனைவிதமான உணர்வுகளை ஒரே கவிதைக்குள் எப்படி அடக்க முடிந்தது
என்று தெரியவில்லை.//

உணர்வுகளைச் சொல்வதற்குத் தானே கவிதை! எந்த ஒரு கலையின் வெளிப்பாடுமே அதற்குத்தான்.

//வண்ணங்கள் உடைய வண்ணமாகவே வாழ்க்கை .//

எத்தனை ஆழமான அழகான விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

-ப்ரியமுடன்
சேரல்