அதிகாலையிலேயே விழித்துவிட்டேன்
சாளரத்தில் படர்ந்து கிடந்த வானத்தில்
பறவைகளெதுவும் இல்லாதிருப்பதைச்
சும்மா வெறித்திருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக்கொண்டிருந்த
வானத்தோடு நிறம் மாறிக்கொண்டிருந்தோம்
என் வீடும், நானும்
அலுவலக நேரத்தைப் பொறுத்தமைந்த குளியல்
உடலை நனைப்பதைத் தவிர வேறெதையும்
செய்ததில்லை
இட்டிலிக்குத் தேங்காய்ச் சட்டினி
சுவையாகவே இருந்திருக்கும்
அலுவலகம் செல்லும் பயணம்
அனிச்சையாகவே நிகழ்ந்தது
என்றும் போல
வேலையும் வேலை நிமித்தமும்
பாலைத்திணை
சாயங்காலம் என்றொரு பொழுதிருப்பதை
மறந்தான பிறகு வீடு திரும்பும் உற்சவம்
களைத்து, வீடடைந்து, உண்டுறங்க,
நிறைந்த ஒரு நாளின் குறிப்பாக எழுதுகிறேன்
கவிதைக்கான எந்த முகாந்திரமும்
வாய்க்காத வாழ்வின் இந்நாள்
நாசமாய்ப் போகட்டும்
6 comments:
Nice one Seral...
நல்லா இருக்குங்க.
ரொம்ப நேர்த்தியா வந்திருக்கு சேரல். வாழ்த்துக்கள்.
nice one da
en vaazhvin nighazhvugaloodu othu pogirathu thangalin intha kavithai varigal.... migavum rasithen! vaazhthukkal
மிக மிக அருமை...
குறிப்பாக.. "வேலையும் வேலை நிமித்தமும் பாலைத்திணை" :)
Post a Comment