புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, July 18, 2009

இல்லாத முகவரிகள் - 5

கோவில்பட்டியை மீண்டும் தொடும்போது மழை வலுத்திருந்தது. நனைந்தபடி, பேருந்து நிலையத்தை அடைந்து அடுத்த கட்ட பயணத்தைத் திட்டமிட்டோம். திருநெல்வேலி செல்லும் பேருந்தைப் பிடித்தோம். என்னைச் சிறுவனாக்கிவிட்ட இன்னுமொரு பயணம் அது. சாரல் விழும் சாளரம் வழி ஈரம் படிந்த சாலைகளைப் பார்த்துக்கொண்டே பயணித்தோம். நண்பன் சற்றே கண்ணயர்ந்தான். தனிமையில் பயணம் செய்யும் அனுபவமாக அது அமைந்தது. அசதி கொஞ்சம் உடலைத் தளர்த்த தூங்கிப்போனேன். பயணத்தினூடே நிகழும் இது போன்ற சில நொடித்தூக்கங்கள் அலாதியானவை. ஆண்டாண்டு காலமாகத் தூங்கி எழும் உணர்வைத் தரவல்லவை. வாகனம் எழுப்பும் சீரான சத்தம், சுகமான இசையாய் ஒலிக்கும். இப்படியான ஓர் அற்புதமான தூக்கத்தைக் கலைத்துத் தொலைத்தது நடத்துனரின் குரல்.

நண்பன் அவசரமாக என்னை எழுப்பிக் கீழிறக்கினான். இறங்கிய இடத்தில் இருந்தக் கடைகளைத் தவிர்த்துவிட்டு, பேருந்து கடந்து வந்திருந்த பாதையில் நடந்தோம். பத்து நிமிட நடைக்குப் பிறகு இருநூறு வருடத் தமிழக வரலாற்றில் இருந்து சற்றும் பிரித்தறிய முடியாத பெயர் பெற்றுவிட்ட வீர பாண்டியக்கட்டபொம்மனுக்குச் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை வந்தடைந்தோம். நாங்கள் இறங்கி நடை போட்ட ஊர் கயத்தாறு. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஊர். அந்த மரம் சிலை இருக்கும் இடத்துக்கு அருகிலேயே முன்பிருந்ததாகச் சொன்னார்கள். இந்தச்சிலை, 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' திரைப்படம் வெளியான பிறகு, கட்டபொம்மன் நினைவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் நிறுவப்பட்டது. தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரனாகக் கருதப்படும் ஒரு சிற்றரசனுக்கு தமிழகத்தை ஆண்ட எந்த மக்களரசும் நினைவுச்சின்னம் எழுப்ப முனையவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியே!

சிலையின் அருகில் நின்று சில பழங்கதைகள் பேசி, நிழற்படங்கள் எடுத்து, வேறெதுவும் செய்யத் தெரியாமல் அங்கிருந்து அகன்றோம். கட்டபொம்மன் குறித்த சர்ச்சை கிளப்பும் ஒரு கட்டுரையை ஒரு முறை படிக்க நேர்ந்தது. மிகச் சரியான சான்றுகள் இல்லாததாகவும், சரித்திரப் புருஷன் என்று போற்றப்படும் ஒரு மனிதனுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அக்ககட்டுரை இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட செய்தி நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் என்றெனக்குத் தோன்றியதால் குறிப்பிடுகிறேன். இது என் கருத்தோ, கற்பனையோ இல்லை. எட்டப்பன், வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தது ஒரு பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டிருந்தது அக்கட்டுரை. வீரபாண்டியக் கட்டபொம்மன் எட்டப்பன் குடும்பத்துப் பெண்ணொருத்தியை மானபங்கம் செய்ததற்கான அவனது எதிர்விளைவுதான் இது என்று குறிக்கப்பட்டிருந்தது. இதன் மீதான சரித்திரச்சான்றுகள் எதுவும் என்னிடம் கிடையாது. அக்கட்டுரையின் பிரதியும் என்னிடம் இல்லை. உங்களில் யாரேனும் கூட இக்கட்டுரையைப் படித்திருக்கக்கூடும்.























கட்ட பொம்மன் பற்றிய வேறு சில செய்திகளும் நம்மில் சிலருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். கட்டபொம்மனின் மூதாதையர்கள் அவனுக்கு ஐந்து தலைமுறைக்கு முன் ஆந்திரத்தில் இருந்து, வரி வசூல் செய்வதற்காக நாயக்கர் மார்களால் அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் ஜக்கம்மா என்ற சிறு தெய்வத்தை வணங்கினர். திரைப்படத்தில் வருவது போலில்லாமல், ஜாக்ஸன் துரையிடம் கட்டபொம்மன் தெலுங்கில் கூட பேசியிருக்கலாம்.

எப்படியோ, தன் மண்ணுக்காகப் போராடி உயிர் விட்ட ஒரு மனிதனின் உயிர் இங்கே அடங்கியிருக்கிறது. அந்த வகையில் இது போற்றுதலுக்குரிய இடம்தான். நகரப் பேருந்தில் நெல்லையை நோக்கி அமைந்த அடுத்த பயணம் பேச்சுகளால் நிரம்பியிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டோம். அருகிருந்தவர்கள் தம்மோடு வந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். அதில் எங்கும் நெல்லை மணம் கமழ்ந்திருந்தது.

7 comments:

பிரவின்ஸ்கா said...

நல்லாருக்கு .

//அதில் எங்கும் நெல்லை மணம் கமழ்ந்திருந்தது. //

வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆ.சுதா said...

பயணம் இனிதே.
சுகமான அனுபவம்!

நந்தாகுமாரன் said...

உங்களின் இந்த பயணக் கட்டுரைகள் உங்கள் கவிதையைப் போன்றே ஸ்வாரஸ்யம் ... உரைநடையும் உங்களுக்கு அருமையாக வருகிறது ... எழுதி முடித்ததும் இதை ஒரு தொகுப்பாகக் கொண்டு வாருங்கள் ... முதல் பிரதையை நான் வாங்கத் தயார் (காசு கொடுத்து தான் :)) ... தொடருங்கள்

J S Gnanasekar said...

//இதன் மீதான சரித்திரச்சான்றுகள் எதுவும் என்னிடம் கிடையாது. அக்கட்டுரையின் பிரதியும் என்னிடம் இல்லை. உங்களில் யாரேனும் கூட இக்கட்டுரையைப் படித்திருக்கக்கூடும்.//

விகடன் பதிப்பகத்தின் 'எத்தனை மனிதர்கள்' அல்லது எஸ்.ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி' என்பதாக நினைவு.

- ஞானசேகர்

sakthi said...

எப்படியோ, தன் மண்ணுக்காகப் போராடி உயிர் விட்ட ஒரு மனிதனின் உயிர் இங்கே அடங்கியிருக்கிறது. அந்த வகையில் இது போற்றுதலுக்குரிய இடம்தான்


கண்டிப்பாக

மண்குதிரை said...

suvaarashyamaa irukku cheral

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி முத்துராமலிங்கம்

நன்றி Nundhaa!

@J.S.ஞானசேகர்,
சரியாக நினைவில்லை நண்பா. மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன்.

@Sakthi,
கருத்துக்கு நன்றி

நன்றி மண்குதிரை!

-ப்ரியமுடன்
சேரல்