புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, May 05, 2010

ஒரு திரைப்படமும், சில வரிகளும்

'உரையாடல்' அமைப்பின் மாதாந்திரத் திரையிடல் நிகழ்வின் ஓராண்டு நிறைவு 'அன்னா கரீனினா' திரைப்படத்துடன் , சென்னையில் மழை பெய்து முடித்து வெயிலின் உக்கிரத்தைக் குறைத்திருந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்தேறியது.

வாழ்க்கையின் மாற்றங்களைப் பொதுவான பிற நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருப்பதுண்டு.

கடந்த ஒரு வருடமாக என்னுடன் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை, காலவரிசையில், உரையாடலின் திரையிடல் என்ற பொது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். அசாதாரணமான மாற்றங்களுக்கான களமாக வாழ்வின் அந்த நாட்கள் இருந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி ஐந்து மாதங்கள் இத்திரையிடலுக்கே போக முடியாத அளவுக்கு வாழ்க்கையின் போக்கு மாறிவிட்டிருக்கிறது.

இந்தத் தொடர்புபடுத்திப் பார்த்தல் என்கிற முறை தெரியாதிருந்தால், நிகழ்வுகளை, செய்திகளை நினைவு கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் (எனக்கு கண்டிப்பாக :) ).

முதல் திரையிடலில் நண்பர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். பெயரளவிலும், எழுத்தளவிலும் மட்டும் அறிமுகமாகி இருந்த பல நண்பர்களை இங்குதான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல புதிய வலைப்பதிவர்களின் நட்பும் கூட இங்குதான் கிடைத்தது. Spring Summer Fall Winter and Spring என்ற கொரிய திரைப்படத்துடன் தொடங்கியது இந்நிகழ்வு.

இத்திரைப்படத்தைப் பற்றிய என் பார்வையை 'யுகமாயினி' இதழில் எழுதி இருந்தேன். சில பாராட்டுக்களும், சில அறிவுரைகளும் கிடைப்பதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்திக்கொடுத்தது.

தொடர்ந்து வந்த மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமையின் மாலையை 'உரையாடலின்' உலகத்திரைப்படத்துக்காக என்றே ஒதுக்கி வைத்திருந்தேன்.

நம்மோடு எவ்வகையிலும் ஒத்திராத பிற மனிதர்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞையைக் கொடுக்கும் ஊடகமாக நான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கிறேன். அந்த வகையில் நம் மொழித் திரைப்படங்கள் மற்றவர்களுக்கு உலகத்திரைப்படமாகுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

கலாச்சாரம், வாழ்வு முறை, வாழ்வியல் தரம், சிந்தனை, தனி மனித மற்றும் சமுதாய இலக்கு, உணவு, உடை, என்று பல விதங்களில் வேறுமாதிரியானவர்களாக இருக்கும் மனிதர்களின் உணர்வு ஒன்றையே பேசுகிறது என்பதை உலகத் திரைப்படங்கள் எனக்கு உணர்த்துகின்றன. அன்பும், காதலும், காமமும், கோபமும், மகிழ்வும், வெறுப்பும், வேதனையும், நெகிழ்ச்சியும், நெருடலும், சுதந்திரமும் எல்லோரையும் ஆட்டிப்படைத்தும், ஆட்சி செய்தும், நுகரப்பட்டும், நுகர விரும்பப்பட்டும் வரும் சர்வதேச உணர்வுகள் என்பதைப் புரியச் செய்கின்றன இத்திரைப்படங்கள்.

உலகத்திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இன்று பலவழிகளில் கிடைக்கிறது. இணையமும், தேர்ந்த சில புத்தகங்களும், நமக்கு உலகத் திரைப்படங்கள் குறித்தான அறிவை வழங்கி விடுகின்றன. இப்படங்களைப் பார்ப்பதும் கூட கடினமான காரியமாக இல்லை. உரையாடல் அமைப்பு வலைப் பதிவர்களுக்காக என்று தொடங்கி, இன்று எல்லோருக்காகவும் என நடத்திவரும் இத்திரையிடல், உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதோடு, அவை குறித்த மற்றவர்களின் நோக்கு மற்றும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் களமாக அமைந்திருக்கிறது.

ஓராண்டு நிறைவில் திரையிடப்பட்ட அன்னா கரீனினா திரைப்படத்துக்குப் போயிருந்தேன். ஒப்புதல் கொடுத்த மனைவிக்கும், தக்க சமயத்தில் புறப்பட்ட விருந்தினர்களுக்கும், மாலைப்பொழுதை சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பி நிறைத்த சன் தொலைக்காட்சிக்கும் நன்றிகள்.

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்புதினத்தின் அடிப்படையில் வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இது முதலாவது. 1930 களில் வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம். ரஷ்ய மூலக்கதையை ஆங்கிலத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.

மிக நுண்மையான, அற்புதமான வசனங்கள் நிறைந்திருக்கின்றன. ஒளிப்பதிவிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் நிறைய 'அட' போட வைத்திருக்கிறார்கள்.

திரைப்படத்துக்குப் பிறகான உரையாடலில் திரைப்படம் மற்றும் அன்னா கரீனினா புதினம் பற்றிய பல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. மூலக்கதையின் சாராம்சம் கூடுமான அளவுக்குச் சிதையாமல் எடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. புதினத்தை வாசித்தால் இன்னும் கூடப் புரியக்கூடும்.

எப்போதும் போலில்லாமல் இம்முறை பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவு என்றே தோன்றியது. இது போன்ற அமைப்புகள் வெற்றி பெறுவது பங்கேற்பாளர்களின் ஆதரவைப் பொறுத்துமிருக்கிறது என்பது உண்மைதானே! நமக்கும், அறிமுகமற்ற ஓர் உலகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறதல்லவா?

2 comments:

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி சேரல்.

படம் குறித்து விரிவாய் எதிர்பார்த்து வந்தேன் ;-)

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வும் பார்வையும் சேரல்