புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 07, 2010

ஆடி முடித்தவனின் பகல்

எப்போதோ படித்த ஏதோ ஒரு சிறுகதையில் வரும் ஒரு வயோதிகப் பாத்திரத்தை என்மேல் வாங்கிக் கொள்ளும் உந்துதலினால் எழுதிய கவிதை இது. முதுமையின் வாசம் இப்படித்தான் இருக்குமென்று தெரியவில்லை. இப்படியும் இருக்கக்கூடும்.

இப்போதெல்லாம்
யாரும் வருவதேயில்லை

காற்று மட்டும் அவ்வப்போது வந்து
கதவு தட்டிப் பார்த்துப் போகிறது

ஆடி முடித்த விளையாட்டுகளின்
பழைய நினைவிலேயே
ஊர்கின்றன
வெக்கை படிந்த
பகல் பொழுதுகள்

சுகவீனமுற்ற பாதங்கள்
சுமக்க முடியாமல் தள்ளாடுகின்றன
மனத்தின் சுமையை

பிடிமானமற்ற கழிவறையில்
கிழிந்துபோன மூட்டுச்சவ்வுகளை
மடித்து உட்கார்ந்து
சிறுநீர் கழிக்கையில்
ஏனோ வந்துபோகிறது
இறந்து போன மனைவியின் நினைவு

பழைய எதிரிகளோடு மீண்டுமொருமுறை
விட்டுக்கொடுத்து விளையாட
எத்தனிக்கிறது மனது

முதன்முதலாய்ப்
புணர்ந்தவளின் கதகதப்பு,
சுரப்பிகள் வற்றிப்போன
வாழ்வின் ஒரு நாளில்
பரவுகிறது தேகமெங்கும்

விருப்பமென்று பெரிதாய்
எதுவும் இல்லை

விட்டோடிவந்த முதல் காதலியிடம்
கதறியழுது கேட்க மன்னிப்பு

உள்ளங்கையை
உள்ளங்கைக்குள் வைத்தழுத்தி
கதை சொல்ல அல்லது
கதை கேட்க
ஒரு துணை

எனக்கே எனக்கான
சிநேகிதர்கள் எவரோடேனும்
தினமொருமுறை சந்திப்பு

இப்போதைக்கு....
யாரேனும் புகட்டுவதாயின்
கொஞ்சம் இருமல் மருந்து

அப்படியே
கொஞ்சம் தூக்கம்

முடிந்தால்
அப்படியே
மரணமும்

6 comments:

Unknown said...

பிடிமானமற்ற கழிவறையில்
கிழிந்துபோன மூட்டுச்சவ்வுகளை
மடித்து உட்கார்ந்து
சிறுநீர் கழிக்கையில்
ஏனோ வந்துபோகிறது
இறந்து போன மனைவியின் நினைவு

முதன்முதலாய்ப்
புணர்ந்தவளின் கதகதப்பு,
சுரப்பிகள் வற்றிப்போன
வாழ்வின் ஒரு நாளில்
பரவுகிறது தேகமெங்கும்

உள்ளங்கையை
உள்ளங்கைக்குள் வைத்தழுத்தி

இப்போதைக்கு....
யாரேனும் புகட்டுவதாயின்
கொஞ்சம் இருமல் மருந்து //

அப்பட்டமாக கூடடைந்துவிடுகிறது
ஆடி முடித்தவனின் பகல்..

மித யதார்த்ததிலொரு கவிதை..

Vilva said...

அருமை அருமை.. ! சரியான ஆழம்..! நன்றாக உணர்ந்து உணர்ந்து வடிக்கப்பட்டிருக்கிறது.. முதுமை கொடுமை.. மனைவி இல்ல முதுமை அதனின் கொடுமை..! துணை யாருமில்லாதல் அதனின் கொடுமை..!

க.பாலாசி said...

முதுமையின் வெதும்பல் இயல்பாகவும் நெகிழ்வைத் தரக்கூடியதாகவும் இக்கவிதையில்...

பத்மா said...

மரணம் யாசிக்கும் முதுமை கொடுமை ..
கவிதை மனதை நெக்குருக வைக்கிறது

கமலேஷ் said...

கவிதை எழுதிய போது வயோதிகனாய் மொத்தமாய் உரு மாறிப்போனதாய் வரிகள் சொல்கிறது...
மிகவும் நன்றாக நரை கூடி வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...

நந்தாகுமாரன் said...

ம்ஹூம் இது பிடிக்கவில்லை ஆனால் முந்தைய வெளியில் நனையும் மழை நன்றாக இருந்தது