புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 28, 2010

பேர் சொல்லும் பலகை

சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே இவை கண்ணில் பட்டவண்ணமிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆச்சரியப்படுவதற்கில்லை; சில அழகானவையாக, சில அபத்தமாக, சில வெறும் பேருக்காக, என்று பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி இருக்கிறார்கள். மாநகராட்சியின் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் இந்த மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழை வளர்த்து விட முடியுமா? இத்தனை நாள் எங்கே போயிருந்தது இந்த அக்கறை? இவர்கள் இடும் பல பெயர்களைப் பல பேர்களால் புரிந்து கொள்ள முடியாதே? இந்தப் பெயர்களை விட ஆங்கிலப்பெயர்கள் புரிகிற மாதிரி இருக்கின்றனவே? என்ற விவாதங்களை எல்லாம் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு ஆங்கிலப் பெயர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆக்கிரமித்திருந்தன.

குழந்தைகளுக்குக் கூட தாய்மொழியல்லாத மொழியில் பெயரிடுவதைப் பெருமையாகக் கருதும் இனங்களில் நாம் முதன்மையானவர்களாக இருப்போம். அப்படியானவர்கள் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயரிடுவதொன்றும் வியப்பான செய்தியில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் பெருமைக்குரிய செயலாகத் தொடங்கிய வழக்கம், பின் பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.

சீமலத்திப்பழம், குளம்பி என்று பார்க்கும் பொருட்களையெல்லாம் தமிழ்ப்படுத்திக் கொண்டிராமல், தேவையான அளவுக்கு, தேவையானவற்றை மட்டும் தமிழ்ப்படுத்தும் செயல் மிகவும் ஆரோக்கியமானதே! அந்தவகையில் பெயர்ப்பலகைகளைத் தமிழ்ப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே படுகிறது.

நான் பார்த்த சில பெயர்ப்பலகைகள் ரசிக்கவைத்தன.

Bakery - அடுமனை
Bakers - அடுமனைஞர்
Fancy store - வளையலகம்
Hardwares - வன்பொருளகம்
Plaza - அங்காடி
Super market - பேரங்காடி

சில அபத்தமாகப்பட்டன.

Plastics - நெஹிலியகம்
Coffee shop - குளம்பியகம்

நெகிழி என்பது பிளாஸ்டிக்குக்கான தமிழ்ப்பதம் என்று நினைக்கிறேன். இதைத் தமிழ்ப்படுத்தப்போய்த்தான் நெஹிலியகம் ஆகியிருக்கிறது போலும்.

உணவு வழங்கும் இடங்கள் உணவகங்களாகியிருக்கின்றன. தங்கும் வசதி உள்ள ஓட்டல்கள் எதுவும் பெயரை மாற்றியதாக என் கண்ணில் படவில்லை. தமிழில் பெயர்ப்பலகை வைக்காதவர்களை மாநகராட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்ப்படுத்தப்பட்ட பலவகை விற்பனை நிலையங்களில் பொதுவான அம்சமாகப்படுவது 'அகம்' விகுதி. இதன் பொருள் அறிந்தோ அறியாமலோ எல்லோரும் சரியாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதுவரை மகிழ்ச்சியே! இனிப்பு விற்பனை நிலையம், அல்லது இனிப்புக் கடை, என்பதைவிட இனிப்பகம் என்பது அழகாகத் தோன்றுகிறது.

அங்காடி என்ற சொல்லே விற்பனை நிலையத்துக்கான மிகச் சரியான, மிகப் பொருத்தமான தமிழ்ச் சொல் என்றாலும் அதை மிகச் சில இடங்களிலேயே காண முடிகிறது.

பெயர்ப்பலகைகளைத் தமிழிலாக்கும் இந்நற்செயலை, சென்னை என்ற எல்லையோடு நில்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் கூட பின்பற்றலாமே! அரசாணை வரட்டுமென்று ஏன் காத்திருக்க வேண்டும்?

5 comments:

Unknown said...

தமிழ்ப்படுத்தப்பட்ட பலவகை விற்பனை நிலையங்களில் பொதுவான அம்சமாகப்படுவது 'அகம்' விகுதி. இதன் பொருள் அறிந்தோ அறியாமலோ எல்லோரும் சரியாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதுவரை மகிழ்ச்சியே!/ :-)

பகிர்வுக்கு நன்றி நண்பரே..

ராம்ஜி_யாஹூ said...

முன்னாள் மேயரின் நிறுவனம் இன்னும் பெயர் மாற்றப் படாமலேயே இருக்கிறது- ரெட் ஜெயன்ட் மூவிஸ்

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே..

ny said...

Fancy store - வளையலகம்

இது பேரழகு!!

மதுரைக்காரன் said...

தல,
பெருமுயற்சி எடுத்தும் எனது மகளுக்கு தமிழ்பெயர் வைக்க முடியவில்லை. என்னால் முடிந்தது இரண்டு வார்த்தை கொண்ட பெயரில் ஒன்றை தமிழில் வைத்ததே.

agency - முகவையகம் , எங்கோ பார்த்த நியாபகம். வாழ்க தமிழ்.