புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, May 18, 2011

இழவு வீடு

ரசம்போன
பழைய நிலைக்கண்ணாடியின்
தெளிவற்ற பிம்பமெனச்
சமைந்திருக்கிறது
இழவு வீடு

அதிக துக்கத்திலோ
சிரித்துவிடக் கூடுமெனும் பயத்திலோ
பாதிமுகம் புதைத்திருக்கும்
சிலரின் கண்கள் வெறித்திருக்கின்றன
ஈக்கள் ஆடும் கண்ணாமூச்சியை

திரும்புவதற்குள்
அழுதுவிடவேண்டுமென
அதிகப் பிரயத்தனப்படும்
யாரேனுமொருவனிருக்கிறான்
இந்த வீட்டிலும்

வெய்யில் தின்றது போக
மீதப் பிற்பகலை
வாய் பிளந்து
தின்று தீர்க்கிறார்கள் சிலர்

மவுத் ஆர்கன்
வாசிக்கத் தொடங்குகிறான்
அழுது முடித்திருந்த ஒரு சிறுவன்
புன்னகைத்தபடி

சாவுடன் சேராததொரு இசை
சாவை நசித்தபடி
உற்சாகமாக நிறைக்கிறது
காற்றின் அடுக்குகளை

2 comments:

நந்தாகுமாரன் said...

எனக்குப் பிடித்திருக்கிறது இக்கவிதை ... // சிரித்துவிடக் கூடுமெனும் பயத்திலோ // ... அருமை ...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு சேரல்!