புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, May 31, 2011

கன்னல் தமிழ்

இருத்தலின் இன்னொரு பரிமாணத்துக்கு வாழ்க்கை நகர்த்தியிருக்கிறது. இதுவரை இல்லாத மகிழ்ச்சியையும் கூடவே பயத்தையும் உணர முடிகிறது தந்தையாய் இருத்தலில். ஒரு மாதமாகிவிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல இந்த உலகத்துடன் பழகத் தொடங்கியிருக்கிற ஒரு புது உயிருடன் நானும் பழகத் தொடங்கியிருக்கிறேன். உருவங்கள் கூட புலப்படாத கண்களுக்கு அப்பா பாரு அப்பா பாரு என்று என்னை அறிமுகப் படுத்தி வைக்கிறார் மனைவி. யாருக்கும் புரியாத சத்தமும், அமைதியும், தூக்கமும், சிரிப்பும், அழுகையுமாக வாழ்கிறாள் எங்கள் பிஞ்சு தேவதை.

எஸ்ராவின் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' சிறுகதையில் ஒருவன், தான் அப்பா ஆனதும், கண்ணில் படும் ஆண்களை இரண்டே வகையில் பிரித்துவிடும் சிந்தனையிலிருப்பான். அப்பா ஆனவர்கள், அப்பா ஆகப்போகிறவர்கள். அவன் பார்வையே அப்பாக்களின் உலகத்தைச் சார்ந்ததாக மாறிவிடும். நானும் அது போலான சிந்தனையில் சில பொழுதுகளில் வாழ்கிறேன். இந்த அனுபவமும் சுகமாகவே இருக்கிறது. இன்னும் பல அனுபவங்களைத் தரக் காத்திருக்கும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை நீள்கிறது.

இப்போது பெயரற்ற தேவதைக்கு பெயரும் வைத்தாயிற்று. ஆணுக்கொன்று, பெண்ணுக்கொன்றாக முன்பே பெயர் தெரிவு செய்து வைத்திருந்தோம். இடையில் நியூமராலஜி, நேமாலஜி என்று ஏதேதோ லஜிகள், ராசி எழுத்து போன்ற தடைகளை மீறி விரும்பிய பெயரையே சூட்டியதும் பெரிய சாதனையாகப்படுகிறது.

அர்த்தம் புரியாத பிற மொழிப் பெயர்களை நாகரிகமாக வைத்துப் பெருமைப்படும் மக்கள், நாங்கள் சூட்டியிருக்கும் தமிழ்ப்பெயர் வாயில் நுழையவில்லை என வருத்தப்படுகிறார்கள். எனக்குப் பெயர் சூட்டிய என் அப்பாவின் நிலைமை இப்போது புரிகிறது. எழுத்தாளர் பாமரன் ஒரு முறை 'அண்ணா சாலையில் நின்று சுரேஷ் என்று சத்தமிட்டால் தொண்ணூறாயிரம் சுரேஷ்கள் திரும்பிப் பார்ப்பார்கள்' என்று சொன்னார். அதுவும் ஒருவகையில் உண்மைதான். தமிழில் பெயர் வைப்பது என்பது மட்டுமல்லாமல், அதிகம் அறியப்படாத பெயராகவும் இருக்க வேண்டும் என்று கருதினோம். 'கன்னல் தமிழ்' அப்படித்தான் இருக்குமென நம்புகிறோம்.

10 comments:

♠ ராஜு ♠ said...

முதலில் வாழ்த்துகள் சேரல்!
'கன்னல் தமிழ்' - கேட்கும் பபோதே, குளிர்கிறது.

சேரல் said...

நன்றி ராஜு!

-ப்ரியமுடன்
சேரல்

சிவமணியன் said...

மன்மார்ந்த வாழ்த்துக்கள் சேரலாதன்

-

க.பாலாசி said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள் சேரல்...

யார் என்ன சொன்னாயென்ன இதுலக்கூட நம்ம விருப்பமில்லைன்னா எப்படி...பெயர் ரொம்ப பிடித்திருக்கிறது சேரல்..

சேரல் said...

மனங்கனிந்த நன்றி சிவமணியன்!
மிக்க நன்றி பாலாசி!

-ப்ரியமுடன்
சேரல்

Rathnavel said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Vilva said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா! தனித்துவமாக இல்லாவிட்டால் பெயர் வைப்பது எதற்கு? :-)
"கன்னல் தமிழ்"! அருமை! தனித்துவம்!

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி நண்பா.. பெயரைச் சொல்லும்போதே கன்னல் நாவில் ஒட்டிக்கொள்கிறது.
வாழ்த்துகள் :-)

Anonymous said...

super

Gowripriya said...

வாழ்த்துகள் :)