புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, April 15, 2009

தண்ணீர் தேசம்

வாழ்க்கையின் வீச்சு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது அலைவுறும் நீளமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றாற்போல் நம் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் கூட மாற்றம் பெறுகின்றன. ஏதாவதொரு சூழ்நிலையில், எங்காவது ஓடி ஒளிந்து கொண்டால் நன்றாய் இருக்கும் என்று கூடத் தோன்றும்.

அப்படியொரு மனநிலையில்தான் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டேன். கூட நண்பன் ஒருவன். கூகிள் மேப்பில் தொடக்கத்தையும், முடிவையும் கொடுத்தால் தொலைவு, செல்லும் வழி என்று சகல விஷயங்களையும் விலா வாரியாக விளக்கி விடுகிறது.

'புலிகாட் ஏரி' எனும் பழவேற்காடு ஏரி, வரைபடத்தில் பார்க்கும்போது தனியொரு கவனத்தைப் பெற்றுவிடுகிறது. சென்னைக்கு வடக்கே வங்காள விரிகுடாவில் இருந்து கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. தென் முனையில் மட்டும் கொஞ்சமாக உறவு கொண்டாடுகிறது.

அளவில் பல 'புழல்' ஏரிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும் பழவேற்காடு ஏரி(புலிகாட் ஏரி, பழவேற்காடு ஏரி தான் என்ற செய்தி அங்கே போன பின்புதான் எனக்குத் தெரியும் :)) என் வீட்டிலிருந்து சரியாக 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பயணம் செய்யும் வழியும் நான் இதுவரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திராத வழி.

சூளைமேட்டில் தொடங்கி, அமைந்த கரை, திருமங்கலம், அண்ணா நகர், பாடி, புழல், செங்குன்றம், காரனோடை, சோழாவரம், பஞ்செட்டி, பொன்னேரி என்று நீண்டு பழவேற்காட்டைச் சென்றடைந்தது பயணம். இதில் செங்குன்றம் வரையிலான பகுதிகள், பேருந்துப் பயணத்தில் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவை.

தேசிய நெடுஞ்சாலையில் முன்னும் பின்னும் வாகனங்கள் இல்லாத பயணத்தை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? எனக்குக் கிடைத்தது இந்த அனுபவம், சில இடங்களில். நெல்லூர், கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அது. NH 5!

தச்சூர் கூட்டு சாலை என்ற சந்திப்பில் பிரிந்து செல்லும் பொன்னேரி சாலையில் திரும்பிப் பயணத்தைத் தொடர்ந்தோம். பொன்னேரியைக் கடந்த பின் அமைந்த பயணம், என் ஊர்ப்புற கிராமங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது.

ஏகாந்தமான சாலையில் நெடுந்தூரம் பிரயாணித்து பழவேற்காடு வந்து சேர்ந்தோம். கடல் பொருட்களும், மீன்களும், வேறு சில அத்தியாவசியப் பொருட்களும் விற்கும் சிறு சந்தையைக் கடந்து ஏரிக்கரையை அடைந்தோம்.

ஏரியின் மறு முனையில் இருக்கும் கிராமங்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து கொண்டிருந்தது. அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எந்திரப் படகுகளில் வீடு சேர்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது அந்தக் காட்சி. படகில் ஏறாமல் இவர்களுக்கு அன்றாட வாழ்க்கை இல்லை.

மக்கள் கூட்டம் நெரிசலாக இருந்த இடத்தை விட்டு அகன்றோம். ஏரியின் பிரம்மாண்டத்தைக் கரையிலிருந்தே பருகிக்கொண்டிருக்க,

'நண்பா! போட்டிங் போலாமா?'

என்ற வரிகள் கவனத்தைக் கலைத்தன.

சில நாள் தாடியுடன், லுங்கி அணிந்திருந்த ஒரு நபர், அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

'நண்பா! போட்டிங் போலாம் நண்பா! நல்லா இருக்கும்' என்றார் அவர் மீண்டும்.

நண்பன் சந்தேகமாக என்னை பார்த்தான்.

'என்னவெல்லாம் இருக்குங்க இங்க?' இது நான்.

'நண்பா! ஏரில போகும்போது பறவைகள் பாக்கலாம் நண்பா! கடல் சேர்ற இடத்துக்கு போலாம். 'சிட்டிசன்' படம் எடுத்த தீவு இங்க தான் இருக்கு நண்பா. படம் எடுக்கும்போது நாம தான் உதவியா இருந்தது.'

நண்பனும், நானும் புன்னகைத்துக் கொண்டோம். பயண நேரம், கட்டணம் இவற்றை விசாரித்துக் கொண்டு படகில் ஏறினோம்.

மெதுவாகத்தான் சென்றது படகு. சுற்றிலும் நீர் மட்டுமே என்ற பிரக்ஞை பயம் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு மாட்டு வண்டி பாதி மூழ்கிய நிலையில் எங்களைக் கடந்து சென்றது. தீவுக் கிராமங்களுக்கு இப்படித்தான் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்றார் படகோட்டி.















அவர் பெயர் பட்டறையான். தீவுப்பகுதிகளில் 12 கிராமங்கள் இருப்பதாகவும், இவருடையது 'அரவாங்குப்பம்' என்னும் கிராமம் என்றும் சொன்னார்.

தீவுப்பகுதிகள் என்று அவர் காட்டிய இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று தெரிந்தது.

ஆங்காங்கே சில பறவைகளையும், சில போட்டோ கிளிக்குகளையும் கொண்டு சிலிர்ப்புடன் நகர்ந்தது எங்கள் பயணம். அன்று பறவைகளின் இருப்பு குறைவு என்றார். பொதுவாக பிற்பகல் வேளை பறவைகள் இரை தேடிச் செல்லும் நேரம் என்பதால் எண்ணிக்கை வெகு குறைவாக இருப்பதாகச் சொன்னார். நாங்கள் பயணித்த படகின் வலப்புறத்தில் சில மீட்டர் தொலைவில் இளைப்பாறிக் கொண்டிருந்தது ஒரு சைபீரியன் நாரை.

தூரத்தில் தெரிந்த மணல் திட்டைக் காட்டி அது தான் 'சிட்டிசன்' திரைப்படம் படமாக்கப்பட்ட இடம் என்றும் நாம் அங்கேதான் போகிறோம் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தது அந்த மணல் வெளி. விசித்திரமான நிலப்பரப்பு அது. ஒரு முனையில் ஏரியையும், மறு முனையில் கடலையும் கொண்டிருக்கிறது. பத்திலிருந்து பதினைந்து மீட்டர் அகலம் மட்டுமே இருக்கும் ஏரிக்கும், கடலுக்குமான இடைவெளி.















தீவில், ஓரமாய் அமர்ந்திருந்தனர் ஓர் ஆணும் பெண்ணும்; காதலர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். வட இந்தியக் குடும்பமொன்று உணவு தயார் செய்யும் வேலையில் முனைந்திருந்தது. யாரோ ஒரு மனிதர் படகில் தன் இரு சக்கர வாகனத்தையும் கூட ஏற்றி வந்திருந்தார்.

மனிதர்களின் போக்கு எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. போகின்ற இடங்களையும் தனதாகக் கொள்ளும் மனப்பாங்கு. எங்கே போனாலும் நத்தைகள் போல் தன்னுடன் தன் வீட்டையும், கவலைகளையும், கடன்களையும் சுமந்து கொண்டே திரிகிறார்கள். பழைய கண்களால் பார்க்கும் போது புதிய இடம் கூட நம்மை உற்சாகப்படுத்தாது. பழைய கண்களைக் கொண்டவர்கள் அங்கே நிறைய இருந்ததாகப்பட்டது.

படகோட்டியுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டே கடலின் இது வரை பார்த்தறியாத இன்னொரு முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மீனவர் வாழ்க்கை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

மீன் பிடிப்பதே பிரதான தொழில். தீவுகளில் பெரிதாக வசதிகள் எதுவும் கிடையாது. எந்தத் தேவைக்கும் மறுகரையில் இருக்கும் பழவேற்காட்டுக்குத்தான் வர வேண்டும். சுமார் 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் இவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வார விடுமுறை நாட்களில் மட்டும் இது போல் பயணிகள் வந்து போகிறார்கள். மீன் பிடி நாட்களில் மாலை ஆறு மணிக்கு மேல் ஏரியில் வலைகள் போடப்படுகின்றன. இருட்டிய பின் பயணம் செய்தால் வலைக்குள் சிக்கி மோட்டார் பழுது படும் வாய்ப்பு உண்டு. சுனாமியின் பாதிப்பு பெரிதாக இல்லை; மொத்தம் 12 பேர் மட்டும் இறந்து போனார்கள். ஓடித் தப்பிக்க இயலாத வயோதிகர்கள். இவை எல்லாம் அவரின் பேச்சிலிருந்து நான் சேகரித்த விஷயங்கள்.

கரையை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம். சென்ற வழியிலேயே இல்லாமல் வேறு வழியில் அழைத்து வந்தார். கரையை நெருங்க நெருங்க, மீனவர் குப்பங்களின் காட்சிகள் கண்ணுக்குக் கிடைத்தன. கரையோரமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். நிறைய படகுகள் ஏரிக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. துடுப்பும், படகுகள் கட்டி வைக்க உதவும் சார்பும் செய்யும் பட்டறை ஒன்று முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மீன் பிடி வலை பின்னிக் கொண்டிருந்தனர் சிலர். பெண்கள் கருவாடு உலர்த்திக் கொண்டிருந்தனர். நாங்கள் கரையை அடைந்தோம்.


















அவருக்கு நன்றி சொல்லி, பயணக் கட்டணம் கொடுத்து விடை பெற்றோம். திரும்பிய பயணம் வேகமாகவும், பேச்சுகள் அற்றதாகவும் அமைந்தது.

மனதுக்குள் பெரிய அலைகள் ஓய்ந்ததாக ஓர் உணர்வு தோன்றியதென்னவோ உண்மை!

12 comments:

ஆ.சுதா said...

அருமையான பயணம் படிக்கையில் உங்க கூட நானும் பயணித்தேன்.
அழகாக எழுதியிருக்கீங்க சேரல்.

பழவேற்காட்டு ஏரிக்கு ரொம்ப நாளா போகனும்னு எனகும் ஆர்வம் இருந்தது ஆனால் வாய்ப்பு அமையவில்லை, தனியா போனா நல்லா இருக்காது நண்பர்களோ அங்க என்ன இருக்கும் என்ற சலிப்பான பேச்சில் ஒதுக்கி விடுகின்றனர்.
உங்கள் பயணக் கட்டுரையை
படித்ததில் அந்த ஆர்வம் அதிகரித்துள்ளது, நிச்சயம் அங்கு செல்வேன்.

ச.பிரேம்குமார் said...

சேரல், உங்கள் மொழியாளுமை நன்றாக இருக்கிறது. கவிதைகளோடு நல்ல கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதங்கள். வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

//எங்கே போனாலும் நத்தைகள் போல் தன்னுடன் தன் வீட்டையும், கவலைகளையும், கடன்களையும் சுமந்து கொண்டே திரிகிறார்கள். பழைய கண்களால் பார்க்கும் போது புதிய இடம் கூட நம்மை உற்சாகப்படுத்தாது//

அருமையான வரிகள்

Bee'morgan said...

ம்ம்.. :-)
எதுவும் சொல்லாமல் புன்னகைக்கத்தோன்றுகிறது.. அருமையான பயணக்குறிப்புகள் சேரா.. உண்மையைச் சொன்னால் படிக்கப்படிக்கப் பொறாமையாக இருக்கிறது.
--
மூன்றாவது புகைப்படம்(நெடுஞ்சாலை) சிறப்பாக வந்திருக்கிறது.
--
படித்துமுடிக்கும் போது கூடவே பயணித்து முடித்த ஆனந்தம் வந்து ஒட்டிக்கொள்கிறது. இன்றைய மூச்சு முட்டும் வேலைகளை தொடங்குவதற்கு முன், சில நிமிட இளைப்பாறல் தந்த பதிவுக்கு நன்றி..

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே...

அருமை...தொடரட்டும் உங்கள் தாகம்...

Boston Bala said...

வழக்கம் போல் கலக்கல். பகிர்வுக்கு நன்றி.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ஆ.முத்துராமலிங்கம்
நல்ல இடம் நண்பரே! தவற விட்டு விடாதீர்கள். வாழ்த்துக்கு நன்றி!

@பிரேம்குமார்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!

@Bee'morgan
நன்றி பாலா. மூன்றாவது புகைப்படம் அமைந்தது நெடுஞ்சாலையில் அல்ல. பொன்னேரியை அடுத்த கிராமங்களில் ஊடே ஓடிச் செல்லும் மாநிலச் சாலை அது.

@கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
நன்றி நண்பரே!

@Boston Bala
நன்றி நண்பரே!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும். தொடர்ந்து வரவும்.

-ப்ரியமுடன்
சேரல்

நிலாரசிகன் said...

சேரல்,

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

-நிலாரசிகன்.

மண்குதிரை said...

சுவரஷ்யமாக எழுதியிருக்கிறேர்கள் நண்பரே. செல்லவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுகிறது.

சரி நீங்கள் சூளைமேட்டிலா வசிக்கிறேர்கள்? எந்தத் தெரு?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@நிலாரசிகன்
நன்றி நண்பரே!

@மண்குதிரை
நன்றி நண்பரே!
நான் ஆத்ரேயபுரம் இரண்டாவது தெருவில் வசிக்கிறேன். நீங்களும் சூளைமேட்டில்தான் இருக்கிறீர்களா?

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

ஆஹா, அருமையா எழுதியிருக்கீங்க. நான் கூட செங்குன்றம் தாண்டி போனதில்லை.

'நத்தைகள் போல் மனிதர்கள், பழைய கண்கள்' - நல்ல அவதானிப்பு.

ஒரு நல்ல பதிவுக்கு நன்றி சேரல்.

அனுஜன்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

-ப்ரியமுடன்
சேரல்