புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, October 29, 2009

ஆணி வேர்களும், சல்லி வேர்களும்

பள்ளிப்பருவத்தில், டிரைவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. எப்பொழுதேனும் அபூர்வமாக வாய்க்கும் ஒவ்வொரு பயணத்தின் போதும் இந்த ஆசை மிகுந்து கொண்டே இருந்திருக்கிறது. ஓட்டுனர்களின் மீது அளவு கடந்த ஈர்ப்பு, அல்லது ஒரு மாதிரியான பொறாமை என்றும் கூடக் கொள்ளலாம். அலைவதையே அவர்கள் வாழ்க்கையாகக் கொண்டிருப்பதன் மீதான ஆச்சரியம் இன்று வரையிலும் என்னில் குறையவில்லை. சிறுவயதில் எனக்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, எப்படி இவர்கள் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் சரியான பாதையிலேயே பயணித்து, சேரிடத்துக்குச் சரியாகச் சென்றடைகிறார்கள் என்பதுதான்.

தொலைந்து போவது குறித்தான பயம் அப்போது ஆக்கிரமித்திருந்தது. ஆனால், ஓட்டுனர்களுக்கு அந்தப் பயம் இருப்பதே இல்லையா? இவர்களுக்குப் பாதைகள் மறந்து போகாதா? எந்த வழி ஒரு வழிப்பாதை என்பதை இவர்கள் எப்படி அறிகிறார்கள்? சில சமயங்களில் குறுக்கு வழிகளில் செல்லும்படி நேர்கிற போதும் எந்தச் சலனமும் காட்டுவதில்லையே? ஒரு சாலையில் புதிதாகச் செல்லும் போது இவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? இரவுப் பொழுதுகளை ஓட்டியே கழிப்பவர்களிடம் நிலை கொண்ட இரவுகள் இருப்பதுண்டா? இது போன்ற கேள்விகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதை விட அதிகமாக என் அப்பாவையும், என் சிறு வயதில் பெரியவர்களாக இருந்தவர்களையும் பற்றி வியந்திருக்கிறேன். ஓட்டுனர்களாவது தொழில் என்கிற வகையில் பாதைகளையும், ஊர்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், என் அப்பாவும் மற்றவர்களும் எப்படி, எதற்காக இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள்?

எனக்குப் பழக்கமான முதல் மாநகரம், கல்லூரிக் காலத்தில் அறிமுகமான திருச்சி. என் ஊரில் இருந்து திருச்சி செல்வதென்றால் இரண்டு வழிகள் உண்டு. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, தஞ்சாவூர் வழியாகச் செல்லலாம். அல்லது திருவாரூர், தஞ்சாவூர் வழியாகச் செல்லலாம். பின்னாளில் அறிமுகமாகி நினைவோடு கலந்து போய்விட்ட இந்த வழிகளை முதன் முதல் பார்க்கும்போது நான் மிரண்டு தான் போனேன். ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்வதென்றால் எத்தனை ஊர்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது? எத்தனை அடையாளங்களைக் கவனிக்க வேண்டி இருக்கிறது? எத்தனை பாதைகளைப் பதியவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?

பிரயாணத்தின் வழி வரும் ஊர்களை ரசிக்கும் மனம், ஊர்களைப் பிணைத்து வைத்திருக்கும் வழிகளை எத்தனை முறை ரசித்திருக்கும்? ஊருக்குள்ளோடும் குறுஞ்சாலைகளும், ஊருக்கு வெளியோடும் நெடுஞ்சாலைகளும் கூட தமக்கேயான அழகைக் கொண்டிருப்பவைதானே! மெல்ல பதிந்து நகரும் வாகனங்களின் நிழல், சுடும் வெயிலில் உருகியோடும் தாரில் தோன்றி மறையும் கானல் பிம்பம், இரு மேடுகளுக்கிடையேயான தொலைவில் வழிகள் ஒளித்து வைத்திருக்கும் மர்மம், எந்தத்திருப்பத்திலும் எதிர்ப்பட்டுவிடக்கூடும் ஓவியக்காட்சிகள் என்று கவிதைகளைச் சேர்த்து வைத்திருக்கின்றன வழிகள்.

இப்படியே அலைவதின் மீதான ஈடுபாட்டோடு, வழிகளைத் தெரிந்து கொள்வதின் மீதானதும் வளர்ந்தது. பின் நான் பயணித்த எந்தப் பாதையையும் மறந்ததாக நினைவில்லை.

அறிந்து கொண்ட எல்லா வழிகளின் வாசலிலும் வழிகாட்டி ஒருவன் நின்று கொண்டிருந்திருக்கிறான். வழிகாட்டும் நேரம் தவிர்த்து வேறென்ன இவர்கள் செய்யக்கூடும் என்ற கேள்வியும் எழுவதுண்டு. வேறென்ன? என்னைப்போலவே வேறோரிடத்தில் வழிகேட்கக்கூடும். நானும், வழி கேட்பவனாயும், வழி காட்டுபவனையும் அவ்வப்போது அவதாரமெடுத்தபடியே இருக்கிறேன்.

பின்னிப்பிணைந்தோடும் பாதைகள் எனக்கு வேர்களை நினைவுறுத்துவதாய் இருக்கின்றன. சில ஆணிவேர்களாகவும், சில சல்லி வேர்களாகவும் கிளை பரப்பிச் செல்கின்றன. உள்ளங்கை ரேகைகளைப் பார்க்கும்போதும் எனக்கு இப்பாதைகளின் சிக்கலான வலைப்பின்னல் அமைப்பு மனதுக்குள் தொன்றிச்செல்லும்.

பாதைகள் மீதான ஆச்சரியத்தின் நீட்சியாக இருக்கிறது சென்னை. நிறைய அலைந்து நிறைய இடங்களைத் தெரிந்து கொண்டபிறகு நான் நண்பர்களிடம் சொல்வது இதுதான், 'இந்த ஊரில் எங்கும் நான் தொலைந்து போய்விடுவதில்லை; அறிமுகமற்ற எந்தச் சாலையும், பரிச்சயமான ஏதாவதொரு இடத்துக்கு என்னை இட்டுச் செல்லும் மந்திரச் சாவியாய் இருக்கிறது.'

இறந்தகாலங்களில் கண்டு அதிசயித்த சாலைகளின் பிரம்மாண்டத்தை தகர்க்கும் வல்லமை கொண்டிருக்கின்றன சென்னையின் பிரதான சாலைகள்; கொஞ்சம் மிரட்டும் படியாகவும் கூட. ஈ.வே.ரா.பெரியார் சாலை எனும் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை எனும் நூறடி சாலை, அண்ணா சாலை எனும் மவுண்ட் ரோட் என்கிற முப்பெரும் சாலைகள் அமைக்கும் பிரம்மாண்ட முக்கோணம்தான் சென்னை வரைபடத்தில் நம்மை முதலில் ஈர்ப்பதாக இருக்கும். சென்னையின் மிகப் பரபரப்பான சாலைகள் என்று இம்மூன்றையும் சொல்லலாம்.

இந்தச் சாலைகளையும், இவற்றைத் தைத்தெடுத்திருக்கிற சிறு சாலைகளையும் நடந்தும், ஓட்டியும், நகர்ந்தும் கடந்தாயிற்று. எத்தனை முறை கடந்தாலும் மீண்டும் மீண்டும் வரத்தூண்டுகிற சாலைகளும் சென்னையில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து அடையாறு வரை நீண்டு கிடக்கும் சர்தார் படேல் சாலை என் விருப்பச் சாலைகளுள் ஒன்று. இரு புறமும் மரங்கள் நிறைந்த சாலையை வெறுமனே ரசிப்பதற்கேனும் அவ்வழியே போவதுண்டு. ராஜீவ் காந்தி சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்கரைச் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என்று என் விருப்பச் சாலைகளின் பட்டியல் மிகப்பெரியது.

ஒவ்வொரு நாளும் புதுப்பரிணாமம் கண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் எல்லா வயதிலும் உடனிருந்திருக்கின்றன இந்தச் சாலைகள். நான் படித்தும், கேட்டும் வளர்ந்த பல ஆதர்ச புருஷர்கள் இந்தச் சாலைகளில் நடந்திருக்கிறார்கள். நூற்றாண்டுகள் கடந்த வரலாறு இந்தப்பாதைகள் வழி வளர்ந்திருக்கிறது.

சென்னையின் ஒவ்வொரு சாலையில் பயணிக்கும் போதும் புதுப்புது அனுபவங்களுக்கு நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும். அண்ணா சாலையில் கவனம் ஈர்க்கும் சில விஷயங்கள், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சாலையின் ஒரு புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். இது சமீபத்திய வரவு. வாகன ஓட்டிகள் இதைக் கவனியாதிருக்க வாய்ப்புகள் அதிகம். அவ்விதம் இருப்பதும் நல்லதே. நடந்தலைந்த ஓர் அதிகாலையில் இந்த ஓவியங்களை நிதானமாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரிருக்கும் சாலையை ஒரு மழை ஓய்ந்த மாலையின் மஞ்சள் வெயிலில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர். கனவுக் காட்சிக்கு அரங்கமைத்தது போன்றதொரு உணர்வைக் கொடுக்கும் அனுபவமது. சில ஆங்கிலேய காலத்திய கட்டிடங்கள், அகண்டு கருத்துக் கிடக்கும் அண்ணா சாலை, விளம்பரப்பலகைகள் நீக்கப்பட்ட பிறகு காட்சி தருகிற மரங்கள், இத்யாதி என நிறைய நம்மைக் கவரக்கூடும்.

மீதமிருக்கும் மரங்கள், இன்னும் சென்னை அழகாய் இருப்பதற்கான காரணங்கள். பசுமை வழிச் சாலை எனும் கிரீன் வேஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என்னும் கதீட்ரல் சாலை, ராமகிருஷ்ண மடம் சாலை போன்ற சாலைகளில் சென்னையின் உயிரைச் சுமந்து கொண்டு உயிர் பிழைத்து நிற்கின்றன நூற்றாண்டு கால மரங்கள்.

ஆங்காங்கே மேம்பாலங்கள், ஆங்காங்கே சுரங்கப்பாதைகள் என ஏற்றியும் இறக்கியும் அழைத்துச் செல்லும் சென்னையின் சாலைகளை நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மட்டுமே ரசிக்க முடிகிறது. எப்போதும் சொல்வதைப் போல மனிதர்கள் இல்லாத வரையில் எந்த இடமும் அழகாகவே இருக்கிறது.

மழை நீர் தேங்கிக்கிடக்கும் நாட்களில் மட்டும் ஒரு குஷ்டரோகியைப் போல பாவித்து, பின் அதே சாலைகளில் பரபரப்பாக சென்று வரும் நாகரிகத்தை நாம் பழகி வைத்திருக்கிறோம். சாலைகள் எப்போதும் சாலைகளாகவே இருக்கின்றன. நாம் தான் மனிதர்களாகவே இருப்பதில்லை.

சாலைகள் எப்போதும் போதிமரங்கள். ஏதேதோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஏதேதோ கொடுத்துக் கொண்டுமிருக்கின்றன. எங்கோ இட்டுச் சென்றுகொண்டுமிருக்கின்றன. மீண்டும் வழியெங்கும் தேடல் தொடர்கிறது.

எந்தப் பாதையிலும் எப்போதும் யாரோ ஒருவன் ஏதோ ஓரிடத்துக்கு வழி கேட்டபடி இருக்கிறான். நகரம் தன் எல்லா மூலைகளிலும், தேடியலையும் ஒருவனைக் கொண்டே இருக்கிறது. வழி காட்டுவதில் எல்லோருக்குமே ஒரு திருப்தி வாய்த்துவிடுகிறது. மூலைக்கடைக்கு வழி கேட்டபோது உணர்ச்சி வசப்பட்டு பட படவென பேசிய ஆட்டோ ஓட்டுனரின் முகம் இன்னும் வெகு வருடங்களுக்கு நினைவிருக்கும். சென்னையைச் சேர்ந்த பிறகான வழிகாட்டும் வார்த்தைகளில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இரண்டாவது இடதும், நான்காவது வலதும் இப்போது சரளமாக பேச்சில் வந்து விடுகின்றன. திசைகளை விட, திரையரங்குகளின் பெயர்கள் வழி சொல்ல ஏதுவாய் இருக்கின்றன.

எந்தப் புது இடத்துக்கும் செல்வதற்கு முன் வரைபடத்தைச் சரி பார்த்துக்கொள்ளும் பழக்கம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதைவிட, சென்று திரும்பிய பின்னர், இந்த வழிகளில் இன்று நான் அலைந்து திரிந்தேன் என்கிற திருப்தி, வரைபடத்தைப் பார்த்தபடி ஏற்படுகிறது.

இதுவரை நடந்த எந்தப்பாதையும் என் பாதையில்லை என்ற நினைவு மட்டும் ஆயாசப்படுத்துவதாய் இருக்கிறது.

யுவனின் கவிதையொன்று பாதைகளைப் பற்றிய என் சிந்தனையினூடே அடிக்கடி வந்துபோகும்.

மனிதர்கள் நடப்பதற்கான
பாதையும்
மனிதர்கள் நடந்தே உருவானது


நான் கண்ட பாதை இன்னும் சிலர் நடக்க ஏதுவாகுமானால், அதுவன்றி வேறென்ன வாழ்வின் பயன்?

17 comments:

Bee'morgan said...

ேசரா..
வாவ்.. :) நீண்ட நாட்களுக்குப் பின் நான்
மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது..

அனாயாசமான நடை. வாசிப்பிலும், வாழ்க்கையிலுமான அனுபவமும் உங்கள் எழுத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது..

Karthik Murugan said...

Walking through these lines are great, Sera. Keep rocking :)

Karthik

நந்தாகுமாரன் said...

I like the philosophical tone in this

ஈரோடு கதிர் said...

சேரல்
ஆணி வேர்களாகவும், சல்லி வேர்களாகவும் கிளைத்து ஓடும் இந்த எழுத்து, சிந்தனை எதையெதையோ இடைவிடாமல் உணர்த்துகிறது

வாசித்து அனுபவித்தேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல வாசிப்பனுபவம் தந்த பதிவு.

யுவன் கவிதை ஆழம், மிகவும் பொருத்தமும் கூட.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராதாகிருஷ்ணன் சாலை என்னும் கதீட்ரல் சாலை, //

மேம்பாலம் கட்டுவதற்கு முன் அந்தச் சாலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.

இருபக்கங்களில் பெரிய ப்ளாட்பார்ம்களும், சாலையை மூடும் மரங்களுமாக, அதன் அழகை ரசிப்பதற்காகவே சீக்கிரம் கிளம்பி ஆபிஸுக்கு நடந்தே செல்வேன்.

இப்போ அந்த சாலையின் அழகே போய்விட்டது. :(

RaGhaV said...

இந்த பதிவு ரொம்ப நல்லாயிருக்கு சேரல்.. :-)

Unknown said...

அருமையான பதிவு சேரல் //அறிந்து கொண்ட எல்லா வழிகளின் வாசலிலும் வழிகாட்டி ஒருவன் நின்று கொண்டிருந்திருக்கிறான். வழிகாட்டும் நேரம் தவிர்த்து வேறென்ன இவர்கள் செய்யக்கூடும் என்ற கேள்வியும் எழுவதுண்டு. வேறென்ன? என்னைப்போலவே வேறோரிடத்தில் வழிகேட்கக்கூடும். நானும், வழி கேட்பவனாயும், வழி காட்டுபவனையும் அவ்வப்போது அவதாரமெடுத்தபடியே இருக்கிறேன்.// அற்புதமான வரிகள். இரண்டு மூன்று முறை இப்பதிவை வாசித்தும் அலுக்கவில்லை முடிவில்லா சாலைகளைப் போலவே. லிங்க் அனுப்பிய அமித்தும்மாவிற்கு நன்றி ;))

Unknown said...

சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த சாலை என் அலுவலம் இருக்கும் க்ரீன்வேஸ் சாலை. சாலையின் இருபக்கமும் மரங்கள் நிறைந்து, வளைந்த அழகான சாலைக்காட்சியை ஒரு கோப்பை தேநீருடன் மழை நாளில் எவ்வளவு ரசித்திருப்பேன்...மீண்டும் அந்த நினைவுகள் (தற்போது விடுப்பில் இருக்கிறேன்)

அ.மு.செய்யது said...

அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள்..குறிப்பாக ஸ்பென்ஸர் பிளாஸா எதிர்புறம் நான் கூட நினைத்திருக்கிறன்.

சென்னையின் குப்பைத் தெருக்களைக் கூட நான் ரசிப்பதுண்டு.எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்களை உள்ளடக்கிய பகுதிகள் சென்னை முழுதும் வியாபித்திருக்கின்றன.

ந‌ன்றி சேர‌ல் இனிமையான‌ வாசிப்பானுப‌வ‌த்திற்கு !!!!

You made my day !!

ஜெனோவா said...

நண்பா! எவ்வளவு அழகான வரிகள் உன்னுடையது !!
உங்கள் இந்த பதிவில் படிக்க ஆரம்பித்த பிறகு , கண்களை திசை திருப்ப முயன்று தோற்றதுதான் வெற்றி !!

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

அருமையான பதிவு சேரல்

ச.பிரேம்குமார் said...

எனக்கு(ம்) பிடித்த சென்னையை பற்றி உன் வரிகளில் படிப்பது அலாதியான இன்பமாக இருக்கிறது சேரா. வாழ்த்துகள் :)

Unknown said...

/-- நடந்தலைந்த ஓர் அதிகாலையில் இந்த ஓவியங்களை நிதானமாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. --/

நல்ல பழக்கம் தம்பி சேரா. நான் எப்பொழுதுமே, எங்குமே பொடிநடையாகச் செல்லவே ஆசைப்படுவேன். அதுவும் நமக்கு எதிரில் கடந்து போகும் முகங்கள் நிறைய விஷயங்களைச் சொல்லிச் செல்லும்.

ரொம்ப நல்லா எழுதி இருக்க சேரல். வார்த்தைக் கோர்வை ரொம்ப அழகா இருக்கு.

Sami said...

"சாலைகள் எப்போதும் சாலைகளாகவே இருக்கின்றன. நாம் தான் மனிதர்களாகவே இருப்பதில்லை" மிகவும் ரசித்த வரிகள். முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள் சேரல்.

raji said...

தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html

SURYAJEEVA said...

யாரோ போட்ட பாதையில் நடந்து போவதை தான் உள்ளம் நம்புகிறது, பயமில்லாமல் பயணிக்க.. புது பாதை அமைத்து செல்பவர்கள் சிலர், அவர்களே வரலாற்று பக்கங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்... நல்ல வழியோ தீய வழியோ... நல்ல வழியில் உங்கள் பயணம் அமையும் என்ற நம்பிக்கையில், என் பாதையில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. ஒரு நாள் அனைவரும் ஓரிடத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்