சிறுகதையின் இலக்கணம் என்று எதையும் அறிந்து கொள்ளாமல், ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதியது இது. பின் இலக்கணம் அறியத் தொடங்கிய பிறகு மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அலுப்பு காரணமாகவோ, போதிய அனுபவமின்மை காரணமாகவோ அதைச் செய்யவேயில்லை. அரைவேக்காடாக கூகிள் டாக்ஸில் கிடந்த கதையைப் படிக்க நேர்ந்த போதுதான் இதை இங்கே பதிவிட வேண்டுமென்ற கொடூரமான எண்ணம் உதித்தது. இட்டும் விட்டேன். இனி உங்கள் பாடு...
மே மாத இரவு ஒன்று. கோடைக்காலம் என்றாலே மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிற விஷயமாகிவிடுகிறது. இன்றைக்கும் அறையில் மின்சாரம் இல்லை. இரவு சாப்பாட்டை முடித்து வந்திருந்தோம், நானும், இன்னும் திவா மற்றும் சேகர். வசந்த் இன்னும் வரவில்லை. ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டு படுத்திருந்தோம். யாருக்கும் தூக்கம் வரவில்லை. மெல்லிய புழுக்கத்தோடு கொஞ்சம் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. தூக்கம் வரும் வரைப் பேசலாம் என்று முடிவு செய்து, என்ன பேசலாம் என்பதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.
'நாம என்னைக்குடா உருப்படியா பேசியிருக்கோம்? வழக்கம் போல மொக்கை தான்' இது திவா.
'இன்னைக்காவது ட்ரை பன்னுவோண்டா...' இது நான்.
'சரி சரி என்ன பேசுறதுன்ற டாபிக்ல மொக்கை போட ஆரம்பிச்சிடாதீங்க...'இது சேகர்.
'ஒ.கே.டா அப்போ நீயே ஆரம்பி. ஒரு கதை சொல்லு'
'என்ன கதை? ஆஃபீஸ் ல நடக்குற கதை சொல்லட்டுமா?' சேகர்.
'ஏ... வேணாம் வேணாம். எல்லா ஆஃபீஸ்லயும், நம்ம ஊரு மெகா சீரியல் மாதிரி ஒரே கதைதான் வேற வேற கேரக்டர்ஸ் பேர்ல ஓடிட்டிருக்கு. இன்டெர்னல் பாலிடிக்ஸ், உழைப்புக்கு மரியாதை இல்ல, சோப்பு போடுறவனுக்கு ப்ரோமோஷன், ரெண்டு பேருக்கு காதல், ஃபீல் பண்ற மூணாவது ஆள், மாடு மாதிரி வேல வாங்குறாங்க... எட்செட்ரா எட்செட்ரா... இதைத் தவிர ஆஃபீஸ் கதைகள்ல என்ன இருக்கு?' பொரிந்து தள்ளினான் திவா.
'பாருங்க சார், இந்தப் பையனுக்குள்ளையும் ஏதோ இருந்திருக்கு. பாதிக்கப்பட்டவரின் கோரிக்கைக்கிணங்க அலுவலகக் கதைகள் விலக்கப்படுகின்றன. வேற என்னடா பேசலாம்?'
இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னால், என்னை மாதிரியே நீங்களும் தூங்கி வழிய ஆரம்பித்துவிடுவீர்கள். முக்கியமான பகுதிக்கு வருவோம்.
'டேய், பேய்க்கதை ஒன்னு சொல்லுங்கடா.' என்று அடி போட்டான் சேகர். அதிலும் யார் சொல்வதென்று குழப்பம். கதை கேட்டவனே சொல்ல வேண்டும் என்று பெரும்பாலானோர், என்ன பெரும்பாலானோர்? இருப்பது மூன்று பேர், நானும் திவாவும் முடிவு செய்தோம்.
'ஐடியா கொடுத்தது நான். நான் ஆரம்பிக்க மாட்டேன். நீங்க யாராவது சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்'
சரி என்று நானே சொல்ல ஆரம்பித்தேன். அது பேய்க்கதை என்று சொல்ல முடியாது. பேய் பற்றிய என் அனுபவம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்போது நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை ஊருக்குப் போய் வருவது வழக்கம்.
அது ஒரு அக்டோபர் மாதம். தமிழ்நாடு முழுக்க மழை நன்றாக வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த நேரம். ஒரு சனிக்கிழமை சாயங்காலம், ஊருக்குப் புறப்பட்டேன். மழையில் சகதியில் சிக்கி பேருந்து பக்கத்து டவுனை அடைவதற்கும், எங்கள் ஊருக்குப் போகும் கடைசிப் பேருந்து புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். எல்லா சீட்டுகளிலும் தண்ணீர் உட்கார்ந்திருந்தது. மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.
அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கான நிறுத்தத்தில் இறங்கினேன். கூட யாரும் இறங்கியதாய்த் தெரியவில்லை. இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். எப்போதும் மற்ற நாட்களில் லிஃப்ட் கொடுப்பதற்கென்று யாராவது வருவார்கள். இன்று பெய்த மழையில் கடைகள் கூட எதுவும் திறந்திருக்கவில்லை. எல்லாரும் எப்போதோ வீட்டில் போய் அடைந்திருப்பார்கள்.
தெரு விளக்குகளும் இல்லை. பல வருடங்கள் பார்த்துப்பழகிய பாதை தானே என்ற தைரியத்தில் நடக்கத்தொடங்கினேன். வழியில் சாலையோரமாக சுடுகாடு ஒன்று இருக்கிறது. அது பெரிய பயமில்லை. ஆற்றங்கரையோரமாக அமைந்த சாலையாதலால், பாம்புகள் அடிக்கடி பாதையில் குறுக்கிடும். மழைக்காலம் என்றால் சொல்லத்தேவையே இல்லை. சாலையும் இந்த அதிக மழைக்கு எவ்வளவு தாக்குப்பிடித்திருக்கும் என்று தெரியாது.
பேச்சுத்துணைக்கும் ஆளில்லாமல் புறப்பட்டேன். அப்பாவிடம் வருவதாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளும் அறுந்து கிடக்கின்றன.
'ஏ...நிறுத்து நிறுத்து. அப்போ உன்கிட்ட செல் ஃபோன் இல்லையா?'
'ஐயோ அறிவுக்கொழுந்தே.... அப்போ எல்லாம் செல் ஃபோனே கெடையாதுடா'
'ரைட்டு விடு. அப்புறம்'
கதவு தட்டப்பட்டது. சேகர் எழுந்து போய் திறந்தான். வசந்த் தான். உள்ளே வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டான் வசந்த். அவன் எப்போதும் அவ்வளவாகப் பேச மாட்டான். எங்கள் கூட்டத்தில் தப்பி வந்து சேர்ந்துவிட்ட ஆள் அவன்தான்.
தார்ச்சாலை பல இடங்களில் இல்லாமல் போக, சேற்றில் இறங்கி ஒரு மார்க்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச தூரத்தில் சுடுகாடு வரப்போகிறது என்னும் அறிவு கிலியைக் கொடுத்தது. சங்கீத மேகத்தை விசிலில் தேன் சிந்த விட்டு விட்டு நடந்து கொண்டிருந்தேன். சுடுகாடு நெருங்க நெருங்க இதயம் எக்குத்தப்பாகத் துடித்தது. கொட்டித்தீர்த்த மழைக்குப் பிறகும் ஒரு பிணம் தனிமையில் எரிந்துகொண்டிருந்தது. அது ஒரு ஆறுதல். பிணம் எரிந்துகொண்டிருந்தால் வெட்டியான் அங்குதான் இருப்பான். ஒரு ஆபத்து என்று குரல் கொடுத்தால் ஓடி வர வாய்ப்பிருக்கிறது.சங்கீத மேகத்தின் சத்தத்தைக் கூட்டி, நடையிலும் வேகத்தைக் கூட்டிச் சுடுகாட்டைக் கடந்திருந்தேன்.
மனம் கொஞ்சம் சகஜ நிலை அடைந்திருந்தது. இருந்தாலும் தைரியம் கொஞ்சம் அதிகம்தான். திடீரென்று பின்னாலிருந்து ஒரு குரல், 'தம்பி மணி என்னாச்சு?' என்று ஒரு பெண்குரல். சின்ன வயசில் பக்கத்து வீட்டில் இருந்த முறுக்காத்தாவின் குரல் மாதிரியே கேட்டது. அசட்டு தைரியத்தில் திரும்பிப் பார்த்துவிட்டேன். என் கழுத்து உயரத்தில் ஒரு வயதான் பெண் நின்றுகொண்டிருந்தாள். சேலை தொப்பலாக நனைந்திருந்தது. அப்பியிருந்த இருட்டில் அவள் முகம் எனக்கு எப்படித்தெரிந்தது என்று புரியவில்லை. முகம் வெளிறிப்போவதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்று தான் உணர்ந்தேன். அவள் முகம் இல்லை. என் முகம் அப்படி ஆனதாக ஒரு பிரம்மை.
'பதினொன்னே முக்கால்' என்று சொல்லி விட்டு விடு விடுவென்று நடக்கத்தொடங்கினேன். சில அடிகள் நடந்த பிறகுதான் தோன்றியது. அந்தப் பெண்மணிக்குக் கால்கள் இருந்ததா? நான் பார்த்தேனா? நினைவில்லை. திரும்பிப் பார்க்கலாமா என்றொரு சபலம். அடி வயிற்றில் சங்கடமாக இருந்தது. மெல்லத் திரும்பி எனக்குக் காத்திருந்த அதிர்ச்சியை மென்று விழுங்கினேன். ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு அவள் நின்றிருந்த இடத்தில் வெற்றிடம் ஒன்று உருவாகி இருந்தது. கணகளை அலையவிட்டேன். சுற்றியிருக்கும் வெளியெங்கும் இருள் கருப்பு வண்ணமடித்தது போல் கிடந்தது. அவள் எங்கும் இல்லை. அவள் வயதுக்கு இத்தனை நேரத்தில் அதிகபட்சம் ஐந்து அடிகள் எடுத்து வைத்திருக்க முடியும்.
மீண்டும் இதயம் ஓடி முடித்த ஓட்டப்பந்தய வீரன் போல அடித்துக்கொள்ள, அதன் பிறகு ஓடத் தொடங்கினேன். ஓட்டம் வீட்டில் வந்து தான் நின்றது. வழியில் எப்போதும் நாய்கள் இருக்கும். இதே வேறு ஒரு நாள் என்றால் என் உடலில் ஒரு அரை கிலோவாவது குரைந்திருக்கும், சாரி குறைந்திருக்கும். பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், குளிரில் நடுங்குவதாகப் பொய் சொல்லி அன்றிரவு சமாளித்துவிட்டேன். மறுநாள் மழை ஓய்ந்து போயிருந்தது. அந்த வழியாகப் போகும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருபது பேருக்கு மேல் இருந்தார்கள். நான் முதல் நாளிரவு நடந்ததை நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு இரவில் தனியாக நான் அங்கே போனதே இல்லை. சொல்லி முடித்து விட்டேன். எல்லோரும் நான் ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருப்பார்கள். நீங்களும்தானே. சரி விடுங்கள் நான் பார்த்த பேய் அவ்வளவுதான்.
திவா கேட்டான் 'என்னடா...?அது பேய் தாங்கிறியா?'
'தெரியல. ஆனா அப்படித்தான் தோணுது'
எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக அப்போது வசந்த் பேசினான்.
'இல்ல. அது பேயா இருக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சாதாரண பொம்பளையா கூட இருக்கலாம். அப்போ ரொம்ப இருட்டுன்னு சொல்ற. ஸோ அவ உன் கண்ணுக்குத் தெரியாம பக்கத்துல எங்கயோ கூட இருந்துருக்கலாம். வேற திசையில நடந்து போயிருக்கலாம். நீ ஒரு குரல் குடுத்துருந்தா பதில் சொல்லி இருக்கலாம். நீதான் பயந்து ஓடி வந்துட்டியே.'
அவன் சொல்வதும் சரி போலத்தான் தோன்றியது.
'அப்புறம். இப்படி ஒரு விஷயம் நடக்காமலேயே கூட இருக்கலாம். இது உன் மனப் பிரம்மையா கூட இருக்கலாம். மனித மனம் வந்து எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தை எதிர்பாத்துட்டே இருக்கும். அது நடக்கிற மாதிரி, நடந்துட்ட மாதிரி கூட கற்பனை பண்ணிக்கும். இதுவும் கூட அப்படி இருக்கலாம். இருக்குன்னு சொல்லல. இருக்கலாம்னு சொல்றேன்.'
எனக்கு என்னவோ போலிருந்தது. இவன் என்னை மனப்பிளவு கொண்டவன் என்கிறானா? எப்போதும் பேசாதவன், இன்றைக்கு இவ்வளவு பேசுகிறான்.
'ஒரு விஷயம் சொல்லுங்க. ஹை வேஸ்ல ட்ராவல் பண்ணும்போது ரோட் நேரா போயிக்கிட்டே இருக்கிறதை பாத்திருக்கீங்களா?'
ஆம் என்பது போல தலையசைத்தோம்.
'அது எவ்வளவு தூரம் போகுதுன்னு பாத்திருக்கீங்களா?'
இல்லை என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
'நானே சொல்றேன். எந்த ரோடும் அதிக தூரத்துக்கு ஒரே நேர்க்கோட்டுல இருக்காது. குறிப்பா ஹை வேஸ். ஏன்னா ராத்திரில ட்ரைவ் பண்ணுறவங்களுக்கு ரோட் நேரா இருந்தா ரொம்ப குஷியாயிடும். வேகமா போய்கிட்டே இருப்பான். ஆனா திடீர்னு எதிர்பாக்காம ஒரு திருப்பம் வந்தா எல்லாமே காலி. அதுக்குத்தான் இடம் இருந்தா கூட ரோடை தொடர்ந்து நேரா போடாம கொஞ்ச தூரத்துக்கு ஒரு திருப்பம் வளைவுன்னு போட்டிருப்பாங்க. ஸோ நம்ம மனசு அலர்ட்டா எப்போதுமே இருந்துகிட்டே இருக்கும். இப்படி இல்லன்னா நம்ம மனசு எப்போதுமே நேரான பாதையையே எதிர்பார்க்கும் வளைவிலும் கூட நேரா இருக்கிற மாதிரியே நெனச்சுக்கும்.'
எங்களுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. வசந்த் தொடர்ந்தான்.
'அதுக்காக நான் பேய் இல்லன்னு சொல்ல வரல. எனக்குப் பேய்கள் மேல ரொம்ப நம்பிக்கை உண்டு. சரி. அடுத்தது யார் கதை சொல்லப் போறா?'
எல்லாரும் திவாவைப் பார்த்தோம். அவன் கொஞ்சம் குழம்பி இருந்தான் என்பது குரலில் தெரிந்தது.
'இதுவும் ஒரு எக்ஸ்பீரியென்ஸ் தான். பெசண்ட் நகர் வீட்ல இருந்தோம்ல. வசந்தும் தியாகுவும் அப்போ எங்கூட இல்ல. சேகர் இருந்தான். இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. ஒரு சனிக்கிழமையோ ஞாயித்துக்கிழமையோ. வீட்டுல யாரும் இல்ல. நான் மட்டும் இருந்தேன். மத்தியானம் நல்லா தூங்கிட்டேன். சாயந்திரம் ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல. திடீர்னு முழிப்பு வந்து எழுந்திருக்கலாம்னு பாக்கறேன். முடியல. கண்ணைக் கஷ்டப்பட்டு தெறக்கறேன். எதுவோ எம்மேல உட்காந்துருக்கு. புகையை ஒரு மனுஷன் மாதிரி செஞ்சா எப்படி இருக்கும்? அப்படி ஒரு உருவம். கை ரெண்டும் என் தோளை அழுத்திப் புடிச்சிருக்கு. திமிறிக்கிட்டு எழுந்திருக்கிறேன். லட்சம் காக்காய்ங்க ஒன்னா கத்துனா எப்படி இருக்கும்? அப்படி ஒரு சத்தம் காதுக்குள்ள கேக்குது. அப்புறம் கிறீறீறீறீச்ச்ச்ச்ச்ச் னு ஒரு சத்தம். எல்லாம் ஒரு அரை நிமிஷம் தான். ஒரு மணி நேரமா கூட இருக்கலாம். எனக்குத் தெரியல. பதறியடிச்சு எழுந்திருக்கிறேன். எதுவுமே இல்ல. நிசப்தமா இருக்கு. உடம்பு முழுக்க வியர்த்திருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் ஞாபகத்துக்கு வருது. நான் வீட்டுல உள் ரூம்ல தூங்கிட்டு இருக்கேன். சாயங்காலம் ஆகிடுச்சு. வீட்ல யாரும் இல்ல. இன்னும் லைட் போடல. இருட்டா இருக்கு. கதவு சாத்தியிருக்கு. ராத்திரி எக்மோர் வரைக்கும் போகணும். துணி ஊற வச்சிருக்கேன். துவைக்கணும். எல்லாம் புரிஞ்சிடுச்சி. ஆனா அந்த நிமிஷம் நடந்தது என்னன்னு மட்டும் புரியல. இப்போ வரைக்கும். அது பேயா? வேற எதுமா? நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருந்தா என்ன ஆயிருக்கும்? ஒன்னுமே புரியல' சொல்லி முடித்தான்.
கொஞ்சம் பீதி என்னைப் பிடித்திருந்தது. மற்றவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருப்பர்கள் என்று தெரியவில்லை. வசந்தைப் பார்த்தேன். அவன் தெளிவாக இருப்பது போல்தான் இருந்தது. இருட்டில் அவன் முகம் கூடத் தெளிவாகத் தெரிவதாகப் பட்டது.
'இதுல பேய்...பிசாசு எதுவும் இருக்க வாய்ப்பில்லைடா. எல்லாம் ஆழ்மனத்தோட லீலைகள். ஏதோவொரு அழுத்தம் உன் மனசுல இருந்துட்டே இருக்கு. உன் பழைய நினைவுகள், நிறைவேறாத ஆசை, வக்கிர எண்ணங்கள் எதோ ஒன்னு அந்த அழுத்தத்தைக் கொடுத்துட்டே இருக்கு. அந்த அழுத்தம் நீ தூங்குற நேரங்கள்ல உன்னை அறியாம வெளிப்படலாம். ஆழ் மனம் மட்டும் அதை உணர்ந்திருக்கும். ஆழ் மனம் விழிக்கிறதுக்கு முன்னாடி, உடம்பு மட்டும் விழிக்க முயற்சி பண்ணும்போது அந்த பிம்பம் உனக்கு நேர்ல திரியுற மாதிரி இருந்திருக்கு. அவ்வளவுதான். அந்த ஓசைகள் வந்து, உன்னோட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ். இது மாதிரி சத்தம் கேக்குறது சுய நினைவில் இருக்கும்போதே கூட எனக்குக் கேட்டிருக்கு. எல்லாருக்கும் கேட்கும்.'
விளக்கம் கொடுத்து முடித்தான் வசந்த். அறையில் மின்சாரம் வந்தது.
'சரி..... நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன். சேகர் கதையோட ரெடியா இரு' என்று சொல்லிவிட்டு வசந்த் உள்ளே போனான். நாங்கள் படுத்த வாக்கிலேயே கிடந்தோம். அறையின் கதவு மீண்டும் தட்டப்பட்டது. சேகர் எழுந்துபோய்த் திறந்தான். வெளியே நின்று கொண்டிருந்தது......மீண்டும் வசந்த்.
தூக்கி வாரிப் போட எழுந்தேன்.
'அப்படியே அவன ஒரு அறை அறையலாமான்னு இருந்துச்சு எனக்கு. சரி எல்லாம் நெனக்கிறதோட சரி. நமக்கு எங்க அவ்வளவு தைரியம்?' சேகர் பேசிக்கொண்டிருந்தான்.
எனக்கு எதுவும் புரியவில்லை. தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் இருந்த வரிகள் என்னைக் குழப்பின.
'சார் எழுந்துட்டாரு. டேய் நீதான் கதை சொல்றவனா? நல்லா இருடா' என்றான் திவா என்னைப் பார்த்து.
நான் யோசித்துப்பார்த்தேன். இந்தக்கதைகளும், விளக்கங்களும் எதுவும் எனக்கு இதற்கு முன் தெரியாது. எனக்கு இந்த மாதிரி அனுபவங்களும் நிகழ்ந்ததே இல்லை. பின், இவை யாருடைய நினைவுகள்?
மீண்டும் அறைக்கதவு தட்டப்பட்டது. சேகர் மூன்றாவது முறையாகப் போய்த்திறந்தான். வசந்தும் மூன்றாவது முறையாக வந்திருந்தான். அறையில் மின்சாரம் வந்தது.
4 comments:
Dai, naa thaniya thoonganum da... athuvum 15th floor da...
பாவம் பச்சை .
நல்லா இருந்தது கதை .கடைசியில் எது நிஜ வசந்த்?
@Pachai
:)
நன்றி பத்மா...
கடைசியில் வந்தவன் தான் நிஜ வசந்த்....முன்பு வந்தவர்களும் வசந்த் தான். ஆனால் எப்படி வந்தார்கள் என்பதில்தான் மாறுபாடு :)
-ப்ரியமுடன்
சேரல்
தல ரூம் போட்டு யோசிச்சீங்களோ, மதியம் தூங்கும்போது மட்டுமே நம்மீது யாரோ அமர்ந்து அமுக்குவது போலத் தெரியும். மூளைக்கு முன்பு நினைவு விழித்துக்கொள்வதே காரணம். அமுக்குவான் என்று அதை அழைப்பார்கள்.
Post a Comment