புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, August 21, 2009

எல்லாக் கரைகளிலும் ஒரே கடல்

சுத்தமான காற்று, யாருமற்ற வெளி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் கடல், சலனப்படங்களிலும் நிழற்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கும் மணற்பரப்பு, இப்படியான ஒரு காட்சியைச் சென்னையில் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. ஆனாலும் இது சாத்தியம். திருவான்மியூரிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பதினைந்து கிலோமீட்டர் பயணித்தபிறகு, வழி தெரியும் எந்த இடத்திலும் கடலை நோக்கிச் சென்றால் இந்த காட்சி கிடைக்கும். நண்பர்களுடன் மாமல்லபுரம் போகும் வழியில் யதேச்சையாக இந்த இடம் அறிமுகமானது. மனிதர்கள் இல்லாத கடலாடுதல் என்பதே நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருக்கிறது.



சென்னையில் இருக்கும் மற்ற கடற்கரைகளுக்கும் போய் வந்திருக்கிறேன். எல்லாமே ஒரே கடல்தானே என்று சிந்திக்கும் போது, உலகம் முழுவதும் கூட ஒரே கடல்தானே என்று எண்ணத்தோன்றும். என் கால் விரல் நனைத்த சமுத்திரத்தின் துளி, என்றேனும் ஒரு நாள் ஓர் ஆஸ்திரேலிய அழகியின் விரல் தொட்டுத் திரும்பலாம்; நீருக்கலையும் ஓர் அரேபியப் பயணியின் எரிச்சலுற்ற முகத்தைத் தரிசிக்கலாம்; தூந்திரம் சேர்ந்து உறைந்துபோய் பனிப்பெருவெளியின் பரப்பில் ஒரு துகளாகலாம்; உலகம் சுற்றி மீண்டும் இக்கரை சேர்ந்து என்னைத் தேடலாம்; அல்லது, வழியிலேயே சூரியனின் தாகம் தணித்துத் தொலைந்து போகலாம்.

சென்னைக்கு சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன்பு தான் முதன் முறையாக வந்திருந்தேன். அதற்கு முன் மெரீனாவைப் பற்றி எனக்குக் கிடைத்திருந்த அறிமுகம் என்னைத் திகிலடையச் செய்வதாகவே இருந்தது. கல்லூரி காலத்தில், நண்பனொருவன் சென்னைக்கு வந்துவிட்டு, கடற்கரையில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும், தான் பார்த்த காட்சிகளையும் சொல்ல, சுஜாதாவின் ஆரம்பகாலக் கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு மேலிட்டது. மெரீனாவை முதல் முறை அதே நண்பனோடு நேரில் பார்க்க நேர்ந்த போது, அவன் சொன்ன செய்திகளையும் அதன் மீதான என் கற்பனைகளையும் முழுவதுமாகத் தவிர்த்துவிடமுடியவில்லை. கேள்வி ஞானத்தில் அறிமுகமாகிற பல விஷயங்களை நேரில் பார்க்கையில், இப்படியான அனுபவம் ஏற்படுவது இயல்பு.

மக்கள் கூட்டம் நிறைந்து கிடக்கும் மெரீனாவின் அந்தரங்கத்தை ரசிக்க பல நாள் ஆசைப்பட்டிருக்கிறேன். சென்ற மாதம் மழை பெய்த ஒரு விடுமுறை நாளின் இரவில் அந்த வாய்ப்பு கிடைத்தது. மழை தொடங்கிய சில நிமிடங்களில், நானும் நண்பர் ஒருவரும் எங்கள் பயணத்தினூடே மெரீனாவை ஒட்டி இருக்கும் கடற்கரைச் சாலையில் இருந்தோம். கடலுக்குப் போகலாம் என்றார் நண்பர். சென்றோம். இரவு எட்டரை மணிக்கு, மனிதர்களும், கடைகளும் இயங்காது இருந்த கடற்கரை ரம்மியமாக இருந்தது. அடித்துக்கொண்டிருந்த சாரல் சிறிது நேரத்தில் நின்று போனது. சில நிமிடங்கள் கடலாடிப் பின் திரும்பினோம்.

அதிகாலையில் சுமார் ஐந்து மணிக்கு வந்தால், யாருக்கும் மெரீனாவையும் பிடித்துப்போகும். உடற்பயிற்சி, கராத்தே, யோகா, நடை, ஓட்டம் இதற்காக வரும் சொற்பமான மனிதர்களை ஐந்தரை மணியிலிருந்து பார்க்கலாம். அந்த நேரத்தில் கடலைப்பார்ப்பதற்கென்று வந்தவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன் என்பதில் கொஞ்சம் கர்வமும் உண்டு.

மேல்தட்டு மக்கள் அதிகம் உலவுகிற பகுதியாக எனக்கு அடையாளப்படுகிறது பெசன்ட்நகர் கடற்கரை என்னும் எல்லியட்ஸ் கடற்கரை. இங்கே காலை வேளைகளில் நான் போனதில்லை. இரண்டு ரூபாயைத் தானமாகக் கொடுத்த பெண்ணிடம் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்ட பிச்சைக்காரரை இக்கடற்கரையைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் நண்பனொருவன் நினைவு கூர்வான். விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் மெரீனா அளவுக்கு இங்கு கூட்டம் சேர்வதில்லை. ஆனால், இங்கும் நான் விரும்பும் தனிமை கிடைப்பதில்லை.

எங்கேயும், உடன் சுற்றும் மனிதர்கள் என் இருப்பை இல்லாததாக்குகிறார்கள். கடற்கரை கூட்டங்களில் ஒரே ஆறுதல், அங்கே விளையாடும் குழந்தைகள். அவர்களுக்கான ஒரு நூதன வித்தைக்காரன் என்பது போலும் வந்து வந்து மீண்டு, வித்தை காட்டுகிறது கடல். கடலின் ஆரவாரத்தைப் பெற்றுக் கொண்டு, தங்கள் புன்னகையைக் கடலுக்குக் கொடுத்துப்போகிறார்கள் குழந்தைகள்.

மெரீனாவை ஆக்கிரமித்திருந்த கூட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, எலியட்ஸ் கடற்கரையையும் தொட்டிருக்கிறது. அதை அடுத்திருக்கும் திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரைகளிலும் இப்போது ஐஸ்கிரீம் விற்பவர்களையும், ராட்டினக்காரர்களையும் பார்க்க முடிகிறது.

இதற்கு மாறாக, வட சென்னையின் கடற்கரைகளில் மக்களை ஈர்க்கும் எந்த அம்சமும் இருப்பதில்லை. காசிமேடு, ராயபுரம் பகுதிகள் மீன் பிடித்துறைமுகங்களாக இருக்கின்றன. இங்கே காதலர்களோ, குழந்தைகளோ கொண்டாட என்று எதுவுமில்லை. அதைத்தாண்டி வடக்கே செல்லச்செல்ல மண்ணரிப்பைத் தடுக்க வேண்டி குவிக்கப்பட்டிருக்கும் பாறைகளைத்தான் கடற்கரை என்பதாகக் காண நேரிடுகிறது. இந்தக் கடற்கரையை ஒட்டிய சாலை, துறைமுகத்தைச் சேர்ந்த வாகனங்களின் போக்குவரத்துக்காகவே அமைந்திருக்கிறது. இங்கும் ரசிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அது கண்களைப் பொருத்தது. மற்ற கடற்கரைகளில் இருப்பவற்றை எதிர்பார்ப்பவர்கள் இங்கு வருவதைத் தவிர்க்கலாம். ஆனால், இது ஒரு வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்தும் என்பது முற்றிலும் உண்மை.

சென்னையில் கடல் பார்த்த இடங்களில் சேர்ந்து கொள்பவை சாந்தோமும், திருவெற்றியூரும். இன்னும் பார்க்காமல் மீதமிருப்பது பட்டினப்பாக்கம் கடற்கரை. இந்த இடங்கள் அனைத்துமே மீனவர்களுக்கானவையே.

பல கரைகளையும் கண்ட பிறகு ஏற்பட்ட தெளிவு, எந்தக் கரையானாலும், கடல் ஒன்றே! கூட்டத்தில் தனியனாயும், தனிமையில் கூட்டமாயும் உணரச்செய்வது காதல் மட்டுமில்லை, கடலும்....

11 comments:

Pachai said...

nanraga ezhuthi irukkiray nanbara

Vilva said...

அருமை..! அருமை! கலக்கறேள் போங்கோ!.
கடலும் அருமை..அனுபவப் பகிர்வும் அருமை!
நிழற்படத்தை நான் திருடிக் கொள்கிறேன்!

ஜெனோவா said...

Nalla pathivu!! Valthukkal!

//என் கால் விரல் நனைத்த சமுத்திரத்தின் துளி, என்றேனும் ஒரு நாள் ஓர் ஆஸ்திரேலிய அழகியின் விரல் தொட்டுத் திரும்பலாம்; நீருக்கலையும் ஓர் அரேபியப் பயணியின் எரிச்சலுற்ற முகத்தைத் தரிசிக்கலாம்; தூந்திரம் சேர்ந்து உறைந்துபோய் பனிப்பெருவெளியின் பரப்பில் ஒரு துகளாகலாம்; உலகம் சுற்றி மீண்டும் இக்கரை சேர்ந்து என்னைத் தேடலாம்; அல்லது, வழியிலேயே சூரியனின் தாகம் தணித்துத் தொலைந்து போகலாம்.//

migavum rasittha varikal ;-))

Nanriyum & Valthukkalum

ச.பிரேம்குமார் said...

நல்ல தொடக்கம் சேரல். சென்னையை பற்றி இன்னும் நிறைய இடுகைகளை எதிர் பார்க்கிறேன்

//கூட்டத்தில் தனியனாயும், தனிமையில் கூட்டமாயும் உணரச்செய்வது காதல் மட்டுமில்லை, கடலும்....//
ஆகா!!

நந்தாகுமாரன் said...

நல்லாயிருக்குங்க சேரல்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான நடையில் உங்கள் அனுபவக் கட்டுரை ரசிக்க வைத்தது.

செபா said...

தல பின்னிடீங்க

"உழவன்" "Uzhavan" said...

தலைப்பே அருமை.. மற்றவைகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ!!!

Unknown said...

உங்களுடைய எழுத்து முறை படிக்க நல்லா இருக்கு சேரல்... தொடருங்கள்.

ரெஜோ said...

// கூட்டத்தில் தனியனாயும், தனிமையில் கூட்டமாயும் உணரச்செய்வது காதல் மட்டுமில்லை, கடலும்.... //


இதை நான் வன்மையாக வழி மொழிகிறேன் யுவர் ஆனர் :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே! அடுத்த பதிவுடன் விரைவில் வருகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்