புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, August 03, 2009

Spring, Summer, Fall, Winter and Spring



இந்த ஆக்கம் 'யுகமாயினி' இலக்கிய இதழின் ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது


மார்புக் கச்சையை இறுக்கிக்கொண்டு தயாராகிறாள் நர்த்தகி. மடம் இதுவரை காணாத வித்தியாசமான நிறத்தைப் பூசிக்கொள்கிறது. சுற்றிச் சுழன்று, காற்றின் திசை மாற்றுகிறாள். வேர்களைப் பற்றிய நினைவுகளின்றி இலைகளும் பூக்களும் நர்த்தகியின் அழகில் மயங்கிக்கிடக்கின்றன. வியர்த்துப்பெருகுகிறார்கள் ஞானம் தேடிவந்த சீடர்கள். மானுடப்புழக்கமேதும் இல்லாது தனிமையில் உறைந்திருக்கும் பின்னிரவுக் குளமென சலனமேதுமற்று அமைதியில் நிறைந்திருக்கிறார் குரு. காமத்தின் பிரவாகத்தில் எல்லோரையும் மூழ்கடித்துவிடுவதென்று ஆடத்தொடங்கியவள் களைத்துச் சரிகிறாள். விம்மிச் சரியும் மார்புகளில் கண்களைத் தொலைத்திருக்கிறார்கள் சீடர்கள். எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதான ஒரு நிலையைத் தனதாக்கிக்கொண்ட குரு அவளை வழியனுப்புகிறார். தோல்வியின் சுவடுகளின் வழி அவள் பல்லக்கு ஊர்ந்து போகிறது. தீராத தாகத்தின் பிடியில் சிக்குண்டு, தாகமேற்படுத்திய தடாகம் தொலைவில் சிறுபுள்ளியாய் மறைவதைப் பார்ததவண்ணமிருக்கின்றனர் சீடர்கள். குரு பேசுகிறார். 'எல்லாவற்றையும் கடந்த நிலை என்பதை விளங்கிக்கொள்வதற்கோர் வாய்ப்பான நிகழ்வு இது. அவள் நடனத்தில் நீங்கள் வியர்த்தீர்கள்; உணர்வுகளின் வசம் உங்களை இழந்தீர்கள்; அவள் போன வழியில் நீங்கள் தொலைந்து போயிருக்கிறீர்கள். மெல்ல மெல்ல அவிழும் பூக்களுக்கும், அவள் மேனிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று உணர்கிறீர்கள் நீங்கள். அப்படியே உணர்கிறேன் நானும். பூக்களின் மென்மையின்பாலான மோகம் உங்களை அப்படி எண்ண வைத்திருக்கிறது. பூக்களின் பலவீனமான இயல்பைக் குறித்த பரிதாபம் என்னை இப்படி எண்ணவைத்திருக்கிறது. கடந்து போகும் நிலையைக் கைக்கொள்ளும் வேளையில் உங்களுக்கும் இது விளங்கக்கூடும்; நீங்களும் இவ்விதமே எண்ணக்கூடும்'. புரியாதமொழியில் இலக்கியச் சொற்பொழிவு கேட்டவர்களெனச் சமைந்திருக்கிறார்கள் சீடர்கள். இருளும் ஒளியும் புணர்ந்த நிலையில் வாசல் வழியோடும் ஆற்றில் மங்கலான தன் பிம்பம் பார்த்திருக்கிறது மடம்.

வழிகள் எதுவும் இன்றி மரங்களுக்கிடைப்பட்ட நிலப்பரப்பில் நடக்கிறார்கள் இருவர். சூரியன் உச்சியில் நிற்கிறது. ஞானத்தின் கூறுகளை விளக்கிக்கொண்டே நடக்கிறார் குரு. கேட்டபடியே சூழ்நிலையை அவதானித்துக்கொண்டு நடக்கிறான் சீடன். இலக்கு இன்னும் வெகு தொலைவில் இருக்கலாம். அந்தப் பருத்த மரத்தின் பின்னே மறைந்துமிருக்கலாம். இலக்குகள் எப்போதும் தன்னிருப்பிடத்தை அறிவித்துக்கொள்வதில்லை. அலைந்து திரிபவர்கள் எப்படியேனும் அடைந்து விடுகிறார்கள். இவர்களும் அடையவிருக்கிறார்கள். வழியில் காலாறப் படுத்துக்கிடக்கிறது ஒரு காட்டாறு. மறுகரையில் விரிந்துகிடக்கும் பள்ளத்தாக்கை நோக்கியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இவர்கள் பயணம். இக்கரையை அடைந்ததும் கண்ணுக்குத் தெரிகிறாள் காட்டாறு கடக்கக் காத்திருக்கும் ஓர் இளம்பெண். கரை புரண்டோடும் வெள்ளம் அவளை அக்கரை பற்றிய கனவுகளில் மட்டும் ஆழ்த்தி வைத்திருக்கிறது. ஆழம் எவ்வளவு இருக்குமென்ற அனுமானம் எவருக்கும் இல்லை. கண்களில் கேள்வியோடும், தயக்கத்தோடும் நின்றவளை தூக்கிச் சுமந்து மறுகரையேற்றுகிறார் குரு. சீடன் காட்சிகளை உள்வாங்கிக்கொள்கிறான். மூவரும் கரையேறி இருவேறு வழிகளில் பயணிக்கிறார்கள். மனதை அரிக்கும் கேள்வியொன்றைச் சுமந்தவண்ணம் அமைதியிழந்தவனாகிறான் சீடன். போதனையில் மனம் லயிக்காதவனின் போக்கறிந்து கேட்கிறார் குரு. சீடன் தயக்கத்துடன் 'இளைஞன் நான் அப்பெண்ணைத் தூக்கிச்சுமந்திருந்தால் அதுவே ஞானமார்க்கத்தினின்றும் வேறு பாதையில் இட்டுச்செல்லும் விசையாய் இருந்திருக்கும். இப்படி இருக்கையில் முற்றும் துறந்த குரு தாங்கள் ஒரு இளம்பெண்ணைச் சுமப்பது எப்படி தகும்?' என்கிறான். குரு ஒரே பதிலைக் கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்கிறார். 'நான் அப்பெண்ணை அந்த ஆற்றங்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்துகொண்டிருக்கிறாய்?'. பதில் கிடைக்கப்பெறுகிற சீடன் ஒளி தெரியும் புது வழியில் நடக்கத் தொடங்குகிறான்.

ஞானத்தின் வழிநடத்தும் குருவைத் தேடி வருகிறான் ஒரு சம்சாரி. 'ஞானம் என்பது என்ன? அதை எப்படி அடைவது?' என்று காற்றெல்லாம் கிழிய கேட்டு வந்தவனைத் துரத்தி அனுப்புகிறார் குரு. ஆண்டுகள் கழித்துத் திரும்பி வா என்ற பதிலோடு அவன் திரும்பிப்போகிறான். மீண்டும் ஆண்டுகள் கழித்து மீண்டு வருபவன், ஞானத்தின் மர்மம் நோக்கிச் செல்லும் வழி எங்கே தொடங்குகிறது என்கிறான். மீண்டும் பழைய பதிலோடு திரும்பிப் போகிறான். ஆண்டுகள் கழித்து மீள்கிறான். ஞானம் நமக்குத் தருவதுதான் என்ன? என்கிறான். மீண்டும் அதே பதில். அதன் பின் அவன் திரும்பி வரவேயில்லை. கேள்விகளின் பரப்பில் அலையத்தொடங்கும் சீடர்கள் கேட்கிறார்கள். 'ஏன் அந்த சம்சாரி திரும்பவில்லை?'. குரு சொல்கிறார், 'இல்லற தர்மத்தில் இருக்கும் ஞானத்தையும் அதை அடையும் மார்க்கத்தையும், அதன் மர்மம் அறியும் வழிமுறையையும், அது அவனுக்குத் தரும் யோகத்தையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான். இனி அவன் திரும்ப மாட்டான்'. துறவறத்தின் ஞானமார்க்கத்தில் இன்னுமோர் அடி எடுத்து வைக்கிறார்கள் சீடர்கள்.

விதைகள் விழுந்து, வேரூன்றி, தளிர்கள் துளிர்த்து, கிளைகள் தோன்றி, வேர்கள் பரப்பி, இலைகள் உதிர்த்து, மீண்டும் துளிர்த்து, பூக்கள், காய்கள், கனிகள் தோன்றி மீண்டும் விதைகள் விழுந்து காலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. சீடர்கள் குருக்களாகிறார்கள். வாழ்க்கை தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறது. ஞானம் தனக்கென்று விதிக்கப்பட்ட வழியில் மீண்டும் பரப்பப்படுகிறது. இந்தச் சுழற்சிக்கு ஓரணு உயிர்களிலிருந்து, அணுக்களைப் பகுத்துணர்ந்திருக்கும் மனிதர்வரை எல்லோரும் பொதுவானவர்களே!

இந்திய ஆன்மீகம் சொல்லும் இந்தக்கதைகளும், அவை உணர்த்திச்செல்லும் உண்மைகளும் நமக்குள் புதிய கண்களைத் திறந்து வைக்கும் திறவுகோல்களாகின்றன. இதே போன்றதொரு உணர்வை என்னுள் எழுப்பிய ஒரு திரைப்படம் எனக்குச் சற்றும் புரியாத கொரிய மொழியில் அமைந்திருந்தது. மனித வாழ்வின் படிநிலைகளை, ஒவ்வொரு நிலையிலும் மனிதனின் உணர்வுகளை, அவன் கடந்துபோகும் நிகழ்வுகளை, அவன் பெறும் ஞானத்தை, பருவ கால நிலைகளைப் படிமமாக்கிப் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திரைப்படத்தின் பெயரே மேற்சொன்ன சுழற்சியை அழகுறக் கொண்டிருக்கிறது.



குரு-சீடன் என்கிற அமைப்பும் கூட இந்தக் கதைகளை எனக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும். திரைப்படத்தைக் கதை சொல்லும் ஓர் ஊடகமாக மட்டும் பார்க்காமல், அதையும் மீறிய வாழ்வின் அற்புதங்களையும், ஆகச் சிறந்த கணங்களையும் பதிவு செய்யும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருக்கும் விதத்தை நாம் வியந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிகழ்கிற வாழ்க்கைச்சுழற்சி, அனுபவ மாற்றம், அறிவு முதிர்ச்சி இவைகளை மிக நுண்ணிய கண்கள் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.



Spring பருவத்தில் துவங்குகிறது திரைப்படம். மரங்கள் நிறைந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் பள்ளத்தாக்கில் ஓர் ஏரி. ஏரியின் நடுவே ஒரு கோயில். அது ஒரு சிறு குடிலைப் போல அமைக்கப்பட்டிருக்கிறது. மிதந்து போகும் தன்மை கொண்டிருக்கிறது. அதில் ஒரு குரு தன் சீடனுடன் வாழ்கிறார். சீடன் ஒரு சிறுவன். அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக, படகில் ஏறி மறுகரைக்குச் சென்று காட்டுக்குள் மூலிகைகள் பறிக்கும் நிகழ்வு அமைகிறது. சிறுவனுக்கு எல்லாம் விளையாட்டு நிறைந்ததாகவே தெரிகிறது. ஏரியில் ஓடும் மீனுக்கும், தவளைக்கும், பாம்புக்கும், உடலில் கல்லைக் கட்டி ரசிக்கிறான். அவை இயங்க இயலாமல் இருக்கும் நிலை இவனைக் குதூகலிக்கச்செய்கிறது. குரு இவற்றைப் பார்க்கிறார்.



இரவில் அவன் உறங்குகையில் அவன் முதுகில் அளவில் பெரிய கல்லைக் கட்டி விடுகிறார். காலையில் எழுந்து, நடமாட வெகு சிரமப்படும் சிறுவன் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறான். 'நீ துயரத்துக்குள்ளாக்கிய உயிர்களை விடுவித்து விட்டு வா; நான் உன்னை விடுவிக்கிறேன். ஆனால், அந்த உயிர்களில் ஏதேனும் ஒன்று இந்நேரம் இறந்திருந்தாலும், அந்தப் பாரத்தை உன் வாழ்வு முடியும் வரையிலும் உன் மனதில் சுமப்பாய்' என்கிறார் குரு. சீடன் மீனையும், தவளையையும், பாம்பையும் தேடிக் கண்டடைகிறான். மீனும், பாம்பும் இறந்திருக்கின்றன. தவளை ஊனத்துடன் நீந்திச் செல்கிறது. மீளாத் துயரில் ஆழும் சிறுவன், பீறிட்டு அழும் ஓசையோடு Spring நம்மைக் கடந்து செல்கிறது.

ஏரியில் சற்றே குறைந்த நீருடன் துவங்குகிறது Summer. வாலிபப் பருவத்தை எட்டியிருக்கும் சீடன், காட்டில் புணர்ந்து கிடக்கும் பாம்புகளைப் பார்க்கிறான். சொற்களில் சிக்காத ஏதோ உணர்வு அவனுள் ஊற்றெடுக்கிறது. நகரத்தில் இருந்து அறியப்படாத நோயினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருத்தி, தன் தாயுடன் சிகிச்சைக்காக குருவின் குடிலுக்கு வருகிறாள். குருவின் வசம் மகளை ஒப்படைத்து வெளியேறுகிறாள் தாய். முதல் முதல் பெண் வாசம் அறிபவனுக்குள் காமம் பீறிட்டெழுகிறது. தனிமையின் பொழுதொன்றில் அவளது அந்தரங்கத்தின் எல்லை மீறுபவனை அறைகிறாள் இளம்பெண். காமத்தின் தீ அவனை எரியும் மெழுகென உருக்குகிறது. இயற்கை சோபிதமாக இருக்கும் ஒரு வேளையில் அவளைப் படகில் இழுத்துச் சென்று காட்டில் வைத்துப் புணர்கிறான் சீடன். அதன் பின் அப்பெண்ணும் அவனோடு இணக்கமாகிறாள். அவனுக்கு வாழ்க்கை அர்த்தப்படுவதாய் உணர்கிறான். அவள் நோய் குறைவதாய் உணர்கிறாள். குருவுக்குத் தெரியாமல் இவர்களின் உறவு வளர்கிறது.



குருவுக்கு இவர்களின் உறவும், உடலுறவும் தெரியும் நாளில், 'உன் நோய் குறைந்ததா?' என்று கேட்கிறார் பெண்ணிடம். அவள் 'ஆம்' என்கிறாள். 'என்றால் உன் நோய்க்கு அதுவே மருந்து. நீ குணமடைந்து விட்டாய். இனி நீ இங்கிருந்து செல்லலாம்' என்கிறார். சீடன் அது கூடாது என்று தடுக்கிறான். அவனைக் கண்டுகொள்ளாதவராக, அவளை அனுப்பி வைக்கிறார் குரு. அடங்காத காமத்துடனும், கோபத்துடனும், வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையைத் தூக்கிக்கொண்டு வெளியேறுகிறான் சீடன். தூரத்தில் குடில் அமைதியில் உறைந்திருக்கிறது. உள்ளே குரு உறங்கிக் கொண்டிருக்கிறார். Summer தன் உக்கிரத்தைக் காட்டிவிட்டு ஓய்கிறது.

சிவந்திருக்கும் இலைகளுடன் தொடங்குகிறது Fall. முப்பதுகளின் நாட்களில் மீண்டும் குடிலுக்குத் திரும்புகிறான் சீடன். அவன் தன் மனைவியைக் கொன்றிருப்பதை முன்பே அறிந்து வைத்திருக்கிறார் குரு. அதைப் பற்றிய பேச்சுகள் இருவரிடமும் இல்லை. ஆத்திரத்தின் பிடியில் சிக்குண்டவனுக்கு எல்லாமே வெறுப்பேற்படுத்துகின்றன. ஆத்திரத்தின் உச்சியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கிறான். அவனை அடித்து உயிர் காக்கிறார் குரு. சீடனின் ஆத்திரத்தை அடக்க வழி காண்கிறார்.



அவர் இடும் பணியை அவன் செய்துகொண்டிருக்கும் நேரம், அவனைக் கைது செய்ய நகரத்திலிருந்து காவலர்கள் வந்து சேர்கிறார்கள். மறுநாள் வரைக் காத்திருந்து, அவன் பணி முடித்த பிறகு அழைத்துச் செல்கிறார்கள். குரு அவனுக்கு விடை கொடுத்தனுப்புகிறார். தன் பணிகள் முடிந்து தன் அந்திமக்காலம் முடிவதை உணர்ந்த குரு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். அவரது உடமைகள் சீடனுக்காகக் காத்திருக்கின்றன. கூடவே குருவின் ஆன்மாவும். Fall ஒரு உன்னதமான உயிரின் வீழ்ச்சியைக் காற்றெங்கும் கூவியபடி அடங்குகிறது.



Winter இல் குடிலைச் சுற்றிலும் பனி ஆக்கிரமித்திருக்கிறது. குரு அமர்ந்து மரித்துப் போன படகு பனியில் சிக்கியிருக்கிறது. நடுத்தர வயதுக்காரனாக திரும்புகிறான் சீடன். குருவின் ஆடைகளை அணிந்துகொள்கிறான். குருவின் குறிப்பேட்டில் இருக்கும் martial arts இன் படிநிலைகளைக் கற்றுக்கொள்கிறான். சிறுகுழந்தையோடு குடிலுக்கு வந்து சேரும் ஒரு பெண் தன் முகத்தை மூடியே வைத்திருக்கிறாள். குழந்தையை விட்டுவிட்டு இரவில் வெளியேறும்போது பனியில் புதையுண்டு இறக்கிறாள். குழந்தை பகல்பொழுதில் பனியில் தவழ்கிறது. வட்டமாகச் செதுக்கப்பட்ட கலலொன்றைத் தன் உடலோடு சேர்த்துக்கட்டிக்கொண்டு, புத்தர் சிலை ஒன்றைக் கையில் ஏந்திக்கொண்டு மலையின் உச்சியை நோக்கி நடக்கிறான் சீடன். உச்சியை அடைந்து தியானிக்கிறான். தூரத்தில் பனியின் மத்தியில் குழந்தையைத் தாங்கி நிற்கிறது குடில்.

மீண்டும் வந்து சேர்கிற Spring இல், குடிலைச் சுற்றிலும் நீர் நிறைந்திருக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனாகி, சீடனாகி விட்டிருக்கிறான். சீடன் குருவாகி இருக்கிறான். சிறுவனின் கையில் சிக்கும் இன்னொரு மீனும், இன்னொரு தவளையும், இன்னொரு பாம்பும் வதைபடுகின்றன. மலையின் உச்சியில் இருக்கும் புத்தரின் பார்வையில் அடிவாரத்தில் இருக்கும் குடில் புலனாகிறது. மென்மையான இசையுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

பெயர்கள் ஓடத்தொடங்க அசாத்தியமான அமைதி ஒன்று மனதுக்குள் வந்து சேர்கிறது. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகச் சாதாரணமாக நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம். ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் வசனங்களை ஒரு முழு நீள வெள்ளைத்தாளின் ஒரு பக்கத்தில் எழுதிவிடமுடியும். செயல்களின், முக பாவனைகளின், அங்க அசைவுகளின் வழி கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இயற்கையும் கூட ஒரு பாத்திரமாகப் பங்கேற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நான்கு பருவ நிலைகள் மனித வாழ்வின் நால்வேறு படிநிலைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றன.

படிமமாக, பூடகமாக, பல செய்திகள் படம் முழுவதும் உணர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு கால நிலையிலும் ஒரு மிருகம் குருவின் குடிலில் இருப்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பருவத்தில் இருக்கும் நாய்க்குட்டி, அறியாமையையும், செலுத்தும் வழி செல்லும் தன்மையையும் விளக்குவதாயிருக்கிறது. வாலிபப் பருவத்தில் உடன் இருக்கும் சேவல், ஆண்மையையும், காமத்தையும் குறிக்கும் விதமாக இருக்கிறது. முப்பதுகளில் உடனிருக்கும் பூனை, உக்கிரத்தையும், நிலை கொள்ளாத அமைதியற்ற மனநிலையையும் பிரதிபலிப்பதாயிருக்கிறது. இறுதியில் வந்து சேர்கிற பாம்பு, ஆன்ம பலத்தைக் காட்டுவதாகவும், ஞானத்தின் உச்ச நிலையை உணர்த்துவதாகவும் அமைகிறது.

திறந்த வெளியில் இருக்கும் வெறும் கதவுகள், மனிதன் தனக்கென வரித்துக்கொண்ட நெறிகளுக்குப் படிமமாக இருக்கின்றன. கதவுகள் தாண்டிய வழிகளும் நிறைய உண்டு. நெறிகளை மீறிய நடைமுறைகளும் உண்டு. சிறுவயதில் கதவுகளின் வழி மட்டுமே செல்லும் சீடன், வாலிபப் பருவத்தில் காமத்தின் உச்சத்தில் நெறிகளை மீறிய வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அது இருளில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இங்கே மகுடேஸ்வரனின் கவிதை ஒன்று நினைவில் தட்டுப்பட்டது.

'சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்'


காலமாற்றத்தில் மனித மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்களையும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் இயக்குனர். சிறுவயதில் காட்டில் இருக்கும் புத்தர் சிலை மீதேறி நின்று பார்க்கும் சிறுவனின் பார்வை, தொலைவில் தெரியும் குடிலின் மீதே குவிகிறது. அது உள்நோக்கியதாக அமைகிறது. வாலிபப்பருவத்தில் அதே சிலை மீதேறி நிற்பவனின் பார்வை நகரத்துக்குச் செல்லும் வழியின் மீது படிகிறது. இது வெளிநோக்கியதாக அமைகிறது.

சிறுவயதில் ஒரு பீடத்தின் மீது கால் வைத்துப் படுத்துத் தூங்குகிறான் சீடன்; வாலிப வயதில், அதே பீடத்தில் குடிலுக்கு வரும் யுவதி அமர, குருவுக்குப் பிடிக்காது என்று அவளை எழச் சொல்கிறான். பின், அவளோடு புணர்ந்தான பிறகு அவளுக்கு அதே பீடத்தை, அமரத் தருகிறான். இப்படி மன நிலையில் விளைகிற சிறு சிறு மாற்றங்களையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

காமம் மேலிட, தன் வசம் இழந்த சீடன் படகை ஏரியின் நடுவே சுற்றச் செய்யும் காட்சி இயக்குனரின் திறமைக்கு இன்னுமொரு உதாரணம். சீடனுக்கும் யுவதிக்குமான காட்சிகள் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கோபத்தின் உச்சத்தில் சீடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள மூச்சை அடக்கிச் சாக முனைகிறான். அப்போது அவனைக் காப்பாற்றும் குரு, பின் அதே உத்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.

கடைசி காட்சிகளில் கல்லைக் கட்டிக்கொண்டு சீடன் மலையுச்சிக்கு ஏறும் காட்சியில், இடைக்காட்சிகளாக கல் கட்டப்பட்டு துயருறும் மீனும், தவளையும், பாம்பும் காட்டப்படுவது காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தும் விதத்திற்கு நல்ல சான்று. இக்காட்சிகளில் பின்னணியில் வரும் இசை நம்மை எங்கோ இட்டுச்செல்கிறது. திரைப்படம் முழுவதுமே இசையும் ஒலிப்பதிவும், மிகப் பொருத்தமாக, மிகத்துல்லியமாக அமைந்திருக்கின்றன. ஒளிப்பதிவும் மிகத் தெளிவாக, காட்சிகளைத் தொட்டு ரசிக்கும் உணர்வை நமக்குத் தருகிறது. நடிப்பு நன்றாக இருந்தது என்று சம்பிரதாயமாக எதுவும் சொல்லத்தேவையில்லை எனுமளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எந்தவொரு காட்சியும் தேவையற்றது என்ற விவாதத்துக்கு வழிவகுக்கவேயில்லை.

நல்ல இலக்கியம், நல்ல திரைப்படம் இவற்றிற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு சமீபத்தில் எனக்கொரு நல்ல பதில் கிடைத்தது. ரசனை என்பது நம் அறிவு வளர்ச்சிக்கான ஒரு குறியீடு. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்று கணினிகளில் உருவம் பெறுகின்றன. வெறும் ஒலிக்குறிப்புகளாக இருந்த இசை, இன்று சுதியும் லயமும் சேர இன்பத்தில் ஆழ்த்துகிறது. பேச மட்டுமே என்றிருந்த மொழி இன்று இலக்கியங்கள் படைத்தளிக்கிறது. எல்லாக் கலைகளின் வளர்ச்சியுமே அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடாக அமைகின்றன என்பது உண்மை. ரசனையின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதென்பது, அறிவின் அடுத்த படிக்கு நம்மை உயர்த்திக்கொள்வதே யாகும். அந்த இன்னொரு படியாக இத்திரைப்படம் நிச்சயம் இருக்கிறது.

பின்குறிப்புகள் :

1. 2003ல் வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் 'கி டுக் கிம்'. அடிப்படையில் இவர் ஓர் ஓவியர். கொலாஜ் ஓவியங்களின் மீது இவருக்கு அபரிமிதமான ஈடுபாடு உண்டு. அந்த முறையை திரைப்படத்திலும் செய்துபார்க்கலாம் என்ற எண்ணத்தில் இவர் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சி வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

2. கி டுக் கிம், திரைப்படத்தில் Winter பருவத்தில் வரும் சீடனின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

- சேரல்

10 comments:

கே.என்.சிவராமன் said...

சேரல்,

படத்தை நன்றாக உள்வாங்கி, வார்த்தைகளை சேமித்து, வாக்கியங்களின் சாலை வழியே காட்சிகளை காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

ஆனால், பின்குறிப்பு 1ல் ஒரு சிறிய தகவல் பிழை இருக்கிறது. இந்தத் திரைப்படம் கிம் கி டுக்கின் முதல் திரைப்படம் அல்ல.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Venkatesh Kumaravel said...

கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டிருக்கிறது. சில இடங்களில், கொஞ்சம் முரண்படுகிறேன்.

//படிமமாக, பூடகமாக, பல செய்திகள் படம் முழுவதும் உணர்த்தப்படுகின்றன.//
இந்த அனுபவத்தை பார்வையாளனுக்கே விட்டுவிட்டிருக்கலாம். உரையாசிரியர் மாதிரி பற்பல விளக்கங்கள் எழுதி அவனது அனுபத்தில் குறுக்கிடுவதை சற்று வன்மையாகவே கண்டிக்கிறேன். இதையே உங்கள் பார்வையில் சொல்லியிருந்தால் பிரச்சனையில்லை, பொதுப்படையாக்குவதில் தான் சிக்கல் வருகிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ பைத்தியக்காரன்,
நன்றி சார். விவரங்கள் சேகரிக்கும் போது நான் செய்த மிகப்பெரிய தவறு. இங்கே சரி செய்துகொள்ளலாம். இதழில் என்ன செய்வது? :(

நன்றி வெங்கி!
முதலில், நான் இந்தத் தளத்தோடு மிகக் கொஞ்சமே பரிச்சயம் கொண்டவன். நான் சொன்ன விளக்கங்களை, நான் சொன்னவையாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். பொதுவான என்கிற சமாச்சாரத்தை விட்டுவிடலாம். மேலும் இந்த விளக்கங்களை மீறியும் படத்தில் பல அழகியலும், நுண்தகவல்களும் நிச்சயம் இருக்கும். என் சிற்றறிவுக்கு எட்டியவை இவையே! அதைப் பகிர்ந்துகொண்டதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இப்படத்தை இனி பார்க்கவிருப்பவர்கள் இந்தப் பதிவைத் தவிர்ப்பார்களாக....

-ப்ரியமுடன்
சேரல்

rvelkannan said...

நல்ல பதிவு சேரலுக்கு நன்றி

Venkatesh Kumaravel said...

அப்படியிருக்கும் பட்சத்தில் அவற்றை வெள்ளை ஃபாண்டில் போட்டு ஸ்பாய்லர் அலர்ட் போட்டிருக்கலாம். அது பெட்டராக இருந்திருக்கும். உங்களை தப்பு சொல்லவில்லை, படத்தை வசனங்களாய் விட்டு நிரப்பாமல் மௌனசாட்சியாகவே ஸென் தத்துவங்களை சொல்வது கிம்-கி-டுக் அவற்றை Ambiguos-ஆக முயன்றதையே காட்டுகிறது. பூனை வாலால் கிறுக்கும் சூத்திரம், வரும் விலங்குகளின் குறியீடுகள், துவாரங்களை அடைக்கும் காகிதத்திலிருக்கும் பிறமொழி எழுத்துகள் என படம் நெடுக வரும் பூடகங்களின் அர்த்தம் ஒரு ஆங்கில வலைப்பூவில் கிடைத்தது. பதிவர்களுடன் இரண்டாம் முறையாக பார்த்த பின்னர் தேடியது. என் பதிவில் இணைப்பிருக்கிறது, அவகாசம் கிடைக்கையில் வாசிக்கவும். பதிவு ஒரு நல்ல தொடக்கம். உங்கள் தளத்து நண்பர்கள் எல்லோரும் உரைநடையிலும் எழுதவேண்டும் என்பதே என் ஆவல். பார்க்கும் படங்களைப்பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும், ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யவும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெங்கி,

நீங்கள் என்னைக் குறை சொன்னதாகவும் நான் கருதவில்லை :) அப்படியே சொல்லி இருந்தாலும் அதில் பாதகம் ஏதுமில்லை. உண்மையில் இது போன்ற முரண் கருத்துக்களே அதிக உத்வேகமளிக்கின்றன. ஆரோக்கியமான உரையாடல்கள் எப்போதும் வரவேற்கத் தகுந்தவையே! உங்கள் பதிவையும் நிச்சயம் பார்க்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

நேசமித்ரன் said...

சேரல்
மிக அருமையான முறையில் எழுதப்பட்டிருக்கிறது உங்களின் கட்டுரை

துபாய் ராஜா said...

நல்லதொரு அழகான,அருமையான, விளக்கமான விமர்சனம்.

இதற்கு முன்பே இப்படத்தைப்பற்றி பல நண்பர்கள் எழுதியதை படித்திருந்தாலும் தங்களது தனித்துவமானது.

வாழ்த்துக்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

ஈரோடு கதிர் said...

நேற்றுதான் இந்தப் படம் பார்த்தேன்...

நேர்த்தியான விமர்சனம்